சுதரிசன் திம்மனிடமே பேசு கின்றான்;
தோகைமேல் அவன்உளத்தைச் செலுத்து கின்றான்.
எதையோதான் பேசுகின்றான் சுப்பம் மாமேல்
ஏகியதன் நெஞ்சத்தை மீட்டா னில்லை!
இதையறியான் திம்மன்ஒரு கவட மில்லான்;
இளித்த வாயால் "உம்உம எனக்கேட் கின்றான்!
கதைநடுவில் சுதரிசன்சிங்க் தண்ணீர் கேட்பான்;
கனிஇதழாள் வர மகிழ்வான்; போனால், நைவான்!
உளம்பூத்த சுதரிசனின் ஆசைப் பூவும்,
ஒருநொடியில் பிஞ்சாகிக் காயும் ஆகித்
தளதளத்த கனியாகிப் போன தாலே
தாங்காத நிலையடைந்தான் சூழ்ச்சி ஒன்றை
மளமளென நடத்தஒரு திட்டம் போட்டான்;
"வாஇங்கே திம்மாநீ விரைவிற் சென்று
குளத்தெதிரில் மரத்தினிலே கட்டி வைத்த
குதிரையினைப் பார்த்துவா' என்று சொன்னான்.
விருந்தினரை வரவேற்பான் தமிழன்; அந்த
விருந்தினர்க்கு நலம்செய்வான் தமிழன்; சாவா
மருந்தேனும் வந்தவர்கள் பசித்திருக்க
வாயில்இடான் தமிழன்; இது பழமை தொட்டே
இருந்துவரும் பண்பாகும் எனினும், வந்தோன்
எவன்அவனை ஏன்நம்ப வேண்டும்' என்று
துரும்பேனும் நினையாத தாலே இந்நாள்
தூய்தமிழன் துயருற்றான்! வந்தோர் வாழ்ந்தார்!
'குதிரைகண்டு வருகின்றேன்! என்று திம்மன்
குதித்துநடந் தான்! சென்றான்! சுதரி சன்சிங்
முதிராத பழத்துக்குக் காத்தி ருந்து,
முதிர்ந்தவுடன் சிறகடிக்கும் பறவை யைப்போல்,
அதிராத மொழியாலே, அதிரும் ஆசை
அளவற்றுப் போனதோர் நிலைமை யாலே,
'இதுகேட்பாய் சுப்பம்மா சும்மாவாநீ
ஏதுக்கு நாணுகின்றாய், என்று சொன்னான்.
'ஏன்'என்று வந்துநின்றாள்! 'சுப்பம் மா நீ
இச்சிறிய ஊரினிலே இருக்கின் றாயே,
நானிருக்கும் செஞ்சிக்கு வருகின் றாயா ?
நகைகிடைக்கும், நல்லநல்ல ஆடை யுண்டு,
மான்அங்கே திரிவதுண்டு, மயில்கள் ஆடும்,
மகிழ்ச்சியினை முடியாது சொல்வ தற்கே,
கானத்தில் வள்ளிபோல் கனியாய் இங்கே
கடுந்துன்பம் அடைகின்றாய்' என்று சொன்னான்.
'இல்லையே நான்வேலனோடு தானே
இருக்கின்றேன் உளமகிழ்ச்சி யாக' என்று
சொல்லினாள், சுதரிசனின் வஞ்சம் கண்டாள்;
துயரத்தை வெளிகாட்டிக் கொள்ள வில்லை;
இல்லத்தின் எதிரினிலே சிறிது தூரம்
எட்டிப் போய் நின்றபடி 'போனார்இன்னும்
வல்லை' என்று முணுமுணுத்தாள்! சுதரிசன்சிங்க்
வந்தவழியே சென்றான் தோழனோடே!
'சுப்பம்மா வுக் கிழைத்த தீமை தன்னைச்
சுப்பம்மா திம்மனிடம் சொல்லி விட்டால்
தப்புவந்து நேர்ந்துவிடும்; கொண்ட நோக்கம்
சாயாதே' எனஎண்ணிச் சுதரி சன்சிங்க்,
அப்போதே எதிர்ப்பட்ட திம்ம னின்பால்
அதைமறைக்கச் சிலசொற்கள் சொல்லு கின்றான்:
'அப்பாநீ இங்கிருந்து துன்ப முற்றாய்
அங்கேவந் தால்உனக்குச் சிப்பாய் வேலை
தரும்வண்ணம் மன்னரிடம் சொல்வேன்; மன்னர்
தட்டாமல் என்பேச்சை ஒப்புக் கொள்வார்.
திரும்புகின்ற பக்கமெலாம் காட்டு மேடு
சிற்றூரில் வாழ்வதிலே பெருமை இல்லை
விருந்தாக்கிப் போட்டஉன்னை மறக்க மாட்டேன்
வீட்டினிலே சுப்பம்மா தனிமை நன்றோ?
கரும்புவிளை கொல்லைக்குக் காவல் வேண்டும்
காட்டாற்றின் ஓட்டத்தில் மான்நிற்காதே.
இளமங்கை உன்மனைவி நல்ல பெண்தான்
என்றாலும் தனியாக இருத்தல் தீது!
'குளக்கரைக்குப் போ' என்றேன் நீயும் போனாய்
கோதையொடு தனியாக நாங்கள் தங்க
உளம்சம்ம தித்ததா வந்தோம் உன்பால்!
உனக்குவெளி வேலைவந்தால் போக வேண்டும்
இளக்கார மாய்ப்பேசும் ஊர், பெண்ணென்றால்
உரைக்கவா வேண்டும். நீ உணர்ந்திருப்பாய்.
ஒருமணி நேரம்பழகி னாலும், நல்லார்
உலகம்அழிந்தாலும்மறந் திடுவதில்லை
பருகினேன் உன்வீட்டுப் பசும்பால் தன்னைப்
பழிநினைக்க முடியுமா? திம்மா உன்னை
ஒருநாளும் மறப்பதில்லை. செஞ்சிக் கேநான்
உனைக்கூட்டிப் போவ'தென முடிவு செய்தேன்.
வருவாய்நீ! சிப்பாய்என் றாக்கிஉன்னை
மறுதினம் சுபேதாராய்ச் செய்வேன் உண்மை.
இரண்டுநாளில்வருவேன் உன்கருத்தை
இன்னதென்று சொல்லிவிட வேண்டும். செஞ்சி
வருவதிலே உனக்குமிக நன்மை உண்டு!
வரவழைத்த எனக்குமொரு பேரு முண்டு
கருதாதே நம்நட்பைப் புதிய தென்று!
கடலுக்குள் ஆழத்தில் மூழ்கி விட்டேன்;
பெரிதப்பா உன்அன்பு! கரையே இல்லை!
பிறகென்ன? வரட்டுமா? என்றான்! சென்றான்.
|
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
|