{ நீலன் அரண்மனையில் அன்னத்தின்
கூட்டத்தைக்
கண்டு நரிக்கண்ணன் முதலியவர்கள் பூதமாக வர
இருப்பதைக் கூறினான் }
அரண்மனையை நோக்கிவந்த நீலன், நீலி
அன்னமெனும் உன்னருமைத் தலைவி யர்க்கும்
பெருமைபெறும் வேலனார், துறவியார்க்கும்
பின்னுள்ளார் அனைவர்க்கும் உனக்கும் தீமை
வருவதையும் அறியீரோ? உயிர்பிழைப்பீர்.
வாரிரோ வாரீரோ என்றான் நீலன்.
அரசன்மகள் உள்ளழைத்தாள், நீலன் சென்றான்.
இன்றிரவு பூதங்கள் நூறு வந்தே
இங்குள்ளோர் அனைவரையும் கொன்று போடும்!
ஒன்றதிலே நரிப்பூதம்! மற்ற எல்லாம்
உடனிருக்கும் படைமறவர் எனும்பூ தங்கள்!
நன்றிதனை நானறிவேன்! நானோ அந்த
நரியாரின் அமைச்சன்மகன்! நீலி என்பாள்
என்னுயிர் போன்றாள், அவளோ தங்கள் தோழி!
என்னிடத்தில் மிகவாகச் சொல்லியுள்ளாள்.
துறவியார் இவர்தாமோ! வேல னாரும்
தூயபிற நண்பர்களும் இவர்கள் தாமோ?
நிறையஎனக் கன்புண்டு தங்கள் மீதில்!
நேரினிலே மட்டுந்தான் கண்டதில்லை!
பிறகெல்லாம் பேசலாம்! வருந்தீ மைக்குப்
பெரிதுநீர் கருதிடுக என்றான் வேலன்
இறையவரின் அமைச்சருக்கு மகனாரே நீர்
இன்றிழைத்த நன்றியையாம் மறவோம் என்றான்.
என்றவுடன் துறவியவன் நீல னாரே
இங்குவரும் பூதங்கள் தம்மை நாமே
சென்றெதிர்ப்போம்! உம்தந்தை அடையாளத்தைச்
செப்பிடுவீர்! அவரைநாம் காத்தல் வேண்டும் என்றுரைத்தான் அதுகேட்ட நீலன் ''தந்தை
இடதுகையில் வேப்பிலைவைத் திருப்பார். அந்த
மன்னன் அடையாளமோ தலையில் மாம்பூ
வைத்திருப்பான் அறிந்திடுவீர்'' என்று சொன்னான்.
பறந்ததுவே லன்குதிரை! அன்னம் ஓர்பால்
பாய்ந்தேறித் தன்பரியைப் பறக்கச் சொன்னாள்!
'பிறந்ததுநம் விடுதலைநாள்! பிறந்த தின்பம்!
பிளந்ததுபோய் ஆள்வாரின் சூழ்ச்சிப்பாறை!
மறந்ததுவும் உண்டோநம் வாளும் தோளும்
மாற்றலர்கள் ஏற்றுவந்த பழியை என்றே
அறைந்தார்கள் வெல்முரசும்! தோழர் எல்லாம்
"அடடா"என் றரண்மனைக்குள் கடிது வந்தார்.
கணக்காயர் வந்திட்டார்! தம்பால் நாளும்
கற்பாரும் வந்திட்டார்! வீரப்பர்க்குத்
துணைத்தோழர் வந்திட்டார்! நாட்டின் அன்பு
சுரப்பான நெஞ்சத்து மறவர் எல்லாம்
பணிக்காக உயிர்என்று கொதித்து வந்தார்!
பகையாக வந்தவரைத் தொகையாய் வெட்டிப்
பிணக்காடு செய்கருவி அனைத்தும் தீட்டிப்
பிழைகாட்ட வழியின்றித் தொழில்புரிந்தார்.
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 ) |
{ அன்னம் வேழ மன்னனைக் கண்டு பேசலுற்றாள்
}
வஞ்சியவள் வேழனிடம் சென்றாள். "ஐயா
மக்கள் எல்லாம் பூத்ததால் நடுங்குகின்றார்.
நெஞ்சுறுதி கொண்டவரும் அதைஎதிர்க்க
நினைப்பதில்லை தங்களின்பேராணை எண்ணி!
அஞ்சல்எனத் தாங்களும்ஓர் சொல்லைச்சொல்லி
அருளுவதும் இல்லைஎனில் ஆர்தாம்காப்பார்?
கெஞ்சுபவர் சார்பில்நான் கெஞ்சு கின்றேன்!
கெடுதலையைத் தீர்ப்பதுநும் கடனே" என்றாள்
முதலிலோரு சிறுபூதம் வந்த தென்றார்!
முன்னிலிமு யர்ந்ததுவாய் மற்றொன் றென்றார்!
கதிர்நாடு பட்டது பஞ்சும் படாது
கண்டாரும் காணாரும் சொன்ன சொல்லால்
இதுபூதம் அதுபூதம் எனநடுங்கி
இறப்பாரும் ஆனார்கள். புதுமை அன்றோ!
புதுமன்னன் நாடாள வந்தான் பூதம்
போந்ததென ஓடிவிட்டான் கூட்டத்தோடு.
அஞ்சவைக்கும் பூதத்தை எதிர்த்துக் கொல்வார்
ஆர்எனினும் அவர்க்குநாம் காப்பளிப்போம்!
வஞ்சிஎழில் அன்னமே இதுநம் ஆணை!
மக்கட்கெ லாமிதனை எடுத்துரைப்பாய்!
மிஞ்சிவிடக் கூடாது பொல்லாங்கெல்லாம்
விளைந்தனவே பூதத்தால் என்றான் வேழன்!
நஞ்சுக்கு மருந்தையா தங்கள் ஆணை
நன்றையா என்றுரைத்தே அன்னம் சென்றாள்.
இழந்தானோர் ஏழைபெருஞ் செல்வம் பெற்றான்
எனமகிழ்ந்து வரும்அன்னம் தன்னை நோக்கிப்
பழந்தான்என் றுரைத்திட்டாள்! அரண்மனைக்குள்
நுழைந்தாளைத் துறவியவன் கேட்கப், பூதம்,
நுழைந்தாளைக் கொல்லுவதால் அதைமறித்து
முழந்தாளைமுறிஎன்றார்
மன்னர் என்று
மொழிந்திடவே துறவியதன் மகிழ்வு கொண்டான்.
|
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
( 75 ) |
{ இரவில் நூறு பூதம் வருவதாக அன்னத்தின்
ஆள்
வந்து அன்னம் முதலியவரிடம் கூறினான். }
சேறுண்டு நடவுண்டென் றிருப்பார் தாமும்
திருவுண்டு கடையுண்டென் றிருப்பார் தாமும்
வீறுண்டு வாளுண்டென் றிருப்பார் தாமும்
வினாவுண்டு படிப்புண்டென் றிருப்பார் தாமும்
சோறுண்டு மனைமக்களோடு சென்று
துயிலுண்டு கிடக்கின்ற இரவில் ஓர் ஆள்
நூறுண்டு பூதங்கள் வருவதைநான்
நோக்கியதும் உண்டடென்றான் துறவி யின்பால்!
வாளெடுப்பீர் இடக்கையில் பலகை கொள்வீர்
வரிப்புலியின் கூட்டம்போல் சுருக்காய் ஓடித்
தோளெடுக்கும் முன், பகையின் உயிரெடுப்பீர்
தூயவனே! நரிக்கண்ணன் தலையில் மாம்பூ!
தேளெடுத்து வைத்ததென இருக்கும் வேம்பின்
சிறியஇலைக் கொத்தன்றோ அமைச்சர் கொண்டார்!
தாளெடுப்பீர் நடப்பீர்கள் வேலனாரே
தலைமைநாடாத் துகஎன்று துறவி சொன்னான்.
|
( 80 )
( 85 )
( 90 ) |
{ அன்னம் நரிக்கண்ணனை
மாய்த்தாள் }
ஞாயிற்றின் ஒளிமுகத்து வேலன், அன்னம்
காலாட்கள், நடந்தார்கள். * பூதக் கூட்டம்
பூபூஎன் றதட்டிற்று நேரில் வந்தே!
ஆயிற்றா உமைக்காத்துக் கொள்வீர் என்றான்
அடல் வேலன்! எதிர்த்தார்கள்! பனையி னின்று
காய்இற்று வீழ்வதுபோல் நரிக்கண் ணன்தன்
கருந்தலைவீழ்ந் ததுவேஅன் னத்தின் வாளால்!
நாற்புறத்தும் வளைத்தார்கள் பகைக் கூட்டத்தை
நடுப்புறத்தில் அமைச்சன் உயிர்ப் பிச்சைகொள்ள
ஏற்புரைத்து, மற்றவரின் உயிரை வாங்கி
எடுத்துவந்த எரிக்கொள்ளியால் முகங்கள்
மாற்றமுறத் தீய்த்துப்பின் பிணத்தை எல்லாம்
வரிசையுறக் கிடத்தி, அரண்மனைய டைந்தார்.
வீற்றிருந்த துறவியவன் நடந்த எல்லாம்
வினவினான்; அமைச்சன்தான் மொழிய லானான்;
------------------------------------------------------------------
* கோட்டை வாயில் போயிற்றுக் கூட்டமிது
-------------------------------------------------------------------
|
( 95 )
( 100 )
( 105 ) |
{ நீலன் தந்தையும் நரிக்கண்ணன்
அமைச்சனுமாகிய
ஒருவன் துறவிபால் நடந்தவை கூறினான். }
தீப்பட்ட காட்டினிலே வேங்கை யோடு
சிறுமுயலும் சாதல்போல் நரியின் மைந்தன்
சாப்பாட்டுப் பொன்னப்பன் தானும் செத்தான்.
தன்தாயும் உடனிறந்தாள். பூதப் போர்வை
காப்பாற்றும் எனநினைத்தார் அதனால் மாண்டார்!
கண்ணிமைப்பில், அன்னத்தால் நரி இறந்தான்
வேப்பிலைக்கை யுடையெனைப் புறம்விடுத்து!
வீழ்த்தினார் பகையனைத்தும் வேலர் என்றான்.
தேரோடு வீதியிலே கதிர்நாட்டானில்
செந்நீரோ டும்வண்ணம் வஞ்ஞம் செய்தும்
காரோடு நிகர்குழலாள் அரசி தன்னைக்
கனிவோடு பேசித்தன் கையால் மாய்த்தும்,
சீரோடு வாழ்ந்திருக்க நினைத்தான்; அந்தத்
தீயோனும் தீர்ந்தான் தன் குடித்தனத்தை
வேரோடும் தீர்த்திட்டான்! இரங்குகின்றேன்
மேல்என்ன நல்துறவி! ஒப்பிச் சென்றார்.
|
( 110 )
( 115 )
( 120 ) |
{ வேலன் நெஞ்சம் அன்னத்தின்
மேல்! }
சன்னலிலே தென்றல் வந்து குளிர்விளைக்கும்!
தனியறையோ அமைதியினைச் பெய்யும்; மிக்க
மென்மையுறு பஞ்சனையோ துயில்க என்று
விளம்பும்! அவன் உளம் அங்கே இருந்தால் தானே!
கன்னலிலே சாறெடுத்து தமிழ்குழைத்துக்
கனிஇதழாற் பரிமாறும் இனியசொல்லாள்
அன்னத்தின் மேல்வைத்தான் நெஞ்சை வேலன்
ஐயத்தை மேன்மேலும் உடையானாகி.
விண்ணிடையே பன்னூறாயிரம்மீன் கட்கு
வெண்ணிலவு போல் அந்த மங்கை. அன்னம்
மண்ணிடையே பெண்ணினத்துக் கொருத்தி அன்றோ?
வாழ்விடையே பெருவாழ்வு வாழ்ந்தாள்; என்றன்
கண்ணிடையே மலர்க்காடா னாளே! உள்ளக்
கருத்திடையே மணமானாளேஎன் செய்வேன்!
நுண்ணிடையாள் எனக்குத்தானோஅல் லாது
நோயிடையே சாகத்தான் பிறந்துள்ளேனோ!
பயிரடைந்த ஊட்டத்தி னூடு தோன்றும்
பச்சை பசு ந்தோகை மயிலை! நல்ல
உயிரடைந்த ஒவியமோ! அச்சில் வார்த்த
ஒளியடைந்த வடிவமோ! வைய மென்றும்
பெயரடைந்த பெருவாழ்வு வாய்ந்தாள்! என்மேல்
பெண்ணடைந்த மகிழ்ச்சிக்கோர் எல்லை யில்லை
உயர்வடைந்தாள் எனக்குத்தா னோ அல் லாமே
ஊன்மெலிந்து சாகத்தான் பிறந்துள் ளேனோ!
திருந்தாதோ முல்லையெனச் சிரிப்பாள்! நன்றே
செழிக்காதோ வையமென அறங்கள் செய்வாள்!
அருந்தாதோ தும்பியென வாய்மலர் வாள்!
அடையாதோ அன்னம் எனும் நடையாள்! நாடு
வருந்தாதோ என் ஆளும் வாழ்வு வாய்ந்தாள்!
வாய்க்காதோ என் அருள்தான் என்று நோக்கி
இருந்தாளை எனக்குத்தா னேஅல் லாமே
இடருற்றுச் சாகத்தான் பிறந்திட்டேனோ?
கொம்பென்றால் அவள் மெய்யைத், தார்வருந்தும்!
கொடிஎன்றால் அவளிடையே மின்வ ருந்தும்!
அம்பென்றால் அவள்விழியை மீன்வ ருந்தும்!
அலைஎன்றால் அவள் குழலை முகில்வ ருந்தும்!
செம்பென்றால் பொன்ஈயும் வாழ்வு வாய்ந்தாள்
செயல்என்றால் 'உளம்வாய்மெய் உனக்கே ஆகும்
நம்பென்பாள்!' எனக்குத்தானேஅல்லாது
நவிவுற்றுச் சாகத்தான் பிறந்திட்டேனோ!
பொன்னிழையால் பூப்போட்ட நீலப்பட்டுப்
புடவையொடு நடையழகி கண்டேன் ஆங்கோர்
புன்னைமரம் மலர்குலுங்க நடந்த தென்ன
புதுமையென நான் வியந்தேன்! இவ்வை யகத்தில்
மன்னுமிள வரசிஎனும் வாழ்வு வாய்ந்தாள்
மலர்விழியால் அருட்பிச்சை கேட்பாள் என்னை!
அன்னமவள் எனக்குதா னேஅல்லாமே
அகம்நொந்து சாகத்தான் பிறந்துள்ளேனோ!
ஆடப்போம் புனலினெல்லாம் அவளே, காற்றில்
அசையப்போம் பொழிலிலெலாம் அவளே! கண்ணால்
தேடப்போம் பொருளிலெலாம் அவளே நேரில்
தின்ப்போம் சுவையிலெலாம் அவளே, வண்டு
பாடப்போம் மலரிலெலாம் அவளே! மேற்கில்
படுகதிரில் அவள்வடிவே காண்பேன் என்று
வாடக், கண் துயிலாமல் இருந்தான் வேலன்
மலர்ந்திட்ட காலையிலும் அவளைக் கண்டான்.
|
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 ) |
{ ஊர்ப் பேச்சு. }
வடிந்ததுவே கருவண்ண இரவும்! ஆர்ந்து
வழிந்ததுவே பொன்வண்ணப் பகலும்! எங்கும்
ஒடிந்தது, தீயோன்பிடித்த கொங்கோல்! வானில்
உயர்ந்ததுநல் லோரின்கை! சிலர்அ றிந்து
முடிந்தது பூதச்சூழ்ச்சி! எனமகிழ்ந்தார்!
மூளுகின்ற அச்சமினி இல்லை என்றார்!
கடிந்துரைத்தார் நரியானைக், கைகள் கொட்டிக்
களித்திடுவார் பாடிடுவார், ஆடுவார்கள்!
அரசனிது கேள்வியுற்றான், வியந்தான்; சென்றே
அப்பிணங்க ளைக்கண்டான்! நரிக்கண் ணற்கு
வரும்இந்த நிலைக்கிரக்கம் கொண்டா னேனும்
வஞ்சகர்க்கு வாய்ப்பதுதான், வாய்த்த தென்று
கருதினான்; பூதமென வந்ததாலே
கட்டோடு மாண்டுவிட்டான், மாளச் செய்த
ஒருகூட்டம் உண்டென்றால் அதனை நான்தான்
உண்டாக்கி னேன்என்றன் சட்டத்தாலே.
தொல்லைஇனிக் கதிர்நாட்டுக் கில்லை பூதச்
சூழ்ச்சியோ வேரற்றுப் போனதாலே!
'வில்லைநிகர் நுதலுடையாள் அன்னம், பேழை
வேண்டுகின்றாள் அதன்முடிவு காண வேண்டும்.
கல்லையெலாம் மலையையெலாம் கட்டி டங்கள்
காட்சிதரும் மன்றமெலாம் அகழ்ந்தும் சாய்த்தும்
இல்லைஇது வரைக்குமே அருமைப் பேழை
இருக்கின்ற தெனும் பேச்சு' என்றான் மன்னன்.
வேழவனோ இவ்வாறு கூறக் கேட்டு
விளம்பிடுவான் நல்லமைச்சன்; மன்னர் மன்னா!
பேழையினைக் காண்பதுவும் எந்த நாளோ!
பெருநாட்கள் நாமிங்குக் கழிக்கலாமோ!
ஏழெட்டு நாட்களிலே பேழை கிட்டா
திருந்திட்டால் கதிர்நாட்டின் ஆட்சி தன்னை
மாழைஎனும் தங்கள் அரும் மருகருக்கு
வழங்குவதே ஒழுங்காகும் என்றுசொன்னான்.
|
( 185 )
( 190 )
( 195 )
( 200 )
( 205 )
( 210 ) |
{ வேழமன்னன் "ஏழுநாளில் பேழை அகப்படா
விட்டால் கதிர்நாடு மாழைக்கு முடிசூட்டப்படும
என்று பறை அறைவித்தான் }
எவரெதனைச் சொன்னாலும் ஆம் ஆம் என்றே
இயம்புகின்ற வேழத்தான் இதையும் ஒப்பித்
தவறொன்று மில்லை இதில் ஏழு நாட்கள்
தவணையிட்டுப் பறையறையச் சொல்க என்றான்!
நவிலலுற்றான் எவ்விடத்தும் வள்ளுவன் போய்!
நாடெல்லாம் முரசொலியைக் கேட்டார் மக்கள்.
இவண்ஏழு நாட்களிலே பேழை காணா
திருக்குமெனில் மாழைக்கே கதிர்நாடாகும்.
சிறுகுடிலில் நல்ஆத்தா இருந்தாள்! ஆங்கே
தேனிதழாள் அன்னந்தன் விழிநீர் சிந்த
இறையவனாம் வேழத்தான் சொன்ன வண்ணம்
ஏழுநாள் போய்விட்டால் நாடும் போமே
அறையாயோ ஒருவழியை ஆத்தா என்றே
அழுதிருந்தாள்! வீரப்பர், கதிர் நாட்டாட்சி
பெறுவாய்நீ என்றாரே அவரைக் காணப்
பெறுவேனோ எங்குள்ளார் பேசாய் என்றாள்.
இடைத்துகிலால் கண்துடைத்தே அன்னமேஎன்
அன்புக்கு வாய்ப்பிடமே! என்து ணைவர்
நொடிப்போதும் சோர்வின்றிப் பேழை தன்னை
நோக்கும்விழி மூடாமல் தேடு கின்றார்.
துடிக்கும்நரிக் கண்ணனவன் ஒழிந்தான் நீயே
தொட்டவாள் அவன்குடியை அழித்த துண்டு.
கொடிக்குநிகர் இடையாளே கதிர்நாட்டாட்சி
கொள்ளு நாள் இதுஅன்றோ என்றாள் ஆத்தா.
வாயோரம் "உயிர்வாங்கும் சிரிப்பு" மின்னி
வழிகின்ற வேலவனின் திருமு கத்தில்
மாயாத என்நெஞ்சம் சென்று சென்று
மாய்வதனை இவ்வையம் அறிவ துண்டோ?
தீயோரும் என்நிலைமை அறிந்தால், என்றன்
திருப்பேழை தாராரோ எனத்துடித்துப் பாயோரம் ஆத்தாவின் மடியின் மீது
தலைசாய்த்துப் படுத்தபடி பலநினைத்தாள்.
நான்குநாள் ஆயினவே! பேழை தன்னை
நாட்டாரில் ஒருபேழை கண்ட தாயும்
நான் கேட்க வில்லையே மலர்மு கத்தில்
நறைபெருக்கும் இதழானைப் பெறுவ துண்டோ?
வான்முகிலில் பெருங்கடலின் கீழ்ப்பால் இந்த
வையத்தில் பெருங்காட்டில் இருப்பதாக
ஊன் செவியில் நான்கேட்கப் பெற்றால் என்றன்
உயிர்கொடுத்தும் பேழையினைப் பெறுவேன் அன்றோ!
எனத்துடித்தே எழுந்திடுவாள்! வீதி நோக்கி
எழில்நகரை உள்ளத்தால் நோக்கி நோக்கி
இனித்தேடும் இடம்இல்லை எனமு டித்தும்
இருகாலும் செல்லும்வழிச் சென்றி ருந்தாள்.
தனித்தாளும் அரசுபோல் துறவி யங்கே
தானொருபால் வீற்றிருந்தான் அரண்மனைக்குள்!
கனிச்சாற்றை நிகர்க்கின்ற தமிழறிந்த
கணக்காயன் முதற்பலரும் அருகிருந்தார்.
கணக்காயன். 'அறிஞரே, துறவி யாரே,
கடிதினிலே பாண்டியனார் பரிசு தன்னைத்
தணிக்காத காதலனார் வேலன் கொள்ளத்
தண்அருளைப் புரியீரோ என்று சொல்லத்
துணுக்கமுறு கின்றதுவே என்றன் உள்ளம்
தூயபாண்டியன் பரிசு வெளியில் வந்தால்
பிணக்கங்கள் வஞ்சங்கள் பிறக்கும், தூய
பேழைநிலை என்னாமோ? கருத வேண்டும்!
ஆயினும்நான் பேழைதனை நாளைக்கு ஈவேன்!
அறநெறியின் மறவர்களில் ஒருவன் வேலன்!
தூய, அவ் அன்னம்இக் கதிர்நா டாளத்
தோன்றியவள்! கவலைஏன்? நீவிர் போக
ஆயவெலாம் நான்முடிப்பேன் என்றுரைத்தான்.
அகமகிழ்ந்தார் அங்கிருந்தார்; அகன்று போனார்;
ஆயிழையாள் நீலியவள் பொதுமன்றத்தில்
ஆளனிடம் அன்புசெய விரைவிற் சென்றாள்!
|
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
( 235 )
( 240 )
( 245 )
( 250 )
( 255 )
( 260 )
( 265 )
( 270 )
( 275 ) |
{ நீலன் நீலி பேச்சு. }
அன்பாகப் பேசியும் கை தொட்டும், தோளை
அனைத்தும்பின் முகத்தோடு முகமி ணைத்தும்
இன்பாக இரவுகழித் திடலாம் என்றே
எண்ணிச்சென் றாள் அந்தநீலி! நீலன்,
முன்பாகச் சொல்லடிநீ பேழை பற்றி
முடிவென்ன செய்துள்ளார் அவர்தாம் என்றான்.
பின்பாகட் டும்சற்றே தமிழும் அன்பும்
பிசைந்தாற் போல்பேசி யிருப்போம் என்றாள்
மகிழ்ச்சிக்கோர் அடிப்படைதான் பேழைச் செய்தி
வறாத அன்பூற்றே கேட்டபாய்!
புகழ்ச்சிக்கே உரியவளாம் அன்னத்திற்குப்
பொன்முடியைச் சூட்டிவிட்டால் நாட்டார் பெற்ற
இகழ்ச்சிமுடி வடையுமடி! நமது நெஞ்சும்
இன்னலிலா திருக்குமடி! அப்போ தன்றோ
தொகுத்துவைத்த முத்தங்கள்; கொடுக்கல், வாங்கல்
தொழில்விரைந்து நடக்குமடி என்றான் நீலன்.
நாளைக்குப் பேழைவரும் என்றாள் நீலி!
நற்பேழை இருப்பிடத்தைக் கேட்டான் நீலன்
காளைக்கும் மங்கைக்கும் கணக்காயர்க்கும்
காட்டுங்கால் காணுவார் என்றாள்! தென்னம்
பாளைக்கு நிகரான நகைமுகத்தாய்
பகற்போதில் என்வீடு வருவாய்! இந்த
வேளைக்கு விடைகொடுப்பாய் என்று கூறி
விரைவாக நடந்திட்டான் வீடு நோக்கி!
|
( 280 )
( 285 )
( 290 )
( 295 ) |
{ நீலன் வீடுசென்று பேழையோடு வருவானை
மறித்துப் பறிக்கச் சொல்லி ஆட்களை ஏவினான். }
வீடடைந்தான் நீலனவன்! பொழுதோ இன்னும்
விடியவில்லை! ஆட்கள்பலர் எவ்விடத்தும்
காடடைந்த விலங்குகள் போல் உலவலானார்
கடகடெனக் குதிரையினை நடத்து கின்றார்!
கூடடைந்த கிளிபோலக் குடிசை தன்னில்
கொடியிடையாள் இருந்திடுவாள்! விரைவில் அங்கே
ஓடிடுங்கள் என்றகுரல் கேட்கும் ஓர்பால்!
ஊக்கங்கொள் வீர்என்னும் ஒருகுரல்தான்!
எவனேனும் பேழையோடு செல்வா னாயின்
எதிர்த்திடுவீர், பேழையினைப் பறிப்பீர் என்று
நவிலுமோர் குரல்! நீண்டவாள்மறைத்து
நடவுங்கள் என்றதட்டும் ஓர்கு ரல்தான்!
சுவரைப்போய் பார்என்பான் ஒருவன்! பேழை
தோளின்மேல் வைத்தபடி நிற்கின் றான்பார்!
அவனைமறி என்றொருவன் கூறக் கேட்டே
அத்திமரத் தைஒருவன் குத்தி நைவான்
ஆலடியில் நின்றிருந்த கழுதை தன்னை
அங்கொருவன் தொட்டுதையும் பட்டு வீழ்ந்தான்
காலடிஓ சைகாட்டா தொருவன் சென்று
கல்தூணை மற்போருக் கழைக்க லானான்!
வேலடியை ஆள்என்று நெருங்கி முட்கள்
வெடுக்கென்று தைத்ததினால் நடுங்கங் கொண்டான்!
மேலெழுந்த நிலவிலும், இத் தொல்லை யாயின்
மிகுமிருட்டு வேளைஎனில் என் ஆவாரோ?
ஆளொருவன் வரக்கண்டால் ஐந்து பேர்கள்
ஆரங்கே என்றதட்டி நிறுத்து மந்த
நாளிரவு மெதுவாக நடக்கக் கீழ்ப்பால்
நடுக்கடலில் இளங்கதிர்தான் நுனிமு ளைக்கும்
வேளையிலே கதிர்நாட்டின் மேற்கி னின்று
வேலன்ஒரு குதிரையின்மேல் பேழை யோடும்
வாளோடும் வருகின்றார்! அவனைச் சூழ்ந்து மறவர்பலர் வருகின்றார் குதிரை மீதே.
|
( 300 )
( 305 )
( 310 )
( 315 )
( 320 )
( 325 )
( 330 ) |
|
|
|