"தமிழர் செல்வந் தன்னைச் சுரண்டி
உமது நாட்டுக் கோடுதல் ஒப்போம
புறநகர் தன்னில் ஓர்அற விடுதிதனில்
மறைவுள் ளத்தினர் வடநாட்டு மக்கள்,
கொன்றையில் பிறந்தஓர் குள்ள னிடத்தில்
நின்றுகண் ணீரொடு நிகழ்த்துவா ரானார்:
சுமைப் பொருளோடும் இத்தமிழ் நாடுசேர்ந்தோம்
எமை, இங்குள்ளார் இகழ்வா ரானார்
வடக்கில் வழங்கும் இடக்கு மொழியை
அடக்கடா என்றெமை அதட்டிய தாலே
ஓராண்டாக உயர்வுறு தமிழை
நேருறக் கற்றோம்! நிலையாய் இங்குத்
தங்கி வாணிகந் தான்செய் வதற்கே
இங்குளார் நெஞ்சும் இரங்கக் கேட்டோம்,
தமிழர் செல்வந் தன்னைச் சுரண்டி
உமது நாட்டுக் கோடுதல் ஒப்போம்
வாணிகம் என்று வந்துட் கார்ந்து
மாணுறு தமிழர் வாழ்வுக் கொவ்வாச்
செயல்கள் செய்ய முயலவும் கூடும்
அயலவர் ஆதலின் அகல்வீர் என்றார்
மற்றியது கேட்டார் இருவரும்!
குற்றம் என்று குறித்தாள் மனைவியே,
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 ) |
"துணிவு கண்டாள் தூய நெஞ்சின்
தணிவு கண்டாள், தமிழ்ப் பற்றுக் கண்டாள
காதல் நறுக்கைக் கைப்பட எழுதி
மாதுக் கனுப்பினான் மறவன் ஒருவன்.
எழுதிய தன்றி, இன்பம் அடைந்திடும்
முழுநம் பிக்கையால் மொய்குழல் வீட்டின்
கொல்லைப் புறத்தில் குந்தியிருந்து
வருவாள் என்று வழிபார்த்திருக்கையில்
அன்னவன் காதை அவளும், அவளின்
அன்னையும் பேசுதல் அதிரச் செய்தது.
மங்கை சொன்னாள்:
எங்கும் எப்பொதும் இதனை எழுதிய
சேயிடம் என்னுளம் சென்றதில்லை
ஆயினும் வீதியில் அவன்பேர் சொல்லி
நீட்டி அழைத்தது கேட்டதுண்டாதலால்
பேர் தெரியும்
தோட்டத்து வருவதாய்ச் சொல்லுகின்றான்
பிழைபட நினைத்தான்
அவன்என் மானம் அழிக்கும் எண்ணமோ?
என்னலும்:
அன்னை அன்னவன் அனுப்பிய நறுக்கைத்
தன்கையில் தாங்கித் தலைநட்டுப் படிப்பவள்,
இடையிடை அவனை இகழ்ந்தாள், இகழ்ந்தசொல்
தொடர்ந்ததான் வரைந்த தூய தமிழிலும்
பட்டது. கேட்டான் பதைத்தான், ஐயகோ
கெட்டவன் நானே, கெட்டவன் நானே
என்னை இகழ்ந்த அன்னை, என்னால்
பொன்னிகர் தமிழை இன்னுயிர் ஒப்பதை
இகழ்ந்தாள் என்றே இடையில் தொங்கிய
வாளை உறையி னின்றுவாங்கி அன்னைபால்
"காளை" நான்கொண்ட கருத்தின் பிழைக்கு
வாட்டுக என்னை, வாட்டிய பின்னை,
நாட்டின் தமிழை நலிவுற இகழ்ந்ததற்கு
நின்கொடு நாவினை இன்னற் படுத்துக.
என்றெதிர் நின்றான்! அன்னவன்
துணிவு கண்டாள் தூய நெஞ்சின்
தணிவு கண்டாள் தமிழ்ப்பற்றுக் கண்டாள்
மங்கை, காதல் மடுவில் குதித்தாள்
மங்கையின் தாயோ மங்காத் தமிழை
மங்க உரைத்தது மாப்பிழை என்றே
அங்கு நலிந்தாள். அவனையும் வியந்தாள்.
மகளின்,
கடைவிழி மடைபாய் கயலென அவன்பால்
நடப்பது கண்டு நன்றே வாழ்த்தினாள்!
நாளை மணமென நவின்றாள்: அந்தக் காளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தான்.
இதையெலாம் கிழவனும் ஏந்திழை தானும்,
பக்கத்தி லிருந்து பார்த்தும் கேட்டும்
வியந்தனர்; ஆயினும் குற்றம்
உயர்ந்த தென்றே உரைத்தேகினரே.
|
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 ) |
"எத்தனை பேர்க்குநீ எழுத்தைச் சொல்லி
வைத்தனை?',
நெற்களத் திட்ட நெடும்பரண் மீது
சற்றும் விழிப்புத் தளராதொருத்தி
உட்கார்ந் திருந்தாள். ஒருவன் வந்தே
''எட்பூ மூக்கும், இளைத்த இடையும்
அரும்பும் இளமையும் அடைந்தோய்! என்னை
விரும்புதல் நன்றென'' விளம்பினான்.
''அரசினர் கல்வி அளிப்பதன்றியே
விரைவில் கொன்றை மேன்மை எய்தத்
திட்டங் கொண்டஇச் செந்தமிழ் நாட்டில்
எத்தனை பேர்க்குநீ எழுத்தைச் சொல்லி
வைத்தனை? நீயோ வண்டமிழ் எவ்வளவு
கற்றனை'' என்று கனிபோல் கழறினாள்.
பெற்ற புலமை பெரிதெனக் காட்டினான்.
பயிற்றிய சிறார்கள் பலர்என விளக்கினான்.
வியப்புற்று மெல்லி, மேலோன் தோளினை
நயப்புற்ற பொன்னுடல் நன்றுறத் தழுவினாள்.
கிழவன் கண்டான் கேடு நவிலும்
பிழையினள் கண்டாள் பெரிதும் குற்றம்
என்று கூறி, அங்கிருந்து
சென்றனர் ஊர்ப்பொது மன்று நோக்கியே.
|
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
|
"தலைவரைச் சிறையில் தள்ளியது கொடியது
புலையோ, களவோ கொலையோ புரிந்தார்?"
விடிந்தது, வீதிக்கு வீதி, வேளவாள்
படிந்த தோளோடு படை மறவர்கள்
நெடுவிழி எரிபட நின்றனர். மக்களைக்
கடுமொழி கூறிக் கலைத்தனர். தெருவில்
நடப்பதும் தவறென நவில்வாரானார்.
படுப்பதும் தீதெனப் பகர்வாரானார்.
வியந்தனர் சிலரே. வெகுண்டனர் சிலரே.
துயரில் கொன்றை தோய்ந்ததென் றார்சிலர்.
என்ன நடக்குமோ? என்றனர் சில்லோர்.
ஈவான் விடுதலை என்றனர் சில்லோர்.
காவான் என்று கழறினர் சில்லோர்,
திடு திடு என்றோர் சிறுபடை சென்று
மகிணனைச் சிறையில் வைத்து மீண்டது!
சடுதியில் ஒருபடை தாரோன் தன்னையும்
வடுவொன் றில்லா வாட்பொறை தன்னையும்
சிறையில் சேர்த்துச் சிரித்து நின்றது!
தங்கவேல் கண்டு தளர்வுற்றிருந்தான்.
கிள்ளை பெருந்துயர் வெள்ளத் தாழ்ந்தாள்.
கொன்றைநா டழுதது: கொதித்தது நெஞ்சம்.
அன்று, மணிப்பொது மன்றில் அரசன்,
தனிமையில் அழைத்தான் தங்க வேலனை
இனியும் கிள்ளை இணங்கமாட்டாளோ
என்று கேட்டான். இசைந்தான் தங்கவேல்;
ஒன்று கேட்க! ஊர்ப்பொது மக்களின்
தலைவரைச் சிறையில் தள்ளியது கொடிது,
புலையோ, களவோ, கொலையோ புரிந்தார்?
குற்றம் என்ன கோவே, வாட்பொறை,
மற்றவர் இழைத்து குற்றமும் சொல்வீர்?
ஒருவனை விரும்பிய ஒண்டொடி யைப்பெறத்
திருவனை நாட்டின் சீரழிப்பதோ?
என்று, தோள் அதிர, இருநீர் விழிதுளிக்கச்
சொன்னான். சிரித்து மன்னன் சொல்வான்:
தங்கவேல், இங்கிருந்து தையலிடம்போய் "அங்கே, மன்னனின் அழுகை நீக்கி
நாட்டு மக்களின் நலிவை நீக்கென்று
கூறுக, உன்றன் குறையைப் பின்னர்
கூறுக" என்று கூறிய அளவில்,
.தங்கவேல் கிள்ளைபால் சென்றான்.
அங்கவள் உளத்தை அரசனுக்காக்கவே.
|
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 ) |
"தங்கவேல் என்னும் தமிழனைக் காண்கிலேன்
இங்கொரு கோழையை யான்காண்கின்றேன
தங்கவேல், இதுவும் தகுமோ உனக்கே,
எங்குளாய்? கொன்றை இகழ வாழ்ந்தனை.
அன்பரை, அண்ணலை அரசன் வருத்திட
உன்துணை பெரிதும் உதவிற்றேயோ?
நாட்டினைப் பிறன்பால் காட்டிக் கொடுத்தும்
வாழஒப் பிற்றோ மற்றுன் உள்ளமும்?
மாழை நாட்டான் மகிழ நடந்திவ்
வேழை நாட்டை ஏற்கஎண்ணினையோ?
எங்கே வந்தாய்? என்னுளம் மாற்றவோ?
சிங்கம் உண்பதை சிறுநரிக்காக்கவோ?
கொன்றை நாட்டைக் குறைவு படுத்தவோ?
உன்றன் கருத்தை ஒப்பேன். போய்விடு.
தங்கவேல் என்னும் தமிழனைக் காண்கிலேன்;
இங்கொரு கோழையை யான்காண் கின்றேன்.
போஎனச் சொன்னாள் பூவிழி நெருப்புக
கோஎன அழுதே கூறுவான் தங்கவேல்;
சிறையினில் எனையும் அத்தீயோன் சேர்ப்பான்;
பிறகெவர் உள்ளார்? அறைக கிள்ளையே.
அரசனை அணுகி அறிவு புகட்டினேன்.
"திருமுகத் தாளைநான் சேரும் படிசெய
என்று நஞ்சென இயம்பினான் வந்தேன்.
உன்னுளம் சொல்லுக உரைப்பேன் அவனிடம்,
என்று சொல்லவும்,
என்னுளம் என்னிடம் ஏது, கூறுக
மகிண னிடத்தில் வாழ்வதன்றோ?
என்னிடம் இம்மொழி இயம்பவும் ஒண்ணுமோ
உன்னிடம் அறிவும் ஒழிந்த தேயோ?"
என்று கூறினாள் கிள்ளை.
சென்றான் தங்கவேல் மன்னனிடத்தே.
|
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
|
"கொன்றை நாடு கொடுமை பொறுக்குமோ?
நன்றிதோ நன்றிதோ என்று கெஞ்சினான
கொள்ளக் காதலோடு கொற்றவன் இருந்தான்
ஒள்ளி யோனும் உடன்அமர்ந்திருந்தான்.
படையின் தலைவனோர் பாங்கர் இருந்தான்.
தடதட வென்று தங்கவேல் வந்து,
"கிள்ளை என்மொழி கேட்கிலள என்றான்.
துள்ளி எழுந்து சொல்வான் மன்னன்;
ஒள்ளியோய் நேற்றுமுன் உன்னை எதிர்த்துத்
படையின் தலைவனே சடிதே அவர்களை
அடைக்க சிறையில் அதுவும் அன்றி
வீட்டினின்று மக்கள் வெளிவராமற்செய்,
கூட்டம் எங்கும் கூடா வகைசெய்.
கடைகள், தொழிலகம் கதவடைக்கச்செய்,
தடவயல் உழவும் நடவாமைசெய்.
ஒருவீட்டி னின்றுமற் றொருவீட்டுக் கொருவன்
வருதலின்றி வழுவாது பார்த்திடுக.
மன்னனின் ஆணை. மறவேல என்றான்.
தங்கவேல் பதைத்துத் தரையிற் புரண்டு
'மங்காப் புகழுடை மன்னா மன்னா
கொன்றை நாடு கொடுமை பொறுக்குமோ?
நன்றிதோ, நன்றிதோ, என்று கெஞ்சினான்,
ஆணையை நடத்த அவ்வொள்ளி யோனும்
படையின் தலைவனும் பறந்தார். மன்னன்,
"தங்கவேல், மங்கயைத் திருத்துக,
இங்கிரேல என்றான். ஏகினான் அவனுமே.
|
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 ) |
"ஓம்புதல் பெற்றீர் உயிர்துடிக் கின்றீர்
பாம்புநிகர் மன்னனைப் பழிவாங்கேனோ"
தாரோன் சிறையின் சன்னலின் கம்பியை
ஆரும் அறியா தகற்ற முயன்றான்.
அவனுளம் அரசன் ஆவியைக் போக்க
ஓடிற்று; நல்லுயிர் உலகை வெறுத்தது.
ஆடின இருதோள், அலறின உதடுகள்
கொன்றை நாட்டு மக்கள் கொடுமையால்
இன்று நலிந்திரோ?" என்று கூறினான்.
இமைகள் இரண்டும் இருவிழி காத்தல்போல்
தமிழரே, மகிணன் தலைமையில் நாடோறும்
ஓம்புநல் பெற்றீர் உயிர்துடிக்கின்றீர்.
பாம்புநிகர் மன்னனைப்பழிவாங் கேனோ,
என்று துடிதுடித் திருந்தான். மகிணனோ,
"இன்றுநான் இடர்பல ஏற்பேன் அஞ்சிடேன்.
என்னைத் தன்னுயிர் என்று நினைப்பாள்
தையல் என்நிலை தாங்காள், உலகில்
உய்ய மறுத்தே உயிர்விடு வாளோ,
அவள் பொருட் டஞ்சிடேன். ஐயோ அந்தத்
துவளிடைக் கிள்ளியின் துயரம் மாற்றத்
தங்கவேளல் உள்ளான்; தகுபண் புள்ளான்;
மங்காத ஆற்றல் வாய்ந்தவன என்று,
சிறையிடைத் துன்பச் சேற்றில் சிக்கி,
உறுவரிப் புலிபோல் உலாவி இருந்தான்.
வாட்பொறை, கிள்ளையை மகிணனை எண்ணி
மீட்சி என்று நம்ஆட்சி என்று
மன்னன் தீமை மாறுவ தெந்தாள்
என்று துடித்தான் இருண்ட சிறையில்,
வீடுதொறும் நாட்டுமக்கள் படும்
பாடு, நவிலவும் படுவ தன்றே.
|
( 185 )
( 190 )
( 195 )
( 200 )
( 205 )
|
"ஒருவீட்டுக்குள் ஒரு குழந்தைதன்
மரப்பாவை கடித்து வாய்நொந் தழுதது"
வீதியில் மழையான் விட்ட படையன்றி
நாட்டினர் எவரும் நடத்தல் இல்லை;
வீடொவ் வொன்றும் வெஞ்சிறை விடுதி;
விடுதி தோறும் படுதுயர் மக்கள்;
பசிஎன அழுகுரல் பாய்ச்சி யிருந்தனர்,
அரிசி யில்லை, ஆவன இல்லை
புரிவ தொன்றும் புரிந்தபா டில்லை.
குழந்தைகள் வீட்டில் புழுவெனத் துடித்தனர்.
எழுந்த நிலாமுகம் எரிந்தனர் மங்கைமார்!
தின்பன வாங்கச் தெருவில் வந்தாரை
முன்னின்று தீயர் முகத்தில் அறைந்தனர்.
சாகின்றோமே சாகின் றோமே
வேகின் றோமே விடைகொடும் ஐயா
என்று கெஞ்சும் எளிய மக்களைக்
கொன்று போடுவோம் குதிகால் வெட்டுவோம்
வீட்டை விட்டு வெளிவந்தால் என்று
நீட்டினார் கத்தியை நிற்கும் காவலர்.
இருந்த பண்டம் அருந்திய பின், சிலர்
எரிந்த வயிற்றுக் கில்லா தழுதனர்.
நெல்லைக் குத்திய நல்ல அரிசியை
மெல்ல லாயினர், விறகில் லாமையால்.
கூளம் எரித்துச் சோளம் வதக்கி
மாளா திருக்க வயிற்றுக் கீந்தனர்.
உலைக்கொன் றின்றி உட்புறம் வளர்ந்த
இலைக்கறி சிலபேர் குலைக்குள் இட்டனர்.
உள்நாக்கி லிட்டுப் பிண்ணாக் கைச்சிலர்
மண்ணாங் கட்டியோடு வயிற்றை நிறைத்தனர்.
உழுந்தைப் பச்சையாய் உண்டனர் சில்லோர்;
கொழுந்து மாவிலை விழுங்கினர் சில்லோர்;
புளிதின் றார்சிலர் பூண்டுதின் றார்சிலர்,
மிளகும் தீர்ந்தது வெந்தயம் தீர்ந்தது
ஒருவீட் டுக்குள் ஒருகுழந்தை, தன்
மரப்பாவை கடித்து வாய்நொந் தழுதது,
சுண்ணம் பள்ளிச் சோறென உண்டு, வாய்
புண்ணாம் படியாய்ப் புரளும்ஓர் மகவு.
கன்னமும் நெற்றியும் கண்ணும் சுருங்க, வாய்
செந்நீர் போலச் சிவக்க அழும்ஓர்
அருமைக் குழந்தைக்கு அன்னை துடித்தழ
உருகி உள்ளம் உடையவன் கதற
வளர்ப்பு நாய்ஒன்று வாய்விட் டுளற
இளைத்த காக்கை களைப்பாற் கரைய
எய்திய இந்நிலை இங்குப் போலவே
வீடு தோறும் நகர முழுவதும்
செறிந்தது. மக்கள் திறந்தவாய்
நிறைந்த அழுகுரலால் நிலம்அதிர்ந்ததுவே.
|
( 210 )
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
( 235 )
( 240 )
( 245 )
( 250 ) |
"பின்னிய சிலந்தி நூல் பெருங்காற்றுத்
தாங்குமோ
துன்பம் நனிபெரிது தூய் உடல் நனி மெலிது"
ஒள்ளியோன் வேந்தனுக் குரைக்க லானான்;
கிள்ளை துன்ப வெள்ளத்தில் வீழ்ந்தாள்.
அவள்வாழ் கின்ற அரண்மனை தன்னில்
துவள் இரண்டு துண்டாய் விடுமோ
எனும்படி, கரையில் இட்டமீனைப்போல
நனிதுடிக் கின்றாள். நன்னீர், குளம்நிறைந்து
வழிதல்போல விழிநீர் பெருகப்
பிழிதேன் மொழியாள் பெருங்குரல் பாய்ச்சி
ஐயகோ என்ன அழுதிருக்கின்றாள்.
ஐயுறு கின்றேன் அவள்உயிர் வாழ்வதில்
பின்னிய சிலந்திநூல் பெருங்காற்றுத் தாங்குமோ?
துன்பம் நனிபெரிது தூய்உடல் நனிமெலிது,
தங்கவே லுடன் நான்அங்கு மறைந்திருந்தது
மங்கை நிலையறிந்து வந்தேன், என்னலும்,
எதற்கவள் அழுதாள் என்றான் மன்னன்.
மதிற்சிறை தன்னில் வாழ்வா நம்மை
எண்ணி என் றெள்ளியோன் இயற்றினான் மன்னன்
பெண்அவள் காதலன் பிரிவு பற்றி
வருந்தினாள் எனில், அவ் வருத்தம் கொல்லாது.
பொருந்த நெஞ்சில் பூத்துக் காய்த்த
காதல்நோய் சாக்கோடு கடிவதோர் மருந்தே!
ஆதலின், நானும் அஞ்சுதல் தீர்ந்தேன்
நெடுநகர் மக்களின் நிலை யாதென்றான்.
விடிவதற்குள் மிகுபசித் தீயால்
சாவார் என்று சாற்றினான் ஒள்ளி யோன்.
இந்நிலை கிள்ளைக்குச் சொன்ன துண்டோ?
என்று மன்னன் கேட்டான். இல்லை
என்றான் ஒள்ளியோன். எழுந்து போ கடிதில்,
படையின் தலைவனை அழைஎன
விடைதந் தனுப்பினான் வேந்தன், அவனையே.
|
( 255 )
( 260 )
( 265 )
( 270 )
( 275 )
( 280 )
|
"செல்லச் செய்க சேயிழை என்னைத்
திருமணம் புரியச் செப்பிடச் சொல்க"
மங்கை கிள்ளை மன்னனை மணந்தால்
இங்குள தொல்லைகள் ஏகும் என்றும்,
இதற்கே மகிணன் இடையூறாக
இருந்திடு கின்றான் என்றும், நகரத்து
வீடுதோறும்நீர் விரைவிற் சென்று
சொல்லவேண்டும். சொன்னபின் அவர்களை
மகிண னிடத்திலும் மற்றவரிடத்திலும்
செல்லச்செய்க சேயிழை என்னைத்
திருமணம் புரியச் செப்பிடச் சொல்க.
சிறையினை உடனே திறந்து விடுக.
மகிணன், தாரோன், வாட்பொறை ஆகியோர்
எங்கணும் போகலாம் என்று கூறுக.
விரைவிற் செல்லுதல் வேண்டும் என்று
மன்னன் உரைத்தான். நற்றெனச்
சென்றனர் படைத்தலைவன்முதல் சிலரே.
|
( 285 )
( 290 )
( 295 )
|
|
|
|