பக்கம் எண் :

கண்ணகி புரட்சிக் காப்பியம்

இயல் 41

ஐயப்பாகு என்மீது கொள்ள வைத்தாய்
அரசர்விடும் உளவறிவோர் உளவ றிந்தால்
வையப்பா சிலம்புதனை என்பார்; வைத்தால்
வந்திடப்பா வஞ்சியையும் அழைத்துக் கொண்டு
நையப்போ டப்படப்பா தலையைத் துண்டாய்
நறுக்கிப்போ டப்படப்பா என்பார் என்றான்
செய்யப்போய் நலமொன்றைத் தீயைப் போய்நீ
திருடிவந்தாய் வஞ்சிஎன்றான் வருந்தி நின்றான்

மடமையினால் இச்செயலைச் செய்தோம் என்றான்
மக்கள்நமை மதியாரே என்று நைந்தான்
உடைமையினை உடையவர்பால் சேர்த்தே எம்மை
ஒன்றும்செய் யாதீர்கள் என்போம் என்றான்
மடமடென வேநடந்தான் சிலம்பெ டுத்தான்
மற்றுமதை நோக்கினான் மார்பில் வைத்தே
மிடிபோக்கும் செல்லமே என்று கூறி
மீண்டுமதை இருந்தஇடம் தன்னில் வைத்தான்

மிகப்பெரிது நமக்கெல்லாம் இச்சி லம்பு
வேந்தர்க்குச் சிறுதுரும்பே ஆத லாலே
அகத்தியமாய்த் தேடிடார் எனநி னைப்பான்
அரசியார் திருவடியின் மங்க லத்தைப்
பகுத்துணராப் பாவியினைத் தேடு தற்குப்
பத்தாயிரம் பேரைப் போவீர் என்று
தகத்தகெனக் குதித்திடுவார் வேந்தர் பல்லைத்
தடதடெனக் கடித்திடுவார் எனநினைப்பான்





( 5 )





( 10 )




( 15 )





( 20 )



இயல் 42

வீட்டையும்வந் தாராயக் கூடும் என்றே
வேலங்காட் டிற்சிலம்பைப் புதைத்து வைத்தான்
காட்டையும் ஆய் வாரென்று சிலம்பைத் தோண்டிக்
கடிதோடி இடுகாட்டில் புதைத்து வைத்தான்.
நாட்டிலுள்ள எவர்களையும் உளவு காணும்
நாட்டத்தார் எண்றெண்ணி நடுக்கம் கொள்வான்
தோட்டத்து வேலையினில் எட்டிப் பார்ப்பான்
தொலைநோக்கித் தெருக்குறட்டில் நிற்கும் போதில்

அத்தெருவில் ஆயிரம்பேர் நடுவிற்செல்லும்
ஆணழகன் ஒருசிலம்பும் கையு மாக
இத்தெருவில் இதுகொள்வீர் உள்ளீர் கொல்லோ
எழிற்சிலம்போ சிலம்பென்று கூறக் கேட்ட
நத்தைவிழிக் கருங்கையான் ஓடி ஐயா
நம்அரசி யார்க்கொன்று வேண்டும்; நீவீர்
வைத்திருக்கும் சிலம்பினுடன் இந்தக் கோவில்
வாயிலிலே நின்றிருப்பீர் என்று சொன்னான்

யார்நீவிர் எனக்கேட்ட கோவ லற்கே
யான்இந்த அரசவையின் பழம்பொற் கொல்லன்;
பேர்கருங்களை; இந்நாட்டின் மன்னி யார்தாம்
பின்னுமொரு பொற்சிலம்பு தேவை என்று
நேர்என்பால் சொல்லிவைத்தார் அதனா லன்றோ
நீவிர்இதை வைத்திருப்பீர் என்று சொன்னேன்
ஓர்நொடியில் இதுசொல்லி மீளுகின்றேன்
உரைத்தவிலை பெறுகீர்என்று விரைந்து சென்றான்

( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45 )



இயல் 43

வெப்புக்கும் மாற்றளித்தேன்; குளிர்மை காட்டும்
மேலுக்கும் மாற்றளித்தேன் வேந்தே, அன்னை
எய்ப்புக்குத் தீர்வில்லை என்ன என்றேன்
இப்புக்க நோய்மனநோய் என்றன் தோழி
செப்புக்கும் இளநீர்க்கும் கொங்கை ஒக்கும்
சேலுக்கும் வேலுக்கும் கண்கள் ஒக்கும்
உப்புக்கும் துப்புக்கும் இதழ்கள் ஒக்கும்
ஊற்றுக்கும் சாற்றுக்கும் சொற்கள் ஒக்கும்

என்றுரைத்த என்உடையார் எவள்பால் கண்டார்?
யானிருக்க அவளிடத்தில் இவர்க்கேன் நாட்டம்?
என்றிவ்வாறு உரைத்தழுதாள் தேற்றத் தேறாள்
எனைத்தள்ளி அறைக்கதவின் தாழும் இட்டாள்,
அன்றில்களில் ஒன்றங்கே ஒன்றிங்கேயா?
ஆருயிரும் பேருடலும் பிரிவ துண்டா
இன்றுதான் காண்கின்றேன் புதுமை என்றே
எழில்வேந்தர் வேந்தனிடம் தோழி சென்னாள்.
பாட்டொன்று பாடினேன் அவைக்கண் இன்று!
பாங்கிருந்தார் தம்மிலொரு பாவா ணர்தாம்
கேட்டொன்று நன்றென்று விரைவிற் சென்று
கிளிஒன்று மொழியார்பால் கிளத்த லானார்
போட்டொன்று கொன்றாளே என்னை மன்னி!
புல்லொன்று மலையாகச் செய்கின்றாளே.
ஊட்டொன்று கன்றும்தாய் தனைம றக்கும்
உணர்வொன்று பேரின்பம் மறவாதென்றான்


( 50 )




( 55 )





( 60 )




( 65 )





( 70 )

இயல் 44

பாண்டியன்நெ டுஞ்செழியன் தோழி யின்பால்
இவ்வாறு பகர்ந்தேன் இருக்கை நீங்கி
ஆண்டியன்ற பெருங்கோயில் மன்னி கொண்ட
ஊடலினை அகற்றுதற்குச் செல்லும் போதில்
ஆண்டவரே நும்கோயில் ஒருசி லம்பைத்
திருடியவன் அடியேனின் குடிலில் உள்ளான்
ஈண்டுளதே அக்குடிலும் அச்சிலம்பும்
இருக்கின்ற தென்றுரைத்தான் கருங்கைத் தீயன்

அன்றுபோய் இன்றுவரும் காற்சி லம்பும்
அவள்ஊடல் நெருப்பணைக்க ஏற்ற தாகும்
என்றுபோய்க் கொண்டேதன் எதிரில் வாளால்
ஏவல்செயும் காவலரை நோக்கி ''ஆளைக்
கொன்றந்தச் சிலம்புதனைக் கொணர்வீர் என்றான.
கோவலனை நோக்கியந்தக் காவலாளர்
பின்தொடர முன்நடந்தான் கருங்கைத் தீயன்
பெருமகிழ்ச்சி உள்ஊரக் கைகள் வீசி.

கோவலனை அணுகினார்; கருங்கைத் தீயன்
கோமானின் ஏவலால் சிலம்பு காணும்
ஆவலினால இவர்வந்தார் காட்டும்; என்றே
அன்புரைபோல் வன்புரையை அமைத்துக் சொன்னான்
காவலரோ ''கோவலனின் முகத்திற் கள்ளம்
காணவில்லை யேஎன்று கருதிச் சொன்னார்
தாவலுற்ற ஊராரும் கருங்கையானின்
தலைவாங்கும் எற்பாட்டின் நிலையறிந்தார்



( 75 )




( 80 )





( 85 )





( 90 )




( 95 )

இயல் 45

முகத்திலொரு நல்லகுறி தோன்றிற்று என்றால்
முழுத்திருடன் தனித்திறமை அதுதான். அன்னோன்
அகத்திலொரு தீயகுறி உணர்தல்வேண்டும
அதுவன்றோ கையிலுள்ள காற்சி லம்பு!
மிகுத்திவ்வா றுரைத்தஉரை கேட்டோ ரெல்லாம்
மேலோர்மேற் பழிசுமத்தும் நூலோ என்றார்
பகுத்துணராப் பாவிஒரு காவ லன்தான்
பட்டென்று கோவலனை வெட்டிச் சாய்த்தான

நடுங்குகின்றார் கொலைகண்டு மதுரை மூதூர்
நலங்களெல்லாம் கொலையுண்டு போன தென்றே;
ஒடுங்குகின்றார் நாணத்தில் உடம்பின் செந்நீர்
ஊர் ஆறாய் ஓடுவது கண்டார்; பல்லோர்
அடுங்கள்அப் பாவிகளைக் கருங்கை யானை
ஜயகோ என்றார்கள்! மற்றும் ஓர் ஆள்
விடுங்கள்எனைப் பழிதீர்ப்பேன் என்றான் தன்னை
விடாதிருந்த பல்லோரை நோக்கி ஆங்கே.

வல்லான் வகுத்ததெல்லாம் வாய்க்கால் போலும
வாய்மையினைக் கொன்றிடவும் வல்லான் போலும்!
நல்லான்தான் என்றிருந்தோம் வேந்தன் தன்னை!
நாணாதான் நடுவுநிலை கோணு தற்கே!
தொல்லாண்மை இழந்தானை மதுரை அன்னை
சுமப்பாளோ பழிமூட்டை சுமப்பா ளோதான்!
இல்லான்தான் கோவலனே எனினும் அன்னோன்
இருப்பான்தான் இல்லாட்சி தொலைத்த பின்னும்




( 100 )





( 105 )




( 110 )





( 115 )




( 120)

இயல் 46

மன்றத்துப் புலவரெலாம் வந்து கண்டு
மனந்துடித்தார் மன்னவன்சீர் மறைந்த தென்றார்!
குன்றத்து வாழ்மக்கள் நெய்தல் மக்கள்
குளிர்முல்லைப் பெருமக்கள் மனனமா ரோடு
ஒன்றொத்துப் பொன்நெடுந்தேர் சாய்ந் துடைந்த
ஒருதுன்பக் காட்சிகண்டு தமிழ கந்தான்
தென்றற்கும் செந்தமிழ்க்கும் தாயாய், இந்தச்
சிறுசெயற்கும் மடியேந்தல் உண்டோ என்றார்.

அன்பென்ற நீர்ப்பாய்ச்சி அறம்வ ளர்த்தே
அவனுயர்ந்தான் இவன்தாழ்ந்தான் என்பதான
துன்பின்றித் தமிழ்ச்சான்றோர் பலரைப் பெற்றுத்
தொல்லுலகுக்கு ஒழுக்கநெறி பயிற்று வித்துத்
தென்பென்றால் தென்னாட்டின் வீரம் என்றும்
திறம்என்றால் அறப்போரின் திறமே என்றும்
இன்பென்றால் இவைஎன்றும் அருளிச் செய்யும்
எழில்நாட்டில் படுகொலையா என்றார் நல்லோர்

இழந்ததுவே இவ்வுலகோர் மாணிக் கத்தை!
இழந்ததுவே இந்நாடு பெற்ற சீர்த்தி;
பழந்தமிழர் பலரோடும் பகைத்தா ராகிப்
பல்காலும் பலரோடும் பேசி நைவார்
குழந்தைகளும் கோவலனின் உடல்வெட் டுண்ட
கொடுங்கனவே காணுவார் ஆனார் என்றால்
முழங்குவன மும்முரசா அன்றி ஆட்சி
முடிகஎனும் பெருமுழக்கா என்றார் சான்றோர்





( 125 )





( 130 )




( 135 )





( 140 )

இயல் 47

மாதரிதான் வையைநீர் ஆடச் சென்றான்
மதுரையினின் றங்குவந்த மாதொ ருத்தி
தீதறியான் கோவலனாம், நாட்டு மன்னி
சிலம்புதனைத் திருடியதாய்த தீயோர் ஏதோ
ஓதியது கேட்டரசன் கொல்வித் தானாம்
ஊரெல்லாம் இதுகுறித்த இரக்கம் கேட்கும்
காதெல்லாம் இரங்குவன என்றால் நான்உள்
கலங்குவதில் வியப்புண்டோ என்று சொன்னாள்

வெட்டுண்ட கோவலனைக் காணு தற்கும்
விளைவென்ன என்பதனை அறிவ தற்கும்
எட்டுண்டு திரையென்றால் அங்கங் குள்ளார்
எல்லாரும் வந்துற்றார் கடலைப் போல்வார்
திட்டுண்டான் மன்னவனே கூட்ட மக்கள்
செப்பியவை அக்கடலின் இரைச்சல் போலும்
முட்டுண்டேன் நான்மக்கள் நெருக்கத் தாலே!
முறிவுண்டேன் உளம்சேதி கேட்டே என்றாள்

தண்ணீரில் மூழ்குமுனம் இதனைக் கேட்ட
தையலாள் மாதிரிதான் அழுகை செய்த
கண்ணீரில் மூழ்கினாள் விரைந்தாள் இல்லம்!
கண்ணகிகண் டாள் அவளை நீரா டற்கும்
எண்ணீரோ? என் உற்றீர்? யாது கேட்டீர்
என்னுடையார் ஏதுற்றார்? அம்மா என்றன்
உண்ணீர்மை நலமில்லை உழலுகின்றேன்
உரைப்பிரென்றாள் மேற்பேசும் ஆற்றல் அற்றாள்;

( 145 )




( 150 )





( 155 )




( 160 )





( 165 )


இயல் 48

கைச்சிலம்பு மன்னியவள் சிலம்பே என்றும்
கள்ளம்செய் தான்அதனை என்றும் சொன்ன
பொய்ச்சொல்லை நம்பியே மன்னன் ''கொன்று
போடச்சொன் னான்செம்மல் தன்னை'' என்றே
அச்செழுநீர்ப் பொய்கைக்கண் மதுரை வாழ்வாள்
அறிவித்தாள், நீராடேன்; உன்பால் வந்தேன்;
இச்சேதி நானுரைக்கலாயிற்றென்றே
எதிர்வீழ்ந்தாள் மீது,மாதரியும் வீழ்ந்தாள்

ஆஐயோ எனவீழ்ந்த கண்ண கிப்பேர்
ஆடுமயில் தோகைநிகர் குழல் விரிந்தே
சாவாஎன் அன்புக்கு? வாழ்வார் வாழ
தமிழ்காத்தார் வழிவந்தும் அறத்தைக் கொன்றோன்
கோவா? அக்கொடுங்காலன்? கோத்த சொல்லால்
கொலைசெய்யச் சொன்னானே? குற்ற முண்டோ?
ஓவானே? காற்றே! செங் கதிரே! சொல்வீர்
ஒன்றுண்டோ நீவீர் அறியாத செய்தி?

ஆம்ஆம்ஆம் அவன்ஓழிவான் நாடும் தீயும்
அறம்திறம்பா என்அன்பைக் கொன்றான் வாழ்வு
போம்ஆம்ஆம் பொய்ஏற்பான் ஆட்சி அற்றுப்
போம்ஆம்ஆம் தமிழ்ப்பழங்கு டித்த லைக்கோர்
தூமணியைப் பழிமாசு துடைப்பேன் என்று
மாதரிஐ யைஇருந்தார் இடம் உரைத்தே
பூமணிக்கை முகத்தறைந்து மங்கை போனாள்
புறந்திருந்தார் செயலற்று நின்றிருந்தார்.


( 170 )




( 175 )





( 180 )





( 185 )




( 190 )

இயல் 49

செஞ்சிலம்பே ஒன்றோடி ரண்டு கண்ணின்
முந்நீர்போய் நானிலமே செறியக், கண்டோர்
அஞ்சுவான் ஆறுபார்த் தெழுவகைத்தாய்
எட்டீகைத் தொண்டுவளர் திசைகள் பத்தும்
பஞ்சாக்கும் வெஞ்சினத்து நுதல்நெறிப்பின்
பறக்கும்எரி யொடுமதுரைத் தெருக்கள் தோறும்
நஞ்சுபாண் டியற்கமுது மகளிர்க்காக
நான்காணீர் கொலையுண்டோன் மனையாள் என்றாள் !

என்சிலம்பே எடுத்துவந்தது அம்மை மாரே
எவள்சிலம்பும் நமறியோம் அம்மை மாரே
என்சிலம்பைத் தன்சிலம்பென் றுரைக்கக் கேட்டோன்
இருதுண்டாய் வெட்டுவித்தான் துணையை! மன்னன்
புன்செயலால் இவ்அமைதி யுலகம் என்ற
பூஒன்றில் இதழ்ஒன்று போயிற் றன்றோ!
தென்னாட்டு வாழ்வரசி எதிர்பார்க்கின்ற
திருவெல்லாம் வேரோடு சாய்ந்த தன்றோ?

பன்னாளும் பரத்தையிடம் வாழ்ந்தோன்;செல்வம்
பறிகொடுத்தோன் என் அடைந்தென் சிலம்பில் ஒன்றை
இந்நாளில் விற்றிங்குப் பிழைக்க வந்தோன்
இனத்திலுயர் தமிழ்ப்பழங்கு டிப்பி றந்தோன்;
என்வாழ்வை இனித்துலக்கும் பொன்வி ளக்கை
இருதுண்டாய்க் காணுவதோர் இடமும் காணேன்,
என்னாமுன் கண்ணகியை எவரும் சூழ்ந்தார்
யாம்பட்டோம் நீபட்ட துன்பம் என்றார்.



( 195 )




( 200 )





( 205 )





( 210 )




( 215 )

இயல் 50

கண்ணகியை அழைத்தேகி உடல் கிடந்த
காட்சியினைக் காட்டுதற்கு நெருங்கும் போதில்
புண்நகும்அப் பொன்னுடைலைச் சூழ்ந்திருந்த
பொங்குகடல் மக்களிலோர் புலவன் நின்று
மண்ணகத்தின் தமிழரசன் பாண்டி யன்தான்
மதிகேடன்;கொடுங்கோலன்; என்று காட்டும்
திண்ணகத்தான் எவனுள்ளான் என்ப தெண்ணிச்
செத்தாய்நீ என்றான்மற்றொருவன் சொல்வான்.

பாதியுடல் கண்ணகிக்கும் மற்றும் உன்றன்
பாதியுடல் மாதவிக்கும் ஆனாய் என்றால்
சாதிஒழிப் பான்ஒருவன் வேண்டு மென்று
தவங்கிடக்கும் தமிழகத்தின் குறைத விர்க்க
ஏதுடலம் எதுதொண்டு எவ்வா றுய்தல்?
இனிதான தமிழ்ப்பண்பாடுயிரே என்போய்
தீதறியாய்! மன்னனுனைக் கொன்றான்! உன்றன்
சாகாத புகழுடம்பாற் சீரழிந்தான்

இவ்வாறு பெருமக்கள் பலவாறாக
இறந்தவனுக் கிரங்கலுற்றார் அறநெறிக்கே
ஒவ்வாத மன்னவனைப் பழித்தல் செய்தார்
''ஒதுங்கிடுக! வழிவிடுக'' என்ப தாம்ஓர்
செவ்வொலியின் நடுவினின்று திருந்து கற்புச்
சேல்விழிதான் கார்குழல்தான் என்று காட்டும்
அவ்விளைய கண்ணகிதான் கோவலன்தன்
அழகுடலின் மேல்விழுந்து புரளலுற்றாள் .




( 220 )




( 225 )




( 230 )





( 235 )




( 240 )