பக்கம் எண் :

நல்ல முத்துக் கதை

காட்சி 1

திருமண முயற்ச்சி

(விரசலூர் வெள்ளையப்பன், மனைவியாகிய மண்
ணாங்கட்டியிடம் கூறுகிறான்;)

உன்னைத்தானே! என்ன செய்கின்றாய்?
இங்குவா! இதைக்கேள்! இப்படி உட்கார்!
பையனுக்கு மணத்தைப் பண்ணிக
கண்ணால் பார்க்கக் கருதினேன். உன்றன்
எண்ணம் எப்படி? ஏனெனில் பையனுக்
காண்டோ இருபதும் ஆகிவிட்டது.
பாண்டியன் தானோ பழைய சோழனோ
சேரனே இப்படித் தெருவில் வந்தானோ
என்று பலரும் எண்ணு கின்றனர்
அத்தனை அழகும் அத்தனை வாட்டமும்
உடையவன் திருமணம் முடிக்கா விட்டால்
நடையே பிசகிவிடவும் கூடும்!
நாட்டின் நிலையோ நன்றா யில்லை.
சாதி என்பதும் சரித்திரம் என்பதும்
தள்ளடா என்று சாற்றவும் தொடங்கினார்.
பார்ப்பனர் நடத்தும் பழமண முறையைப்
பழிக்கவும் தொடங்கினர் பழிகா ரர்கள்.
இளைஞரை, அவர்கள் இவ்வாறு கெடுப்பதே
வளமை யாகவைத் திருக்கின்றனர்.
இந்த நிலையில் எவளோ ஒருத்தியை
பையன் ஏறிட்டுப் பார்த்தால் போதும்
வெடுக்கென மணத்தை முடித்தடு வார்கள்
என்ன? நான் சொல்வ தெப்படி? ஏன் உம்?

மனைவியாகிய மண்ணாங்கட்டி

இன்றுதான் பிறந்ததோ இந்த உறுதி?
பையனுக்குப் பத்து வயசு
தொடங்கியதி லிருந்து சொல்லி வந்தேன்
காது கேட்டதா? கருத்தில் பட்டதா?
ஐயரை உடனே அழைக்க வேண்டும்.
பையனின் குறிப்பைப்பார்க்க வேண்டும்.
கிழக்குத் திசையில் கிடைக்குமா பெண்?
எந்த திசையில் இருக்கின்றாள் பெண்?
சொத்துள் ளவளா? தோதான இடமா?
மங்கை சிவப்பா-மாஞ் செவலையா?
என்றுபெண் பார்க்க இங்கிருந்துநாம்
புறப்பட வேண்டும்? புரிய வேண்டும்.

வெள்ளையப்பன்

புரோகிதன் நல்லநாள் பொறுக்குவான். அவனை
இராகு காலத்திலா இங்க ழைப்பது?
ஆக்கப் பொறுத்தோம் ஆறப் பொறுப்போம்
நடந்ததை, இனிமேல் நடக்கப் போவதை
நடந்துகொண் டிருப்பதை நன்றாய்ச் சொல்வான்.
பகைகுருக்கிடுவதைப் பார்த்துச் சொல்வான்.
இடையில் குருக் கிடும் தடைகள் சொல்வான்.
எல்லாட் சொல்வான் ஏறப்.டு கின்ற
பொல்லாங் கெல்லாம் போக்கவும் முடியும்
ஒருபொழு துக்கான அரிசி வாங்க
அரை ரூபாயையும் அவனுண்டு பண்ண
முடியுமா? நம்மால் முடிந்த வரைக்கும்
ஏற்பாடு செய்துக்கொண்டிட்டு வருவோம்.








( 5 )





( 10 )




( 15 )




( 20 )







( 25 )




( 30 )




( 35 )







( 40 )




( 45 )

காட்சி 2

மாப்பிள்ளையின் சாதகம் பார்த்தல்

(சொறிபிடித்த கொக்குப் புரோகிதனிடம், வீட்டுக்
கார வெள்ளையப்பன் சொல்லுகிறான்;)

இதுதான் ஐயரே என்மகன் சாதகம்
திருமணம் விரைவில் செய்ய வேண்டும்
எப்போது முடியும்? எங்கே மணமகள்?
மணமகட் குறிய வாய்ப்பெல்லாம் எப்படி?
அயலா? உறவா? அணிமையா சேய்மையா?
பொறுமையாய்ப் பார்த்துப்புகல வேண்டும்.

மண்ணாங்கட்டி புரோகிதனிடம் கூறுகிறாள்

காலையில் வருவதாகக் கழறினீரே,
மாலையில் வந்தீர் என்ன காரணம்?

சொறிப்பித்த கொக்கு, சொல்லுகிறான்

தெரியாமல்என் பெரிய பெண்ணைத்
திருட்டுப் பயலுக்குத் திருமணம் செய்தேன்
வட்டிக் கடையில் வயிர நகையைப்
பெட்டி யோடு தட்டிக் கொண்டதால்
சிறைக்குப் போனான் செத்தும் தொலைந்தான்
கட்டிய தாலியைக் கழற்றி எறிந்து
மொட்டைத் தலையுடன் மூதேவி போலப்
பெரியவள் பிறந்தகம் வரநேர்ந்து விட்டது.
சின்ன பெண்ணைப் பின்னத் தூரில்
கப்பல் கப்பலாய்க் கருவாடேற்றும்
வாசனுக்கு மணம்செய்வித்தேன்
மணம் முடிந்த மறுநாள் தெரிந்தது
வாசன் கருவாட்டு வாணிகன் அல்லன்
வாணிகன் கூலியாள் வாசன் என்பது!
ஒருநாள் வாசன் பெருங்குடி வெறியால்
நாயைக் கடித்தான் நாயும் கடித்தது.
நஞ்சேறியதால் நாய்போல் குறைத்தே
ஐஞ்சாறு நாளாய் அல்லல் பட்டே
இரண்டு நாளின்முன் இறந்து போனான்.
ஓலை வந்தது காலையில்! கையில்-
கேட்டாலுஞ்சரி விட்டாலுஞ்சரி
இரண்டனாக் காசும் இல்லை மெய்யாய்!
இந்நேர மட்டும் ஏதேதோ நான்
தில்லு மல்லுகள் செய்து பார்த்தேன்
யாரும் சிறிதும் ஏமாற வில்லை
உங்க ளிடத்தில் ஓடி வந்தேன்
சாதகம் பார்த்துச் சரியாய் சொல்வேன்;
முன்நடந் தவைகளை முதலில் சொல்வேன்
ஐயா இதுஓர் அணின் சாதகம்

வெ-ஆமாம் அடடா ஆமாம் மெய்தான்

புரோ-ஆண்டோ இருப தாயிறுப் பிள்ளைக்கு

வெள்ளை-மெய்தான் மெய்தான் மேலும் சொல்வீர்

புரோ-பையனோ நல்ல பையன், அறிஞன்
ஈன்றதாய் தந்தை இருக்கின்றார்கள்.
உங்களுக் கிவனோ ஒரே பையன்தான்
பையன் தந்தை பலசரக்கு விற்பவர்
தாய்க்கோ ஒருகால் சரியாய் இராது

மண்ணாங்கட்டி- அத்தனையும் சரி அத்தனையும் சரி
எப்போது திருமணம் ஏற்படக் கூடும்?

புரோ-இந்தவைகாசி எட்டுத் தேதிக்கு
முந்தியே திருமணம் முடித்திட வேண்டும்

மண்ணா-அத்தனை விரைவிலா? அத்தனை விரைவிலா?

புரோகி-நடுவில் ஒரேஒரு தடை யிருப்பதால்
ஆடியில் திருமணம் கூடுதல் உறுதி.

வெள்ளை-ஆடியில் திருமணம் கூடிமா ஐயரே?

புரோ-ஆடிக் கடைசியில் ஆகும் என்றால்
ஆவணி முதலில் என்றுதான் அர்த்தம்.

வெள்ளை-அப்படிச் சொல்லுக அதுதானே சரி

மண்ணா-மணப்பெண் என்ன பணக்காரி தானா?
புரோகி-மணப்பெண் கொழுத்த பணக்காரன் மகள்
பெற்றவர்ட்கும் உற்றப்பெண் ஒருத்திதான்
மண முடிந்தபின் மறுமாதத்தில்
ஈன்றவர் இருவரும் இறந்துபோ வார்கள்
பெண்ணின் சொத்துப் விள்ளைக்கு வந்திடும்

மண்ணா-எந்தத் திசையில் இருக்கின்றாள் பெண்?

புரோ-வடகிழக்கில் மணப்பெண் கிடைப்பாள்;
தொலைவில் அல்ல தொண்ணூறு கல்லில்,

மண்ணா-அப்படி யானால் அரசலூர் தானா?

புரோகி-இருக்கலாம் இருக்கலாம்- ஏன் இருக்காது?

வெள்ளை-எப்போது கிளம்பளாம் இதைவிட்டு நானே?

மண்ணா-எப்போது கிளம்பளாம் இதைவிட்டு நாங்கள்

வெள்ளை-யான்மட்டும் போகவா? இருவரும் போகவா?

புரோ-நாளைய காலையில் நாலு மணிக்கு
நீவிர் மட்டும் போவது நேர்மை.
நாழிகை ஆயிற்று நான் போக வேண்டும்.

மண்ணா-இன்னும் ஒன்றே ஒன்று சொல்லுவீர்
என்ன என்றால்-வேறு ஒன்றுமில்லை
எனக்குக் குழந்தை இன்னும் பிறக்குமா?

வெள்ளை-ஹூக்கும் இனிமே உனக்கா பிள்ளை?

புரோ-இனிமேல் பிள்ளை இல்லை இல்லை

மண்ணா-இந்தா நாலணா எழுந்துப்போ ஐயரே

புரோ-ஆயினும் இந்த ஆவணிக்குப்பின்
பெண்குழந்தை பிறக்கும் உறுதி
போதாது நாலணா, போட்டுக் கொடுங்கள்

மண்ணா-சரி இந்தாரும் ஒரு ரூபாய்தான்!







( 50 )







( 55 )







( 60 )




( 65 )




( 70 )




( 75 )




( 80 )




( 85 )








( 90 )





( 95 )







( 100 )








( 105 )




( 110 )








( 115 )








( 120 )






( 125 )







( 130 )

காட்சி 3

புதிய தொடர்பு


அரசலூர் அம்மாகண்ணுவிடம்
விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான்;
நிறைய உணடேன் நீங்கள் இட்டதைக்-
கறிவகை மிகவும் கணக்காய் இருந்தன.
அரசலூர் வந்ததை அறிவிக் கின்றேன் :
இரிசன் மகளை என்மக னுக்குக்
கேட்க வந்தேன் கேட்டேன் ஒப்பினான்.
சாப்பிடச் சொன்னான் சாப்பாடு முடிந்தது;
மாப்பிள்ளை பார்க்க வருவதாய்ச் சொன்னான்;
சரிதான் என்றேன்! வரும்வழி தன்னில்
உன்னைப் பார்க்க உள்ளம் விரும்பவே
வந்தேன் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன்.
பெண்கு ழந்தை பெறவில்லை நீ
மருந்துபோல் ஒருமகன் வாய்த்திருக்கின்றான்.
அவனுக்கும் திருமணம் ஆக வேண்டும்
உன்றன் கணவர் உயிருடன் இருந்தால்
திருமணம் மகனுக்குச் செய்திருப்பார்.

அரசலூர் அம்மாக்கண்ணு சொல்லுகிறாள்

அவர்இறந் தின்றைக்கு ஐந்தாண்டாயின.
பதினெட்டு வயது பையனுக்காயின.
எந்தக் குறையும் எங்களுக் கில்லை.
நன்செயின் நறுக்காய் நாற்பது காணியும்
புன்செயின் பொருக்காய் ஒன்பது காணியும்
இந்த வீடும் இன்னொரு வீடும்
சந்தைத் தோப்பும் தக்க மாந்தோப்பும்
சொத்தா கத்தான் வைத்துப் போனார்
என்ன குறைஎனில் சின்ன வயதில்
என்னை விட்டுச் சென்றார் அதுதான்!
பார்ப்பவர் ஏதும் பழுது சொல்லாது
தனியே காலந் தள்ளி வந்தேன்
இனிமேல் என்னமோ! யாரதை அறிவார்?

விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான்

நடந்தது பற்றி நாவருந் தாதே
கடந்தது பற்றிக் கண்கலங் காதே
நான்இன்று மாலை நாலரை மணிக்கெல்லாம்
விரசலூர் போக வேண்டும்! என்ன?

அரசலூர் அம்மாக்கண்ணு சொல்லுகிறாள்

ஹூஹூம் நான் அதை ஒப்ப மாட்டேன்
இன்றிரவு நன்றாய் இங்குத் தங்கிக்
காலையில், அடுப்பில் காய்ந்த வெந்நீரில்
ஆர அமர அழகாய் முழுகி
இட்டலி, மசால்வடை சுட்டதும் சுடச்சுட
வெண்ணெய் உருக்கும், மிளகாய்ப் பொடியும்
தொட்டும் தொய்ந்தும் ஒட்டுண்டு
சற்று நேரம் கட்டிலில் துயின்றால்,
இரவில்கண் விழித்த இளைப்புத் தீரும்
திருந்த நடுப்பகல் விருந்து முடித்துப்
போக நினைத்தால் போவது தானே?

விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான்

அன்பு மிக்க அம்மாக் கண்ணே!
பின்பு நான்என்ன பேச முடியும்?
அப்படியே என் அம்மாக்கண்ணு!
சொற்படி நடப்பேன் சொற்படி நடப்பேன்.





( 135 )




( 140 )




( 145 )







( 150 )




( 155 )




( 160 )







( 165 )







( 170 )




( 175 )







( 180 )

காட்சி 4

பெண் எப்படி?

விரலூர் வெள்ளையப்பன்
மனைவி மண்ணாங் கட்டிக்குக் கூறுகின்றான் ;

நல்ல உயரம் நல்ல கட்டுடல்
நல்ல பண்பு நல்ல சிவப்பே
எல்லாம் பொருத்தம்! எனக்குப் பிடித்தம்!
செல்லாக் காசும் செலவில்லை நமக்கே
அனைத்தும் அவர்கள் பொருப்பே ஆகும்
மணமக்கள் வீட்டில் மணம்வைத்துள்ளார்.

மண்ணாங்கட்டி

சாதியில் ஏதும் தாழ்த்தி இல்லை!
சொத்தில் ஏதும் சுருக்கம் இல்லை!
ஏழுபெண்களில் இவள்தான் தலைச்சனோ ?
எப்படி யாகிலும் இருந்து போகட்டும்
பெண்கள் ஏழுபேர் பிறந்தனர், ஆணோ
பிறக்க வில்லை. பெரிய குறைதான்
எப்படி யாகிலும் இருந்து போகட்டும்
எழுபது காணி நன்செய் என்றால்
பைய னுக்குப் பத்துக் காணிதான்!
எழுபதாயிரம் இருப்புப் பணமா?
பையனுக்குப் பதினாயிரம் வரும்
எப்படியாகிலும் இருந்து போகட்டும்
மாப்பிள்ளை பார்க்க எப்போது வருவார்?

வெள்ளையப்பன் விள்ளுகிறான்

காலையில் வருவார் கட்டாயமாக






( 185 )







( 190 )




( 195 )




( 200 )

காட்சி 5

மாப்பிள்ளை பார்த்தல்

வி்ரசலூர் வெள்ளை யப்பனும்
அரசலூர் இரிசனும் பேசுகிறார்கள்

வெள்ளையப்பன்

வருக வருக இரிசப்பனாரே
அமர்க அமர்க அந்தநாற்காலியில்
இருக்கிறேன் நானும் இந்தநாற் காலியில்
குடிப்பீர் குடிப்பீர் கொத்தமல்லி நீர்
வீட்டில் அனைவரும் மிகநலந் தானே?
பிள்ளைகள் எல்லாம் பெருநலந் தானே?
என்மகன் இந்த எதிர்த்த அறையில்
படித்திரு கின்றான் பார்க்கலாமே.

இரிசன் இயம்புகிறான்

பையன் முகத்தைப் பார்க்க வேண்டும்
பிள்ளையான்டானொடு பேசவேண்டும்
இங்கே இருங்கள் யான்போய்ப்ார்ப்பேன்.

நல்லமுத்தும் இரிசனும் பேசுகிறார்கள்

நல்லமுத்து; யார் நீர் ஐயா எங்கு வந்தீர்?
ஊர்பேர் அறியேன் உள்வர லாமா?
அப்பா இல்லையா அவ்விடத்தில்?

இரிசன் ; அப்பா முந்தாநாள் அரச்சலூர் வந்தார்
எதற்கு வந்தார்? அது தெரியாதா?

நல்லமுத்து; அரசலூர் சென்றார் அப்பா என்றால்
அறியேன். ஏனதை அறிய வேண்டும்?

இரிசன் ; திருமணம் உணக்குச் செய்ய எண்ணினார்
அதற்காகத்தான் அங்கு வந்தார்.
உன்பெயர் என்ன? உரைப்பாய் தம்பி?

நல்லமுத்து; என் பெயர் நல்லமுத்து என்றிசைப்பார்

இரிசன் ; என்ன படிக்கிறாய் இந்நேரத்தில்?

நல்ல ; காலே அரைக்கால் கம்பராமாயணம்

இரிசன் ; காலே அரைக்கால் கம்பராமாயண
நூலும் உண்டோ நுவலுக தம்பி.

நல்ல ; சிதம்பர நாதர் திருவருளாலே
அரையே அரைக்கால் அழிந்து போக
மேலும் மொழிமாற்று வேலைப்பாட்டுடன்
காலே அரைக்கால் கம்பராமாயணம்
அச்சிட்டப் பட்டதை அறியீரோநீர்?

இரிசன் ; உனக்குத் திருமணம் உடனே நடத்த
என்மகனைத்தான் உன்தந்தை கேட்டார்
பெண்ணே உன் தந்தை பேசினார் பார்த்தார்.
நீயும் ஒருமுறை நேரில் பார்ப்பாய்

நல்ல ; அப்பா பார்த்தார் அதுவே போதும்,

இரிசன் ; மணந்து கொள்வார் இணங்க வேண்டுமே!

நல்ல ; அப்பா இணங்கினார்! அதுவே போதும்

இரிசன் ; கட்டிக் கொள்பவர் கண்ணுக்குப் பிடித்தமா
என்பது தானே எனக்கும் வேண்டும்.

நல்ல ; பெற்ற தந்தைக்குப் பிடித்தமா இல்லையா
பிடித்தம் என்றால் எனக்கும் பிடித்தமே!

இரிசன் ; என்மகள், ஒருமுறை உன்னைப் பார்க்க
நினைப்பதாலே நீவர வேண்டும்.

நல்ல ; அப்பாவைப் பார்த்தாள் அதுவே போதும்
அப்பா கருத்துக் கட்டி உண்டா?
இந்தரா மாயணம் இயம்புவதென்ன?
தந்தை சொல்லைத் தட்டலாகாதே
என்று தானே இயம்புகின்றது?

இரிசன் ; மகிழ்ச்சி தம்பி வருகின்றேன்நான்.

இரிசன் வெள்ளையப்பனிடம்

நல்ல முத்து மிகவும் நல்லவன்;
தகப்ப னாரை மிகவும் மதிப்பவன்;
அடக்க முடையவன் அன்பு மிகுந்தவன்
பொழுது போயிற்றுப் போய்வருகின்றேன்

வெள்ளை : போகலாம் நாளைக்குப் பொழுதுபோயிற்றே

இரிசன் : பொறுத்துக் கொள்க போய்வருகின்றேன். !






( 205 )




( 210 )







( 215 )








( 220 )






( 225 )








( 230 )





( 235 )






( 240 )








( 245 )






( 250 )








( 255 )






( 260 )