பக்கம் எண் :

நல்ல முத்துக் கதை

காட்சி 6

அம்மாக்கண்ணு ஆளானாள்

அம்மாக்கண்ணும் வெள்ளையப்பனும்


வெள்ளை

உன்றன் நினைவால் ஓடி வந்தேன்
இரண்டு நாள்முன் இரிசன் வந்து
மாப்பிள்ளை பார்த்தான் மகிழ்ச்சி கொண்டான்
திருமணத்தின் தேதி குறிக்க
வருவது போல வந்தேன் இங்கே,
மண்ணாங் கட்டியும் வருவேன் என்றாள்
தட்டிக் கழித்துநான் தனியே வந்தேன்

அம்மா

இன்று நீங்கள் இங்கு வராவிடில்
என்றன் உயிரே ஏகி இருக்கும்
பிரிந்து சென்றீர்! பிசைந்த சோற்றைக்
கையால் அள்ளினால் வாயோ கசக்கும்
பச்சைத் தண்ணீர் பருகி யறியேன்.
ஏக்கம் இருக்கையில் தூக்க மாவரும்?
பூனை உருட்டும் பானையை அவ்வொலி
நீங்கள் வரும்ஒலி என்று நினைப்பேன்,
தெருநாய் குறைக்கும் வருகின் றாரோ
என்று நினைப்பேன் ஏமாந்து போவேன்
கழுதை கத்தும்; கனைத்தீர் என்று
எழுந்து செல்வேன் ஏமாந்து நிற்பேன்
உம்மைஎப் போதும் உள்ளத்தில் வைத்தால்
அம்மியும் நீங்கள் அடுப்பும் நீங்கள்
சட்டியும் நீங்கள் பானையும் நீங்கள்
வீடும் நீங்கள் மாடும் நீங்கள்
திகைப் படைந்து தெருவிற் போனால்
மரமும் நீங்கள் மட்டையும் நீங்கள்
கழுதை நீங்கள் குதிரை நீங்கள்
எல்லாம் நீங்களாய் எனக்குத் தோன்றும்
இனிமேல் நொடியும் என்னை விட்டுப்
பிரிந்தால் என்னுயிர் பிரிந்து போகும்.

வெள்ளையப்பன் சொல்லுகிறான்

அழாதே, தரையில் அம்மாக் கண்ணு!
விழாதே உன்னை விட்டுப் பிரியேன்.
துடை கண்ணீரைப் புடைவையும் நனைந்ததே
பயித்தியக்காரி பச்சையாய்ச் சொல்வேன்
என்னுயிர் இந்தா! பிடி! உன்னதுதான்!

அம்மாக்கண்ணு

இரிசன் மகளையும் என்மக னுக்கே
பேசி முடிப்பீர் பின்பு நீங்களும்
இங்கேயேதான் தங்கினால் என்ன?
என்மகன் உங்கள் பொன்மகன் அல்லனோ?
இங்குள தெல்லாம் உங்கள் சொத்தே
மண்ணுங் கட்டிதான் மனைவியோ? இங்குள்ள
பொன்னாங்கட்டி போயொழிந்தாளோ.

வெள்ளையப்பன்

உறுதி உறுதி உன்மகனுக்கே
இரிசன் மகளை ஏற்பாடு செய்வேன்
எனமகன் பெரியதோர் இளிச்ச வாயன்
மண்ணாங் கட்டி மண்ணாங் கட்டிதான்
பெண்ணா அவள் ஒருபேய்! மூதேவி!
இரு! போய் அந்த இரிசனைக் கண்டு
பேசி விட்டுப் பின் வருகிறேன்.







( 5 )







( 10 )




( 15 )




( 20 )




( 25 )







( 30 )







( 35 )




( 40 )







( 45 )

காட்சி 7

வெள்ளையப்பன் மாறுபாடு

வெள்ளை ; இரிசனார் வீட்டில் இருக்கின்றாரா?

இரிசன் ; உள்ளே வருவீர் வெள்ளையப்பரே?
எப்போது வந்தீர்? இப்போது தானா?
மனைவியார் உம்முடன் வந்திட வில்லையா?
நல்லமுத்து நலமா? அமர்க.

வெள்ளை ; மனைவி வயிற்று வலியோடிருந்தாள்
பையன் நிலையைப் பகரவந்தேன்.
திருமணம் வேண்டாம் என்று செப்பினான்

இரிசன் ; வெளியிற் சொன்னால் வெட்கக் கேடு
வெள்ளை யப்பரே வெந்தது நெஞ்சம்
பேச்சை நம்பி ஏச்சுப் பெற்றேன்
திருமணம் விரைவில் செய்ய எண்ணி
எல்லாம் செய்தேன் எவர்க்கும் சொன்னேன்
என்னை ஊரார் என்ன நினைப்பார்?
எப்படி வெளியில் இனிமேற் செல்வேன்?
மணம்வேண்டாமென மறுத்ததெற்கு?
அடங்கி நடப்பவன் அல்லவா உன்மகன்?
நல்லமுத்தா சொல்லைத் தட்டுவான்?
சொல்வது தானே நல்லமுத்துக்கு?

வெள்ளை ; நூறு தடவை கூறிப்பார்த்தேன்
வேண்டாம் மணமென விளம்பி விட்டான்.
மனம் புண்பட்டு வந்தேனிங்கே
அம்மாக் கண்ணுவின் அழகு மகனுக்குத்
தங்கள் பெண்ணைத் தருவது நல்லது.
வைத்த ,நாளில் மணத்தை முடிக்கலாம்
என்னசொல் கின்றீர் இரிசப்பனாரே?

இரிசப்பன் ; அம்மாக் கண்ணை அறிவேன் நானும்
வெள்ளை யப்பரே வீண்பேச்செதற்கு?
நீவிர் விரைவாய் நீட்டுவீர் நடையை



( 50 )





( 55 )





( 60 )




( 65 )





( 70 )





( 75 )

காட்சி 8

வலையில் சிக்கினார் கணவர்

இரிசன் மண்ணாங்கட்டியிம் வந்து கூறுகிறான்

நல்ல முத்து நல்ல பிள்ளை
நீங்களும் மிகவும் நேர்மை யடையவர்
வெள்ளை யப்பர் மிகவும் தீயவர்
அரச லூரில் அம்மாக் கண்ணின்
வலையிற் சிக்கி வாழுகின்றார்
அங்கேயே அவர் தங்கி விட்டார்.
இன்னும் இங்கு ஏன்வர வில்லை
மான மிழந்து வாழு கின்றார்
அம்மாக் கண்ணின் அழகு மகனுக்கு
நான்என் பெண்ணை நல்க வேண்டுமாம்
மணம்வேண் டாமென மறுத்தா னாம்மகன்
நேரில் உம்மிடம் நிகழ்த்த வந்தேன் இதை
உங்கள் கருத்தை உரைக்க வேண்டும்

மண்ணாங்கட்டி

கெடுத்தாளாஎன் குடித்தனத்தை?
விருந்து வைத்து மருந்தும் வைத்தாள்
சோற்றைப் போட்டு மாற்றினால் மனத்தை
ஏமாந் தாரா என்றன் கணவர்?
போய்ப் புகுந்தாரா புலியின் வாயில்?
எங்கள் பிள்ளை உங்கள் பெண்ணை
வேண்டா மென்று விளம்ப வில்லையே
அவன் மகனுக்கே அவளைக் கட்ட
இப்படி எல்லாம் இயம்பினார் போலும்
மாதம் ஒன்றாகியும் வரவில்லை அவர்
மகனை இங்கே வரவழைக் கின்றேன்
சொல்லிப் பார்ப்போர் சொன்னால் கேட்பான்.

நல்லமுத்துவிடம் மண்ணாங்கட்டியும் இரிசனும்
சொல்லுகிறார்கள்

மண்ணா ; ஒருமாத மாக உன்றன் தந்தையார்
அரசலூரில் அம்மாக் கண்ணிடம்
விளையாடு கின்றார். வீட்டை மறந்தார்.
அவர்தாம் அப்படி ஆனார், உன்றன்
திருமணம் பற்றிய சேதி எப்படி?
இரிசனார் பெண்ணை ஏற்பாடு செய்தோம்
உடனே மணத்தை முடிக்க வேண்டும்

நல்ல ; அப்பா இல்லை. அதுமுடியாது.
விவாக முகூர்த்த விளம்பரத்தில்
அப்பா கையெழுத் தமைய வேண்டும்.
பாத பூசை பண்ணிக்கொள்ள
அப்பா இல்லை! எப்படி முடியும்?
திருமண வேளையில் தெருவில் நின்று
வருபவர் தம்மைப் வரவேற் பதற்கும்
அப்பா இல்லை! எப்படி முடியும்?
புரோகிதர் தம்மைப் போய் ழைக்க
அப்பா இல்லை! எப்படி முடியும்?
அரசாணிக் கால்நட அம்மி போட
நலங்கு வைக்க நாலு பேரை
அழைக்க, நல்லநாள் அமைக்க, அம்மன்
பூசை போடப் பொங்கல் வைக்க
அப்பா இல்லை! எப்படி முடியும்?

இரிசன் ; அப்பா இல்லையே அதற்கென்ன செய்வது?

நல்ல ; சோற்றை உண்டு சும்மா இருப்பது!

மண்ணா ; அம்மாக் கண்ணின் அழகு மகனுக்கு
மகளைக் கட்டி வைக்கச் சொல்லி
கெஞ்சினாராமே இவரே! நெஞ்சில்
இரக்கம் இருந்ததா இனிய தந்தைக்கே?

நல்ல ; என்னருந் தந்தை இயம்பிய படியே
இவரின் மகளை அவன் மணக்கட்டும்.
''தெருவில் என்ன பெரிய கூச்சல்?''
போய்வருகின்றேன் பொறுப்பீர் என்னை!

நல்லமுத்து, போனபின்,
இரிசனும் மண்ணாங்கட்டியும் பேசுகிறார்கள்

மண்ணா ; தன்மானம் இல்லாத் தடிப்பயல் என்மகன்
உணர்ச்சி இல்லா உளமை என்மகன்
அடிமை எண்ணம் உடையவன் என்மகன்.
தனக்குப் பார்த்த தையலை, அப்பன்
அயலான் மணக்கச் செயலும் செய்தால்
துடிக்க வேண்டுமே தடிக்கழுதை மனம்!
இல்லவே இல்லை! என்ன செய்யலாம்?
சாப்பிடுங்கள்! சற்று நேரத்தில்
வருவான் பையன் ஒருமுறைக்கு இருமுறை
சொல்லிப் பார்ப்போம் துன்பம் வேண்டாம்.





( 80 )




( 85 )




( 90 )







( 95 )




( 100 )








( 105 )





( 110 )




( 115 )




( 120 )





( 125 )






( 130 )









( 135 )




( 140 )

காட்சி 9

தமிழ் உணர்ச்சி

இரிசனும் மன்னாங்கட்டியும்
பேசியிருக்கிறார்கள்;

இரிசன் ; எங்கே போனான் உங்கள் பிள்ளை?

மண்ணா ; கூச்சல் கேட்பதாய்க் கூறிப் போனான்.

இரிசன் ; என்ன கூச்சல் ? எங்கே கேட்டது?

மண்ணா ; கேட்டது மெய்தான். கிழக்குப் பாங்கில்
வாழ்க தமிழே! வீழ்க இந்தி என்று

இரிசன் ; எந்த உணர்ச்சியும் இல்லாப்பிள்ளை
அந்த இடத்தில் அடைந்தென்ன?

மண்ணா ; என்ன இழவோ யார்கண்டார்கள்?

தமிழ் ப்லவர் அமுதனார் வந்து, இரிசனிடத்தும்
மண்ணாங்கட்டியிடத்திலும் சொல்லுகிறார்.

அமுதனார் ; உங்கள் பிள்ளையா நல்லமுத் தென்பவன்?
மண்ணா ; ஆம்ஆம் ஐயா! அன்னவன் எங்கே?
அமுதனார் ; யானதைச் சொல்லவே இங்கு வந்தேன்.

இந்த அரசினர் செந்தமிழ் ஒழித்துத்
தீய இந்தியைத் திணிக்கின் றார்கள்.
தமிழ்அழிந் திட்டால் தமிழர் அழிவார்.
நம்தமிழ் காப்பது நம்கடன் அன்றோ?
போருக்குத் திராவிடர் புறப்பட்டார்கள்
திராவிடர் கழகம் சேர்ந்தான் உங்கள்
நல்ல முத்தும்! நல்லது தானே!

இரிசன் எந்த உணர்ச்சியும் இல்லாப் பிள்ளை
இந்தக் கிளர்ச்சியில் என்ன செய்வான்?

மண்ணா ; திருமணம் செய்யச் சேயிழை ஒருத்தியை
அமைந்திருந்தார் அவனின் தந்தையார்!

பாரடா நீபோய் பாவை தன்னை
என்றால், அதையும் ஏற்றக வில்லை.
அந்தப் பொண்ணை அயலொருவனுக்குச்
தரும்படி சொன்னார் தந்தை என்றால்,
அப்பா மனப்படி ஆகுக என்றான்
இப்படிப் பட்டவன் என்ன செய்வான்?
அப்பா அயலவள் அகத்தில் நுழைந்தார்
இப்பக் கத்தில் இனிவரார். ஆதலால்
திருமணத்தை நீ செய்துகொள் என்றால்,
ஒலை விடுக்கவும், ஊரைக் கூட்டவும்
சாலும் கரகம் தனியே வாங்கவும்,
பாதபூசை பண்ணிக் கொள்ளவும்
அப்பா வேண்டும்என்றொப்பனை வைக்கிறான்!

அமுதனார் ; மடமையில் மூழ்கி மடிக்கின்றான் அவன்.
தன்மானத்தைச் சாகடிக்கின்றான்
மரக்கட்டைபோல் வாழ்ந்து வந்தான்.
இந்த நிலைக்கெலாம் ஈன்றவர் காரணர்
ஆயினும் தமிழ்பற் றவனிடம் இருந்தது.
திராவிடர்ககழகம் சேர்ந்து விட்டான்
இனிமேல் அவனோர் தனியொரு மறவன்!
அரசினர் சிறையில் அடைத்தார் அவனை

இரிசன் ; என்ன? என்ன? எப்போது விடுவார்?

மண்ணா ; இருந்தும் பயனிலான் இருக்கட்டும் சிறையில்

அமுதனார் ; எப்போது வருவான் என்ப தறியோம்
துப்பில்லா அரசினர் சொல்வதே தீர்ப்பு!
நான்வரு கின்றேன் நல்ல முத்துவின்
திருமணம் விரைவில் சிறப்படைக.




( 145 )








( 150 )









( 155 )





( 160 )






( 165 )





( 170 )




( 175 )





( 180 )




( 185 )







( 190 )

காட்சி 10

திருமணம் என் விருப்பம்!

இரிசன் வீட்டில், வெள்ளையப்பன் வந்து
பேசுகிறான்

வெள்ளை; அம்மாக்கண் தன் சொத்தையெல்லாம் அளிப்பாள்
 உம்மகள் தன்னை, அம்மாக் கண்ணின்
 மகனுக்கே, திருமணம் செய்விப்பீர்.
 என்மகன் பெரியதோர் இளிச்சவாயன்!

இரிசன் ; அம்மாக் கண்ணின் அடியை நத்தி
 வீணில் வாழும் வெள்ளை யப்பரே.
 உமது சொலில் உயர்வே யில்லை.
 எமது கொள்கை இப்படி யில்லை.
 நல்லமுத் துக்கே நம்பெண் உரியவள்.
 பொல்லாப் பேச்சைப் புகல வேண்டாம்.

அதே நேரத்தில் நல்லமுத்து வந்து
இரிசனிடம் இயம்புகிறான்

உம்மகள் என்னை உயிரென்று மதித்தாள்
திருமணம் எனக்கே செய்துவைத்திடுக

வெள்ளையப்பன் தன் மகனான நல்லமுத்தை
நோக்கிக் கூறுகின்றான்

என்விருப் பத்தை எதிர்க்கவும் துணிந்தாய்.
உன்விருப் பத்தால் என்ன முடியும்?
இன்று தொட்டுநீ என்வீட்டு வாயிலின்
வழியும் காலெடுத்து வைக்க வேண்டாம்
என்றன் சொத்தில் இம்மியும் அடையாய்.
நான்சொன் னபடி நடந்து கொண்டால்,
திருமணம் பிறகு செய்து வைப்பேன்.
அம்மாக் கண்ணின் அழகு மகனே
இந்நாள் இந்த எழில் மடந்தையை
மணந்துகொள்ளட்டும் மறுக்கவேண்டாம்

நல்ல ; திருமணம் எனது விருப்பமாகும்
ஒருத்தியும் ஒருவனும் உள்ளம்கலத்தல்
திருமணம் என்க இரிசனார் மகளும்
என்னை உயிரென எண்ணி விட்டாள்.
நானும் என்னை நங்கைக்கு அளித்தேன்
உம்வீட்டு வாயிலை ஒருநாளும் மிதியேன்
உம்பொருள் எனக்கேன்? ஒன்றும் வேண்டேன்.
நானும்என் துணைவியும் நான்கு தெருக்கள்,
ஏனமும் கையுமாய் , எம்நிலை கூறி
ஒருசான் வயிற்றை ஒம்புதல் அரிதோ!
ஆட்சித் தொட்டியில் அறியாமை நீர்பெய்து
சூழ்ச்சி இந்திஇட்டுத் துடுக்குத் துடு்ப்பால்
துழவிப் பழந்தமிழ் அன்னாய் முழுகென
அழுக்குறு நெஞ்சத் தமைச்சர் சொன்னார்
இழுக்குறும் இந்நிலை இடற வேண்டி!
நானும்என் துணைவியும் நாளும் முயல்வதில்
சிறைப்படல், காதல் தேனருந்துவதாம்
இறப்புறல் எங்கள் இன்பத்தின் எல்லையாம்

வெள்ளையப்பனை நோக்கி இரிசன்
சொல்லுகின்றான்

வெள்ளை யப்பரே வெளியில் போவீர்
என்மகள் உம்மகன் இருவரும் நாளைக்குக்
காதல் திருமணம் காண்பார். நீவிரோ
அம்மாக் கண்ணோடும் அழகு மகனொடும்
இம்மாநிலத்தில் இன்புற் றிருங்கள்.

நல்லமுத்துத் தன் திருமணத்தின்பின்
துணைவியுடன் இந்தி எதிர்ப்பு மறியலுக்குப்
புறப்படுகிறான்

வாழிய செந்தமிழ் வாழ்கநற்றமிழர்
இந்தி ஒழிக இந்தி ஒழிக

சென்று கொண்டிருக்கையில்
நல்லமுத்துவின் தாய் அவர்களைத் தொடர்கிறாள்;

இன்பத் தமிழுக்கு இன்னல் விளைக்கையில்
கன்னலோ என்னுயிர்? கணவனும் வேண்டேன்
உற்றார் வேண்டேன் உடமை வேண்டேன்
இந்தி வீழ்க

திராவிட நாடு வாழிய
அருமை செந்தமிழ் வாழிய நன்றே!





( 195 )





( 200 )








( 205 )








( 210 )




( 215 )





( 220 )




( 225 )




( 230 )








( 235 )









( 240 )









( 245 )