இவ்வாறு குட்டுவன்தான் பெருமக்கள்பால்
இயம்பினோன், தன்னருமை முதலமைச்சர்
வெவ்வேலிற் கண்வைத்தால் தெவ்வர் அஞ்சும்
வில்லவன்கோ தைதன்னை நோக்கி "எண்ணம்
எவ்வாறு மேல்நடப்ப தென்ன" என்றான்
யாண்டுபல வாழ்கநின் கொற்றம் என்றே
அவ்வமைச்சன் கார்முகிலாய்க் கண்கள் மின்னக்
குரலிடித்துச் சொன்மாரி பொழிவானாங்கே.
''வாளெடுத்து வரிப்புலியார் கயலார் நும்பால்
மாறுபட்டார்; கொங்கர்செங் களத்தில் வந்தார்;
தோளெடுத்த எடுப்பினிலே தோல்வி கண்டார்.
தொகுத்தெடுத்தே இருகொடியும் நும்பால் தந்த
நாள்எடுத்த ஓட்டத்தைத் திசைகள் எட்டும்
நன்றெடுத்துக் கூறுவன. கொங்க ணர்க்கள்
கோளெடுத்த கலிங்கர், மறக் கருநாடர்கள்
கொடும்பங்க ளர்,கங்கர் கட்டியர்கள்,
ஆரியர்க ளுடன் தமிழர் கைகலக்கும்
அப்போரில் நும்மரிய யானை வேட்டை
நேரிருந்து நான்அன்று கண்டேன்; இன்றும்
நெஞ்சரங்கில் காணாத நேர மில்லை!
ஊரிருந்து பார்த்துவர எம்கோ மாட்டி
உடன்சென்ற விற்கொடிக்கீழ் உமைஎ திர்த்த
ஆரியத்து மன்னர்தோள் அறுதல் கண்டார்
ஆயிரம்தோள் பறந்தவிடம் காணுகில்லார்.
|
( 195 )
( 200 )
( 205 )
( 210 )
( 215 )
|