பக்கம் எண் :

பாண்டியன் பரிசு

இயல் 61


   { அன்னம் குதிரை ஏறிப் பேழைக்குப் புலன் கேட்கிறாள். }

ஓடிக்கொண் டேயிருக்கும் குதிரை, காதில்
ஒலித்துக்கொண் டேயிருக்கும் காற்கு ளம்பும்!
ஆடிக்கொண் டேயிருக்கும் நெற்றித் தொங்கல்
அழகைக்கொண் டாள்அன்னம் அதனை ஊர்ந்தே
தேடிக்கொண் டேயிருந்தாள் பேழை தன்னைத்
தேனைக்கொண் டேபொழியும் மழையைப் போலே
பாடிக்கொண் டேஇருந்தாள் நிலைமை பற்றிப்
பருகிக்கொண் டேயிருந்தார் இரங்கி ஊரார்!

பண்டிருந்த பாண்டியானார் பரிசை, என்றன்
பழம்புகழைப் பொன்னான பேழை தன்னைக்
கண்டிருந்த துண்டென்றால் கூறு வீரோ?
காணாதார் இனியேனும் முயலு வீரோ?
வண்டிருந்து பண்பாடிக் கொண்டி ருக்கும்
மலர்ச்சோலைக் கதிர்நாட்டின் மகள் நானன்றோ?
தொண்டிருந்த உள்ளத்தீர்! மறவர் மக்காள்!
தொல்லையினைத் தீர்த்திடுவீர்' என்றாள் அன்னம்;

நீர்அடையும் விழியுடையாள்; தெருக்கள் தோறும்
நிகழ்த்துமொழி கேட்டவர்கள், இருகை ஏந்திச்
சீரடைய வேண்டுமெனில் எல்லா மாண்பும்
சென்றடையும் எந்திருவே இந்நாள் இந்தப் பாரடையும் தீமையெல்லாம் நீங்கி நல்ல
பயனடைய வேண்டுமெனில் நல்ல றம்தான்
பேரடைய வேண்டுமெனில் பேழை வேண்டும்!
அதைத்தேடும் பெருங்கடமை எமக்கே என்றார்.







( 5 )





( 10 )




( 15 )





( 20 )
இயல் 62

{ அன்னம் அலைந்து, பின் ஓர் சோலை அடைந்தாள் }

அகல்வானில் விட்டுவிட்டு மின்னல் போல
ஆங்காங்குச் சென்றுபின் மீண்டா ளாகிப்
பகல்வானம் மாணிக்கப் புனலா டுங்கால்
படர்முல்லை சிரித்திருக்கும் சோலை கண்டு
புகலானாள்; குதிரையினை விட்டாள்! அங்குப்
புன்னை வரவேற்பளிக்கத் தென்றல் வந்து
துகிர்உடலில் மணந்தடவ இசைய ரங்கு
தும்பியார் துவங்கினார்! அமர்ந்தாள் அன்னம்;

தாமரைக்கண் இமைஇதழோ அசையவில்லை
தளிர்மேனி அசையவில்லை 'பூ' வைமற்றோர்
பூமறைப்ப தைப்போலும் எழிற்கன் னத்தில
பொற்கொடிதன் அங்கைதனை ஊன்றி, நெஞ்சே
நீமறைக்கா தேஉன்றன் இன்ப யாழை
நிகழ்த்தென்றாள்; உகுத்தஇசை உணர்வால் அள்ளித்
தீமையிலா உயிர்பருக் கிடந்தாள்; வையம்
செந்தமிழி லக்கியத்தின் வருகை நோக்க

மீதுயர்ந்த இருதோள்கள் ஒளியை வாரி
வீசுகின்ற குன்றங்கள்! மறவன் தூக்கி
ஊதுகின்ற வளைகொம்பின் புருவத் தின்மேல்
உயர்நெற்றி அஞ்சாமை முழுங்கும் கூடம்!
மோதுகின்ற இளங்களிறு போல்நடந்து
முன்வாயிற் புன்னகையை விளைப்பான்! ஆனால்
காதலில்லை அவன்கண்ணில்! தேன்பற்றாத
கவின்மலரில் இடமிலைஎன் உயிர்வண்டுக்கே!

கிளிக்கழுத்தின் பொன்வரிபோல் அரும்பும் மீசை!
கீழ்க்கடலின் மாலைவெயில் கலந்த நீல
ஒளித்திரைபோல் தலைமயிர்சிங் கத்தின் தோற்றம்!
உயிர்ப்பரிதி வான்போன்ற மேனி வாய்ந்தான்!
துளித்தநறுந் தேனென்று சொல்லும் சொல்லைத்
தொடங்குகுரல், முழங்குகின்ற கடலே! ஆனால்
களிக்கஒரு காதலில்லை அன்னோன் கண்ணில்!
கவின்மலரில் தேனிலைஎன் உயிர்வண்டுக்கே!

அடுக்கிவைத்த அழகழகாம் உறுப்புக் கள்மேல்
அனுப்பிவைத்த என்விழிகள் ஒளியு மங்கித்
தடுக்கிவிழும் எழும்ஒன்றில் சறுக்கி வீழும்!
தனிப்பிறவி! வையத்து மக்கள் தம்மில்
எடுக்கஎடுக் கக்குறையாச் சுவையின் ஊற்றை
இனிக்கஇனிக் கக்காணும் ஆண்மை! ஆனால்
துடிக்குமோர் காதலில்லை ஆன்னோன் கண்ணில்!
தூய்மலரில் தேன்இலைஎன் உயிர்வண்டுக்கே!

தீங்கைஇனிப் பொறேன் என்னும் கண்கள்! என்றன்
திருநாளைத் தனக்கென்றே நினைக்கும் நெஞ்சம்!
வேங்கைஅவன்! அஞ்சாதே என்ற பேச்சு
வீணல்ல வெற்றிமுர சென்று சொல்வேன்!
ஏங்கையிலே எனைமீட்டான்! ஓடம் விட்டே!
இறக்கினான்! தொட்டஇடம் மறக்க வில்லை!
பாங்குறஓர் காதலில்லை அன்னோன் கண்ணில்.
பனிமலரில் தேனிலைஎன் உயிர்வண்டுக்கே!

விழியில்லை; உணர்வில்லை; குடிசை தன்னில்
வீழ்ந்திருந்தேன் அப்போதில் என்றன் ஆத்தா,
மொழியில்லை இதுமருந்தே எனும்ப டிக்கு
மொய்குழலே என்றழைத்தாள்; உயிர டைந்தேன்.
வழியில்லை என்றிருந்த என்கண் முன்னே
வாய்த்தவனை யார்என்றேன் வேலன் என்றாள்!
எழுகின்ற காதலில்லை அன்னோன் கண்ணில்!
எழில்மலரில் தேன்இலைஎன் உயிர்வண்டுக்கே



( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45 )





( 50 )




( 55 )





( 60 )





( 65 )




( 70 )





( 75 )




( 80 )
இயல் 63

   { இவ்வாறு அன்னம் துயில்கையில் அங்கே ஓர்
துறவி வந்தான். }


நனவுலகில் இவ்வண்ணம் இருந்தாள் அன்னம்!
நல்விழியைத் துயில்வந்து கௌவ, ஆங்கே
கனவுலகில் இலக்கியத்தைத் தொடர்வாளானாள்
மைம்மலரில் தலைசாய்த்துப் புன்சிரிப்பைக்
கனிஇதழில் புதைத்துடலை ஒருக்கணித்துக்
கைவல்லான் வைத்தயாழ் போற்கி டந்தாள்.
இனிநானும் இவ்வுடலும் புளியும் ஓடும்
என்றிருக்கும் ஓர்துறவி அங்கு வந்தான்.

துவராடை உடுத்திருந்தான்! தோலின் ஆடை
தோளினிலே சுமந்திருந்தான்! சுரைக்குடுக்கை
தவறாமல் கைப்பிடியாய்ப் பிடித்தி ருந்தான்!
தடியொன்று வைத்திருந்தான்! உடைவாள் ஒன்றும்
எவரேனும் எதிர்க்கையிலே உதவு மென்றே
இடுப்பில்வைத்தான்! பற்கொம்பு, விசிறி, செம்பு,
கவிகைஇவை யல்லாமல் எல்லாம் நீத்த
கடுந்துறவி தூங்குவோள் எதிர்உட்கார்ந்தான்!








( 85 )





( 90 )




( 95 )
இயல் 64

  { அன்னம் துறவியைக் கண்டு திடுக்கிட்டாள். }

வெண்தாடி நிலம்புரள மேல்நி மிர்ந்த
விழிமூடித் தாமரையின் இருக்கை கொண்டு
கொண்டாடும் கற்பாறை போலி ருந்தான்!
கொஞ்சுகிளி விழிப்பாளா எனநி னைத்தே!
வண்டோடு பூவிதழும் பறக்கக் காற்று
மரக்கிளையை நெடிதழைத்துச் சருகை எல்லாம்
திண்டாட வைக்கையிலே இமைதிறந்தாள்!
திடுக்கிட்டாள்! துறவிதனை எதிரில் கண்டாள்.

விரைந்தெழுந்தே ஆடைதனை ஒதுக்கி நின்று
மென்மலர்க்கை கூப்பினாள்! துறவி சொல்வான்;
'தெரிந்துகொண்டேன் நின்உள்ளம் வாழ்க நன்றே!
சிறந்தஓர் பாண்டியனின் பரிசு, கைக்கு
வரும். சிறிதும் வருந்தாதே' என்று சொல்ல'
"வாய்மலர்க, எந்நாளில, என்றாள் அன்னம்!
"அருங்கிளியே உனக்கான ஆடவன் பால்
அதையுரைப்பேன் இங்கவனை அனுப்பாய என்றான்.

பெரியானைக் கைகூப்பிக் குதிரை ஏறிப்
பெண்ணரசி "உம என்றாள் செம்மா னூரின்
அருகினிலே வேலன்வரக் கண்டாள். கையால்
அழைத்திட்டாள்! செய்தியினைக் காதில் சொன்னாள்!
"தெருவினிலே நின்றிருப்பேன்! வரவு நோக்கிச்
செவிக்கமுது கொண்டுவர வேண்டுமென்றாள்!"
"இரு" என்றான். செம்மானூர்க் குடிசை சேர்ந்தான்
எழல்வேலன் பெரியானை நோக்கிச் சென்றான்






( 100 )





( 105 )




( 110 )





( 115 )




( 120 )
இயல் 65

   { தென்மலையில் நரிக்கண்ணன் ஆட்கள் பேழைக்
குத் தோண்டுகிறார்கள். அப்போது அங்கு ஓர்
பூதம் வெளிப்படுகிறது. எல்லோரும் பறந்தார்கள்
நரிக்கண்ணனிடம் சொன்னார்கள். }


தென்மலையில் பேழையினைத் தேடு கின்றார்
சிலர் அங்கே கற்பிளப்பார்! மண்ணெ டுப்பார்!
சின்னகுகை புகுந்திடுவார்! மாலைப் போதும்
சென்றுவிட, இரவினிலே மலையின் உச்சி
மின்னிற்றுப் பெருங்கூச்சல் கேட்ட தங்கே
மேல்நோக்கி ஐயையோ எனஅ திர்த்தார்
நின்றதொரு நெடும்பூதம் நரிக்கண்ணன்பால்
நிகழ்த்தினார் 'தென்மலையில் எவருமில்லை!

ஓடினான் நரிக்கண்ணன் தென்ம லைக்கே
உடன்சென்றார் படைமறவர் பல்லோர்! பூதம்
ஆடியதும், நெடுவேலைச் சுழற்றி நின்றே
அரற்றியதும் கண்டார்கள்! நடுங்கி ஓடி
மூடிவைத்த தெருக்கதவை உதைத்துத் தள்ளி
முன்வீட்டின் அறைபுகுந்து தாழிட்டார்கள்!
பாடுபட்டு நான்கண்ட சூழ்ச்சி தன்னைப்
பயன்படுத்திக் கொண்டான் அவன்யார்? என்றே

நரிக்கண்ணன் எண்ணினான்! பூதந்தன்னை
நான்குமுறை நோக்கினான் நோக்க நோக்கப்
பெரிதாகும் நிலைகண்டான்! நடுக்கம் கொண்டான்!
பெரும்பூதம் தென்மலையில் இருந்த செய்தி
தெரியாமல் இருந்தேனே எனமு டித்தான்!
தென்மலைக்கும் அரண்மனைக்கும் இடையில் வாய்த்த
அரைக்காதம் அதைநினைத்தான்! ஓடலானான்!
அரண்மனைக்குள் பெரும்பூதம்! என்று கேட்டான்.

வடதிசையைத் தான்மறந்து மேற்கு நோக்கி
வாழ்ந்தேன் கெட்டே னென்றறே ஓடும் போதும்
தடதடென ஆயிரம்பேர் எதிர்வந்தார்கள்
சரியாக ஒருதென்னை அளவு யர்ந்த
கொடும்பூதம் வந்ததெனக் கூறினார்கள்
குள்ளநரி பட்டதுயர் கூறொணாதே
பிடித்தான்பின் ஓட்டத்தைக் கிழக்கு நோக்கி!
பெரும்பூதம் என்றுரைத்தார் அங்கும் பல்லோர்.










( 125 )





( 130 )




( 135 )





( 140 )





( 145 )




( 150 )
-
இயல் 66

   { நரிக்கண்ணன், அவன் கூட்டம் பூதம் பூதம்
என்று அரண்மனையைக் காலி செய்தார்கள்,
அன்னம் உள் நுழைந்தாள், வேலன் முதலி
யவரும் சேர்ந்தார்கள். }


அரண்மனையில் நரிக்கண்ணன் ஆட்கள், பெண்கள்
அருகிருந்த தூண்,கதவு பெட்டி யாவும்
பெரும்பூத மாய்த்தோன்றக் கதறி, ஓடிப்
பிணியுற்றார்! உயிர்விட்டார் சிற்சிலர்போய்ப்
பரணுக்குள் குடிபுகுந்தார்! இவ்வாறாகப்
பாழான அரண்மனைக்குள் யாழ்ச்சொல் அன்னம்
திரண்மலைத்தோள் வேலனொடும் நீலி யோடும்
சிரித்தபடி உள்நுழைந்தாள் செப்பலுற்றாள்.

"ஆளுயரம் இருந்ததுவாம் நரியார் பூதம்!
ஆள் ஒருவன் தோளிலோர் ஆளை யேற்றத்
தோளுயர்ந்த இரட்டையாட் பூத மன்றோ
சுடுநெருப்பைக் கக்குகின்ற நமது பூதம்!
கோளுக்குக் கோள்பொய்க்குப் பொய்யே வேண்டும்
கொடியவன் வெட்டிய கிணற்றில் அவனேவீழ்ந்தான்
நாளும்எழில் நாட்டார்கள் பூத மென்று
நடுங்குநிலை இரங்கத்தக் கதுதான என்றாள்.

சிரித்துவிளை யாடஇது நேர மன்றே!
திண்ணூரின் குளக்கரையில் நெடுநா ளாக
இருப்பவனோர் திருடனென இயம்பு கின்றார்
யான் செல்வேன் விடைகொடுக்க என்றான் வேலன்
'இருக்கட்டும்! நீலி நீ துறவி யாரை
இங்கழைத்து வா.' என்றாள்; நீலி சென்றாள்!
நெருப்பிற்கு நீருண்டு தணிக்க! அன்னம்
நினைப்புக்குத் தணிக்கையிட அவனால் ஆகும்.

துறவுடையார் "பேழைஅகப்படும என்கின்றார்!
தொல்லைஇனி நமக்கில்லை என்றாள் அன்னம்!
அறிவுடையார் பிறர்தம்மை நம்பித் தம்மால்
ஆம்செயல்செய் யாமல்இரார் என்றான் வேலன்!
முறையாமோ இமைப்பொழுதே அமைதி கேட்டேன்
முழுநாளும் தழல்தழுவிக் கிடப்பாருண்டோ?
நிறைவுறும்உன் மொழியான குளிர்மரத்து
நீழலிலே விளையாடி மகிழ்வேன் என்றாள்.

கரும்பெடுத்துப் பிழிந்துதுவும் என்சொல் தானோ?
கனியெடுத்து வைத்ததுமென் இதழோ? முல்லை
அரும்பெடுத்துக் கொட்டியதும் என்சிரி ப்போ?
அடியெடுத்தால் அழகெடுக்கும் அன்ன மேஉன்
கரும்பெடுத்த இசைபோலும் சொல்லெ டுத்தால்
சுவை எடுப்பாய் இருக்கும்இனிக் கொஞ்சிப் பேசி
இரும்பெடுத்துச் செய்திருக்கும் என்றன் காதில்
இன்னமுதைப் பாய்ச்சாயோ என்றான் வேலன்.

பிள்ளைநிலை என்னுமொரு கனியின் சாறும்
பேரிளமை என்னுமொரு கரும்பின் சாறும்
கொள்ளைபடப் பெய்துவைத்த இளமை என்னும்
கொப்பரையில் நாள்என்னும் பூனை நாவால்
மொள்ளையிலே "உயிர என்பார் பார்த்திருத்தல்
-முறைதானோ என்றுரைத்தாள் அன்னம்! வேலன்
அள்ளையிலேகாதல் அதை அருந்தல் இன்பம்!
அகமொத்து மேல்நடத்தல் அறமாம் என்றான்.








( 155 )




( 160 )





( 165 )





( 170 )




( 175 )





( 180 )

-



( 185 )




( 190 )





( 195 )




( 200 )
இயல் 67

   { அதற்குள் துறவி வந்து சேர்ந்தான். }

மற்றுமொரு பேச்செடுத்தாள் அன்னம், அங்கே
வண்டிவரும் ஓசையினைக் கேட்டு நைந்தாள்!
ஒற்றைஎரு திழுத்துவந்த வண்டி விட்டே
ஊன்றுகோல் துணையாகத் துறவி வந்தான்
கற்றைமலர்க் குழலுடையாள் நீலி யோடு
கைகூப்பி வரவேற்க, வாழ்த்துக் கூறி
மற்றவரைப் புறம்போக்கி வேலன் காதில்
வாய்மலரை ஒற்றிமலர்த் தேனைப் பெய்தாள்.

நீலியவள் விடைபெற்று வெளியிற் சென்றாள்
நீளறையில் தனித்திருந்தாள் அன்னம்! அன்னாள்
சேலின் விழி மகிழ்ச்சியினால் மின்னும் வாயின்
செவ்விதழில் குறுநகைப்புச் சிந்தும்! நல்ல
வேலியிட்ட நன்செயிலே விதைத்த வித்தும்
விளையுமென அவள்உள்ளம் கூத்தடிக்கும்!
மேலும்அவன் அடிமையுள்ம் உடையான் அல்லன்,
மென்மலர்நான்! தும்பிஅவன், எனவியந்தாள்.







( 205 )





( 210 )




( 215 )
இயல் 68

 { நீலியும் நீலனும் பேசியிருந்தார்கள் நீலன் வீட்டில். }

ஒதுகின்றான் நீலியிடம் நீலன்: என்றன்
உயிர்போன்ற நீலியே வாராய் வாராய்
பூதமென ஒன்றில்லை என்று முன்பு
புகன்றாயே! இகழ்ந்தாயே என்னை! விண்ணை
மோதுதல்போல் வரும்பூதம் பார்த்தாய் அன்றோ?
மொய்குழலே இங்கேயும் இப்போதும்தான்
தீதுசெய்ய வரக்கூடும்! என்று கூறித்
தெருவிளக்குத் தூண்ஒன்றை உற்றுப் பார்த்தான்.

முன்வந்த பூதத்தை நரிவி டுத்தான்!
முதற்பூதம் நடுநடுங்கிச் சாகு மாறு
பின்வந்த பூதத்தை இளைய அன்னம்
பெற்றெடுத்தாள் என்றுரைத்துச் சிரித்தாள் நீலி!
என்ன பொருள் இதற்கென்று நீலன்கேட்டான்,
இதன்பொருள்தான் மடமைமேல் வெற்றி என்றாள்.
ஒன்றுமே விளங்கவில்லை என்றான் நீலன்
ஓர் ஆளும், கருப்புடையும் பூதம் என்றாள்!

வாட்படையும் வேற்படையும் கண்டு நெஞ்சம்
மலைப்படையக் குதித்தபூ தத்துக் கெல்லாம்
ஆட்படைந்தான் அடிப்படையோ? அஞ்சி ஓடி
அலுப்படைந்தேன் இதுகாறும் என்றான் நீலன்,
'மீட்படையா மக்கட்கு மீட்பும், சற்றும்
விழிப்படையா மக்கட்கு விழிப்பும் நல்கத்
தோட்படையால் வையத்தை வெல்லும் வேலன்
துணைப்படையாய் அன்னத்துக் கமைந்தான என்றாள்.

ஆள்பிடிக்குமோ அவளுக் கென்று கேட்டான்,
அடிபிடித்த வேர்கல்லி நூல்பிடித்து
வாள் பிடித்த றுத்தெடுத்த செம்மரத்தில்
வான்பிடிக்கச் செப்பனிட்ட தேர்போன் றானின்
தாள்பிடித்து வாழ்கின்றாள் அன்னம்! வேலன்
தகைமைஎலாம் மிகப்பிடிக்கும்! அவளுக்கன்னோன்
தோள்பிடிக்கும்; சுவையெல்லாம் பிடித்தெடுத்த
தூயதமிழ் நடைபிடிக்கும் என்றாள் நீலி!

எம்சொத்தே, கதிர்நாடு, நாமே ஆள்வோம்
என்நினைத்தார் நரிக்கண்ணர்: தீதே செய்தார்;
பஞ்சொத்துப் பறக்கின்றார் நாட்டு மக்கள்!
பலர்ஒத்து விரைவாகச், செழித்த மாவின்
பிஞ்சொத்த கண்ணாளுக் கிந்த நாட்டைப்
பெருமைபெற முடிசூட்டி முடித்து விட்டால்,
நெஞ்சொத்த நாமிருவர் மணமுடித்து
நெடுவாழ்வு தொடங்கலாம்! உன்னி டத்தில்,

'அன்னத்தை நான்காண வேண்டும் என்றேன்.
அதைமறந்தாய்' என்னேடி என்றான் நீலன்!
'சொன்னதை நான்மறந்து போக வில்லை
தொடர்பொன்று மில்லாத புதிய ஆளை
என்னத்துக் கவள்நம்ப வேண்டும்? அன்னாள்
எண்ணத்தை நானறிவேன்' என்றாள் நீலி!
"பொன்னொத்த பேழைக்கு முயல்கின் றாளா?
புலன்ஏதும் கிடைத்ததுவா?" என்றான் நீலன்.

ஒருதுறவி வேலனுக்கே ஆன மட்டும்
உதவுகின்றான், பேழையினைத் தேடி வந்து
தருவதாய் உரைக்கின்றான். பேழைக் காகச்
சற்றேனும் கவலையிலா திருக்கின் றேன்நான்
வரும்பேழை என்றுதான் நினைக்கின் றேன்நான்
மறைவாகப் பேசுகின்றார் எனைய கற்றிப்!
பெரும்பூதம் விட்டதுவும் துறவி வேலை!
பின்நடத்த இருப்பானும் அவனே' என்றாள
வட்டிவிட்ட வெற்றிலைக்குக் சீவல் நெய்யால்
வறுத்தெடுத்து நிறுத்தநிறை மணமும் சேர்த்துத்
தட்டிலிட்டுச், செம்பினிலே இன்பால் பெய்து
தனிந்தனியே முக்கனியின் சுளையும் இட்டுப்
பட்டிலிட்ட மேல்விரிப்பில் பூவடிப்பைப்
பாரெல்லாம் மணம்பரவத் தெளித்துத் தங்கக்
கட்டிலிட்ட அறைகாட்டிநீலி தோள்மேல்
கையிட்டான் பெருவீடு கமழச் சென்றார்.






( 220 )





( 225 )




( 230 )





( 235 )




( 240 )





( 245 )





( 250 )




( 255 )





( 260 )





( 265 )




( 270 )





( 275 )



( 280 )
இயல் 69

   { நரிக்கண்ணன் அஞ்சியோடி அடைந்த ஆனையூர்ப்
பள்ளியில் தன் ஆட்களிடமும், அமைச்சர்களிட
மும் பேசியிருந்தான். }


சென்றடைந்த ஆனையூர்ப் பள்ளி தன்னில்
சிலமறவர் உடனிருந்தார்; அவரை நோக்கி
'இன்றடைந்த பூதத்தை இதற்கு முன்னே
எங்கேனும் கண்டதுண்டோ நீங்கள் எல்லாம்?
குன்றடைந்த நம்ஆட்கள் கண்ட துண்டோ!
கூறுங்கள்; என்றுரைத்தான் நரிக்கண் தீயன்!
'என்றுமிதைக் கண்டறியோம் கேட்டோ மில்லை,
'என்றுரைத்தார் எல்லோரும்! அமைச்சன் சொல்வான்;

'ஆனையூர் தனில்வந்தோம் இவ்வி டத்தில்
அப்பூதம் வாராத தென்ன; நாமும்
பானையினைத் தலைகவிழ்த்துச் செய்த தைப்போல்
பகைவர்களும் ஒருபூதம் செய்தார் போலும்!
ஏனிதற்கு நாமஞ்ச வேண்டும்' என்றான்
இதற்கிடையில் அமைச்சன்மகன் நீலன் என்பான்
- தேனிதழாள் நீலியிடம் பெற்ற நல்ல
செய்திகளில் சிலசொல்ல அங்கே வந்தான்.









( 285 )





( 290 )




( 295 )
இயல் 70

 { இங்கு வந்த நீலன் நரிக்கண்ணனை அஞ்சாதிருக்கச்
சொல்கின்றான். }


"பூதத்துக் கஞ்சுவதோ வேந்தே? அஃது,
பொய்ப்பூதம்! ஆள்கொண்டு செய்த பூதம்;
ஊதப்ப றக்குமொரு சருகு! வற்றி
உலுத்தஒரு மிலார்! அந்த அன்னத்திற்குத்
தோதாக ஒருதுறவி இந்தச் சூழ்ச்சி
சொல்லிவைத்தான்; அவ்விளைய அன்னமும்தன்
காதலனும், துறந்தானும் அரண்ம னைக்குள்
கால்வைக்க லாயிற்றே! பேழை தன்னை,

அரண்மனையில் தேடுகின்றார்! அவ்வி டந்தான்
அதுகிடக்கும் என்பதுதான் அவர்க ருத்து!
விரைந்தங்கு வாரீரோ' என்றான் நீலன்!
வேந்தன் நரிக் கண்ணன்எரிக் கண்ணனாகிப்
பொருத்தும்இது! நடவுங்கள் அரண்மனைக்குள்'
போயிருக்கும் அன்னத்தைத் துரத்த வேண்டும்!
இருந்தங்குப் பேழையினை நாமே தேடி
எடுத்திடுவோம் என்றுரைத்தான்! நீலன் சொல்வான்;

-இங்கிருந்தே, எல்லாரும் பூதங் கள்போல்
எழில்மாற்றி மொழிமாற்றிக் கிளம்ப வேண்டும்;
அங்கிருக்கும் ஊர்மக்கள் அஞ்சிப் போவார்;
அன்னத்தின் ஆதரவும் குறைந்து போகும்;
சிங்கம்வரக் கண்டஒரு மானைப் போல
சேயிழைதன் கூட்டமொடு பறந்து போவாள்;
எங்கிருக்கும் ஆட்களையும் அழைப்பீர் என்றான்
ஏற்பாட்டை நரிக்கண்ணன் ஒப்புக் கொண்டான்.







( 300 )





( 305 )




( 310 )





( 315 )




( 320 )