பக்கம் எண் :

பாண்டியன் பரிசு

இயல் 51


   { நீலியோடு அன்னம்! }

நினைக்கையிலே என்நெஞ்சம் எரியு தேடீ;
நினையாமல் இருப்பதற்கோர் வழியுமுண்டோ?
பனைக்கைஉறும் களிறுபோல் தந்தை யாரும்
படருமலர்க் கொடிபோலும் அன்னை யாரும்
எனைக்கையிலே ஏந்திவளர்த் தார்கள் ஐயோ
இறக்கையிலே துடிக்கையிலே என்றன் பெண்ணே
உனைக்கையில்வைத் தோம்இப்போ துளத்தில் வைத்தோம்.
உயிர்விட்டோம் அயல்விடுத்தோம் எனச்சென்றாரோ?

நன்செய்வாய்ச் செந்நெலெலாம் பொன்ம லைபோல்
நனிகுவிக்கும் கதிர்நாட்டின் முடிபு னைந்த
பின்செய்வாய் அருஞ்செயல்கள் அறச்செ யல்கள்!
பெருநூலின் ஆராய்ச்சி, இளமை போகும்
முன்செவ்வாய் என்றுரைத்த என்பெற் றோர்கள்
முதுநாட்டை விட்டாவி முடியும் போதில்
என்செய்வாய் என்செய்வான் என்றன் பெண்ணே
எனப்பரிவாய்க் கதறிற்றோ அவரின் செவ்வாய்?







( 5 )





( 10 )




( 15 )
இயல் 52

   { துயருறும் அன்னத்தை ஓடம் ஏறி உலவ நீலி
அழைத்தாள். }


விழிப்புனலில் குளிப்பவளாய்த், துன்ப ஆற்றின்
மேல்துறையும் காணாளாய் இவ்வா றெல்லாம்
கொழிப்பாள் நெஞ்சிளகுமொழி! அன்ன மேபூங்
கொடியேநல் இளம்பிடியே வளர்ந்த தேக்கின்
செழிப்பினிலே நிழல்சாய்ந்த செய்யாற் றோரம்
திருத்தமுற நிறுத்திவைத்த ஓடம் ஏறிக்
கழிப்போமே நேரத்தை! என்றாள் நீலி.
கையூன்றி எழுந்திருந்தாள் தையல் நல்லாள்.

நீர்தேங்கும் செய்யாற்றின் ஓடம், துன்பம்
நினைத்தேங்கும் அன்னத்தை நீலி யைப்பூந்
தார்தாங்கும் தட்டம்போல் தன்பால் தாங்கத்
தடக்கையால் துடுப்பசைய ஓட்டு வார்கள்
ஆர் தாங்கள் எனக்கேட்டும் இன்பம் ஊட்டும்
அரும்பாட்டுப் பலஇசைத்தும் ஓட்ட லானார்.
சீர்தேங்கும் வெள்ளன்னம் அசைந் திடாது
செல்லல்போல் தெண்ணீரில் சென்றது ஓடம்.

தேங்கி நிற்கும் புனல்மீது செல்லா நிற்கும்
செம்படகில் ஒருபுறத்தில் சிரித்த வண்ணம்
பாங்கிநிற்கப் பார்த்துநின்ற அன்னம் சொல்வாள்!
பாரடி நீ மேற்றிசை வானத்தை! அங்கும்
தேங்கிநிற்கும் பொன்னாற்றில் செழுமா ணிக்கச்
செம்பருதிப் படகோடும்! கீழ்த்தி சைவான்
வாங்கி நிற்கும் ஒளியைப்பார்! காட்சித் தேனில்
வண்டடி நாம் என்றுரைத்து மகிழ்ந்து நின்றாள்







( 20 )





( 25 )




( 30 )





( 35 )




( 40 )
இயல் 53

   { படகு ஆற்றில் போகும்போது, மழையும் பெருங்
காற்றும்! }


கிழக்கினைநோக் கிப்படகு செல்லும் போதில்
கேள்விஇலார் நெஞ்சம்போல் இருண்டு, நீளும்
வழக்குடையார் செல்வம்போல் மின்னி மாய்ந்து
வண்பொருளை இழந்தான் போல் அதிர்ந்து பின்னர்
மழைக்கண்ணீர் உகுத்ததுவான் மேற்கி னின்று
வந்ததுசெய் யாற்றினிலே பெரிய வெள்ளம்
பழக்குலைமேல் எறிந்தகுறுந் தடியே போலப்
பாய்ந்ததொரு பெருங்காற்றுப் படகு நோக்கி!

தம்மாலா காதென்று கைவிட் டார்கள்
தடந்தோளால் படகோட்டும் மக்கள் யாரும்!
இம்மாநி லத்தின்வாழ் விதுவோ என்றே
இழைபோலும் இடையுடையாள் அழுதாள்! நீலி
கைம்மீது தலைசாய்த்துக் கதற லானாள்!
கவிழ்ந்துபோம் நிலையினிலே வந்து ஓடம்,
செம்மானூர்க் கரையினிலோர் குடிசைக் குள்ளே
தெரிந்ததுதாய்க் கும்சேய்க்கும்! விரைந்தெழுந்தே








( 45 )





( 50 )




( 55 )
இயல் 54

   { ஆத்தாவோடிருந்த வேலன் ஓடி, ஓடத்தை நிறுத்தி
இருவரையும் தன் குடிசைக்குக் கொணர்ந்தான். }


"விடை" என்று கேட்டான்சேய்! நடஎன்றாள் தாய்!
விரைந்தோடிப் பெருமரத்தில் கயிறு கட்டி
நெடுமுனையை ஒருகையாற் பற்றி நீந்தி,
நிலைதவறும் ஓடத்தில் ஏறிச் சேந்திக்
கடிதினிலே ஓடத்தைக் கரையில் சேர்த்தான்,
கசங்கியஓர் கொடிபோலக் கிடந்த அன்னத்
துடியிடைக்கும் நீலிக்கும் தோள் கொடுத்துச்
கரைபடர்ந்த சிறுகுடிசை தன்னில் சேர்த்தான்!

கண்ணேஎன் அன்னமே, நீயோ? நீயோ?
கனிமொழியே நீலியே நீயோ? நீயோ?
மண்ணாள நீபிறந்தி ருக்க ஆற்றில்
மழைப்புனலும் பெருங்காற்றும் உன்னை மாய்க்க
ஒண்ணுமோ? என்றுரைத்துக் களைப்பு நீக்கி
உடைமாற்றிக் குடிநீரும் காய்ச்சித் தந்து
தண்ணென்று தரையிருக்கும் என்று சென்று
தடுக்கிட்டுத் தலையணையும் இடுப்புக்கு ஈந்தே

நனைந்த குழலுக்குச் சந்தனம்பு கைத்து
நளிருண்டோ எனநெற்றி தொட்டுப் பார்த்துப்
பனம்பழத்தின் சாறட்ட பனாட்டும் தேனும்
பரிந்தளித்துக் கருங்குயிலை அருந்தச் சொல்லி
நினைத்திருந்தேன் மறந்துவிட்டேன் செங்க ரும்பை
நெறித்தெடுத்த சாற்றுக்கற் கண்டு காய்ச்சப்
புனைந்துவைத்தேன் முல்லையிலே கண்ணி ஒன்று
புரிகுழிலில் வைஎன்று தந்தாள் ஆத்தா!







( 60 )





( 65 )




( 70 )





( 75 )




( 80 )
இயல் 55

   { அன்னம், வேலன் அன்பு பேச்சுகள் }

ஆத்தாவே இவர்யார்என் றன்னம் கேட்டாள்!
அவன்தான் என்மகன் என்று சொன்னாள் ஆத்தா
தீத்தாவும் கண்ணுடையார் வேழ நாட்டார்
சிறைபிடிக்க,வருகையிலே மறித்தே என்னைக்
கடமைபுரிந் தான்இவனே என்றாள் ஆத்தா;
வாய்த்தீரே மானத்தை உயிரைக் காக்க
மறப்பரிது நும்நன்றி என்றாள் அன்னம்!

ஒருசற்றும் பயனில்லா உடம்பை, வாழ்வோ
உண்டில்லை எண்ணுமொரு மின்னைத், தின்ன
நரிசற்றும் விலகாத கூட்டைச், சான்றோர்
நகைப்புக்கே இலக்கான குமிழி தன்னை,
முரசுக்கு வாய்ஓயாக் குறட்டில் மன்னர்
முடிசாய்க்க நெடிதாண்ட மன்ன ரின்பெண்
ணரசுக்கோ ஆட்படுத்தா திருத்தல் வேண்டும்?
அறிவுக்கோ இழிவுதனை ஆக்க வேண்டும்!

எனைஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனம்ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்
செத்தொழியும் நாள்எனக்குத் திருநா ளாகும்
பனையளவு நலமேனும் தன்னலத்தைப்
பார்ப்பானோர் மக்களிலே பதடி யாவான்
உனைஒன்று வேண்டுகிறேன் என்னால் ஆவ
துண்டென்றால் அதற்கென்றன் உயிருண்டென்றான்,

இழந்தபாண் டியன்பரிசைத் தருவார்க் கென்னை
இதந்துபோ வேன், என்று முரசம் எங்கும்
முழங்கியஓர் சேதியினை அறியீர் போலும்!
முயலாமே இத்தனைநாள் கழித்தீர் போலும்
பழம்பெரிய பாண்டியனார் பேழைக் குள்ளே
பகைவர் தமை ஒழித்திடும்ஓர் குறிப்பும் உண்டு!
கொழுத்தபுகழ் உமக்குண்டு கொண்டு வந்தால்!
கொடைகொடுத்த தாகும்இந் நாட்டுக்கென்றாள்.

பேழையின தடையாளம், பறிபோய் விட்ட
பின்னிலைமை, முன்னிலைமை, பூதச் சேதி,
ஆழ உரைத் திடலானாள் அன்னம்! வேலன்
அத்தனையும் கேட்டிருந்தான். "நானோ மெத்த
ஏழைமகன்; நரிக்கண்ணர் ஆணை எங்கே
யானெங்கே, ஆயினும்என் கடமை உண்டு.
பேழையினைக் கொண்டுவந்து தருவேன்; அன்றிப்
பேருலகில் உயிர்வாழேன என்றான் வேலன்.

மாத்தீயன் நரித்கண்ணன், காணா வண்ணம்
மறைந்தவளும், வேழனிடம் வழக்கும் இட்டக்
காத்தவளும், நேர் நின்றே இன்றும் அன்றும்
காத்தவனை ஈன்றெடுத்துப் பாலும் ஊற்றிக்
காத்தவளும், இனிக்காப்பா ளும், பெண் ணாளின்
கண் ணெனவே வாழ்பவளும் ஆன அன்பின்
ஆத்தாவின் இடதுகை நோக்கி நோக்கி
அழுதிருந்தாள், வீரப்பன் நிலைக்கு நைந்தாள்.







( 85 )





( 90 )




( 95 )





( 100 )





( 105 )




( 110 )





( 115 )





( 120 )




( 125 )
இயல் 56

   { கொய்யாக் குடியில் வீரப்பன், ஒரு குடிசையில்
இருக்கிறான், தோழன் ஒருவன் வருகிறான் }


செய்யாற்றின் கரையினிலே, செம்மா னூரில்
செல்வனையும், மனைவியையும், விட்டு வேறு
கொய்யாக்கு டிக்குச் சென் றான் வீரப்பன்,
கொய்திட்ட காலோடும் ஆட்க ளோடும்!
எய்துமோர் கால்நோயால் அவ்வி டத்தில்
இரவினில் ஒர் குடிசையிலே இருக்கும் போதில்
ஐயா என் றொருதோழன் அழைத்தான்; "இந்த
அரசாட்சி நம்மிடத்தில் வந்த" தென்றான்.

மாட்சியுறும் மன்னவனைப் பின்னால் குத்தி
மன்னவனின் இன்னுயிராய், வையத் தின்கண்
காட்சிக்கோர் ஒவியம்ஆய், வாழ்ந்து வந்த
கட்டழகை வஞ்சத்தால் வெட்டி வீழ்த்தி,
வாட்சுழலால் உயிர்சுழலக், கணக்கில் லாத
மக்களைவீழத் துங்கொடுமை தீரா இந்த
ஆட்சிக்குப் புறம்பாய்நான் இருக்கும் போதே
அற்றதுகால்! அரசுபெற்றால் உயிர்போம் என்றான்.

இருட்டறையில் உள்ள தடா உலகம்! சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே!
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே!
வாயடியும் கையடியும் மறைவ தெந்தாள்?
சுருட்டுகின்றார் தமகையில் கிடைத்தவற்றை!
சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே! இல்லை யாயின்
விடுதலையும் கெடுதலையும் ஒன்றே யாகும்.

எல்லோர்க்கும் எல்லாம் என் றிருப்பதான
இடம் நோக்கி நடக்கின்ற திந்த வையம்
கல்லாரைக் கானுங்கால் கல்வி நல்காக்
கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்,
இல்லாரும் அங்கில்லை; பிறன் நலத்தை
எனதென்று தனியொருவன் சொல்வான் அங்கே!
நல்லாரே எல்லாரும் அவ்வையத்தில்
நமக்கென்ன கிழியட்டும் பழம்பஞ்சாங்கம்!

என்றுரைத்தான் வீரப்பன்! தோழன் சொல்வான்:
எழிற்பாண் டியன்பரியைத் தேடு கின்றார்
தென்மலையிற் பிறர் அணுகா திருக்கும் வண்ணம்
செய்துவிட ஒருவனை அம் மலைமேல் ஏற்றித்
தின்ன வரும் பூதமிது என்று சொல்லித்
தெருவாரை அழும்பிள்ளை ஆக்கி வைத்தே
அன்னவரே பேழையினைத் தேட லானார்
அம்மலையை இன்றளந்தால் ஆள்மட்டந்தான்.

வீடெல்லாம் தரைமட்டம், ஆல் இருந்த
வேரெல்லாம் பறித்ததிலே கிணற்றின் மட்டம்!
காடகழ்ந்த நீரூற்றின் ஆழங்காணில்
கடலுண்டே அது நமக்குக் கணுக்கால் மட்டம்!
ஈடற்ற கலைப்பொருள்கள் இருக்கும் மன்றம்,
எண்ணற்ற ஆய் கூடம்,பள்ளி,இந்த
நாடழிய ஆளுகின்ற நரிக்கண் ணற்கோ
நல்லறிவோ அணுவுக்கும் மிகவும் மட்டம்!

முட்டையொடு கழுதைநடந் திருக்கும், பின்னே
முழுக்கூன்ன ஏகாலி செல்வான், அந்தப்
பாட்டையிலே பஞ்சுநிறை கூடை போகும்
உழவர்க்குப் பழங்கூழும் எடுத்துச் செலவார்
காட்டுநீலச்சாயம் கொண்டு செல்வார்,
குறுக்குநெடுக் காய்மக்கள் பல்பேர் செல்வார்!
காட்டாளோ பூதம் என்பான், அஞ்சி வீழ்வார்!
கரும்பூதம் வெண்பூதம் ஆவார் யாரும்.

அரண்மனையின் யானைவரப், பூதம் என்றே
அலறினார், மாவுத்தன்! வைக்கோல் வண்டி
எருதின்மேல் வீழ்ந்தான்! சாய்ந்ததுவைக்கோலும்
எழுப்பிவைத்த சாரந்தான் நெளிய உச்சி
இருந்தகொல் லூற்றுக்கா ரன்குதித் தான்!
எரியடுப்பால் கூரையும் வைக்கோலும் பற்றித்
தெருப்பற்றி எரிகையிலே, பூதம் அங்கே
சிரிப்பதென அலறினார் அடுத்த ஊரார்!

அஞ்சவைக்கும் பூதத்தை அஞ்ச வைக்கும்
அஞ்சாறு பூதத்தை நாமனுப்பிக்
கொஞ்சிவிளை யாடவிட்டால் நல்ல தாகும்
கூறுகநீர் விடை என்றான். அதனைக் கேட்டு
நெஞ்சில்வைத்தே வீரப்பன், 'வேண்டு மானால்
நிகழ்த்துவோம்.நடப்பதெல்லாம் அறிய வேண்டும்
வஞ்சமுற்ற நரிக்கண்ணன் ஆட்கள், எந்த
வழிச் சென்றார் என்பதையும் காண்போம என்றான்.

கொண்டுவந்த பேழையினை மகனிடத்தில்
கொடுப்பதெனில், நான் கொடுத்தால்சிக்கல் உண்டாம்
பண்டெனது செயலை அவன் அறிய நேரும்;
பாண்டியனார் பரிசினையும் வெறுப்பான்' என்று
தொண்டுகிழ வன்புகன்றான்! 'மகனிடத்தில்
சொல்லாமல் பிறர்கையால் கொடுப்பீர்' என்றே
அண்டையிலே இருந்த அவன் சொல்ல; ஆம் ஆம்
அது நன்று நன்றென்றான் அவ்வீரப்பன்!






( 130 )




( 135 )





( 140 )





( 145 )




( 150 )





( 155 )





( 160 )




( 165 )





( 170 )




( 175 )





( 180 )





( 185 )




( 190 )





( 195 )





( 200 )




( 205 )
இயல் 57

   { நரிக்கண்ணனின் அமைச்சன் மகனான நீலன்,
நீலியைக் காணுகின்றான். }


அமைச்சன்மக னாஓர் நீலன் என்பான்.
அருஞ்சூழ்ச்சி செய்வதிலே மிகக்கை காரன்!
இமைக்கின்ற நேரமதும் வீணாக் காமல்
எழிற்பாண்டி யன்பேழை, அன்னம், ஆட்சி
நமக்கு வருமோ என்று நினைத்தா னாகி
நல்லபல சூழ்ச்சியெலாம் நாடு கின்றான்.
சிமிழ்க்காக கண்ணோடு தெருக்கள் தோறும்
சிற்றூர்கள் மற்றுமுள இடத்தி லெல்லாம்

அன்னத்தை தேடுகையில், நீலி அங்கே
ஆற்றோரம் நின்றிருந்தாள், மாலைப் போதில்!
இன்னவளை ஆராய்வேன் எனநெ ருங்கி!
"என்னவியப் பிதுநீலி? தேடிப் போன
கன்னலொன்று காலடியிற் கிடைத்த தைப்போல்
கண்ணெதிரில் கிடைத்தாயே! என்எண்ணத்தை
உன்னிடத்தில் சொல்லிவிட வேண்டும்; என்னை
எவ்வழிநீ விட்டாலும் ஒப்பு கின்றேன்.

என் தந்தை என்னிடத்தில் இன்று வந்தார்;
எப்போது மணம்புரிய எண்ணு கின்றாய்
என்றுரைத்தார். யானுரைத்தேன். இவ்வை யத்தில்
என்னுள த்தைக்கொள்ளைகொண்ட பெண்ஒருத்தி
பொன்வேலி தனில்உண்டு! நீலி என்று
புகல்வார்கள் அவளின்பேர்! அன்னத்திற்கும்
இன்னுயிரைப் போன்றுள்ளாள்! அவளை யன்றி
எவளையும்நான் மணம்புரியேன் என்றுசொன்னேன்.

மாந்தளிரால் மெல்லுடலும், மணக்கும் செந்தா
மரையிதழால் வாயிதழும் உடையாய் கேட்பாய்
"சாய்ந்துதிடீர் எனவிழுந்தார் என்றன் தந்தை!
"தலைகொழுத்த பிள்ளையே அமைச்ச னுக்கு
வாய்ந்திருக்கும் பிள்ளை நீ பாங்கியைப் போய்
மணம் புரிந்தால் என் ஆகும்?" எனத்து டித்தார்
தீர்ந்ததினி அவளிடத்தில் சென்ற உள்ளம்
திரும்பாது தீர்ப்பென்றேன்; ஒப்புக் கொண்டார்!

என்னநீ நினைக்கின்றாய்? அன்னத் திற்கே
எழிற்பேழை தனைத்தேடித்தந்து, பின்னர்.
அன்னத்தை ஏன்மணக்க லாகா தென்றால்,
அவள் என்றன் கண்ணுக்குப்ப பிடிக்க வில்லை.
பொன்னுக்குப் பித்தளையோ ஒத்த தாகும்?
பூவுக்கு நிகராமோ சருகின் குப்பை?
மின்னலிடை, கன்னல் மொழி, இன்னும் சொன்னால்
விரியுலகில் ஒருத்திநீ, அழகின் உச்சி!

ஒளியேனும் வானத்தை மறத்தல் கூடும்
உயிரேனும் உடம்பதமை மறத்தல் கூடும்
எளியேனும் உமைமறத்தல் உண்டோ? அன்றி
எனையேனும் நீ மறத்தல் உண்டோ? பச்சைக்
கிளியேனும் குயிலேனும் கேட்டால் நாணக்
கிளத்துமொழி அன்னம்நன தொருமைப்பாட்டைத்
துளியேனும் அறிவதுகூடாது; சின்னச்
சொல்லேனும் வெளிப்படுதல் கூடாதென்றான்.

மன்றிரண்டு தெரியுமன்றோ அவற்றில் நெல்லி
மரமிரண்டின் நடுவுள்ள பொதுமன் றுக்குள்
இன்றிரண்டு நாட்களிலே வருவேன்! வந்தால்
எனக்கிரண்டு பட்டாடை தருவீர்! மெல்ல
ஓன்றிரண்டு பேசியபின் கப்பல் ஒன்றை
உளியிரண்டாய்த் தறித்ததுபோல் பிரிதல்வேண்டும்!
பொன் திரண்டு வந்தாலும் சரிதான் என்னைப்
போட்டிரண்டாழ் வெட்டி டினும் நில்லேன் என்றாள்.

எத்தடையும் இல்லையடி மா மரத்தை
இசைந்தடையும் கருங்குயிலே! கதிர் நாட்டானின்
சொத்தடையக் கவர்ந்ததன்றி அன்னத் துக்கும்
சூழ்கின் றான் வாழ்வுக்கே தடைகள் என்றால்
இத்தடையக் நீங்குதற்கு முயல்கின் றாளா?
எழிற்பாண்டின் பரிசின் நிலைமை என்ன?
கொத்தடையும் மலர்க்குழலே என்னிடத்தில்
கூறுதற்குத் தடைஎன்ன என்றான் நீலன்.

கூடுவிட்டுத் தாயைவிட்டுப் பிறந்து விட்ட
குயிற்குஞ்சு போலன்னம் ஒருத்தி, மன்னர்
வீடுவிட்டு வேலைவிட்ட ஆத்தா, வேலன்,
விரல்லிட்டே எண்ணிடுமித் தொகையுள்ளார் போய்த்
தேடிவிட்டால் கிடைத்து விடு மோ அப் பேழை!
தீனியிட்டுக் கோழியினை மடக்கு வார்போல்
மூடிவிட்டார் பேழையினை! அவர்கள் கொஞ்சம்
மூச்சுவிட்டால் தானேநாம் அறிதல் கூடும்.

இடக்கையோ ஆத்தாவுக் கில்லை! இவ்வா
றிருக்கையிலே அவள் துணைவர் வீரப் பர்க்கோ
நடக்கையிலே ஊற்றுதற்கோ கணுக்கா வில்லை
நறுக்கையிலே பொன்வீசும் ஒளியாற் செய்தே
எடுக்கையிலே அமைவுற்ற மேனி யாட்டகோ
இயற்கையிலே இடையில்லை என்பார் கற்றோர்!
படுக்கையிலும் விழிக்கையிலும் பலகை ஒலைப்
படுக்கையல்லால் வேலனுக்கோ நினை வேயில்லை.

எதுமுடியும் அவராலே? என்றாள் நீலி,
ஏன் முடியா தென்கின்றாய்?பல்லூர் தன்னில்
புதுமுடிவேந் தன்விட்ட மறவர் தம்மைப்
புறங்காணச் செய்தானே வேலன்? ஆத்தா,
முதுமுடியான் கதிர்வேலன் பெற்றெ டுத்த
முன்முடிந்த மேகலையாள் அன்னத் திற்கோ
"இதுமுடிய இதுசெய்வாய-என்று கூறி
ஏற்றமுடி வைச்செய்யும் ஆற்றலுள்ளாள்!

ஆத்தாவின் துணைவர்யார்? அறியேன் என்றான்
ஆனமட்டும் உறவறிய எண்ணி நீலன்!
கூத்தாடிப் பிழைப்பார்போல் தோன்று கின்றார்,
குடிசையிலே அப்பொருளும் கண்டேன் என்றாள்.
பார்த்தாயா என்னென்ன உடைகள் என்றான்.
படைமறவர் உடை; பலவும் கண்டேன் என்றாள்.
நீ சொல்லும் வீரப்பர் எங்கே என்றான்.

"போவிரைவில என்றுரைத்தாள் ஆத்தா. அன்னோர்
போய்விட்டார் எமைவிட்டே எந்தஊர்க்கோ!
வாவிரைவில் என்றுரைத்தால் வருவார் போலும்!
மறுத்துரையார் ஆத்தாவின் மொழியை என்றாள்.
தீவிரைவில் கொல்லுதல் போல் பூதம்வந்து
தெருவாரைக் கொல்லுவதால் என்றன் அன்பை
நீ விரைவில் போஉன்றன் குடிசைக்கென்றான்
நீலியவள் குலுக்கென்று சிரித்துச் சொல்வாள்;

ஊருக்குட் பூதமெனப் புளுகி னோரின்
உள்ளத்தை நினைத்துநான் சிரித்தேன்; அன்னார்
நேருக்கு நேரடையும் தீமை தன்னை
நினைத்துநான் சிரித்திட்டேன் என்றன் வாழ்வில்
சீருக்கு வாய்ந்திருக்கும் அன்பே, பூதச்
றேுசெய்தி நம்புகின்றீர் உம்மைக்கண்டால்
சிதருக்குச் செப்பனிட்ட முட்டுக் கட்டை
சிரிக்குமெனில் நான்சிரித்தல் வீணே என்றாள்.

உன்னகத்தை யறிவதற்கே இதனைச் சொன்னேன்
உயிர் வகையில் பூதம் என ஒன்று மில்லை
தன்னகத்தில் வளர்ந்து வரும் மடமை யின்பேர்
தன்னடியால் நடவாத பூதமென்று
சொன்னகற்றோர் மொழியினை நான் ஒப்பு கின்றேன்
தொன்மைஎனும் உச்சியேலே அறிவால் வாழ்ந்த
பொன்னகத்தில் தமிழகத்தில் தாய கத்தில்
பூதம்எனும் சொல்நுழைதல் புதுமை என்றான்.

திங்களிடம் குளிர்போலும் கதிர வன்பால்
செந்தழல்போ லும்பூவில் மணமே போலும்
உங்களிடம் எனக்குள் அன்பின் மீதில்
ஒருபழியும் நேராமல் விரைந்து நீவிர்,
தங்களிடம் நோக்கியே செல்லவேண்டும்
தமிழ்நிகர்த்த அமுதமொழி மங்கை அன்னம்
இங்குவரக் கூடுமன்றோ என்றாள் நீலி!
இன்னும்ஒரு சேதிஎன்று சொல்வாள் நீலன்;

என்பொருட்டு நின்னழகை, அன்பே ஈந்தாய்
எதன்பொருட்டு நானிதனை மறத்தல் வேண்டும்?
நின்பொருட்டு அவளுக்கோர் நன்மை செய்ய
நினைக்கின்றேன். அன்னந்தான் இழந்த பேழை
யின்பொருட்டுப் பொருள், ஆவி உடல்வேண்டாமல்
இனியுழைக்கக் கடவேன்நான! அன்பு நீலி
தன்பொருட்டு வாழ்வானோர் ஏழை!மக்கள்
தம்பொருட்டு வாழ்வானோர் செல்வன் என்றான்!

மின்னையும்பன் மலர்களையும் கொண்டியாக்கை
வேண்டுமென அமைத்ததென விளங்கும் அன்னம்
தன்னையும்நான் அறியேனே! வேழ.நாடு
தனிலிருந்து வந்துள்ளேன் ஆத லாலே
என்னையுந்தன் தொண்டரோடு சேர்த்துக் கொள்ள
எழிலுடையாள் இடத்தில்நீ மொழிதல் வேண்டும்!
பொன்னையும்வார்ப் படநுண்மை தனையும் வையப்
புகழ்கொள்ளச் செய்திடும்பெண்ணழகு நங்காய்!

நலங்கெடவே கதிர்நாட்டை ஏப்ப மிட்ட
நரிக்குத்தான் என்தந்தை அமைச்சன்! மெய்தான்!
குலுங்குநகை முத்தாகக் கொழிக்கும் பெண்ணே!
கொடியவனைத் தொலைப்பதென்றன் தந்தை நோக்கம்
விலங்குபழக் கிடுவானின் வெள்ளா டொன்று
வேங்கையிடம் நெருங்கையிலே மகிழ்வ துண்டோ?
தெலுங்கினிலே பாடிடுமோர் தமிழன் செய்கை
தேனென்றா நினைக்கின்றார் தமிழகத்தார்?

கூப்புங்கை யில் கொடுவாள் உடையான் அந்தக்
கொடுங்கொடியான் நரிக்கண்ணன் எனில் எனக்கோ
வேப்பங்காய்! அவனும்எனை விதைபற் றாத
வெள்ளரிக்காய் என்றுநினைத் திடவுமில்லை!
தீப்பொங்கும் மலையடியில் வாழு கின்றேன்
சிலிர்க்கின்ற குளிர்தென்றல் உலவும் தென்னந்
தோப்பிங்கே காணுகின்றேன்! குடியிருப்பேன்
சொல் ஒருசொல் அவளிடத்தில் என்றான் நீலன்.

கரும்பல்ல; அதுபிழிந்த சாறே போலும்
கழறுகின்ற மொழியுடையாள் அன்னம் நெஞ்சம்
இரும்பல்ல! நான் சொல்வேன் ஏற்றுக் கொள்வாள்!
இருநாளில் பதிரலுரைப்பேன் என்றாள் நீலி,
அரும்பல்ல; கண்ணல்ல அவ்வா றேசெய்!
அனுப்பென்னை! இனிப்பான தேனே! சற்றே
திரும்பல்லல் தீர்என்று செப்பிச் சென்றான்
தேனிதழாள் அவன்பிரிவால் தியங்கி நின்றாள்.





( 210 )




( 215 )






( 220 )





( 225 )





( 230 )





( 235 )







( 240 )




( 245 )





( 250 )




( 255 )





( 260 )





( 265 )




( 270 )





( 275 )





( 280 )





( 285 )





( 290 )





( 295 )





( 300 )





( 305 )




( 310 )





( 315 )





( 320 )




( 325 )





( 330 )






( 335 )




( 340 )





( 345 )




( 350 )





( 355 )





( 360 )




( 365 )





( 370 )
இயல் 58

   { ஊர்ப்பேச்சு }

இத்தனை நாள் ஆயிற்றே பேயை எங்கே?
இந்நாட்டில் அது விருந்தால் வெளிப்ப டாதோ?
முத்தன்ன வெண்ணகையாள் திரும ணந்தான்
முடியுநாள் எந்நாளோ என்பார் சில்லோர்!
வைத்தவர்கண் ஏமாறக் கவர்ந்து சென்றோர்
வண்கடலில் போட்டாரோழ நரிப்பேர் கொண்ட
எத்தனவன் தானெடுத்துப் பேழை தன்னை
எரித்தானோ என்றுரைப்பார் மற்றும் சில்லோர்!

நற்பேழை கிடைத்திட்டால் நரிக்கண் ணற்கு
நலமல்லால் தீமையில்லை என்பார் சில்லோர்
சொற்பேழை கிடைத்திட்டால் நரிக்கண் ணற்குப்
பொல்லாங்கே ஆதலால் மறைத்தான் என்று
சொற்பலவும் விரிப்பார்கள் சிலர்! இப் பூதத்
துயர்என்று தீர்ந்திடுமோ என்பார் சில்லோர்!
தெற்குமலை காடுநகர் நாடு யாவும்
தேடுவதாய் அழிகின்றார் என்பார் சில்லோர்!



( 375 )




( 380 )





( 385 )





( 390 )
இயல் 59

   { வேழ மன்னனும் அமைச்சனும்! }

வேழவனும் அமைச்சனொடு வீற்றி ருந்தான்
விளக்கமுறு திருமன்றில்! உரைக்க லானான்,
பாழடைந்த இருள்வீட்டில் விளக்கு, வானப்
பனிப்புகையில் எழுந்தகதிர், அன்னம் என்பாள்!
வாழஒரு பாண்டியனார் பரிசு வேண்டி
வாடுகின்றாள்! நாள்பலவும் வறிதே யாகப்!
பேழையினை நரிக்கண்ணன் தானும் தேடிப்
பெருந்தொல்லை யடைகின்றான் என்று சொன்னான்

அப்பேழை நரிக்கண்ண னிடத்தே யில்லை,
அவனதனை இழந்ததுவும் வியப்பே யாகும்!
ஒப்பேதும் இல்லாத மங்கை யன்னம்
உடல்உடைமை ஆவியெலாம் பேழை என்று
செப்பினாள்! அதிலென்ன ஐயப் பாடு?
திருநாட்டின் ஆட்சியும்தன் மணமும் அந்தக்
கைப்பேழை தனிலுண்டு! கிடைத்தால் நெஞ்சக்
களிப்பு-ஏழை அடைவாள்என்று அமைச்சன் சொன்னான்.







( 395 )






( 400 )




( 405 )
இயல் 60

   { நரிக்கண்ணன் பேழை தேடுவாரை மேற்பார்வை
பார்த்துத் திரிகிறான். }


தென்மலையில் தேடுகின்ற கூட்டம், காட்டில்
தேடுகின்ற ஒருகூட்டம், நாட்டில் தேடி
இன்னல்விளைத் திடுங்கூட்டம், வீடு தோறும்
எங்குண்டு பேழைஎன அதட்டும் கூட்டம்,
பன்னுமிவை அனைத்துக்கும் மேற்பார் வைக்குப்
பறக்கின்ற தலைவர்களின் தலைவ னாகிச்
சென்றுசென்று நிலையறிவான் எவ்வி டத்தும்
தேரேறி நரிக்கண்ணன் ஊரி ல் எல்லாம்.

தட்டுப்பட் டதுவோடா பேழை என்று
தரைபிளப்பார் தலைவனைப்போய்க் கேட்பான்! ஆங்கு
வெட்டுப்ப டாதிருக்க வேண்டும் பேழை
மெல்லனவே மண்வெட்ட வேண்டும் என்பான்!
முட்டுப்ப டாதுழைப்பீர்! கிடைத்தால் பேழை
முந்நூறு பொன்னளிப்பேன் என்பான்! ஓர்பால்
சிட்டுப்ப றந்ததுபோல் தெருவில் ஓடித்
தெரிந்ததுவோ உளவென்பான் நரிக்கண்ணன்தான்!

தெருத்தோறும் வாழ்வோரை ஒருங்க ழைத்துச்
செப்பிடுவீர் உண்மைதனை; அரண்ம னைக்குள்
ஒருபேழை தனைத்தந்தேன், அதனை வாங்கி
ஒளித்தவரும் நீர்தாமே? என்று கேட்டுப்
பெருமக்கள் தமையெல்லாம் உளம்வ ருத்திப்
பெரியோரை அதட்டிடுவான், பெண்டிர் தம்மை
எரிமூளும் கண்ணாலே அஞ்ச வைப்பான்
இழிசெயலான் நரிக்கண்ணன் என்னும் தீயன்.








( 410 )





( 415 )




( 420 )





( 425 )




( 430 )