பக்கம் எண் :

மணிமேகலை வெண்பா

ஆங்கு ஒரு புறம் பூத்தொடுக்கும் மணிமேகலை நிலை

கோவலனின் மாதவியின் அன்பின் கொடை! அழகை
மேவலரும் போற்றுமணி மேகலைதான்-ஆவலுடன்
பாத்தொடுத்துக் கொண்டிருப்பார் போலுமொரு பாலிருந்து
பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள் ஆங்கு.



மணிமேகலை பூத்தொடுக்கும் திறம்

பன்மலர்க்காம் பொவ்வொன்றும் பச்சைமயில் மேகலைதான்
மென்மலர்க்கைக் காந்தள் விரல்பற்றித்-தன்மலர்க்கண்
கூறுமுறை கோணாமல் கட்டுந்தார் வண்ணத்தை
நூறுமுறை நோக்கல் தகும்.
( 5 )


மாதவி பாங்கியிடம் கூறிய வரறு
மணிமேகலையை வருத்தியது

ஆங்கிருந்த மாதவிதன் ஆளன்மனை யாளிடரைப்
பாங்கிருந்த பாங்கிக்குக் கூறியதைக்-கோங்கிருந்த
வண்டார் குழலி மணிமே கலைசெவியால்
மொண்டாள் முறிந்தாள்தன் நெஞ்சு.

( 10 )

மணிமேகலை கட்டிய மாலை கண்ணீரில் மிதந்தது

காவலன்தன் காவல் பிழைத்ததுவும் கண்ணகியும்
கோவலனும் மாண்டதுவும் கூறியதைப்-பாவை
நினைப்பாள் நிலைதளர்வாள் கண்ணீரை ஊற்றி
நனைப்பாள் நறுமலர்த்தா ரை.


( 15 )
மாதவி அறிந்தாள்

கரும்பிருக்கும் சொல்லும் கனியுதட்டின் ஓரம்
அரும்பிருக்கும் அஞ்சிரிப்பும் எங்கே?-திரும்பித்தாய்
பெண்கண்டாள் பெண்தொடுக்கும் மாலைமிதக் கக்கண்டாள்
கண்கண்டாள் கண்ணீர்கண் டாள்.



( 20 )
வேறு மலர் வேண்டினாள் தாய்

ஆறொன்று கண்ணீர் அலங்கலைத்தீ தாக்கியதால்
வேறொன்று காணமலர் வேண்டென்று-வீறொன்று
நெஞ்சினாள் மாதவிதான் நேர்ந்த துயர்மாற்றக்
கெஞ்சினாள் கேட்டாள் கிளி .


மணிமேகலை வெளியிற் செல்லுவதைப்
பாங்கி எதிர்த்தாள்

ஈதுரைக்கக் கேட்ட எழிற்பாங்கி அன்னையீர்
ஏதுரைக்க லானீர் இதோஇந்த-மாதுரைக்கின்
மையேந்து கண்ணாய் மயல்தீர்க்க வேண்டுமென்று
கையேந்தும் கண்டால் உலகு.
( 25 )

மேலும் பாங்கி கூறுகின்றாள்

போது பறிக்கஎங்கும் போகவிடா தீர்அழகு
மாது பறிக்கஎங்கும் மாநிலத்தின்-மீது
விழிதிறந்து வாழ்கின்றார் வேந்தர் அழிவுக்கு
வழிதிறந்து வாழ்வோமோ நாம்.

( 30 )

உதய குமரனால் கேடு வரக்கூடும்

எவ்வனமே சென்றாலும் ஏந்தலின் தோன்றலுக்குச்
செவ்வனமே செப்பப் பலருள்ளார்-இவ்வனம்
மல்லல் உவவனம்! மங்கையுடன் நானுமே
செல்லவெனிற் செல்வேன்என் றாள்.


( 35 )
தாய் ஒப்புக்கொண்டதால் இருவரும் எழுந்தார்கள்

தன்னில் எழுந்த தமிழ்ப்பாட்டும் சொல்மாற்றிப்
பின்னி எழுந்த பிழைப்பாட்டும்-என்ன
ஒருமணி மேகலையும் பாங்கியும் ஆன
இருமணியும் சென்றார் எழுந்து.



( 40 )
மணிமேகலையும் சுதமதியும் காட்சிக்கு மகிழ்வார்
மனம் கவிழவ்வ
ர்

கூட்டுக் கிளிகள் இருக்கை குறையாக்கிக்
காட்டு மயிலாகிக் கால்வைத்த-பாட்டையெலாம்
ஒவ்வொன்றும் காண்பார் வியப்பார் உருகுவார்
எவ்வொன்றும் ஈடு படார்.



ஒரு களி உண்ணா நோன்பியைக்
கள்குடிக்க அழைக்கின்றான்

பண்ணாத நல்ல சுவைநீர் பருகிடலாம்
உண்ணாத நோன்பிகளும் உண்ணிலொன்றும்-பண்ணாதென்
றுள்ளுக் கழைத்தான் ஒருகளி! நோன்பிகண்டான்
கள்ளுக் கடைஎன்ற பேர்.
( 45 )


பெருங்களி இயல்பு

மறுகு படுபிணத்தின் காதில் மகிணன்
அறுகு செலுத்த அவனைக்-குறுகினான்
கட்குடித்தேன் ஓய்வெடுத்தேன் என்றான்ஏன் ஓய்வென்னக்
கட்குடிக்கத் தான் என்றான் காய்ந்து.

( 50 )

வையம் துன்பம் நிறைந்தது

வைய நடைமுறையில் துன்பமே வாய்ப்பதன்றி
உய்யுமா றில்லைஎன உரைத்துத்-துய்ய
மணிமே கலைஅம் மறுகு நடந்தாள்
அணிமேவும் அப்பாங்கி யோடு.


( 55 )
எங்கும் குறைபாடு

பொன்னைக் குவித்துவைத்தோன் பொங்கலுண்ண [வாழையிலைத்
தொன்னை திருடுகையில் தோதுண்டு-பின்ஒருவன்
மேலாடை மேற்சென் றிழுப்பான் அவன்செருப்பைக்
காலாடி னான்ஒருவன் கண்டு.



( 60 )
பற்று நீங்க வேண்டும

இறைபாடென் பட்டாலும் இன்மைபோ னாலும்
குறைபா டிலாமலிரா தென்று-மறைபாடும்!
மற்று விடுதலை வேண்டின் மனமே
பற்று விடுதலை வேண்டு.



உவவனம் சேர்ந்தனர் மணிமேகலையும் சுதமதியும்

என்றிளை யாளேதன் பாங்கியுடன் இங்குமங்கும்
நின்றிளை யாததொரு நெஞ்சமுடன்-சென்றவளாய்க்
காணா உவவனம் பாங்கிதான் காட்டிடவே
பூணா வியப்புப்பூண் பாள்.
( 65 )


மணிமேகலை வந்தபோது அவளைக் கண்டவர்கள்
என்ன ஆனார்கள்

மாது மலர்வனத்தைக் காண்பாள்! வழிநடந்த
போது பலர்கண்டு பூண்ட இறும்-பூது
புகல விரும்பினேன் பொன்றாத் தமிழ்விட்
டகல விரும்புவார் ஆர்?

( 70 )

கள்குடத்தின் உள்ளிருந்த கள்ளிலும் மணிமேகலை உருவம்

கட்கடைக்கே ஆளானார் கார்குழலைக் கண்டுகருங்
கட்கடைக்கே ஆளாகக் காத்திருந்தார்-கட்குடத்தை
எண்ணார்கள் எண்ணுகையில் கட்குடத்துள் கண்ணுக்குக்
கண்ணாளைக் கண்டார் கவிழ்ந்து.

( 75 )

மணிமேகலை துண்டு உடுத்துப் போகும்படி செய்தவர் யார்?

பண்டுடுத்தும் பட்டில்லை பல்லிழைகள் இல்லைஇவள்
துண்டுடுத்துப் போகின்றாள் தொல்லுலகு-கண்டெடுத்த
தங்கப் படிவம் தவத்துக் குடன்பட்டாள்
இங்கிப் படிச்செய்தார் யார்?



( 80 )
மணிமேகலை கண்டாலே தித்திக்கும் தேன்

குன்றத்துக் கொம்புத்தேன் முல்லைவா ழைப்பழத்தேன்
மன்றத்து மாப்புலவர் செந்தமிழ்த்தேன்-என்றமுத்தேன்
உண்டாலே தேன்! இம் மணிமே கலைஒருத்தி
கண்டாலே தித்திக்கும் தேன்.



வைய விளக்கை யாருக்குமில்லாமல் ஆக்கினரே

தையலை இவ்வாறு தவக்குழியில் தள்ளுவதோ?
வைய விளக்கை மருக்கெழுந்தை-ஐயையோ
ஆருக்கு மில்லாமல் ஆக்கினரே பெண்ணழகின்
வேருக்கு வெந்நீரை விட்டு.
( 85 )


யாழெடுத்தவன் மணிமேகலையைக் கண்டு, யாழின்
மேலேயே சாய்ந்து கிடந்தான்

என்று பலரும் இயம்பி வருந்தினார்
சென்று பரத்தை தெருவறைக்குள்-ஒன்றை
நினைத்துயாழ் தொட்டஎட்டி நேரிழையைக்கண்டே
அனைத்தும் மறந்திருந்தான் ஆங்கு.

( 90 )

உதயகுமரன் மணிமேகலை பற்றிக் கேள்விப்படுகிறான்

அந்நேரம் தேரேறி அங்குவந்த வேந்தன்மகன்
இந்நேரம் யாரால் நீ இன்னலுற்றாய்-முன்னே
அதையுரைப்பாய் என்றுரைத்தான்: அன்னம் நடந்த
கதையுரைப்பான் எட்டி கடிது.


( 95 )
எட்டியின் இரக்கம

சின்னஞ் சிறியஇடைச் செல்விமணி மேகலையாம்
அன்னம் அழகு சுமந்தகன்றாள்-முன்னமெல்லாம்
பட்டுடுத்தும் பான்மையினாள் இன்று தருநெறிக்குட்
பட்டுடுத்தும் பான்மையினாள் ஆய்,



( 100 )
மணிமேகலையைப் பார்த்தேன்; கோவலன்
வரலாறு நினைவுக்கு வந்ததும் யாழில் சாய்ந்தேன்

அன்னாளைக் கண்டேன் அவள்தந்தை கோவலனின்
முன்னாளை எண்ண முறிந்ததுள்ளம்-என்யாழில்
இட்டவிரல் தீநரம்பில் இட்டதாம் என்றெட்டி
பட்டதுயர் சொன்னான் பதைத்து.



மணிமேகலையை என்தேரில் ஏற்றி வந்துவிடுவேன்

அப்படியா அன்னாளைச் சென்று மணித்தேரில்
எப்படியும் ஏற்றிவந்தென் இற்சேர்ப்பேன்-அப்பொன்னை
நீணாள் நினைந்தும் நெருங்காத என்வாணாள்
வீணாள்என் றானிளைய வேந்து.
( 105 )


உதயனின் கண்ணுக்கு வழியெல்லாம் மணிமேகலை

குளிர்காற்றுக் கூந்தல் அருவியோ! தேமாந்
தளிர்மாது மேனியோ! தண்டை-ஒளிர்வண்டோ?
என்பான் எதிலும் மணிமே கலைகாண்பான்!
தென்பால் நடத்தினான் தேர்.

( 110 )

மணிமேகலையும் பாங்கியும் இன்னும் உவவனக்
காட்சியைக் கண்டு மகிழ்கின்றார்கள்

ஏடகத்துக் காட்டாத இன்பத்தை நல்லியற்கை
நாடகத்தை நங்கையும் பாங்கியும்-தேடிஎப்
பாலும்கண் டார்கள்! பகர்ந்து பகர்ந்துமேன்
மேலும்கண் டார்கள் விழைந்து!


( 115 )
மயில் தோகையில் மறைந்தது ஒரு மான்

களித்தாடும் மஞ்ஞைக் கவின்தோகை யின்பின்
ஒளித்தாடும் மானை ஒருமான்-விளித்தோடி
மாவடிக்குப் பின்னிருந்த மந்தியின் செவ்வலரிப்
பூவடிக்குப் புண்ணாகும் நெஞ்சு.



( 120 )
மாலை புனைந்து குளத்துக் கண்ணாடி பார்க்கும் ஒரு குரங்கு

விண்ணாடி மாம்பூ விரிதார் புனைகடுவன்
கண்ணாடி காணும் ஒருகுளத்தின்-உண்ணாடி
மாம்பழத்தைப் போடப்போம் மந்தியினை நீள்வரால்
ஆம்! பழத்தைப் போடென்னும் அங்கு!



தவளை விளைத்த குழப்பம

குவளை விழுந்த குளத்தில் எழுந்து
தவனள தளபுளா என்ன-உவளுகின்ற
கெண்டை நடுங்கும்; கிளிகுயில் வண்டெல்லாம்
தொண்டை நடுங்கும் தொடர்ந்து.
( 125 )


அல்லியை வெறுக்கும் பலாவைப் பாடும் வண்டு

மூடிய அல்லிக்கு மொய்க்காமல் தாமரைக்குப்
பாடிய வண்டு பலாமரத்தை-நாடியதன்
பேருக்கும் தன்பெரிய பிள்ளைக்கும் முள்ளுக்கும்
வேருக்கும் பாடல் வியப்பு;

( 130 )

முத்துக்கு முல்லைச் சிரிப்பு நிகர்!

என்றுக்கு வெண்முருக்கும் பூநிகர்! ஏழிசை
மன்றுக்கு வண்டுநிகர்! வானிமிர்ந்த-கொன்றைப்பூங்
கொத்துக்குப் பொற்காசின் கோவைநிகர்! முற்றுநிகர்
முத்துக்கு முல்லைச் சிரிப்பு!


( 135 )
நெடுந்தொலைவிலிருந்து ஓர் ஒலி!

அண்டுமலர்ச் சோலை அழகு வரிசையெல்லாம்
கண்டுவரும் போதுதன் காதினிலே-நண்டு
நிகர்அங்கை சேர்த்து நெடுந்தொலை ஆய்ந்து
பகர்வாள்தன் பாங்கியைப் பார்த்து



( 140 )
உதய குமாரன் தேரொலி

ஓரொலி கேளாய் உதைய குமரனவன்
தேரொலி போலும்! தெரிவைஎன்-பேரில்
விருப்புடையான் என்பர் விளைவறியேன்; நெஞ்சில்
நெருப்புடையேன் என்றாள் நிலவு.



மணிமேகலையே பளிங்கு மாளிகையின் உள்ளே போய்விடு

கேட்பது தேரின்மணி ஓசைதான் கேள்உன்னை
மீட்பது தேரின் மணிமேகலையே-வாட்போர்
உதையன்பால் தோன்றாதே மாளிகையின் உட்போ
இதையன்பால் ஏற்கஎன்றாள்.
( 145 )


பறந்தோடினாள் பச்சை மயில்

பறந்திட்டாள் பச்சை மயிலனையாள் ஓடித்
திறந்த பளிக்கறை சேர்ந்தாள்-சிறந்த
உதையன் மணித்தேரும் உற்றது பாங்கி
அதையும்கண் டாள்உரைப்பாள் அங்கு.

( 150 )

அவன் மட்டச்சரக்கை என்னிடம் விற்கட்டும்

பளிக்கறையில் சென்றாயா? தாழிடுவாய்! பச்சைக்
கிளிக்கறைவ தைப்போல் கிளத்தேன்-வெளிப்புறத்தில்
ஐந்துவிற்க டைத்தொலைவில் நானிற்பேன் ஆள்என்பால்
வந்துவிற்க மட்டச் சரக்கு.


( 155 )
உதயகுமரன் வந்து, 'நோய்க்கு மருந்து
வாங்கிவா' என்கின்றான்

நிறுத்தைய என்னத், தேரோட்டி நிறுத்தச்
சிறுத்தை குதித்துச் செவியை-உறுத்தவே
பாங்கிவா மேகலையுன் பாங்குள்ளாள் என்நோய்க்கு
வாங்கிவா என்றான் மருந்து.



( 160 )
உனக்கு அறிவுறுத்த என்னால் முடியுமா?

நரைமுடித்து நல்லிளமை நாணி நடுவின்
உரைமுடித்தோற் குற்ற மருக!-விரைவில்
அரசுக் கியலும் அறிவும் தரப்பெண்
முரசுக் கியலுமா முன்?



காமம் ஒரு தீ !

ஆயினும் ஒன்றுகேள் ஆடவர்க் குக்காம
நோயினும் மாப்பெருநோய் இல்லை-தீயினும்
தீயது தீண்டாத போதினும் தீய்த்தலால்!
நீயது நன்று நினை
( 165 )


பெண்ணழகு நிலையற்றது

தோலழ கென்ப திளமை தொலையி இல்லை
மேலழ காடை அணியாலாம்-ஞாலத்
திதுகொண்டு மேலோர் இடர்கொள்ளார் என்றால்
எதுகொண்டிங் கெய்தினை நீ

( 170 )

உள்ளே உலவும் மணிமேகலையை உதயன்
கண்டு விட்டான்

என்றிளங் கோவுக்கு மங்கைஇது சொல்லுகையில்
நின்றிளங் கால்நோவு நீளாமல்-பின்துறையை
நீங்கு பவளப் பளிக்கறைக்குள் நின்றாள்ஓர்
பாங்கு பவளக் கொடி


( 175 )
உள்ளே புக வாயில் தெரியவில்லை

வெளிக்கறி விக்கும் அகத்தையெலாம் அந்தப்
பளிக்கறையிற் பாவையைப் பார்த்தான்-கிளிக்கறையா?
தூயில் தனைஅடைவாய் தூயோயென் றோடினான்
வாயில் தனையறியான் மற்று.



( 180 )
மணிமேகலையா? ஓவியமா?

நற்பளிங்கின் உள்ளேநான் நண்ணல் அரிதேயோ!
நிற்பளிங்கு மாரிழையோ! ஓவியமோ-பொற்கொடியே
எத்திறத்தள் மேகலைதான் என்றான் சுதமதியாள்
அத்திறத்தைக் கூறுவாள் ஆங்கு.



மணிமேகலை மனத்தை மாற்ற நீ யார்?

நோற்றல் உடையாள்; நுவல்காமம் நண்ணாத
ஆற்றல் உடையஆள்; அவளுள்ளம்-மாற்றவே
நீயார்என் றாள்பாங்கி; நின்ற உதையனும்
நீயார்என் றான்கொதித்து நின்று.
( 185 )


சுதமதி வரலாறு

மாருத வேகன் மடக்கி எனைமணந்தான்
தேருதல் செய்யவே என்தந்தை-ஊரெலாம்
தேடினான் காவிரி தென்கடல் சேரிடத்து
நாடினான் நான்கண்டேன் அங்கு.

( 190 )

மேலும் கூறுதல்

சங்க தருமனால் புத்தன் சமயத்துச்
சங்கம் அடைந்தேன்! தருமங்கள்-தங்குமொரு
நாவே, பிறிது நவிலலும் இல்லைஇளங்
கோவேவாழ் கென்றாள் பூங்கொம்பு.


( 195 )
மணிமேகலையை நான் அடைவது சின்னது

இன்னது கேட்ட உதையன் எனக்கிது
சின்னது! சென்றுசித்தி ராபதியால்-பொன்னதுவே
மின்னதுவே என்னுமணி மேகலையை நானடைவேன்
என்னதுவே இன்பமென் றான்.



( 200 )
என் மனம் அவன்மேற் சென்றது பிழை

வாடி உதையன் மறைந்தபின் மற்றந்த
ஆடி அறைதிறந்து பாங்கியை-நாடி
இழந்தையோ நின்றேன் எதிரிபால் நெஞ்சைக்
குழந்தையோ அன்னதென்றாள் கொம்பு.



என்மனம் அவன்மேற் சென்றது மீண்டது

மின்றிறந்து மூடினாற் போலுமிம் மெல்லியுள்ளம்
சென்றது மீண்ட தெனினுமந்-நன்றிலன்மேல்
போமம் மனந்தான்என் கற்பைப் புரைசெய்தால்
காமம் வலிதோ கழறு
( 205 )


காமம் ஒருபுறம் உணர்வு ஒருபுறம்

புணர்வு நிலைதேடிப் போனது சாமா
றுணர்வு நிலைபெறுதல் உண்டோ?-கிணறு
பலிகேட்கும் ஓர்பால் பழிதீர் நிலைகூம்
ஒலிகேட்கும் ஓர்பால் செவி,

( 210 )

மற்றொரு மணிமேகலை நற்றவ முதியோன்

மணிமே கலைஎன்ற ஓர்முதியோள் வையம்
மணிமே கலைஎன்ற மாப்பேர்-அணியும்
பெரும்புகழும் ஆன தவப்பயனும் பெற்றோள்
கரும்புகளின் கண்ணேர்வந் தாள்.


( 215 )
முதியோளைப் பணிந்தாள் மணிமேகலை

அன்னை அடிபணிந்தார் ஆன அருளேஎம்
மின்னை அடைந்தோம்என் றார்இருவர்-பின்னையே
என்ன துயர்என்றாள் எல்லாம் துறந்தாளும்
அன்னதுயர் பாங்கிசொன்னாள் அங்கு.



( 220 )
சுதமதி சொன்னாள்

பாவெடுக்கப் பாவலரும் பார்க்குமணி மேகலைதான்
பூவெடுக்க வந்திட்ட போதமுதை-நாவெடுக்கக்
காலெடுத்தான்: வாயிற் கதவறியான்; தேரேறிக்
கோலெடுத்தான் அவ்விளங்கோ.



சுதமதி தொடர்ந்து சொல்கின்றாள்

காண்பேன் அவள்திறத்தைக் கண்டமட்டும் எனதிறந்தான்
வீண்போதல் இல்லை விளம்புங்கால்-ஆண்சிங்கம்
என்றுந்தித் தேர்ஏறி ஏகும் உதையன்
என்றுந் திருந்தான்என்றாள்.
( 225 )


உதயகுமரனிடம் அகப்படாமல் சக்கரவாளக்
கோட்டம் போய்விடு

பின்னும் அற்றே பின்னு மற்றே பித்தனுளம்! காமந்தான்
இன்னுமற்றே போகவில்லை என்செய்வாய்?-நன்னுதல்
அக்கர வாளன் அகப்படுத்தல் இல்லாமல்
சக்கரவா ளக்கோட்டமா சார்.

( 230 )

சக்கரவாளக் கோட்டமா?

என்று முதியோள் இயம்பச் சுதமதி
ஒன்றுக்கு வேறொருபேர் ஒன்றுமா?-தொன்றுபிணக்
கோட்டமா சக்கரவா ளக்கோட்டமா இதுவே
நாட்டமா னாள்பாங்கி நன்று.


( 235 )
சக்கரவாளக் கோட்டத்தின் கதை

சுடுகாட்டுக் கோட்டத்தை வேறு பெயரி
னொடுகாட்டல் ஏனோ உரைத்து-விடுகென்று
பாங்கி பகர முதியோள் நெடிதுரைக்க
வாங்கி மகிழ்வாள் மணி.



( 240 )
கதை நடுவில் தூக்கம்

காவிரிப்பூம் பட்டினமும் காடும் பிறவுமவள்
நாவிரிப்பப் பாங்கி நடுச்செவியேற்-றியாவரிதை
வாங்கிக் கிடப்பார்கள் என்பாள்போல் மண்ணிலுற்றத்
தூங்கிக் கிடந்தாள்மெய் சோர்ந்து



உதையன் தொல்லை ஒழிந்தது

துணிபல்ல வம்மான் துயர்எய்தல் என்றே
மணிபல்ல வம்சேர்த்தாள்! வாட்டம்-தணித்தாள்.
தணிமே கலைதான்! மணிமே கலையைப்
பிணியானப் பித்தன் இனி.
( 245 )


நடுத்திட்டில் விட்டு எடுத்தாள் ஓட்டம் முதியோள்

பன்னாள் நடத்தும் படுகடலை நன்னாவாய்
தன்னால் தவிரத்துமணி மேகலையைத்-தென்பால்
கடனடுவில் சோர்வுற்ற கண்ணாளை விட்டே
உடனகன்றாள் ஓதுமுதி யோள்.

( 250 )

சுதமதியிடம் முதியோள்

எங்குற்றாள் மேகலைதான் என்றிருந்தாள் பாங்கிதான்
அங்குற்றாள் மாமுதியோள் அன்புடையாய்-மங்காப்
பழமை மணிபல்லவம் சேர்த்தேன் பார்ஓர்
கிழமையினில் மீள்வாள் கிளி.

                      சுதமதிக்கு முதியோள்

மன்னன் மகனுக்கும் வாய்மை பலகூறி
அன்னம் தனையணுகல் ஆகாதென்-றின்னம்
பலவும் பகர்ந்தேன்நற் பாங்கி உனக்குச்
சிலவும் தெரிவிப்பேன் கேள்    


( 255)







( 260 )
அம்மாவிடம் இதை அறிவி

ஊறு தவிர்ந்துமணி மேகலைஇவ் வூர்வருங்கால்
வேறு வடிவமே மேற்கொளினும்-கூறின்
உனக்கும் ஒளியாள்; இதனை அவள்தாய்
தனக்கும் ஒளியாமற் சாற்று



என்பேர்தான் மணிமேகலை

மாதவி பெற்ற மகளுக்கென் பேரையே
கோதவி கோவலன் வைத்திட்டான்-ஈதுரைப்பாய்
மாதவிக்கு நாளும் மணிமே கலைமனத்தின்
தீதவிப்பாள் என்றதையும் செப்பு.
( 265)


சுதமதி மாதவிக்கு!

என்று மொழிந்தவள்தான் ஏகச் சுதமதியும்
சென்று தெரிவித்தாள் தேன்மொழிக்கே-கன்றைப்
பிரிந்தா வருந்தாதா? பெண்ணைப் பிரிந்தால்
வருத்தாதா பெற்ற மனம்?

( 270 )

மணிபல்லவத்தில்

மணிபல் லவத்தில் மணலில் துயின்ற
மணிமே கலைகண் மலர்ந்தாள்-துணிவிழந்தாள்
பண்டறி யாதனவே பார்த்தாள் உறவாரைக்
கண்டறி யாதகற் பண்டு.


( 275 )
முதியோள் விட்டுப்போனது அறமா?

ஆங்கிருந்தேன் என்னை அழைத்திங்கு வந்திடுமுன்
தூங்கி்னேன்! அந்நேரம் தூரத்தே-ஏங்கவிட்டுச்
செல்லல் அறமா? செயத்தக்க இன்னவெனச்
சொல்லல் அறமா தொடர்ந்து



( 280 )
கண் காணத இடத்தில் கலங்குகின்றேன்

தேரு மிலாது தெருவு மிலாதுழையார்
யாரு மிலாதிருக்கும் இவ்விடத்தில்-சோருகின்ற
கண்ணீரும் நானும் கதறுங்கால் என்உறவீர்
கண்ணீரோ சற்றும் எனை?



அம்மாவும் உதவவில்லை; அப்பாவையும்
கண்டதில்லை

பழிகூறிக் கொன்ற ஒரு பாண்டியனை உண்மை
வழிகூறி மாளப் புரிந்த-எழிலான
அப்பாவை யுங்காணேன் அன்றும்காணேன் இன்று
அப்பாவை யுங்காணே னால்.
( 285 )


மரமா தேறுதல் கூறும்? விலங்கா தேறுதல் கூறும்?

தீமையாய் இங்குத் திரிகின்றேன் தெங்குபலா
ஊமையாய் இங்கிருக்கும்; ஒன்றுரையா-ஆமையும்
புள்ளிழுத்துக் கொள்ளும் புனற்கரைமா உண்டுதலை
உள்ளிழுத்துக் கொள்ளும்எனை ஓர்ந்து.

( 290 )

கோலெடுத்துக் கொண்டு குறுக்கில் ஓடுகின்றது குரங்கு

தேனோடும் பூவிற் சிறையோடும்! புல்லுக்கு
மானோடும் கொக்கு மடையோடும்!-நானோடி
மேலெடுக்கும் வேலை எதென் றேன்குறுக்கே முள்வேலங்
கோலெடுக்கும் ஓடும் குரங்கு


( 295 )
நண்டும் வண்டும் விளையாடும்! நானுமா
விளையாடுவேன்!

நண்டு விளையாடும்; நன்மா நிழற்காரை
கண்டு மயிலாடும்; காவித்தேன்-மொண்டு
விளையாடும் வண்டு; விளையாட வாநான்!
களையா டினஎன்றன் கண்.



( 300 )
முதியோள் வந்தாள்

திட்டில் அழுவாள் சிரிப்புக் கரைகாண
எட்டி முதியோள் எடுத்தணைத்துக்-கட்டிக்
கரும்பே உதைய னிடமிருந்து காத்தேன்
திரும்பநான் சொன்னபடி செய்.



தவப்பெரியோர் அறம்உரையார் மிகச்சிறியை என்று

புத்தன் புகன்ற திருவறத்தை நீ அடைதல்
கத்தன் றென உணர்க கண்மணியே-புத்தம்
புதிய இளமேனி காணும் புலவர்
முதிய மறைஉறையார் முன்.
( 305 )


நினைத்த உருவம் கொள்ளும் புனைவினை

நினையும் உருவத்தை நீயடையத் தக்க
புனைவினை ஒன்று புகல்வேன்-தினையும்
மறந்தார்க்குத் தோதுபடல் இல்லை உனைப்போல்
துறந்தார்க்குத் தோது படும்.

( 310 )

புனைவினை புகன்றாள் முதியோள்

பன்னாட்டார் ஆடவர் பாவையர் பூண்களும்
பன்னாளும் மாறிவரும் பாங்குகளும்-பன்மொழியும்
மூத்தார் இளையார் நடைப்பாங்கும் முற்றிலும்
மூத்தாள் மொழிந்தாள் அவட்கு.


( 315 )
உறுப்புக்களை மாற்றும் முறை

நோக்குப் பலவும் நுதல்பலவும் வாய்பலவும்
மூக்குப் பலவும் முனைநடுவாம்-நாக்குப்
பலவும் பலரின் உருக்காட்டப் பின்னும்
பலவும் பகர்ந்தாள் அவட்கு.



( 320 )
முதியோள் மறைந்தாள்

பலவாம் புனைவினை பாவைக்குச் சொல்லி
நிலவாம் முகத்தாளே நேரிங்-குலவியிரு
புத்தபீ டிகையுங்காண் கோமுகியும் காண்; போய்ஊர்
நத்துகஎன் றாள்மறைந்தாள் நன்று.



தீவதிலகை காணப்பட்டாள்

காலை மணற்குன்றைக் கண்டு நடக்கையிலே
தீவ திலகைஎனும் தேமொழியின்-நாவில்
அமுதெடுத்தால் அன்ன தமிழெடுத்தாள்! கண்ணின்
இமையின் இணைப்பெடுத்தாள் பெண்.
( 325 )


தீவதிலகைக்கு மணிமேகலை

கப்பல் கவிழ்ந்ததனால் கண்டமணி பல்லவத்தில்
தப்பல் நினைத்துத் தனித்தடைந்த-தொப்பது நின்
தோற்றம் நீ யாரென்னத் தோகை வரலாறு
மாற்றம் இலாதுரைத்தாள் மற்று.

( 330 )

தீவதிலகையும் மணிமேகலையும்

முத்தன்ன வெண்ணகையார் முற்சென்றார் அங்கிருந்த
புத்தனார் பீடிகையில் போதுவிழி-வைத்தனர்
நாமுகிழ்த்தாள் நன்றதன்சீர் தீவ திலகைதான்!
கோமுகியும் காட்டினாள் கொம்பு.


( 335 )
கோமுகிப் பொய்கையில் அமுத சுரபி

உண்ணாடிக் கண்டால்தன் உள்ளதுகாட்டும் தென்னீர்க்
கண்ணாடிப் பொய்கைக் கரைநோக்க-எண்முப்
பதக்கும் பிடிக்கும் பழங்கலம் ஒன்று
மிதக்கும் பிடிக்கும் அதை மின்.



( 340 )
அமுதசுரபியுடன் திரும்புதல்

கமழ்வது தாமரை, காணிற் கலம் அஃ(து)
அமுத சுரபிஎன்றாள் அன்னம்-அமைய
இருகையில் ஏந்திய மங்கை திரும்பி
வருகையில் மற்றுங்கேட் டாள்!



தீவதிலகை செப்பினாள்

நீபத்து நூறுமுறை நேரிற்கா ணுங்கலத்தை
ஆபுத்திரன் இட்டான் அந்நீரில்- நீ போய்
அறவணர்பால் கேட்பாய் அதன்வரலா றென்றாள்
திறவணத்தாள் தீவதில கை.
( 345 )


அந்தக்கலந்தான் இந்தக் கலம்

இட்டுப் புகழ்பெற்ற ஏழைதான் ஏற்றசோ
றிட்டுக் கறிபிசைந் தீந்ததுவும்-இட்டே
எடுக்க எடுக் கக்குறையா தென்றதுவும் பொய்கை
அடுத்ததுவும் இக்கலமே ஆம்;

( 350 )

பசியுள்ள இடத்தில் புசி என்று போ

அறியாமை வேரோ டழியாது? வாழ்வை
எறியாமைத் தீப்பசிதான் ஏகா-துறவேகேள்
ஓரூரி லாவிடினும் ஓருரில் உண்டுபசி
நேர்ந்ததும் அப்பிணியை நீக்கு.


( 355 )
வையப் புகழ் உனக்கே

இளமையில் எய்துமோர் இன்பம் வெறுத்தாய்!
வளமையிற் போதல் மடக்கி-உளம்காத்தாய்!
வையப் புகழுனக்கே வாய்திறந்தால் கோடிவரும்
வெய்ய பசியை விலக்கு.



( 360 )
ஆபுத்திரன் போல் அளி

வயிற்றுப் பசிநீக்கு வாழ்வறியார் தூக்குக்
கயிற்றை விழலாக்கு! கண்ணை-எயிற்றை மகிழ்
வேபுகுத்தாய் நீஉன்றன் வாழ்நா ளெலாமந்த
ஆபுத் திரன்போலம் மா.



ஏழைக்கிடுவதே தவம்

வேலையில்லை தந்தைக்கு! வெள்ளைநூல் அன்னையிடம்
பாலில்லை பச்சைக் குழந்தைக்கே-தாலிவிற்றால்
வாங்குவா ரில்லை? அங்குவாட்டும் பசிநீக்கித்
தாங்குவார் தாம்தவம்செய் வார்.
( 365 )


அறத்தின் சாறு

சோறில்லை என்பார்க்குச் சோறு தருவதுதான்
கூறறங்க ளின்சாற்றுக் கூட்டம்மா-வேறேதான்
எங்குண்டம் மாபசிக்கே ஈர்ம்பழஞ்சோ றிட்டுவக்கும்
அங்குண்டம் மாநல் லறம்.

( 370 )

இன்றியமையா நிலையில் இடும் சோற்றுக்குச்
சாவு அல்லது வாழ்வு

கூன்மாடு விற்றுக் குதிரைவாங் கற்கென்றன்
கான்மாடு நின்றார்க்குக் காசளிக்க-நான்மாட்டேன்
இன்றி யமையா நிலையில் இடும்சோற்றுக்
கொன்றுசாக் காடொன்று வாழ்வு.


( 375 )
தீவதிலகை சென்றாள்

உயிர்வாழ்வேன் மக்கள் உறுபசி தீர்ப்பேன்
செயிர்தீரச் செப்பியது கேட்டேன்-வெயிற்கு
நிழல்அவ் வடிகள்பால் செலவேன் நினைவு
தொழல்என்றாள் தோகைசென் றாள்,



( 380 )
மாதவி மகளைக் கண்டால்

மாதவி யாழ் துன்பச் சுதமதிதம் வாயினின்
றேதவியாழ் பெற்ற இடர்என்றே-தீதுறுவார்
சோறுபெற்ற தூய்கலத்தா ளைப்பெற்றார் முப்பழத்தின்
சாறுபெற்றார் தாவி யணைத்து.



அறவண அடிகளைப் பணிந்தார்கள்

ஆய அனைத்தையுமே அன்னையிடம் பாங்கியிடம்
ஏய உரைத்தாள் இளமங்கை-தூய
அறவணைத்தார் பக்கல் அணிகியே தாளில்
உறவணைத்தார் உச்சந் தலை.
( 385 )


அறவணத்தார் அறிவித்தார்

அடிகள் உரைப்பார்; அப்புத்த நெறியைக்
குடிகள் தொடர்தல் குறைய-மிடிகள்
மலிய மறவலி ஆர்ந்தது மக்கள்
மெல்லியலா னார்அதன் மேல்.

( 390 )

புத்தநெறி உலகில் பரவவேண்டும்

கொடிதுசேர் கோட்டையில் புத்த நெறிதான்
கடிதுசே ராதே எனினும்-நெடிது
முயலுவேன் நீயும் முயலுக நன்கு
பயிலுக என்றார் பரிந்து.


( 395 )
ஆபுத்திரன் பற்றி அறவண அடிகள்

மன்பதைக்கு நேரும் பசிப்பிணி மாற்றுக!
பின்பதைக் கண்டு தரும்மீ-தென்பதை
நீபெற் றிடலாம்! நிகழ்த்துகின் றேனினி
ஆபுத்தி ரன்சீரென் றார்.



( 400 )