பக்கம் எண் :

குடும்ப விளக்கு

(நான்காம் பகுதி)

தாயின் தாலாட்டு

பொன்னே மணியே
   புதுமலரே செந்தேனே
மின்னே கருவானில்
   வெண்ணிலவே கண்ணுறங்கு!
தன்னே ரிலாத
   தமிழே தமிழ்ப் பாட்டே
அன்னை நான் உன்விழியில்
   ஐயம் ததும்புவதேன்?
என்பெற்ற அன்னையார்
   உன்பாட்டி இன்னவர்கள்!

என்னருமைத் தோழிமார்
   உன் தாய்மார் அல்லரோ?
கன்னற் பிழிவே
   கனிச்சாறே கண்ணுறங்கு!

சின்னமலர்க் காலசையச்
   செங்கை மலர் அசைய
உன்கண் உரைப்பதென்ன
   என்கண்ணே கண்ணுறங்கு!





( 5 )




( 10 )






( 15 )



தோழிமார் தாலாட்டு

தொகைமுத்துத் தொங்கலிட்ட
   தொட்டிலிலே அன்பே
நகைமுத்தின் பெண்ணான
   நன்முத்தே மானே!

தகையாளர் வையத்தில்
   தந்த திருவே
தொகைபோட்டு வாங்கஒண்ணாத்
   * தூய்அமிழ்தே! கண் வளராய்!

கன்னங் கரிய
   களாப்பழத்தின் கண்ணிரண்டும்
சின்னஞ் சிறிய
   ஒளிநெற்றித் தட்டிலிட்டே


---------------------------------------------
* தூய் - தூய
---------------------------------------------

இன்னும் எமக்கே
   இனிப்பூட்டிக் கொண்டிருந்தால்
பொன் "உறக்க நாடு"
   புலம்பாதோ கண்மணியே!

தங்கத் திருமுகத்தின்
   தட்டினிலே உன்சிரிப்பைப்
பொங்கவைத்தே எம் உள்ளத்தைப்
   பொங்கவைத்துக் கொண்டிருந்தால்

திங்கள் முகத்துன்
   சிரிப்போடு தாம்கொஞ்ச
அஙகுறக்க நாட்டார
   அவாமறுத்த தாகாதோ?

செங்காந்த ளின் அரும்போ
   சின்னவிரல்? அவ்விரலை
அங்காந்த வாயால்
   அமிழ்தாக உண்கின்றாய்

கொங்கை அமிழ்து
   புளித்ததோ கூறென்றால்
தெங்கின்பா ளைச்சிரிப்புத்
   தேனை எமக்களித்தாய்!

பஞ்சுமெத்தைப் பட்டு
   பரந்தஒரு மேல்விரிப்பில்
மிஞ்சும் மணமலரின்
   மேனி அசையாமல்

பிஞ்சுமா வின்விழியைப்
   பெண்ணே இமைக்கதவால்
அஞ்சாது பூட்டி
   அமைவாகக் கண்ணுறங்காய்!


( 20 )





( 25 )





( 30 )






( 35 )





( 40 )






( 45 )





( 50 )





( 55 )



தங்கத்துப் பாட்டி தாலாட்டு

ஆட்டனத்தி யான
   அருமை மணாளனையே
ஓட்டப் புனற்கன்னி
   உள்மறைத்துக்கொண்டு செல்லப்

போதுவிழி நீர்பாயப்
   போய்மீட்டுக் கொண்டுவந்த
ஆதிமந்தி கற்புக்
   கரசியவள் நீ தானோ?

செல்வத் தமிழ் வேந்தர்
   போற்றும் செந்தமிழான
கல்விக் கரசி
   கலைச்செல்வி ஒளவை

இனியும் தமிழ் காத்தே
   இந்நாட்டைக் காக்க
நினைத்து வந்தாள் என்னிலவள்
   நீ தானோ என்கிளியே?

நாட்டு மறவர்குல
   நங்கையரைச் செந்தமிழின்
பாட்டாலே அமிழ்தொக்கப்
   பாடிடுவாள் நற்காக்கைப்

பாடினியார் நச்செள்ளை
   பார்புகழும் மூதாட்டி
கூடி உருவெடுத்தார்
   என்றுரைத்தால் நீ தானோ?

அண்டும் தமிழ்வறுமை
   அண்டாது காக்கவந்த
எண்டிசையும் போற்றும்
   இளவெயினி நீ தானோ?

தக்கபுகழ்ச் சோழன்
   தறுகண்மை பாடியவள்
நக்கண்ணை என்பவளும்
   நீதானோ நல்லவளே!

கற்றோன்றி மண்தோன்றாக்
   காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த
   குடியின் திருவிளக்கே

சற்றேஉன் ஆடல்
   தமிழ்ப்பாடல் நீ நிறுத்திப்
பொற்கொடியே என்னருமைப்
   பொன்னே நீ கண்ணுறங்காய்!


( 60 )





( 65 )





( 70 )






( 75 )





( 80 )






( 85 )





( 90 )





( 95 )



மலர்க்குழல் பாட்டி தாலாட்டு

உச்சி விளாம்பழத்தின்
   உட்சுளையும் கற்கண்டும்
பச்சைஏ லப்பொடியும்
   பாங்காய்க் கலந்தள்ளி

இச்இச் செனஉண்ணும்
   இன்பந்தான் நீ கொடுக்கும்
பிச்சைமுத்துக் கீடாமோ
   என்னருமைப் பெண்ணரசே!

தஞ்சைத் தமிழன்
   தரும்ஓ வியம்கண்டேன்
மிஞ்சு பலிவரத்தின்
   மின்னும்கல் தச்சறிவேன்

அஞ்சுமுறை கண்டாலும்
   ஆவலறா உன்படிவம்
வஞ்சியே இப்பெரிய
   வையப் படிவமன்றோ?

முகிழாத முன்மணக்கும்
   முல்லை மணமும்
துகள்தீர்ந்த சந்தனத்துச்
   சோலை மணமும்

முகநிலவு மேலேநான்
   உன்உச்சி மோந்தால்
மகிழ மகிழ
   வருமணத்துக் கீடாமோ?

தமிழர் தனிச்சிறப்பு
   யாழின் இசையும்
குமிக்கும் ஒருவேய்ங்
   குழலின் இசையும்

தமிழின் இசையும்
   சரியாமோ, என்றன்
அமிழ்தே, மலர்வாய் நீ
   அங்காப்பின் ஓசைக்கே;

இன்பத்து முக்கனியே
   என்னன்பே கண்ணுறங்கு
தென்பாண் டியர்மர பின்
   செல்வமே கண்ணுறங்காய்!


( 100 )





( 105 )





( 110 )






( 115 )





( 120 )






( 125 )





( 130 )




பிள்ளையைத்தூக்கும் முறை

(அகவல்)

நடுப்பகல் உணவுக்கு நல்வே டப்பன்
இல்லில் நுழைந்தான் "என்கண் மணியே
என்றன் அமிழ்தே" என்று கூவியபடி
மைப்புரு வத்து மங்கை நகைமுத்துக்
கைப்புறத் தில்தன் கட்டழகு சுமந்து
வந்துதாழ் வாரத்தில் மணவாளனிடம்
காட்டி நின்றாள்! கண்டவே டப்பன்
அடங்கொணா மகிழ்ச்சியாய் அருமை மகளை
எடுக்க விரைந்தான். "அதுதான் இயலாது
கொள் அன்று; கொத்த மல்லி அன்று;
பிள்ளை அத்தான்; என்றாள் பெற்றவள்.
"பிள்ளையைத் தூக்கும் பெருந்திறம் தானும்
கொள்ளவே சொல்லிக் கொடு" வெனக் கேட்டான்
வேடப்ப னுக்கு விளக்குவாள் துணைவி,
*ஆழியில் உருவமான அழகுமண் கலத்தை
இயற்றியோர்க்கே எடுப்பது முடியும்;
சுட்டமட் கலத்தை எவரும் தூக்கலாம்!
இறுகா அமிழ்தின் இளகல் உடம்பை
உறுத்தாமல் தூக்க ஒருதிறம் வேண்டும்.
இன்னும் சொல்வேன் நன்று கேட்க:
குளநீர்த் தாமரை குழந்தையின் இளந்தலை!
அம்மலர்த் தண்டே அழகிய 'மெல்லுடல்'
தண்டுடல் மலர்த்தலை தாங்குமோ அத்தான்?
தலைஉடல் இரண்டையும் ஒருங்கு தாங்கி
உலை அமிழ்தை வறியவள் ஒருத்தி தூக்கல்போல்
தவறாது தூக்குவது தலையாகியகடன்
தெரிந்ததா அத்தான என்றாள் தெரிவை
"கற்றேன் கணக்கா யரேகற் றபடி
நிற்கும் படியும் நிகழ்த்துக" என்றான்.
தூக்கிக் காட்டினாள் தோகை
தூக்கினான், "சரி" எனச் சொன்னாள் துணைவியே.

------------------------------------------------------------
* ஆழி - குயவர் சக்கரம்
------------------------------------------------------------

( 135 )




( 140 )




( 145 )




( 150 )




( 155 )




( 160 )




( 165 )

தந்தையின் தவறு

(அறுசீர் விருத்தம்)

வேடப்பன் உண வருந்தி
மகளோடு விளையா டற்குக்
கூடத்தில் வந்து பார்த்தான்
தூங்கிடும் குழந்தை கண்டான்!
தேடக்கி டைத்தல் இல்லாச்
செல்வமே என்றெடுத் தான்
வாடப் புரிந்த தாலே
மகள்வீறிட் டழுதல் கண்டான்.

நகைமுத்து விரைந்து வந்தாள்
குழந்தையின் நலிவு நீங்கத்
தகும்படி தொட்டில் தன்னில்
தாலாட்டித் தூங்கச் செய்தேன்;
"அகத்தினில் அன்பு கொண்டீர்
ஆயினும் குழந்தை தன்னை
மிகத்துன்பம் அடையச் செய்தீர்
விலக்கஇச் செய்கை" என்றாள்.

"குழந்தைதான் தூங்கும் போது
எழுப்பினால் குற்ற மென்ன?
அழுதிடும் குழந்தைக் கான
ஆறுதல் துக்கந் தானோ?
ஒழுங்கோடு குழந்தை ஓம்பல்
உனக்குத்தான் தெரியும் போலும்!
முழங்காதே யேச்சை வாயை
மூடென்றான் வேடப் பன்தான்.

அன்புள்ள துணைவன் ஆங்கே
இதுசொல்லிக் கடைக்குச் சென்றான்!
துன்புற்றாள் நகைமுத் தாளும்
துணைவரின் சினமே எண்ணி!
என்பெற்ற குழந்தைக் காகத்
துணைவரின் வெறுப்பை ஏற்றேன்;
அன்பரைத் திருத்து தற்கும்
அன்புதான் தூண்டிற் றென்னை.

இப்படி நினைத்தா ளாகி
இல்லத்துப் பணிமு டித்தும்
கைப்புறக் குழந்தை தன்னைத்
தோளிலே போட்டுக் காத்தும்
அப்புறம் பகலைத் தள்ளி
இரவினில் அன்ப னுக்கே
ஒப்புறத் துணைபு ரிந்தும்
இரவினில் உறங்கச் சென்றாள்.

படுக்கையின் விரிப்பு மாற்றிப்
பக்கத்தில் குழந்தைக் கான
துடைக்கின்ற துணிகள் தேடித்
தூயபல் விரிப்பும் திருத்தி
விலாப்புறத் திற் குழந்தை
குடித்தபால் எடுத்தல் கண்டு
குட்டையால் தூய்மை செய்தே

உடலினை ஒருக்க ணித்தே
குழந்தையை மார்போ டொட்டித்
தடமலர் வலக்கை தன்னைத்
தலைக்கணை மீது வைத்தும்
இடதுகை குழந்தை மேலே
வில்லைப்போல் வளைய இட்டும்
கடுகள வசைதல் இன்றிக்
கண்வளர் கின்றாள் அன்னை!





( 170 )





( 175 )




( 180 )





( 185 )





( 190 )




( 195 )





( 200 )




( 205 )






( 210 )





( 215 )




( 220 )

தாய்மையின் ஆற்றல்

அன்றுநள் ளிரவில் வேடன்
விழித்தனன்; அருகில் உள்ள
தன்மனை தன் குழந்தை
நிலைமையை நோக்கலானான்;
"என்மனை ஒருக்க ணித்தே
இடக்கையைக் குழந்தை மீதில்
சின்னக்கூடார மாக்கிச்
சேல்விழி துயில்கின்றாளே.

ஒரு நூலே புரண்டா ளேனும்
தெருவினை ஒக்கச் செய்யும்
உருளையின் கீழ்ம லர்போல்
ஒழியுமே பெற்ற பிள்ளை!
தெரியவே இல்லை இஃது
தெரிவைக்கே எனவே டப்பன்
அருகிலே அமர்ந்தி ருந்தான்
அகன்றிட மனம்வராமல்

மங்கையை எழுப்பு தற்கு
வழியொன்று கண்ட றிந்தான்;
அங்கவள் களைந்தெ றிந்த
மலர்க்கண்ணி யைஅன் னாளின்
திங்களின் முகத்தில் போட்டான்!
சேயிழை விழித்தா ளில்லை
இங்கினிக் குழந்தை தன்னை
எழுப்புவேன் என நினைந்தே

மலர்க்கண்ணி தனில்அ விழ்ந்த
மலரிதழ் ஒன்றைத் தூக்கம்
கலைத்திடக் குழந்தை மீது
போட்டனன்! தாயின் கைதான்
மலரிதழ் தனைத் துடைத்து
மற்றும்தன் இடம்போ யிற்றே!
தலைவனோ இதனைக் கண்டான்;
தாய்மையின் ஆற்றல் கண்டான்.

தலைவிக்கு மதிப்புச் செய்தான்;
தாய்மைக்கு வணக்கம் செய்தான்.
இலைஎன்பால் குழந்தை காக்கும்
ஆற்றல்எட் டுணையும் என்றான்
தலைமட்டும் இரண்டென் றாலும்
குழந்தையும் தாயும் ஒற்றைக்
குலையே யாம்; உயிரும் ஒன்றே!
உள்ளத்தின் கூறும் ஒன்றே!
எனக்கென்ன தெரியும் தாய்க்கும்
இளங்குழந் தைக்கு முள்ள
மனத்திடத் தொடர்பு? மற்றும்
வாயினாற் பேசார்; தாயும்
தனதரும் குழந்தை தானும்
கண்ணாலும் மனத்தி னாலும்
தனித்துப்பே சிக்கொள் கின்றார்
என்றுபோய் தான்துயின்றான





( 225)





( 230 )




( 235 )





( 240 )





( 245 )





( 250 )





( 255 )





( 260 )




( 265 )