பக்கம் எண் :

தமிழச்சியின் கத்தி

சுப்பம்மா தொல்லை

கலிவெண்பா

அப்போது தான்திம்மன் கண்விழித்தான், ஆ என்றான்;
எப்போது வந்தீர்கள் என்றெழுந்தான் -- இப்போது
தான்வந்தேன் என்றான் சுதரிசன்! தங்கட்கு
மீன்வாங்க நான்போக வேண்டுமே -- ஆனதினால்
இங்கே இருங்கள் இதோவருகின் றேனென்று
தங்காது திம்மன் தனிச்சென்றான் -- அங்கந்தச்
சுப்பம்மா தன்னந் தனியாகத் தோட்டத்தில்
செப்புக் குடம்துலக்கிச் செங்கையால் -- இப்புறத்தில்
வைக்கத் திரும்பினாள்; வந்த சுதரிசன்சிங்க்
பக்கத்தில் நின்றிருந்தான் பார்த்துவிட்டாள் -- திக்கென்று
தீப்பற்றும் நெஞ்சோடு 'சேதி என்ன' என்றுரைத்தாள்.
"தோப்புக்குப் போகின்றேன் சொல்லவந்தேன் -- சாப்பிட்டுச்
செஞ்சிக்குப் போவதென்றே தீர்ப்போடு வந்தேன் . நீர்
அஞ்சிப்பின் வாங்காதீர்; அவ்விடத்தில் -- கெஞ்சி
அரசரிடம் கேட்டேன்; அதற்கென்ன என்றார்
அரசாங்கத் துச்சிப்பாய் ஆக்கி -- இருக்கின்றேன்
திம்மனுக்கு நான்செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்.
ஐம்பது வராகன் அரசாங்கச் -- சம்பளத்தை
வாங்கலாம் நீங்கள் வயிறாரச் சாப்பிடலாம்
தீங்கின்றி எவ்வளவோ சேர்க்கலாம் -- நாங்களெல்லாம்
அப்படித்தான் சேர்த்தோம் அதனால்தான் எம்மிடத்தில்
இப்போது கையில் இருப்பாக -- முப்பத்து
மூவாயிரவராகன்சேர்த்து மூலையிலே
யாவருங்காணாமல் இருத்தினோம் -- சாவுவந்தால்
யாரெடுத்துப் போவாரோ, பெண்டுபிள்ளை யாருமில்லை
ஊரெடுத்துப் போவதிலும், உங்கட்குச் -- சேருவதில்
ஒன்றும் கவலையில்லை; உங்கட்குப் பிள்ளைகள்

இன்றில்லை யேனும் இனிப்பிறக்கும் -- என்பிள்ளை
வேறு; பிறர்பிள்ளை வேறா? இதைநீயே
கூறுவாய என்று சுதரிசன் -- கூறினான்
'திண்ணையிலே குந்துங்கள்' என்றுரைத்தாள் சேல்விழியாள்
வெண்ணெய்என்ற பிள்ளைக்கு மண்ணையள்ளி உண்ணென்று
தந்ததுபோல் இவ்வாறு சாற்றினளே -- இந்தமங்கை
என்று நினைத்த, சுதரிசன் திண்ணைக்கே
ஒன்றும் சொல்லாமல் ஒதுங்கினான் -- பின்அவளோ
கூடத்தைச் சுற்றிக் குனிந்து பெருக்கினாள்
'மாடத்திற் பற்கொம்பு வைத்ததுண்டோ -- தேடிப்பார்'
என்றுரைத்துக் கொண்டே எதிர்வந்து சுப்பம்மா!
ஒன்றுரைக்க நான்மறந்தேன் உன்னிடத்தில் -- அன்றொருநாள்
செஞ்சியில் ஒருத்தி சிவப்புக்கல் கம்மலொன்றை
அஞ்சு வராகன் அடகுக்குக் -- கெஞ்சினாள்
முற்றுங் கொடுத்தேன் முழுகிற்று வட்டியிலே.
சிற்றினச்சிவப்போ குருவிரத்தம் -- உற்றதுபோல்,
கோவைப் பழத்தில் மெருகு கொடுத்ததுபோல்,
தீவட்டிபோல் ஒளியைச் செய்வதுதான் -- தேவை யுண்டா?
என்று சுதரிசன் கேட்டான். 'எனக்கது' ஏன்?
என்று சுப்பம்மா எதிர்அறைக்குச் -- சென்றுவிட்டாள்.
திண்ணைக்குச் சென்றான் சுதரிசன்சிங்க். இன்னும்மென்ன
பண்ணுவேன் என்று பதறுகையில் -- பெண்ணாள்
தெருவிலே கட்டிவைத்த சேங்கன்று தின்ன
இருகையில் வைக்கோலை ஏந்தி -- வரக்கண்டே
இப்பக்கம் நன்செய் நிலம்என்ன விலை? என்றான்.
அப்பக்கம் எப்படியோ அப்படிதான் -- இப்பக்கம்
என்று நடந்தாள். இவனும் உடன்சென்றே
இன்றுகறி என்ன எனக்கேட்டான் -- ஒன்றுமே
பேசா திருந்தாள். பிறகுதிண் ணைக்குவந்தான்.
கூசாது பின்னும் குறுக்கிட்டு -- "நீ சாது
வேலைஎலாம் செய்கின்றாய் வேறு துணையில்லை
காலையி லிருந்துநான் காணுகின்றேன் -- பாலைக்
கறப்பாயா எங்கே கறபார்ப்போம என்றான்
அறப்பேசா மல்போய் அறைக்குள் முறத்தில்
அரிசி எடுத்தாள். அவனும் அரிசி
பெரிசிதான் என்றுரைத்தான் பேசாள் -- ஒருசிறிய
குச்சிகொடு பற்குத்த என்பான் கொடுத்திட்டால்
மச்சுவீடாய் இதையேன் மாற்றவில்லை? சீச்சீ
இதுபோது மாஎன்பான். சுப்பம்மா இந்தப்
புதுநோயை எண்ணிப் புழுங்கிப் -- பதறாமல்
திம்மனுக் கஞ்சித் திகைத்தாள் . அந்நேரத்தில்
திம்மனும் வந்தான் சிடுசிடுத்தே -- 'இம்மட்டும்
வேலையொன்றும் பாராமல் வீணாக நீவீட்டு்
மூலையிலே தூங்கினாய் முண்டமே -- பாலைவற்றக்
காய்ச்சென்றான் சென்றாள் கணவது கட்டளைக்குக்
கீச்சென்று பேசாக் கிளி.





( 5 )





( 10 )



( 15 )




( 20 )



( 25 )





( 30 )



( 35 )




( 40 )



( 45 )




( 50 )



( 55 )




( 60 )



( 65 )




( 70 )




( 75 )


                   திம்மன் ஆவல்

              தென்பாங்கு -- கண்ணிகள்

காலை உணவருந்திச் -- சுதரிசன்
காய்ச்சிய பால்பருகி
ஓலைத் தடுக்கினிலே -- திண்ணைதனில்
ஓய்ந்துபடுத் திருந்தான்
'வேலை கிடைக்கும்என்றீர் -- உடனே
விண்ணப்பம் போடுவதா? --
நாலைந்து நாட்களுக்குப்-- பிறகு
நான் அங்கு வந்திடவா?'

என்றுதிம்மன் வினவச் -- சுதரிசன்
யாவும் முடித்து விட்டேன்
இன்று கிளம்பிவந்தால் -- நல்லபயன்
ஏற்படும் அட்டிஇல்லை.
ஒன்றும் பெரிதில்லைகாண் -- திம்ம, நீ
ஊருக்கு வந்தவுடன்
மன்னர் இடத்தினிலே -- உன்னையும்
மற்றும் மனைவியையும்

காட்டி முடித்தவுடன் -- கட்டளையும்
கையிற் கிடைத்துவிடும்
வீட்டுக்கு நீவரலாம் -- சிலநாள்
வீட்டிலே தங்கியபின்
போட்ட தலைப்பாகை -- கழற்றிடப்
போவ தில்லை நீதான்
மாட்டிய சட்டையினை -- கழற்றியும்
வைத்திடப் போவதில்லை.

எண்பது பேருக்குநான் -- உதவிகள்
இதுவரைக்கும் செய்தேன்
மண்ணில் இருப்பவர்கள் -- நொடியினில்
மாய்வது திண்ணமன்றோ!
கண்ணிருக்கும் போதே -- இவ்வரிய
கட்டுடல் மாயு முன்னே
நண்ணும் அனைவ ருக்கும் -- இயன்றிடும்
நன்மை செய்தல் வேண்டும்.

வண்டி'யினை அமர்த்து -- விரைவினில்
மனைவியும் நீயும்
உண்டி முடிந்தவுடன் -- வண்டிதான்
ஓடத் தொடங்கியதும்
நொண்டி எருதெனினும் செஞ்சியினை
நோக்கி நடத்து வித்தால்
கண்டிடு பத்துமணி -- இரவினில்
கட்டாயம் செஞ்சிநகர்.

வீட்டையும் பேசிவிட்டேன் -- இருவரை
வேலைக் கமைத்து விட்டேன்
'கோட்டையிற் சிப்பாயாய் -- அமரும்
கொள்கையி லேவருவார்
காட்டு மனிதர் அல்லர்' -- என்றுநான்
கண்டித்துப் பேசிவிட்டேன்
கேட்டு மகிழ்ந்தார்கள் -- நிழல்போல் )
கிட்ட இருப்பார்கள்.'

திம்மன் இதுகேட்டான் -- கிளம்பிடத்
திட்டமும் போட்டுவிட்டான்!
'பொம்மை வரும்' என்றதும் -- குழந்தைகள்
பூரித்து போவது போல்
'உம்' என்று தான்குதித்தான் -- விரைவினில்
உண்டிட வேண்டுமென்றான்.
அம்முடி வின்படியே -- தொடங்கினர்
அப்பொழுதேபயணம்!


( 80)



( 85 )





( 90 )




( 95 )




( 100 )




( 105 )




( 110 )




( 115 )




( 120 )




( 125 )




( 130 )





( 135 )



( 140 )

                        காடு

                    எண்சீர் விருத்தம்


'நாளைநடப் பதைமனிதன் அறியான்' என்று
        நல்லகவி விக்தர்யுகோ சொன்னான் திம்மன்
காளைஇரண் டிழுக்கிற வண்டி ஏறிக்
        கதைஇழுக்க மனைவியைக் கையோடி ழுத்துத்
தேளையொத்த சுதரிசனின் பேச்சை நம்பிச்
        செஞ்சிக்காட் டின்வழியே செல்லுகின்றான்
வேளைவர வில்லைஎன்று சுப்பம் மாவும்
        வெளிக்காட்ட முடியவில்லை தன்க ருத்தை!

குதிரைமேல் சுதரிசனும் ஏறிக் கொண்டு
        கோணாமல் மாட்டுவண்டி யோடு சென்றான்.
முதிர்மரத்தில் அடங்கினபோய்ப் பறவை யெல்லாம்.
        முன்நிலவும் அடங்கிற்று! முத்துச் சோளக்
கதிர் அடிக்கும் நரிகள் அடங் கினநு ழைக்குள்
        காரிருளும் ஆழ்ந்ததுபோய் அமைதி தன்னில்
உதிர்ந்திருந்த சருகினிலே அதிர்ச்சி ஒன்றே
        உணர்ந்தார்கள். பின்அதனை அருகில் கேட்டார்.

மெதுவாகப் பேசுகின்ற பேச்சுங் கேட்டார்;
        விரைவாகச் சிலர்வருவ தாய்உணர்ந்தார்
சுதரிசனின் எதிர்நோக்கி வந்திட் டார்கள்;
        தோள்நோக்கிக் கத்திகளின் ஒளிகண் டார்கள்;
எதிர்வருவோர் அடையாளம் தெரிய வில்லை.
        எலிக்கண்போல் எரிந்ததுவண்டியின் விளக்கும்;
இதோகுதிரை என்றார்கள் வந்தவர்கள்,
        எதிர்த்தோன்றும் மின்னல்கள் வாளின் வீச்சு!

பறந்துவிட்டான் சுதரிசன்போய்! வண்டிக் குள்ளே
        பதறினார் இருந்தவர்கள்! வண்டிக் காரன்
இறங்கி, 'எமை ஒன்றும்செய் யாதீர்' என்றான்!
        'எங்கிருந்து வருகின்றீர்?' என்றார் வந்தோர்!
'பிறந்துவளர்ந் திட்டஊர் வளவனூர் தான்;
        பெயர் எனக்குச் சீனன்' என்றான் வண்டிக் காரன்.
'உறங்குபவர் யார்உள்ளே' என்று கேட்டார்
        உளறலோடு திம்மன் 'நான் வளவ னூர்தான்'

என்றுரைத்தான். 'இன்னும்யார்' என்று கேட்டார்.
        'என்மனைவி' என்றுரைத்தான் திம்மன்! கேட்ட
கன்னலைப்போல் மொழியுடையாள் துடிதுடித்தாள்!
        'காரியந்தான் என்ன' வென்றார்! நடுங்குந் திம்மன்,
தன்கதையைக் கூறினான்! கேட்டார்! அன்னோர்
        சாற்றுகின்றார்; 'திம்மனே மோசம் போனாய்;
பன்னாளும் தமிழர்களின் மானம் போக்கிப்
        பழிவாங்கும் வடக்கருக்குத் துணைபோகின்றாய்;

தமிழ்மொழியை இகழ்கின்றான், தமிழர் தம்மைத்
        தாழ்ந்தவர்என் றிகழ்கின்றான்; தமிழப் பெண்டிர்
தமதுநலம் கெடுக்கின்றான்; தன்நாட் டாரைத்
        தான்உயர்வாய் நினைக்கின்றான்; அவன்தான் நாளும்
சுமைசுமையாய்ச் செய்துவரும் தீமை தன்னைச்
        சொன்னாலும்கேட்பதில்லை, அந்தோ அந்தோ
அமுதான மனைவியுடன் வடக்கன் ஆட்சி
        அனலுக்கா செல்கின்றீர் வண்டி ஏறி?

நல்லதொரு தொண்டுசெய்வாய்; செஞ்சியாளும்
        நாய்க்கூட்டம் ஒழிந்துபட எம்பால் சேர்ந்து
வெல்லஒரு தொண்டு செய்வாய்; கள்வரல்ல
        வீணரல்ல யாம்; தமிழை இகழ்ந்தோர் வாழ்வின்
சல்லிவேர் பறிப்பதுதான் எமது மூச்சே!
        சலிப்பதிலே தோன்றுவதே எம்சாக்காடே!
இல்லையெனில் உன்எண்ணம் போல்ந டப்பாய்;
        என்ன' என்றார். திம்மன், 'விடை தருவீர்' என்றான்.

'போகின்றாய்? போ! பிறன்பால் வால்கு ழைக்கப்
        போ? அடிமைக் குழிதன்னில் வீழ்ந்தி டப்போ!
போ, கிண்ணிச் சோற்றுக்குத் தமிழர் மானம்
        போக்கப்போ! ஒன்றுசொல்வோம் அதையே னுங்கேள்;
சாகின்ற நிலைவரினும் நினைப்பாய் முன்னைத்
        தமிழர்மறம்! தமிழர்நெறி!' என்றார்! நங்கை
'போகின்றேன் என்னிடத்தில் கத்தி ஒன்று
        போடுங்கள்' என்றுரைத்தாள். ஆஆ என்றார்!

ஐந்துபேர் தரவந்தார் குத்துக் கத்தி
        அவற்றில்ஒரு கத்தியினை வாங்கிக் கொண்டாள்!
'தந்தோம்எம் தங்கச்சி வெல்க! வெல்க!
        தமிழச்சி உன்கத்தி வெல்க' என்றார்.
வந்தோரின் வியப்புக்கு வரையே இல்லை.
        மாட்டுவண்டி சென்றதுசெஞ்சியினை நோக்கி!
பந்தாகப் பறந்திட்ட சுபேதார் சிங்கைப்
        பத்துக்கல்லுக்காப்பால் திம்மன் கண்டான்!





( 145 )





( 150 )



( 155 )





( 160 )




( 165 )




( 170 )




( 175 )




( 180 )




( 185 )




( 190 )




( 195 )




( 200 )





( 205 )



( 210 )





( 215 )


                        சிங்கம்

              தென்பாங்கு கண்ணிகள்

'காட்டு வழிதனிலே சிங்கமே -- எம்மைக்
காட்டிக் கொடுத்துவந்த சிங்கமே
ஓட்டம் பிடித்துவிட்ட சிங்கமே -- உங்கள்
உள்ளம் பதைத்ததென்ன சிங்கமே?
நீட்டிய உங்கள்கத்தி, கள்ளரைக் -- கண்டு
நெட்டுக் குலைந்ததென்ன சிங்கமே?
கூட்டி வழிநடந்து வந்திரே' -- என்று
கூறிச் சிரித்தான்அத் திம்மனும்!

அங்கே வழிமறித்த யாவரும் -- திரு
வண்ணா மலைநகர வீரர்கள்;
இங்கே எமக்கவர் விரோதிகள் -- தக்க
ஏற்பாட்டிலே எதிர்க்க வந்தவர்;
உங்கட் கிடர்புரிய எண்ணிடார் -- இந்த
உண்மை தெரியும்எனக் காதலால்
எங்கே உமைவிடுத்த போதிலும் -- உங்கட்
கிடரில்லை' என்றனன் சுதரிசன்!


( 220 )




( 225 )




( 230 )




( 235 )

               சுப்பம்மா

            எண்சீர் விருத்தம்

' இவ்வாறு கூறிப்பின் சுதரிசன்சிங்க்
         இதோகாண்பீர் செஞ்சிமலை மலை சார்ந்த சிற்றுர்!
அவ்விடத்தில் தனிக்குடிசை ஒன்றில் நீவீர்
         அமைதியாய் இருந்திடுவீர்; உணவு யாவும்
செவ்வையுற ஏற்பாடு செய்வேன், என்றன்
         சேவகத்தை நான்பார்க்க வேண்டுமன்றோ?
எவ்விதத்தும் விடிந்தவுடன் வருவேன் இங்கே;
         எவற்றிற்கும் ஏற்பாடு செய்வேன்' என்றான்.

கைவேலைக் காள்கொடுத்தான்; துணைகொ டுத்தான்;
         கழறியது போலவே உணவுந் தந்தான்;
வைவேலை நிகர்கண்ணாள் கண்ணு றக்கம்
         வராதிருந்தாள்; அவளுடைய நெஞ்ச மெல்லாம்
பொய்வேலைச் சுதரிசன்செய் திடஇ ருக்கும்
         பொல்லாங்கில் இருந்தது! குத்துக் கத்திக்கு
மெய்யாக வேலைஉண்டோ, அவ்வாறொன்றும்
         விளையாமை வேண்டுமென எண்ணிக் கொண்டாள்.





( 240 )





( 245 )




( 250 )