பக்கம் எண் :

காதலா? கடமையா?

இயல் 31


"மங்கை கிள்ளை, மன்னனை மணக்க!
மகிணன், இதனை மறுத்தல் வேண்டாம்."

கடுத்தபசி என்னும் காட்டாறு. மாந்தராம்
மடித்த சருகுகளை அடித்து வந்து
சேயிழை வீட்டிற் சேர்த்தது. சிறையின்
வாயிலி னின்று மகிணன், வாட்பொறை,
தாரோன் அனைவரும் தையல்பால் வந்தனர்
யாரோ பொறுப்பார் எளியோன் நிலையை
கிள்ளையோ தனது கீற்றுப் புருவம்
நெற்றிஏற நீள்இமை ஆடாது
பற்றுளம் பதறப், பார்த்தனள் மாந்தரை.
மகிணன் பதைத்தான்! வாட்பொறை அழுதான்
தாரென், மக்கள் சாற்றும் மொழிகளை
நேருறக் கேட்டு நின்று தயங்கினான்
மக்கள் ஒருங்கே வாய்விட்டுக் கூறினார்;
"இக்கொடு மைக்கெல்லாம் இருவரே காரணர்.
மங்கை கிள்ளை மன்னனை மணக்க
மகிணன் இதனை மறுத்தல் வேண்டாம்
இவ்வாறு கூறி இடுப்புத் தளர்ந்ததே
எவ்வாறு நடப்போம் எவ்வாறு வாழ்வோம்
பசிநோய் பசிநோய் பதைப்புறச் செய்ததே
புசிஎன எவரும்ஒன்று போடாரோஎனப்
படுத்தார் அங்கே பற்பலர், வீழ்ந்து
துடித்தார் சில்லோர் தொழுதார் சில்லோர்.
இமைக்கும் நேரத்தில் தமிழர் எதிரில்
சுமைசுமை யாகப் தூய பழங்களும்,
கிழக்கு பலவும் தழலிட்டெடுத்த
கொழும்பயறு கொட்டை பலவும்,
தழற்காட்டு மழைஎனச் சாய்த்தனர். அவரவர்
விழுக்காடு பெற்று விழுங்கினர். உடனே
கல்மலை மூன்றின்மேல் பொன்மலை ஒன்றென
அடுப்புமேல் தாழியில் அரிசியிட்டு
வெள்ளி மலைபோல் வெஞ்சோறு படைக்கக்
அள்ளூறு சுவைக்கறி ஆக்கியும் படைக்கக்
கலந்துண்ட மக்களின் கருத்தில், மன்னனை
இலங்கிழை மணக்கா திருப்பா ளாயின்
இன்று பட்டதே இனிப்பட நேருமே
என்று நினைவே எழுந்ததால் நடுங்கி,
மகிணத் தலைவர் மறுக்க வேண்டாம்
தகுமன் னனுக்கும் தையலுக்கும்
மணம்புரி வீர்என்று வாய்விட்டுக் கூவினார்.
பணமிலார் பொங்கல்நாள் அணுகினார் போலச்
செல்வியும், மகிணனும் திடுக்கிடு நெஞ்சொடு
சொல்வ தொன்றும் தோன்றா திருந்தனர்.
தாரோன் அவர்நிலை நேரில் அறிந்து
நீராழ்ந்த மூச்சு, நிலைகாண எண்ணல்போல்
செய்வகை நாடினான், தெரியாது துடித்தான்.
நெய்உகுத்த நெருப்பு நெஞ்சொடு வாட்பொறை,
''கொன்றை நகரக் குடிகளே, கேளீர்,
இன்றிதோ மன்ன னிடம்நான் செல்வேன்.
மாலைஇது போகக் காலையில் மணத்தின்
வேலையோ, அன்றி வேறெதோ ஆம்' என்று
கூறி, அருள்செய்யு மாறு கேட்பேன்.
தேறுக உள்ளம்! செல்க'' என்றான்.
ஊராளும் வாட்பொறை சொல்லை
யாரே விலக்குவார்? ஏகினார் ஆங்ஙனே.








( 5 )




( 10 )




( 15 )




( 20 )




( 25 )




( 30 )




( 35 )




( 40 )




( 45 )




( 50 )
இயல் 32

''இந்தத் தெவிட்டாக் கவிதையைப்
புகழந்தால் புகழே புகழ்பெறும் அன்றோ''

ஏழை வாட்பொறை, ஏந்தலைக் கண்டான்.
'மாழை நாட்டு மாப்பே ரரசே,
மக்கள் பசியால் வருந்தினர். வீட்டில்
புக்கவர் வெளியிற் போகா தடைத்தீர்
குற்ற மற்ற குடிகளை வாட்டுதல்
கற்ற மக்கள் காட்டும் திறனோ?
அவள்உளம் அவன்மேல் ஆழ்ந்து கிடப்பதாம்
குவிபொருள் வறியவன் கொண்டது போலத்
துவரிதழ்க் கிள்ளைபால் தோய்ந்த நெஞ்சை
மாற்ற முடியாது மகிணன் கிடந்தான்.
உலகுக் கழகை ஊட்டுமோர் காதல்
கலவை நிகழ்ச்சியைக் காணினும் கேட்பினும்
மாந்தரின் தந்தைநேர் மன்னன் மகிழ்வதா?
போந்து சிதைப்பதா? வேந்தே வேந்தே!
உண்ணும் உணவிலான் உடுக்கத் துணியிலான்
கண்உறங்க கால் முடங்கு கூரையான்
பொன் னுளத்தைப் பொதுவுளம் ஆக்கியும்,
வீட்டுக் கன்னை மிகவுழைப் பதுபோல்
நாட்டுக் குழைக்கும் நாட்டம் மிகுத்தும்,
இகழ்ந்திடும் எதிரியும் இருவகை ஏந்திப்
புகழ்ந்திடப் பெற்ற மகிணன், நாடொறும்,
தோகையின் அன்பில் துளி விழுக்காடு
நோகாது பெற்ற நுண்ணிடை, அன்னவன்
இரண்டுடல் இரண்டுயிர் இனமாற்றிப் பிணைந்தவாறு
திகழ்ந்தான். இந்தத் தெவிட்டாக் கவிதையைப்
புகழ்ந்தால் புகழே புகழ்பெறும் அன்றோ?
தீப்பட்டுக் குதிப்பொடு சேர்ந்தார் போலக்
கூப்பாடு போட்டனர் கூட்ட மக்கள்!
நெருக்கினர். மணவினை நிகழ்த்தினர், தேறுதல்
உரைத் தனுப்பி ஓடிவந்தேனிங்கு!
மன்னவன் மலர்வாய், இன்னல் இன்றி
நன்மொழி ஒன்று நவிலுக" என்றான்.
என்னுயிர், கிள்ளையால் இங்கு நிலைப்பது
மன்னிய மக்களின் வாழ்வென் னிடத்தது,
மாற்றம் இலையென மன்னன் சொன்னான்.
காற்றில் கனல் ஏறும் கடுமொழி கேட்ட
வாட்பொறை, நன்று மன்னா, காலையில்
இன்னது விடையென இயம்புகின்றேன்.
இன்னல் அதுவரை இழைத்தல் வேண்டாம்'
என்று சொன்னான் சொன்னதும்,
நன்றென மன்னன் நவின்றிருந்தானே.




( 55 )




( 60 )




( 65 )




( 70 )




( 75 )




( 80 )




( 85 )




( 90 )




( 95 )
இயல் 33

"நாட்டுக் குரிமை நன்றா? என்னுயிர்
வாட்டும் காதற்கு வகைசெயல் நன்றா?"

பஞ்சணை மீது பச்சை மயில்கிடந்து
நெஞ்சு புண்ணாக நினைந்து நினைந்து
வழியறி யாமல் அழுத கண்ணும்
செழுநில முகமும் சிவக்கலானாள்.
வாழ்வு, மகிணனை மணப்பதாகும்.
சாவு, மகிணனைத் தவிர்ப்பதாகும்.
வஞ்சிநான் மன்னனை மணப்பதுண்டோ?
நெஞ்சு பொறாததை நிகழ்த்தினான் மன்னன்.
படைவலி மிக்க கொடியவன் சொன்னான்.
நடைமுறை அறியாது நவின்றான் அந்தோ
மக்களைப் பசிக்கனல் வாட்டச் செய்தான்.
எக்கடன் உடையேன் என்பதும் அறியேன்.
நாட்டுக் குரிமை நன்றா? என்னுயிர்
வாட்டும் காதற்கு வகைசெயல் நன்றா?
காதல் என்னில், சாதலோ மக்கட்கு?
மீட்சி என்னில், வீழ்ச்சியோ கற்புக்கு?
நல்லிராப் போதும் நனிஇரக்கம்கொளச்
செல்வி படுப்பதும் திடுக்கிட்டெழுவதும்
ஆக இருக்கையில், அப்போ தங்கே
தாரோன் வந்து தையல்பால் கூறுவான்;
'மக்கள் விடுதலை மறுப்பது நன்றா?
விடிந்தால் என்ன கொடுமை நேருமோ?
அடிவயிறு தீப்பட அங்கவர் நைந்தனர்
என்னசொல் கின்றாய் இந்நாட்டு மக்கட்கு?
மின்னும் முடிபுனை வேந்தனோ, வாட்பொறை
என்ன சொல்லியும் இம்மியும் ஒப்பிலான்
கிள்ளையை மணந்து கொள்ள வேண்டும்;
எள்ளளவும் பொறேன்; இதனை ஒப்பினால்
கொன்றைநாடு கொழுந்துவிட் டெரிவதை
என்கை விலக்கும்; இயற்றுக என்றான்."
என்று தாரோன் இயம்ப, ஏந்திழை
'ஈக்களும் நுழையா தாக்கித் தொங்கவிடு
தூக்கணம் புட்கள் கூட்டொடு தொலைந்தாங்கு
நானும் என்னுளம் நண்ணும்அச் செல்வனும்
தீநனி வளர்த்ததில் செத்தொழிந் திடவோ?
அன்றி, எம்மை அறுத்துக் கழுத்தைக்
கொன்று போடும் கொள்கை யுடையீரோ?
ஆயினும், நாடுபடும் அல்லல் நினைக்கில்
தீயினில் வீழ்வதும் சிறந்ததே ஆகும்
சாவதும் என்னைச் சார்ந்த செய்தியோ?
நாவால் அவரே நவில வேண்டும்.
என்றன் வாழ்வில் இரண்டைக் கேட்டேன்.
ஒன்று விடுதலை, ஒன்று மகிணன்.
மகிணனை வேண்டின் மாயும் விடுதலை
விடுதலை வேண்டின் வீழும் என்னுயிர்.
ஒன்றினை ஒன்றே ஓடி மறித்தது
நன்றிது நானிதில் ஒன்றும் கூறேன்.
துன்பமும் நானும் தனியே
இன்னல் இரவில் இருக்கவிட்டு ஏகுவையே!'








( 100 )




( 105 )




( 110 )




( 115 )




( 120 )




( 125 )




( 130 )




( 135 )




( 140 )
இயல் 34

"உன்கையால் கிள்ளையின் உயிரைப் போக்கு
வேறு வழி ஏது? விளம்பினேன் இதனை"

நான் இறப்பேனேல், மான் இறந்திடுவாள்.
இறந்திடுவாள் எனில், இறக்கும் அவள்கற்பும்.
அவளை நான் அணுகி ஐயோ ஐயோ
துவரிதழ்க் கிள்ளையே, துணைவனாய் மன்னனைக்
கொள்க என்பது கொள்கை யல்லவே.
கொள்கை என்று கூறினும் அவளோ
தாங்காள், இறப்பாள். சற்றும் பொறாளே.
ஏங்குமென் நிலையை எவர்தாம் அறிவார்?
மக்கட்கு நான்இன்று வழுத்துவ தென்ன?
தக்கது யாவரே சாற்றுவார் எனக்கே?
என்று மகிணன் இரவில் தனியாய்
ஒன்றும் அறியா துலாவி யிருந்தான்.
மகிணன் உலாவும் மலர்ப்பூங் காவில்,
புகுவான் ஓர் ஆள். 'மகிணனே' என்றான்.
அமைதியொடு மகிணன் ஆர்என்று கேட்டான்.
அமைச்சன் நான்என் றறைந்தெதிர் வந்தான்.
கண்ணீரால் மகிணன் கழறுவான்;
எண்ணிப் பார்த்திரோ என்னிலை ஐயா?
நாட்டினர்க் கென்ன நவிலுவேன் காதற்
கேட்டினுக் கென்ன கிளத்துவேன் என்றான்.
அமைச்சன் அழுதான். இமைக்காது நோக்கினான்.
'நேற்று நாட்டினர் நிலைகெட்டிருந்தார்
காற்றெலா அழுகுரல் கலந்தது. பசியின்
தீயோ அவரைச் சிதைக்க லாயிற்றே.
தாயனைய அன்பன் தங்க வேலன்,
அரசனை அணுகி, அறிவு றுத்தினான்.
அரசன் நெஞ்சையும் அறிந்து கொண்டான்.
தெருத்தொறும் சென்றான். தீமையில் துடிக்கும்
பெருமக் கட்குப் பெரிதும் இரங்கினான்.
ஆழ எண்ணினான். அறிந்தான் ஒருவழி.
வீழும் மக்கள் வாழவும், கிள்ளையின்
கற்புக் கிடையூறு காணா திருக்கவும்,
தோன்றிய அவ்வழி சொல்ல நினைத்தான்.
தான்அதைக் சொல்லத் தகாதெனச் சொன்னான்.
இவ்வா றென்னிடம் இயம்பிச் சென்றவன்
சிறிது போழ்து செல்ல, ஓர்ஓலை
அனுப்பினான். இந்தா அன்பனே' என்று
கனற்படு மெழுகெனக் கசிந்துருகி நின்று
தந்தான் அமைச்சன். தந்த ஓலையை
மகிணன் ஆவலோடு வாய்விட்டுப் படித்தான்;
"மன்னன், கிள்ளையை மணக்க எண்ணி
இன்னல் பலவும் இழைக்க லானான்
நாட்டினர் பட்டதை நானே கண்டேன்.
கேட்க, நானொன்று கிளத்த எண்ணினேன்.
உன்னெதிர் நின்றே உரையேன் அதனை.
என்னினும் நானதை இயம்புதல் என் கடன்.
அடிமையி னின்றும், மிடிமையி னின்றும்
விடுதலை பெறுதல் வேண்டும் மக்கள்
அதற்குக் கிள்ளை ஒப்புவளோ?
மிதித்துத் தள்ளாள் மெல்லிதன் கற்பை.
உடனே செய்க ஒருசெயல், நாட்டுக்குமுன்
கடமை செய்கநீ, கடிது செய்க
உன்கையால் கிள்ளையின் உயிரைப் போக்கு.
வேறுவழி ஏது? விளம்பினேன் இதனை.
மாறுபடும் உன்னிலை, மங்கும் உன்முகம்.
உன்னிலை காணுமுன் என்றன் வாழ்வைக்
கன்னல் அருந்திக் கசடு நீக்கல்போல்
முடித்துக் கொண்டேன், விடுதலை, விடுதலை.
கடிது கொணர்க கண்ணிகர் தோழரே,
இங்ஙனம் தங்கவேல் -- என்று படித்தபின்,
எங்ஙனம் என்னை இவண்விட்டுச் சென்றனை.
நாளெலாம் நல்லுரை நல்கி்நீ இறக்கும்
வேளையும் நாட்டின் விடுதலை மருந்தை
அருளினாய் அப்பா, ஆருனை ஒப்பார்?
உருள்பெருந் தேர்க்கோர் அச்சாணிபோல்
இந்நாட்டு நடப்புக் கிருந்தாய் ஒருவன்நீ.
பொன்னை வறியான் போக்கினான் போல
உன்னைநான் இழந்தேன்; உன்னைநாடிழந்ததே.
என்னை நீ இயற்றுமாறு சொன்னதை
இன்னே புரிவேன் இன்னல் புரிவேன்.
ஆம் அவ ளுயிரே அகற்றத் தக்கது!
தீமை போகும் திருநாடு வாழும்.
கொடியான் தானும் கொடுமை ஏற்று,
விடுவான் நாட்டை வேறுவழி ஏது?
அமைச்சரே ஒரு "வாள அளிக்க வேண்டும்.
இமைக்குமுன் இவளுயிர் ஏகு மாறு
செய்வேன், கடன் இது. செய்வேன், தக்கது.
தையல் உயிரால் தருக விடுதலை.
அணங்கினள் ஆவி, அனைவர்க்கும் மீட்சியைக்
கொணர்ந்த தென்னில் கொண்டாடத் தக்கது.
காதல் பெரிதன்று! கடமை பெரிது!
ஈதல் உண்டோ எழில்வாள் என்றான்.
அமைச்சன் வாள்ஒன்றளித்தான்
தமிழன் கொண்டு போனான், தையலை நோக்கியே.




( 145 )




( 150 )




( 155 )




( 160 )




( 165 )




( 170 )



( 175 )





( 180 )




( 185 )




( 190 )




( 195 )




( 200 )




( 205 )




( 210 )




( 215 )




( 220 )




( 225 )
இயல் 35

"நன்மொழி சொல்லடி நங்கையே என்றால்
பொன்மொழி ஒன்று புகலினும் புகல்வாள

கிள்ளை என்னைக் கேடன் என் றெண்ணி
எள்ளுவாள்; ஏசுவாள் இன்ன லுற்றாள்
அன்னாள் அன்பினை அடைய எண்ணும்நான்.
இன்னல் இழைத்தேன், என்னே மடமை,
தங்கவேல் கொடுமை தாங்கிய மக்களை
அங்குக் கண்டான். அவன் உயிர் நீக்கினான்.
ஏனை யோரும் இறந்து படுவரோ. ?
மாநிலம் பழிக்குமே மன்னன் என்னை
விடியுமுன் என்ன விளையுமோ. கிள்ளை
பொடிபட்டு நெஞ்சு பொறாது மாய்வளோ
மங்கை கிள்ளைக்கு மகிழ்ச்சியை விளைத்துத்
திங்கள் முகத்தில் சிரிப்பை விளைத்து
நன்மொழி சொல்லடி நங்கையே என்றால்
பொன்மொழி ஒன்று புகலினும் புகல்வாள்.
ஆதலின்.
எழுதிய விடுதலை ஏட்டை நானே
முழுநிலா மறையும் முன்னரே சென்று
அவள்பால் நல்குவேன், அங்கு நான்சென்றால்
தவறு விளையுமோ, சட்டை மாற்றி
முகத்தடை யாளம் முழுதும் மாற்றித்
தகும்என் அமைச்சனின் தளர்உரு எய்திச்
செல்வேன் என்று மன்னன்
நல்லதோர் திட்டம் நண்ணினான் ஆங்கே.





( 230 )




( 235 )




( 240 )




( 245 )




( 250 )
இயல் 36

"கலைக்கழகு நல்குதிருக் கண்ணமுதை மாய்க்கக்
கொலைக்கருவி நான் கொண்டதை அறிவாள

உளக்கோயிலிலே உற்ற சுடர்மணி
விளக்கவிக்க வாளொடு் விரைந்து செல்கின்றேன்;
என்று தன்னை இகழ்ந்தா னாகி
அரண்மனை எதிரில் அணுகினான் மகிணன்.
இருண்டடர் கூந்தல் ஏந்திழை இப்போது
துயின் றிருப் பாளா? பற்பலர் அவளிடம்
சூழ்ந்திருப்பாரா; தூக்கத்தி லேஅவர்
ஆழ்ந்திருப்பாரா? அறியேன்! என்று
மகிணன், அரண்மனை வாயிலை மிதித்தான்.
கலைத்தால் மற்றொன்று காணரும் ஓவியம்
நிலைத்தால் இந்த நீணிலப் புதுமை
பாவலர்க்குப் புதிய பாடம் அவள் என்று
காவல் வாயிலைக் கடந்து சென்றான்.
விட்டுவிட் டன்றி விடாது மின் னுமோர்
கட்டழகு தன்னை வெட்டவும் வேண்டுமோ,?
பொலிவிருக்கும் புதுப்பூ என்று
கொலுவிருக்கும் கூடம் கடந்தான்.
பெண்ணழ கொன்று பேர்சொல இருந்ததென்று
மண்ணும் இரங்குமே! மக்கள் கூட்டம்
நிலா இருந்தது நீணில மதிலும்
இலாதொழிந்ததே என்றும் இரங்குமே!
நாடிரங்குமே நகர் இரங்குமேஎன்
றாடரங்கு முதல் அனைத்தும் கடந்தான்
அணிவிளக் கெரியும் அறையின் நாற்புறம்
பணிப்பெண் கட்குறு பல்அறை நோக்காது
பஞ்சணை ஒன்றில் பாய்ச்சிய நெஞ்சொடு
வஞ்சியறை வாளோடு மாப்பிளை புகுந்தான்;
இருபொற் பாவை ஏந்து விளக்கிடையில்
ஒருதமிழ்ப் பாவை உறங்கக் கண்டான்.
அசைவறு முகநிலா மிசைவிற் புருவமும்
இசையுறு மலர்வால் இருகனி யுதடும்
கொஞ்சுதல் போலவும் கிடந்தன ஒளியில்
சரிந்து கிடந்த கருங்குழல் மீது
தெரிந்த அவள்முகச் செந்தா மரையில்
ஓடிய அவன்விழி உளத்தை யசைத்ததால்
"தேட முடியாச் செல்வம். மண்ணிடைப்
பார்க்க முடியாப் பலர்புகழ் ஓவியம்.
வார்க்காது நெஞ்சை மகிழ்விக்கும் தேன்,
தனக்கென்று வாழாள்; எனக்கென்று வாழ்வாள்
தனைக்கொன்று வாழ நினைக்கும் தீயேன்,
ஒருவாளொடு நிற்கையில் உறக்கத் திரைக்குள்
இருவாள் விழியையும் இட்டு வைத்தாள்.
கலைக்கழகு நல்குதிருக் கண்ணமுதை மாய்க்கக்
கொலைக் கருவியான் கொண்டதை அறியாள்;
இன்பக் கனவுலகு தன்னில்வாழ்ந் தாளோ!
துன்பம் நெருங்குவது தோன்றா திருந்ததோ?
பொன்னுடலில் எங்குப் புகுத்துவேன் வாளை?
மென்மை உடலை வெட்டிச் சிதைப்பதோ?
ஐயோ, நானோ? அவளையோ? அன்பு
பொய்யோ" என்று புலன்கள் கலங்கும்
போதில் நெடுவாள் பொத்தென்று வீழ்ந்தது.
காததிர்ந்து கிள்ளை கண்ணை வீழ்ந்தாள்.
நீவிரோ நீவிரோ நீந்தத் தெரியாது,
தீவின் நடுவில் திகைத்துத் துயர்க்கடல்
சாய்ந்தழி வேனுக்குப் பாய்விரித்துக் கப்பல்
வாய்ந்த தெனவே வந்தீர்; வருக
நீவிரோ என்று நிகழ்த்தி, மகிணனின்
பூவிழியில் சொட்டும் புனலொடு வாளைக்
கண்டாள். முகத்தில் களையிழந்து நிற்றலைக்
கண்டாள், நடுங்கும் கைகள்.
என்ன என்ன என்ன என்றாள்.
"கொன்றை விடுதலை கொள்ள வேண்டும்.
உரிமை இழந்தும் உடலைச் சுமந்து
திரிவார்க்கு விடுதலைச் சிறப்பை இதுவென்று
காட்டுதல் வேண்டும் காதலைப் பார்க்கிலும்
நாட்டுக் கடமையே நனிபெரிதென்று
குறிக்க வேண்டும். கொல்லவந் தேன்உனை,
மறக்காது நாட்டு நிலையை மறக்காது
மாந்தர் நலத்துக்கு மாய்ந்திட மகிழ்ச்சிகொள்
சாய்ந்து கொடுப்பாய் தலையை" என்றான்,
எதிர்பாராத இடிக்கு முடி சாய்த்தாள்
அதிர்ந்த மின்னலுக் கணுவும் இமைத்திடாள்
தன்னலத்துக்கே எந்நிலை மைகளும்
என்னும் தீயர் இருக்கும் இத்தரையைக்
கானூ தற்கும் நாணுவாள் போல,
இறுக விழியை இமையால்மூடி
உறுதியாய்த் தன்னிரண் டுள்ளங் கைகளைக்
கன்னம் இரண்டிலும் கவித்துக் குனிந்தே
இன்னுடல் நாட்டுக் கிந்தா என்று
நின்றாள். அவள்குழல், நீல அருவி
குன்றினின்று வீழ்வ தென்று சொலும்படி
சரிந்து வீழ்ந்து தரையில் புரண்டது.
திருந்து தங்கத் தேர், நடு முறிந்து
விழுகையின் தோற்றம் விளைத்தது வளைந்தமெய்.
வாளைக் குனிந்து மகிணன் எடுத்தான்.
காளையின் விழிகள் கவிழ்ந்த முகத்தை
அடைந்தன. அவன்உளம் ஐயோ என்றது.
தடந்தோள் கீரைத் தண்டாய்த் துவண்டது.
தொட்ட வாளைத் தூக்கவும் வலியிழந்து
பட்ட மரம்போல்! பாவையைப் பார்த்து
நின்றான். மீண்டும்வாள் நிலத்தில் வீழ்ந்தது.
திரும்பினாள். கண்டாள் செயலற்ற மகிணனைத்
தரும்படி வேண்டினாள் தன்கையில் வாளை.
வாளைத் தூக்கி வஞ்சிபால் நல்கக்,
காளை ஒருபாதிக் கருத்திசைந்தான்.
பாதியைக் காதலுக்குப் பறிகொடுத்தான்.
ஏதிலார் கேட்பினும் இரங்கும் குரலில்
"அன்பை என்பால் ஆக்கிய பிழையால்
என்பும் தோலும் இணைந்தஇவ் வுடலைப்
பின்நாள் நோய்வந்து பிளக்கும் கட்டையை
இந்நாள் தீர்க்க இரங்கி நின்றீர
என்றுகூறி, எடுத்தடி வைத்து
நின்றோன் கைநெடுவாளை நெருங்கித் தொடுவாளைத்
தொட்டு மலர்மெய்ச் சுனைமூழ்கி என்றன்
கட்டிக் கரும்பே விட்டுப்போவாயோ
என்று நெஞ்சம் இளகிக் கிளந்தான்.
கொன்றை விடுதலைக்குக் கொடுப்பீர் என்னை
என்றன் கற்பை எளிதாய் நினைப்போன்
நன்று திருந்த நல்குவீர் என்னுயிர்.
என்று வாளைத் தன்கையில் மீட்டு,
நின்றாளை, அன்பே என்று கெஞ்சி,
வாள்பிடித்தான். அவன் தாள்பிடித்தே அவள்,
சிறிது மறைவில் சென்றிருங்கள்.
குறை தவிர்ப்பேன் கொன்றையை மீட்பேன்
என்ன உரைத்தும் ஏகாதிருந்தான்.
பின்னே நாலடி பெயர்த்து வைத்து
வாளைத் தூக்கினாள் வளைகழுத்து நேரில்.
ஆள்வந்து பின்புறம் வாளைப் பிடித்து,
'விடுதலை பெற்றது நெடிய கொன்றை,
விடுக அன்னையே, விடுக வாளை
என்ற குரல் கேட்டுத் தன்முகம் திருப்பினாள்.'
நின்ற அமைச்சன், "மன்னன் நானே"
என்னுரு மாற்றி இங்கு வந்தேன்
பன்னுமோர் விடுதலைப் பட்டயம் இதுவாம்
அன்னை எனக்குநீ, அருமைக் கொன்றைக்குத்
தன்னுயிர் விடவும் தயங்காக் கிள்ளையே!
மகிணனுக் கென்று வாய்ந்த அமுது நீ.
இந்நிலம் இந்நாள் எதிர்பார்த்திருக்கும்
தன்னலம் மறுத்த தன்மைக்குத் தாயும்நீ
தகுசீர்க் கொன்றை தழைத்து வாழிய
மகிணன் கிள்ளையொடு வாழிய என்று
மன்னன் நெஞ்சார வாழ்த்தி நின்றான்.
மெருகடைந்து பொன்னங்கு மின்னியது போல
அங்கிருந்த பிள்ளை அழகன் இருவர்
மகிழ்வடைந்து தாமரைமுகம் மலர
வாழிய மன்னா என்று
நாழிகை கருதி நடந்தார் துயிலவே.







( 255 )




( 260 )




( 265 )




( 270 )




( 275 )




( 280 )




( 285 )




( 290 )




( 295 )





( 300 )



( 305 )




( 310 )




( 315 )




( 320 )




( 325 )




( 330 )




( 335 )




( 340 )




( 345 )




( 350 )




( 355 )




( 360 )




( 365 )




( 370 )




( 375 )




( 380 )




( 385 )


இயல் 37

"நாங்கள் நல்கியதல்ல அவ்விடுதலை
நீங்கள் பெற்றீர் என்று நிகழ்த்தினான

இளங்கதிர் விளக்கம் ஏந்தக் குளம், வயல்,
களம், கதிர் விளக்கம் கண்டன. கொன்றை
விழித்தது; வல்லிருள் அழித்தது; நலத்தில்
செழித்தது; தீமை அழித்தது. மக்கள்
எழுந்தனர். மன்னன் இருக்கும் மன்றில்
நுழைந்தனர். பல்லோர் நுழைய முடியாது,
தெருவில் நிறைந்தனர். திருநகர் நிறைத்தனர்.
வருவார், நமக்கும் வாய்த்திறந் துரைப்பார்;
தருவதாய் உரைத்ததை இரவே தந்தார்;
என்றார் பல்லோர். அன்றா டந்தான்
இப்படிச் சொல்லி ஏய்ப்பர்என்றார்பலர்.
தலைவர் வந்தார் தலைவர் வந்தார்
இலசீர்க் கிள்ளை இதோவந்திட்டாள்.
தாரோன் வந்தான். தகுதி மிக்க
வாட்பொறை தானும் வந்தான் என்று
கடலென முழங்கினார். கைகள் கொட்டினர்.
மன்றின் அழகிய மாடிஉச்சியில்
நின்று, கடல்மிசை நிறைந்த பரிதிபோல
மலர்முகம் காட்டினான். மக்கள் மகிழ்ந்து
கலகல என்று கைதட்டி னார்கள்,
வாழ்க மன்னன் வாழ்க மன்னன்
என்று வாழ்த்துரை இயம்பினார்கள்.
வையந் தாமரை சேர்ந்தது போலச்
சிரித்த முகத்தொடு தெரிந்தாள் கிள்ளை.
பருத்தோள் மகிணனைப் பார்த்தார் அண்டையில் .
வாட்பொறை தாரோன் மகிழ்வொடு நின்றார்.
தோட்புறம் தாடி தொங்கும் அமைச்சன்
மன்னன் அண்டையில் நின்றி ருந்தான்.
ஒள்ளியோன் இருந்தான். உடன்பலர் இருந்தனர்.
மாழை நாட்டின் மாப்பேரரசன்
வாழிய கொன்றை மக்களே என்றான்.
கொன்றை விடுதலை கொண்ட தென்றான்.
நன்றென மக்கள் நனிமகிழ்ந்தார்கள்,
நாங்கள் நல்கிய தல்ல அவ் விடுதலை.
நீங்கள் பெற்றீர் என்று நிகழ்த்தினான்.
மக்கள் வியந்தனர் மகிழ்வு கொண்டனர்!
நானே உங்களை நலிவு செய்தேன்.
தானது பொறாத தங்கவேல் தற்கொலை
செய்து கொண்டான். செய்தி யறிந்துநான்
எய்திய துன்பம் இயம்பொ ணாததே.
என்றன் உளத்தை இரங்கச் செய்தது.
தன்னல மற்ற தங்கவேல் சாவே.
இன்றிரவு நான்ஓர் இலக்கியனம் பெற்றேன்.
தன்னிகர் இல்லாத் தனியெழிற் கிள்ளை
எனை யடைதல் வேண்டும் என்றேன்.
அடையாள் ஆயின் அளியேன் விடுதலை
என்றேன், அதற்கே எழிலுறு கிள்ளையைக்
கொன்று போடக் கொடுவாள் ஏந்தி
மகிணன் கிள்ளைபால் வந்தான். கிள்ளை
தூங்கினாள். மகிணன் தொடங்கினான் கொலையை.
ஏங்கினான், விம்மினான். இருகை நடுங்கின.
அழகில் ஒருத்தியின் அகத்தில் மகிணனை
எழுதிவைத் திருந்தாள். அவனும் அப்படி
மகிணன் கைகள் மங்கையைக் கொல்லத்
தகும்வலி இல்லைவாள் தவறி விழுந்தது.
மங்கை விழித்தாள் மகிணனைக் கண்டாள்.
எங்கு வந்தீர்கள் என்று கேட்டாள்.
கொல்ல வந்தேன் கொன்றை நாட்டுக்கு
நல்ல விடுதலை நாட்ட வேண்டும்
என்றான். எழுந்து நின்று பெண்ணாள்,
தன்தலை குனிந்தாள்; தமிழர் வாழ
என்னைக் கொல்லுக என்று மொழிந்தாள்.
பின்னும் மகிணன், பெருவாள் தூக்கி,
ஓச்ச முடியா துழலும் போது,
மீண்டும் கைவாள் வீழ்ந்தது நிலத்தில்!
மங்கை திரும்பி வாளை வாங்கி
உங்கள் விடுதலை ஓங்குக என்று
தூய்கழுத்து வெட்டத் தூக்கினாள் கத்தியை
பின்னே ஓடிப் பெருவாள் பற்றினேன்.
என்னே நாட்டில் இவர்க்குள அன்பு.
கடமையின் இலக்கணம் கண்டேன். கண்டேன்-
சுவையுறு வாழ்வின் தூய இலக்கியம்
இவைகள் கண்டேன். யானோ தந்தேன்?
விடுதலை தந்தவன் வேந்தன் நானா?
''விடுதலை உள்ளமே விடுதலை விளைக்கும்''
என்றான் மன்னன். இதனைக் கேட்கையில்
அழுதார் மக்கள். அழுது கொண்டே
தொழுதார் மகிணனைத் தோகை கிள்ளையைத்
தங்கவேலன் சாக்காடு கேட்டே
எங்களுக்காக எங்களுக்காக
என்று நெஞ்சம் இரங்கி அழுதார்.
மன்னன் கூறினான் பின்னும், 'மக்களே
இந்நிலம் துன்பமும் இன்பமும் கலந்தது.
மனிதன் உள்ளமும் மறம்அறம் கலந்ததே!
இனிது செய்பவன் இன்னாது செய்வதும்
இன்னா செய்பவன் இனியவை நாடலும்
உண்டெனல் நானே கண்டேன் என்னிடம்.
இன்று நானும், என்பெரும் மறவரும்
கொன்றை நாட்டினின்று செல்வோம்.
வாட்பொறை யுள்ளான் மாப்பேரறிஞன்.
தாரோன் உள்ளான் தகுதியுள்ளான்.
மகிணனும் கிள்ளையும் மற்றும் பலரும்
இருக்கின்றார்கள் இவர்கள் கொன்றைக்குப்
பொருத்த மான புதுமுறை வகுப்பர்.
நல்ல தோர் ஆட்சியில் எல்லீருமாக
மல்கு சீரொடு வாழிய என்றான்,
மக்கள் மீண்டும் மன்னனை
மிக்க அன்பினால் வாழ்த்தினர் நன்றே.!




( 390 )




( 395 )




( 400 )




( 405 )




( 410 )




( 415 )




( 420 )




( 425 )




( 430 )




( 435 )




( 440 )




( 445 )




( 450 )




( 455 )




( 460 )




( 465 )




( 470 )




( 475 )




( 480 )




( 485 )
இயல் 38

"திருக்கிளர் நாட்டின் செல்வர் கட்கும்
இருக்கக் குடிசை இல்லை என்றார்

இரண்டு குதிரைமேல் இரண்டுபேர் ஒருத்தி
இருண்ட முகிற்குழல் ஏந்திழை கிள்ளை;
ஒருவன் மகிணன் ஓடின குதிரைகள்.
திருமண மக்கள் சென்று, குடிசையில்
கிழவி கிழவனைக் கிட்டி நின்றார்,
தொழுது நிகழ்ந்தவை சொன்னார். சொன்னதும்
அன்னை, கிள்ளையின் கன்னம் தொட்டுப்
பொன்னே என்று புரிந்த முத்தம்
கிள்ளையின் உள்ளத் தெள்ளமு தாயிற்றே.
கிள்ளையின் மாமனார் உள்ள மகிழ்ந்து
வாழ்த்துரை அனைத்தும் வழங்கி யிருந்தார்.
அனைவரும் ஒருபுறம் அமர்ந் திருக்கையில்
உனையொன்று கேட்பேன் உரையடா என்று
முதிய தந்தை மொழிய லானார்.
ஏரி தோண்ட இல்லையே என்றார்;
இல்லை என்ப திராதென் றான்மகன்.
திருக்கிளர் நாட்டின் செல்வர்கட்கும்
இருக்கக் குடிசை இல்லை என்றார்;
இல்லை என்ற சொல் இராதினி என்றான்.
கடல்நிகர் நாட்டின் கணக்கிலா மக்கள்
உடல்நல மில்லா தொழிந்தனர் என்றார்;
இல்லை என்பதே இராதினி என்றான்.
எப்படி அரசியல் என்றார் கிழவர்.
ஒப்பிட எவர்க்கும் ஒருவீ டொருநிலம்
ஒரு தொழில், ஓர் ஏர், உழவு மாடுகள்
விரைவிற் சென்றால் தருவார் என்றான்,
கிழவி இதுகேட்டு விழியிற் புனல்சேர்த்துக்
குழந்தாய், இப்போது கூறிய அனைத்தையும்
விரைவில் நான்போய் வேண்டிப் பெற்று
வரநினைக்கின்றேன்; வருந்து கின்றேன்;
எட்டஊர் செல்ல வேண்டுமே!
கட்டஓர் நல்லுடை இல்லை என்றாளே!






( 490 )




( 495 )




( 500 )




( 505 )




( 510 )




( 515 )