தேனருவி II
திணைப்பாடல்கள்
தமிழன் பாட்டு
|
தமிழுக்காக-என்
தாயினுக்காக
அமையாரின் படையைஎன் சினத்தால் எரிப்பேன்
அவராலே நான்சாக நேரினும் சிரிப்பேன் (தமிழுக்காக!)
தமிழுக்கு மகன்நான்!-ஒரு
தாழ்வையும் அறியேன்.
தமைஉயர்வென் பார் அவர் பகைப்பெருகி கடலைத்
தாக்கிடுவேன் அல்லது இழப்பேன் என்உடலை (தமிழுக்காக!)
அஞ்சுதல் இல்லேன்-நான்
ஆரியன் அல்லேன்.
நெஞ்சம் தமிழ் மரபின் வீரத் தொகுப்பு
நேர்போரில் காண்பேன் சிறப்பல்லது இறப்பு. (தமிழுக்காக!)
பைந்தமிழ் எல்லை-தனில்
பகைக்கிட மில்லை
எந்நாளும் தோலாத செந்தமிழன் தோள்
எழுந்தால்தான் தூள் அல்லது தமிழ்த்தாய் ஆள்வாள்.
|
( 5 )
( 10 )
( 15 ) |
கரும்புக்குள் இருப்பது
இனிமை!-என்
காதல் கரும்பை விட்டிருப்பேனோ தனிமை?
திருவிதழ் கூட்டுக்குள் சர்க்கரை - அவள்
திருட்டு விழிக்கென்மேல் அக்கறை!
மாலையின் மணிகளை நூலே தாங்கும் - இரு
மனங்களின் சுமைகளைக் காதலே தாங்கும்.
சோலை மலர்கள்எல்லாம் அவள்எழில் ஓங்கும்
சோர்ந்து சோர்ந்துஎன் விழிகளோ ஏங்கும்.
ஆறுதன் வழியினை அறிந்திடல் போலே - அன்
பாறுதான் என்மேல் வழிந்ததினாலே
பேறுபெற்றேன் நான் தமிழச்சியாலே - எனப்
பேசும் உலகுதன் வியன்மொழியாலே.
மக்கள் பெறாதவர் மகிழ்வினை அழியார்,
மாதினைப் பெறாதவர் வாழ்வினைத் தெரியார்,
சிக்கலைத் தீர்ப்பதும் அவளின் கடமை - அவள்
சேர்ந்துவிட்டால் வேண்டேள் பிறஉடைமை!
|
( 20 )
( 25 )
( 30 )
|
கருத்தடை மருத்துவ மனையில் ஒருத்தியின் வேண்டுகோள்!
|
இருக்கும் பிள்ளைகள்
எனக்குப் போதும் அம்மா - என்
கருக்கதவை மூடிவிடுங்கள் அம்மா, அம்மா!
(இருக்கும்
பிள்ளைகள்)
பெருத்தவரு மானம் எனக்கில்லை - இனிப்
பிள்ளைபெறும் வலிவும் உடம்பில் இல்லை.
வருத்தில் ஏதும் மீதும் ஆவதும் இல்லை - அடகு
வைத்து வாங்க மூக்குத் திருகும் இல்லை
(இருக்கும்
பிள்ளைகள்)
மக்கள் தொகைபெருக்கத்தால் வரும் பஞ்சம் - இங்கு
வரும் பஞ்சத்தால் ஒழுக்கக் கேடே மிஞ்சும்
தக்கோர் இவ்வாறு சொன்னார்(என்) நெஞ்சும்
தாங்குவதோ அருள் புரிவீர் கொஞ்சம்.
(இருக்கும்
பிள்ளைகள்)
தாய்மொழிமேல் அன்பிராது நாட்டில்
தன்னலமாம் அவரவர் கோட்பாட்டில்
தூய்மையே இராது நெஞ்சு வீட்டில்
தொகைப் பெருக்கம் ஏன் இந்தக் கேட்டில்?
(இருக்கும்
பிள்ளைகள்)
தோன்றியுள்ள மக்கள் நலம் யாவும் - இங்குத்
தோன்றாத மக்கள் தந்த தாகும்!
தோன்றாமை இன்பம் என்று சொன்னார் - மிகத்
துயரான புத்தர் ஐயாவும்.
(இருக்கும்
பிள்ளைகள்)
|
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 ) |
மாறாத தலைவர்
குறிஞ்சித் திணை
[தலைவி - தோழிக்குக் கூறியது]
|
சொன்னசொல் மாறாத
தலைவர்-அவர்
தொலையாக நிலையன்புக் கினியர்! தோழீ
தோளினைப் பிரியாத துணைவர்!-அவர்
தூய்மையும் வாய்மையும் வாய்ந்தநல் கணவர்
(சொன்னசொல்)
இன்சுவைத் தாமரை தேனுண்ட தேனீ
இனம்கூடி சந்தன மரத்தின் வானீள்
நன்கிளை தாங்கிய தேனடைத் தேன்போல்
நல்லவர் நட்பென்றும் ஊன்றிடும் ஆல்போல்,
(சொன்னசொல்)
உலகிற்கு நீர்முதல் ஆவது போலே
உறவுக்கு அவரின்றி அமையாது வாழ்வே,
விலகவே பொறாதவர் பிரிவதும் ஏது?
வீணையை விரல் பிரிந்தால் இசை பிறக்காது!
(சொன்னசொல்)
என்நெற்றிப் பசலைக்கு என்றுமே அஞ்சுவார்,
இன்னல்தரார், எனையே இன்பத்தில் கொஞ்சுவார்;
அன்பன்றி வேறொன்றும் உண்மையில் அறியார்.
அவர் பிரிந்தார் என்றால் வேறெவர் மிஞ்சுவார்?
(சொன்னசொல்)
|
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
|
அன்பினை நடப்பார்
குறிஞ்சித் திணை
[தோழி. தலைவிக்குக் கூறியது]
|
அன்பை அறிந்தேன், உண்மை
உணர்ந்தேன்,
ஆகையினால் தான் என்வாய் திறந்தேன்.
ஒன்றுகேள், நன்றுகேள் அம்மலை நாடன்.
ஒப்பிலா விருப்பினால் வகுந்திய ஆளன்.
என் வாய்ச் சொல்லினை நம்பினால் நம்பு,
நம்பாவிட்டால் எனக்கேன் இந்த வம்பு?
நீயே எண்ணிப்பார் புரிந்திடும் உண்மை
ஆயரோ டாய்ந்துபார் தெரிந்திடும் நன்மை.
அறிவால் ஆராய்ந்து அறிந்த பிறகே
அளாவுதல் வேண்டும் அன்புதான் உறவே.
பெரியோர் நட்பினை ஆய்ந்து கொள்வார்கள்,
நட்பு கொண்டபின் ஆய மாட்டார்கள்!
அன்புடையார்க்கவர் அன்பராய் நடப்பார்,
ஆதலால் தலைவீ, அன்பினை நடப்பார்!
|
( 80 )
( 85 )
|
நாகரிகம்
குறிஞ்சித் திணை
[தோழி மொழி]
|
நண்பர் தரும் நஞ்சினையும்
நல்லமுதாய் வேட்டுண்பர்
நாகரிகம் மிக்குடையார் உலகில்-அந்த
நாகரிகம் நீயுடையாய் தலைவா!
பெண்கனியாள் என்றன் தோழி
பின்னிப்பினணந் துனக்கின்பம்
பேருளத்துப் பசிதீர்க்கவில்லை-அதைப்
பெரும்பிழை என எண்ணில் தொல்லை.
பண்பாட்டெல்லை மீறலாமா?
பழகிவிட்டு மாறலாமா?
கண்ணோட்டம் கொண்டவளை மணப்பாய்-அவள்
கண்ணும் உயிரும் நீயல்லவோ அணைப்பாய்!
|
(
90 )
( 95 )
( 100 ) |
கூந்தல் மணம்
குறிஞ்சித் திணை
[துறை - நலம் பாராட்டல்]
|
மலர்தொறும் மது உண்ணும்
மணி ஒளித் தேன்வண்டே
நலந்தரு மொழி ஒன்று செப்பிட வேண்டும்-நீ
நடுநிலை தவறாமல் ஒப்பிட
வேண்டும்!
பயில் தொறும் பயில் தொறும்
காதன்மை பாங்குயர்ந்த
மயிலியல் சாயலினாள் முல்லை நகையாள்-முத்தை
மாணிக்கத்தில் வைத்துயிரைக் கொல்லும் நகையாள்!
அலையலையாய் நெளிந்து
கார் முகிலை அடிமை கொண்டு
மலைப்பூட்டும் மயக்கூட்டும் கூந்தல் மணம்போல்-வேறு
மலர்களில் கண்டதுண்டோ கூந்தல் மணமே?
தேனூற்று மலர்களில்
திகட்டாமல் உண்டிடும் நீ
வானூற்றாய் மணக்கின்ற கூந்தல் துறப்பாய்-அட
வற்றாதெனக் கின்பம்தரும் கூந்தல் மறப்பாய்!
|
( 105 )
( 110 )
( 115 ) |
பாலாட்டுப் படுக்கை
மருதத் திணை
[தோழி கூற்று]
|
ஊடலைத் தீர்த்திட வேண்டிவந்த
ஒண்டமிழ் வாணனே, கேட்டிடுவாய்!
ஆடவர்க் கேற்ற அறிவுடனே, என்
அருமைத் தலைவியின் தோள் மணந்தோன்
ஏடவிழ் வெண்ணிறத் தாமரைபோல், நிலா
எட்டி முகம் பார்க்கும் மாலையிலே,
கூடத்திலே தூய மலர்ப்படுக்கை கொண்ட
குள்ள வடிவுடை கட்டிலிலே,
ஏறிப் படுத்தனன், யானையைப்போல்
இட்ட பெருமூச்சு விட்டபடி,
மீறிய அன்புடன் பிள்ளையினைத் தன்
மேனிதழுவிப் படுத்திருந்தான்.
ஏறினள் பிள்ளையின் தாயவளும்-தன்
இச்சைக் குகந்த தலைவனையே
ஆறிய பாலினில் ஆடையைப்போல்-அவன்
அன்பு முதுகினைத் தழுவிக்கொண்டாள்.
|
( 120 )
( 125 )
( 130 ) |
என்றும் கைவிடாதே
பாலைத் திணை
[உடன் போக்கில் தோழி தலைவற்கு]
|
பெற்றோர் அறிந்திலர்
உற்றார் தெரிந்திலர்
கற்றவனே இவளைக் கொண்டாய்,
கங்குலில் வரச்சொல்லி விண்டாய்!
குற்றம் ஈதானாலும் நற்றவக் காதற்கு
நான்தடை ஆவதும் உண்டா?
நாளைநீர் வாழ்பவர் அன்றோ!
இன்று போல் என்றும்நீர் அன்பினில் தென்பினில்
நன்று குறள்போல வாழ்க!
நற்றிணைப் பாடல்போல் வாழ்க!
ஓங்கிய மார்பெழில் ஒளியும் திருமேனி
பாங்கு தளரினும் கைவிடாய்,
பசையற்றுப் போகுமோ மெய்விடாய்?
கூந்தல் நரைத்தாலும் கொண்டநின் காதற்சொல்
ஏந்திய பெண்ணினைத் தள் வையோ?
இன்றுபோல் என்றும்நீ கொள்வையே! |
( 135 )
( 140 )
( 145 ) |
தாயுள்ளம்
பாலைத் திணை
[செவிலித்தாய் மொழி]
|
காதலனோடு சென்றாள்
விரும்பி-அவள்
களவு மணத்திருந்தாள் அரும்பி,
கணவனோடு வருவாள் திரும்பி! (காதலனோடு)
மோதும் உழவர்கெட்டும் பறையொலி
முழக்கத்திற்கு ஆடிடும் பச்சைமயில்!
வாழும் உயர்மலை ஓங்கும் முகில்
வழியெல்லாம் பெய்யட்டும் குளிர்ந்த மழை! (காதலனோடு)
அறநெறி இதுவென அவனுடன் சென்றாள்
அன்பினை அன்பு மனத்தினால் வென்றாள்!
பிறைநுதல் சிறுமி சென்ற பாலைவனம்
பேரின்பம் ஆக்கட்டும் மழையின் வளம்! (காதலனோடு)
|
( 150 )
( 155 ) |
என்னைப்போல் அவளும் அழட்டும்!
பாலைத் திணை
[மகளைப் பிரிந்த தாயின் மொழி]
|
மகளைப் பிரிந்தஎன்
கண்ணீர் போல்
மகளைப் பிரிந்தாளும் சிந்து கண்ணீர்! (மகளைப்)
புலியிடம் தப்பிய பெண்மான்-ஆண்
மான்குரல் புகலிடம் சேரும்,
நலிசெயும் வெப்பக் காடு-மகள்
நம்பிப்பின் சென்றாள் அன்போடு! (மகளைப்)
புதுவலி பொருந்திய வில்லைப்
பொருந்திய தோள்தழுவும் கொடிமுல்லை!
பெதும்பையைப் பிரிந்தஎன் தொல்லை-அவன்
பெற்றோளும் எய்துக எல்லை! (மகளைப்)
|
(
160 )
( 165 )
|
அன்றில் நினைவு
பாலைத் திணை
[தலைவன் நினைவு மொழி]
|
பிரிந்த போது தெரிந்தது
தொலைவு
திரும்பும் போது தெரிந்திலேன் தொகைவு!
பிரிந்த காதல் வழியினைப் பெருக்கும்
பின்உனை நினைத்தால், வழியது சுருங்கும். (பிரிந்த போது)
சிறந்த பொருளைத் தேடிட எண்ணி,
சேயிழை உன்விழிகளில் தேக்கினேன் கண்ணீர்,
பறந்தேன் பறந்தேன் பாலை நிலத்தை,
படுதொலை வதனால் இழந்தேன் நலத்தை, (பிரிந்த போது)
அழகிய நகையினாய் நினைத்தேன் உன்னை
அல்லல் படுத்திய நெடுவழி என்னை,
உழக்கெல்லைத் தொலைவாய் ஆக்கிற்றுப் பின்னை,
உள்ளன்பு அணில்நாம் வழியோ தென்னை! (பிரிந்த போது)
|
(
170 )
( 175 )
( 180 ) |
கடமைகள்
வாகைத் திணை
[துறை-மூதின் முல்லை]
|
எனக்குக் கடமை மைந்தனைப்
பெறலே-தந்தை
தனக்குக் கடமை கல்வியைத் தரலே! (எனக்குக் கடமை)
அறிவில் வளர்ந்தும் ஆண்மையில் சிறந்தும்
நெறிப்படும் மகனுக்கு நீள்வேல் தருதல் கொல்லனின்
கடமை! (எனக்குக்
கடமை)
உழைப்பால் உலகோம்பும் உண்மையை உணர்த்தும்
தழைப்புறும் நன்னிலம் தந்தோம்புதல்தான் மன்னனின்
கடமை! (எனக்குக்
கடமை)
தாய்நிலம் தனில் பகை தறுதலை நீட்டில்
ஓய்வின்றி வாள்வீசி போர்எல்லைக் கோட்டில்
சாய்த்து பல் யானைகளைச் சமர்க்கள ஏட்டில்
மாயாப் புகழ் எழுதல் என்மகன் கடமை!
(எனக்குக்
கடமை)
|
( 185 )
( 190 ) |
அவள் நெஞ்சில் இடி விழட்டும்
வாகைத் திணை
[துறை-மூதின் முல்லை]
|
இடிவிழட்டும் இவள் நெஞ்சில்-மறக்
குடி மகள் என்பதற்குக்
கடிய மனம் கொண்டாள்! (இடி விழட்டும்)
நேற்று முன்னாள் நடந்த
நிறையானைப் போரில்
கூற்றுவனுக் கிரையிட்டான்-தந்தை
கொடுத்தீந்தான் புகழ்க்குயிர் நேரில்! (இடி விழட்டும்)
நேற்றுநடந்த பெரும்போர்
நிரையினை மீட்கையில்-கணவன்
மாற்றாரை மாள்வித்து
மாண்டனன் வாட்கையில், (இடி விழட்டும்)
இன்றும் போர் முழக்கம்
இன்புறக் கேட்டாள்-அடடே
நன்றென்று மயங்கி
அன்பு மகனை அனுப்பிட வேட்டாள்! (இடி விழட்டும்)
ஆடிடும் பிள்ளைக்கே
ஆடையை உடுத்திக்-கலைந்து
கோடிய தலை மயிர்க்
குற்றநெய் பூசி
ஒருமகன் அன்றி வேறு
ஒரு மகன் இல்லாள்-பகைவர்
செருமுகம் செல்கெனச்
செவ்வேல் தந்தாள்!
(இடி விழட்டும்)
|
(
195 )
( 200 )
( 205 )
( 210 )
( 215 ) |
இனி
என்ன வேண்டும்
வாகைத் திணை
|
வாகை
நமக்குத்
தாழ்வெலாம் அவர்க்கே!
வட்ட ஆழித் தேர்கள் அழிந்தன,
மாளாப் பகைப்படை மாண்டு தொலைந்தது.
மட்டிலாப்புகழ் பட்டத்து மன்னன்,
மாய்ந்தான், என்வாள் தோய்ந்தது மார்பில்!
ஆனைகள் எல்லாம் பூனைகள் ஆயின,
அம்பும் வில்லும் கம்பந் தட்டுகள்,
நானிலம் குழியப் பறக்கும் குதிரைகள்
நத்தைகள் ஆயின! நத்தைகள் ஆயின!
வெள்ளை மாலை வீரக் கருங்கழல்,
சிவப்புக் கச்சை வேண்டி அணிந்தீர்.
தெள்ளு மாத்தமிழ் மறவரே கண்டீர்
தீர்ந்தது வேலை இனிஎன்ன வேண்டும்?
|
( 220 )
( 225 )
( 230 ) |
|
|
|