பக்கம் எண் :

மணிமேகலை வெண்பா

பொன்னிவிழாப் பறை முழக்கம்



பொன்னி விழாநாளும் போந்த தெனவேந்தன்
உன்னி விழாச்செய்தி ஊரெல்லாம்-பன்னிப்
பறையானை அன்றே பறையறையச் சொன்னான்
இறையானை சென்ற தினிது.





நகரை உள்ளும் புறமும் புதுக்குக

அரசறைந்தான் அவ்வாறே ஆங்காங்கு நாட்டில்
முரசறைந்தான் "முந்து புகழ்சேர்-பெருமக்கள்
உள்ளும் புறமும் புதுக்கநகர்! நெஞ்சத்தை
அள்ளும்கா வேரிவிழா அன்று."

( 5 )



நகரின் அழகமைப்பு

இதுமணலோ செம்பொற் பொடிதானோ என்னப்
புதுமணல் ஓவம் புரிந்த-முதுநகரில்
பட்டுக் கொடியும் பறக்கும்நறுந் தொங்கலிலே
மட்டுக் கொடியும்மலர்க் காம்பு


( 10 )


தோரணமும் விளக்கும்

சிலந்திஎங்கும் என்னத் தெருத்தோற்ம் மேற்பால்
கலந்தியங்கும் தோரணங்கள் காற்றால்-புலந்தியங்கப்
பண்ணும்முன் வீடெல்லாம்! பாழிரவில் நற்பகலைப்
பண்ணுமே பாவை விளக்கு.



( 15 )

தெருப் பச்சைப் பந்தல்கள்

முன்றில் ஓவ் வொன்றுமே பன்மணியால் மூடுற்றே
ஒன்றில்ஒவ் வொன்றும் ஒளிமிகுக்கும்-நன்றே
இருப்பச்சை இல்லாப் பெருந்தேராய்த் தோன்றும்
தெருப்பச்சைப் பந்தல்கள் சேர்ந்து.




( 20 )

தெரு இருபாலும் பூச்செடிகள்

சாடிப் பலவண்ணப் பூச்செடிகள் பன்மணியைச்
சாடித் தளிர்த்துத் தெருவெல்லாம்-நாடியே
பண்டழைக்க வண்டினத்தைப் பாடுங்கள் என்றுதேன்
கொண்டழைத்துக் கொண்டிருக்கும் அங்கு.





ஆடல் பாடல்

தெருமுடிவில் ஆடலும் பாடலும் கொள்வார்
திருமுடிவில் வேந்தன் திறலே-ஒருமுடிவில்
சீர்வாழ்த்தி மன்றப் புலவரெல்லாம் செந்தமிழின்
பேர்வாழ்த்த நிற்பார் பெரிது.

( 25 )



குழந்தைகள் தமிழ் பாடல்

மைச்சிட்டுப் பாடும் மருங்கில் அதன்ஒலியை
அச்சிட்டுக் காற்சிலம்பு பாடவே-தச்சிட்ட
பாவை அசைந்தாடும் பாங்கில் குழந்தைதமிழ்
நாவை அசைத்தாடும் நன்கு.


( 30 )


தமிழ் மலரும் மன்றங்கள்

அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் நான்கின்
திறம்பொருள் இன்னவெனத் தேர-உறங்கும்
சிலரும் விழிக்கத் தமிழின் சிறப்பு
மலரும் புலவர்தம் மன்று.



( 35 )

காவேரி சென்று ஆடினார்கள்

காற்றினிலே ஆடை பறக்கப்போய்க் காவேரி
ஆற்றி னிலாமுகத்தார் ஆடுவார்-நேற்றிரா
உண்டஇதழ் கொம்புத்தேன் காதலர்கள் அந்நேரம்
கண்டஇதழ் மாணிக்கக் காடு.




( 40 )

மக்கள் நெருக்கம்

நீராடி மீளும் நெடுந்தேர் பரிதாண்டி
நேராடப் போவார் நெருக்கடைவார்-ஆரிழையார்
பின்னடக்க மாச்செல்வர் பீடுமலர்க் கைப்பற்றி
முன்னடக்க மாச்செல்வர் மொய்த்து.




அரசுக்கு வாழ்த்து

வாழிய சோழமன்மா வண்கிள்ளி செங்கோலே
வாழிய சோழன் வரிப்புலிநீ-டுழி
எனப்பாவை யார்வந்தால் பாடினார் கூத்த
ரினப்பாவை யார்ஆடி னார்.

( 45 )


அரசவையில் அவள் ஏன் இல்லை?

போதவிழும் கூந்தலார் போந்தாடும் போதெல்லாம்
மாதவியும் மேகலையும் வாராரோ-ஏதவர்க்கு
நேர்ந்ததென் றார்சில்லோர் நேர்மைஇது வோஎன்றார்
சேர்ந்ததிது தாயின் செவி.


( 50 )

மாதவியின் தாய் 'மாதவியையும் மணிமேகலையையும்
அழைத்துவா' என்று பாங்கிக்குக் கூறினாள்


பிழைஎன்றாள் மாதவிதாய் பெண்பேர்த்தி மாரை
அழைஎன்றாள் மன்றத்தில் ஆட- உழையிருந்த
பாங்கி நடந்தாள் அப் பச்சைமயில் அச்சவிடை
ஏங்கிற்றோ என்ன எழுந்து.



( 55 )

மாதவியிடம் பாங்கி உரைத்தாள்

ஆங்கிருந்த மாதவியை அன்பால் அணுகியே
'நீங்கா உமதுகடன் நீங்கிற்றோ-ஊங்காட
ஏன்மறந்தீர் ஏற்ற கலைவல்லீர்? மாமதிதான்
வான்மறக்கு மோ?' என்றாள் மாது.



( 60 )

மாதவி் பாங்கியிடம் கூறுகின்றாள்

காவலனைக் காற்சிலம்பால் வென்று கொலையுண்ட
கோவலன் கொண்டகுடிப் பேர்காத்த-பாவை
தரத்தைஆய் வாளாதன் தாமரைபோற் கண்ணாள்
பரத்தைஆய் வாழ்வாளா பார்.




மணிமேகலை அவைக்கு வரமாட்டாள்
என்கின்றாள் மாதவி


இன்பமெனல் நற்றவத்தால் எய்துவதாம் மற்றுள்ள
துன்பமெனல் இவ்வுலகில் தோய்வவாம்-என்பதவள்
எண்ணம்மணி மேகலைதான் ஏகாள் அவை; இஃது
திண்ணம்எனச் செப்பினாள் தாய்.

( 65 )


அறவண அடிகளிடம் மாதவி சொன்னாளாம்

அல்லலுற்றேன் காதலனின் கண்ணகியின் அல்லலெல்லாம்
சொல்லலுற்றேன் வந்திங்கே; தூய்நெறியே-செல்லலுற்ற
அண்ணல் அடிகள் அறவணர்பால்! நான் அதன்மேல்
நண்ணல் நவின்றார் அவர்.


( 70 )

அறவணர் சொல்லியது

எப்பொருட்கும் ஆட்படுதல் இன்றி இடரற்ற
மெய்ப்பொருள் ஆதல் விடுதலை-அப்பொருளின்
பற்றுக்குப் பற்றுவிட வேண்டுமென்றார் மற்றஎலாம்
எற்றுக்கென் றாள்மா தவி!



( 75 )

மாதவி ஆயத்தார்க்கும் அன்னைக்கும்
சேதி அறிவித்தாள்


அம்மைக்கே ஆயத்தி னோர்க்கே அறிவி என்று
செம்மைக்கே ஆயத்தி செப்பினாள்-கைம்மேல்
இருந்த மணியே இழந்தவள்பொல் நெஞ்சம்
வருந்த நடந்தாள்அம் மாது.




( 80 )