பக்கம் எண் :

தமிழுக்கு அமுதென்று பேர்

தமிழ் தமிழன் உயிர்


மொழிப்பற்று மிக்குடையான் மொழிப்போர் வீரன்
மொழிவெறியன் அவன் அல்லன்! மொழியைக் கொல்லும்
கழிவடையே மொழி வெறியன் என்று சொல்க.
கண் திறக்கும் முன்னமே வாய்திறந்து
குழந்தை அழும் அதுதான் தாய்மொழி என்பார்கள் .
கூண்தரையிற் கிடந்தாலும் தமிழ்க்குழந்தை
எழுப்பும் ஒலி தாய்மொழியாம் தமிழே! அன்றி
இங்கிலீசிற்பேசல் எங்கும் இல்லை,

தமிழனொடு தமிழ் பிறப்பும், தமிழினோடு
தமிழ்மகன் தோன்றிடுவான்; தமிழும் சேயும்
இமைப்போது பிரித்தாலும் வாழ்வ தில்லை
இதனாற்றான் மொழி ஒருவன் உயிர் என்றார்கள்.
நமக்கெதிரே பன்மொழிகள் காணு கின்றோம்.
தமக்குரிய மொழி நீங்கி வாழ்வார் யாவர்?
தம்முயிரைத் தாமிழந்து வாழ்வார் உண்டோ?

படையெடுப்பால் பகையாளர் நுழைவால், தீங்கு
பட்டதனால் இன்றுவரை உரிமை அற்று
நடைமெலிந்து கிடக்கின்ற தமிழன் னைக்கு
நற்றொண்டு செய்பவரே நாட்டின் தொண்டர்,
அடிமை எனும் சேற்றினிலே ஆடிஆடி
அழகிழந்த உள்ளத்தால் ஆங்கி லத்தைத்
தொடைதட்டித் தாய்மொழியாய்ச் செய்வார், கெட்ட
குறையினைப் பொதிகையிலே வாழச்செய்வார்.

புதுப்பொருள்கள் தோன்றின; அப்பொருள்கட் கெல்லாம்
புதுப் பெயர்கள் தமிழினிலே சேர்க்க வேண்டும்
இதையறியார் வேறுமொழி கிடைக்கு மட்டும்
இத்தமிழே இருக்கட்டும் என்று சொன்னார்
மதுரையினும் நல்லநகர் கிடைக்கு மட்டும்
மதுரையே இருக்கட்டும் என்று சொன்னார்
மதுரையிலே வாழ்கின்ற நாயும் வேறு
மாநகர்க்கும் குடிபோக ஒப்பாதன்றோ?

ஆங்கிலந்தான் உலகமொழி என்று சொல்வார்;
ஆனாலும் தமிழ்மொழிநம் தாயே அன்றோ?
ஆங்கிலந்தான் உலகமொழி என்று சொல்வார்!
தமிழ்மொழியும் அந்தநிலை எய்தும் வண்ணம்
ஈங்கிருந்து பெருமுயற்சி செயலாம் அன்றோ
இது செய்வோம் என்பவர்கள் வாயை மூடித்
தூங்கலாம் அன்றோ? வாய்த் துடுக்குக் காட்டித்
துன்பத்தை விலைபேசி வாங்கல் நன்றா?





( 5 )





( 10 )




( 15 )





( 20 )





( 25 )




( 30 )





( 35 )

எழுக தமிழர் !

தமிழ்மீள வேண்டும் தமிழகம் இங்கு
நம்மதாக வேண்டும் நமக்குச்-சுமையான
தீமை அகன்று திருஓங்க வேண்டும் நம்
சீமை சிறக்கவேண்டும்.

தமிழ்மொழியைக் கொன்றால் தமிழரைக் கொல்ல
அமையும் என எண்ணும் அயலார்-உமியால்
இகழ் பெறுதல் வேண்டும். இன்பத் தமிழே
புகழ்பெறுதல் வேண்டும் புறத்து.

ஆங்கிலமே தாய்மொழி ஆவது வேண்டுமெனும்
தீங்கில் சிறந்த சிறுமதியோர்-ஈங்குத்
திருந்துதல் வேண்டும். செய்த செயற்கு
வருந்துதல் வேண்டும் மனம்

இந்தி புகுத்துகின்ற எத்தர்க்கும் ஒத்தூதும்
மந்திக்கும் வேண்டும் வருமானம்-தொந்திக்கு
நாட்டுக் கறிஒன்றே நாம்வெல்வோம் நம்மில்
கூட்டுக்கறிஒன்றே கொண்டு.

வாய்திறக்கும் தீயமலைப்பாம்பை நாம்கொல்லத்
தூய்தற்ற துப்பாக்கி ஏன்? குண்டேன்? தேயத்தில்
மற்றுமை வேண்டுவது வாய்மைத் தமிழரே
ஒற்றுமை ஒன்றே ஒன்றே.

சாப்பிடுதல் தூங்கிடுதல் தாரத்தை நேரத்தில்
கூப்பிடுதல் என்ற குறுகிய-வாய்ப்பில்
மகிழ்ச்சிஎங்கே? செந்தமிழர் மானமெங்கே? பண்டைப்
புகழ்ச்சி எங்கே எண்ணும் பொழுது!

( 40 )





( 45 )





( 50 )





( 55 )






( 60 )

தமிழன்

அன்னை, தந்தை அன்பு, மொழி இவை
உன்னைப் படைத்தன, கடவுள் அன்று;
கடவுள், கடவுள் என்பர், அஃது
அன்பெனும் பொருளுக்கு அமைந்த ஒரு பெயர்!

"தமிழன் நான தோன்றியது சாற்றுக என்பையேல்,
அன்னை, தந்தை, அன்பு தமிழ் எனும்
நான்கும் உன்னை நல்கின என்க,
அன்னையும், தந்தையும், அன்பும், ஆரியமும்

ஆகிய நான்கினால் ஆரியன் தோன்றினான்.
அன்னை, தந்தை அன்பு, பிரன்சு
நான்கினால் பிரஞ்சுக் காரன் நண்ணினான்;
பிறமொழி மாந்தரும் இவ்வாறு பிறந்தனர்.

எனினும், தமிழன் என்பவ னுக்கும்,
பிறமொழி பேசும் மற்ற வர்க்கும்
வேறுபாடு விளம்பு கின்றேன்;-
நீண்ட காலமாய் நிலவுல கத்தில்
மாண்ட ஆரியம் வாழ்வது என்பர்.

நிலத்தினில் பிறவும் நெடுங்காலத்தில் முன்
உண்டா யினஎன உரைத்தல் கூடும்!
ஆங்கிலம் ஆதிகாலம் தொடங்கி
வாழ்வதென்று வரைதல் கூடும்!
தமிழோ காலம் உண்டான காலமாய்
இருந்து வருவதால் தமிழன்
இருப்பவர் எவர்க்கும் முன்தோன்றியவனே!


( 65 )





( 70 )





( 75 )





( 80 )





( 85 )

அரிய மறைக்கு முன்னவை
தமிழ் நான்மறை


நிறைதமிழ் மக்களே! குறைவறு பன்மொழி
மறைமலை அடிகளார் அறைவது கேளீர்
இரண்டா யிரத்துநா னூறாண் டிறுதியில்

இருந்த இன்னருட் சௌதம சாக்கியன்
ஆரிய மறைகள் மூன்றென அறைதலால்
நான்மறை என்பவை தமிழ்தான் மறையே

பழைய செந்தமிழ்ப் பாட்டுகளிலும்,
இடைக்கா லத்தில் எழுந்தவை ஆன
திருவா சகத்திலும், திருமந் திரத்திலும்,
தேவா ரத்திலும், செப்பி யுள்ளவை
ஆரிய மறையன்று; தமிழ்நான் மறையே.

ஆரிய மறைகள் என்பன அனைத்தும்
சிறுதெய் வங்களின் வணக்கம் செறிந்தவை.
அறம்பொருள் இன்பம் வீடெனும் நான்கின்
திறத்திற் சேர்ப்பவை தமிழ்நான் மறைகளே.



( 90 )






( 95 )





( 100 )

முடியாதது

மலையை மடுவே ஆக்கவும் முடியும்;
அலைக்கடல் அனைத்தும் தூர்த்தலும் முடியும்;
விண்ணில் விரைந்து பறக்கவும் முடியும்!
மண்ணில் மழைபெய்விக்கவும் முடியும்;

சேய்மையை அணிமையாய்ச் செய்யவும் முடியும்;
மாய்வதை மாயாமற் செய்யவும் முடியும்;
தமிழி னின்று தமிழனை இமைப்போது பிரிப்பதும்
முடியா-தெவர்க்குமே.



( 105 )





( 110 )

மதத் தலைவர் அனைவரும்
மாத்தமிழின் பகைவரே


சைவம் காக்கும்ம டத்தாண்டி-அவன்
தமிழின் சீரைக் கெடுத்தாண்டி-அந்தச்
சைவம் தொலைவ தெந்நாளோ?-நல்ல
தமிழர் வாழ்வ தெந்நாளோ?

வைணவந்தானும் அப்படித்தான்;-அந்த
மதத்தலைவனும் அப்படித்தான்
வைணவம் தொலைவ தெந்நாளே?-தமிழ்
மக்கள் வாழ்வ தெந்நாளோ?

ஏசு மதமும் தமிழர்களைத்-தம்
இன்பத் தமிழை எதிர்க்க வைக்கும்-அந்த
ஏசுமதம் தீர்வ தெந்நாளோ?-தமிழ்
இனத்தார் வாழ்வ தெந்நாளோ?

எல்லா மதங்களும் நம் தமிழ்க்கே-மிக
எதிர்ப்புடையன என் மானே
பொல்லா மதங்கள் தொலைவ தெந்நாள்-தமிழ்
பொலிவ தெந்நாள் தெந்நாள் செந்தேனே!

மயிலத் தாண்டி கையெழுத்தை-ஒரு
வடவெழுத்தாலே போடுகின்றான்
செயலில் தருமைப் பண்டாரம்-தமிழ்த்
திருவை வேண்டாம் என்கின்றான்.

பசுத்தோல் போர்த்தபுலி போலே-உள்ள
பண்டாரப் பசங்களின் தோலே
பசையடங்குதல் எந்நாளோ-நம்
பைந்தமிழ் வாழ்வதும் எந்நாளோ?






( 115 )





( 120 )





( 125 )





( 130 )



பாட்டும் பாலையும்

இசை அமுதிலே என்-உயிர்க்கிளி
இன்பம் கொள்ளுதே-அக்கக்கா
என்று விள்ளுதே!

வசை இல்லை! வம்பில்லை இல்லை சிறிதும் கலகம்-உன்
வாழ்வில் ஒரு பேரின்பம் வற்றாதே இசை உலகம்!
                                        (இசை)
ஏழை நெஞ்சே வாழவைக்கும் இன்பத் தமிழ்ப்பாட்டு-நீ
ஏழை உடைய பண்ணை எல்லாம் யாழில் வைத்து
                         நன்றாய் மீட்டு. (இசை)

வீரப்பாட்டு; வெற்றிப்பாட்டு மேன்மைக்
                         காதற் பாட்டு; - நீ
சேர சோழ பாண்டியர்கள் திருப்பாட்டில்
                         ஆர்வம் காட்டு! (இசை)

( 135 )





( 140 )





( 145 )

தமிழைக் கெடுப்பவர் கேடு

அறியினும் வெளியில் அறைய மாட்டார்;
அவைகளை ஒழிக்கவே அறையில் முயலுவார்,

இந்தத் தமிழில் விஞ்ஞானம் இல்லை
அந்த ஆங்கிலத்தில் அதிகம் உண்டே
ஆதலால் அழியத் தக்கது தமிழாம்!

விஞ்ஞானம் பற்றி இதுவரை விளைந்த
எந்த நூலை இவரா தரித்தார்?
இத்தனை என்றும் எண்ணிய துண்டா?

நெஞ்சக் கிணற்றின் அடியில் நிறைந்த
மடமைக் கருத்தை மாய்ப்போம் என்று
மார்பு தட்டும் மாய்பெரும் புலிகள்
தமிழில் இல்லா புதிய சொற்களை
ஏற்படுத்துவோம் என்ற துண்டா?

அணுவள வேணும் இத் துணிவு வந்ததா?
இல்லை, காரணம் வேறே இருக்கலாம்.

நாட்டுக் குழைத்த தலைவர்கள்
கேட்டுக்கு உழைப்பதாற் பெறுவது கெடுதியே.




( 150 )





( 155 )





( 160 )





அம்மா சுட்ட தோசை

தோசை சுட்டாள் இந்நாட் டுக்குச்
சுட்டுக் கொடுத்தாள் பார்ப்பன னுக்கு
ஆசை காட்டி மோசம் செய்தாள்
அவளே தாண்டா ஆள வந்தாள்

பூசை போட்ட பாப்பா னுக்கு
பொரிவி ளங்காய் சுட்டுத் தந்தாள்
மீசை வைத்த தமிழர் உறவை
விலக்கி வைத்தே ஆள வந்தாள்

   தமிழ் நாட்டைச் சென்னை என்றாள்
   தாங்கோம் என்றாள் பின்னை என்றாள்
   அமிழ்தம் என்றோம் வாய்திறந்தோம்
   ஐயருக்கே அதைக்கொடுத்தாள்!
   உமிகொடுத்தாள் தமிழ் னுக்கே
   உமக்கு நானே அம்மா என்றாள்
   ஓகோ என்றால் சும்மா என்றாள்.

நெஞ்ச மெல்லாம் பார்ப்பானுக்கே
நெய்வேலியுமே பார்ப்பானுக்கே
வஞ்சம் எல்லாம் தமிழனுக்கே
வறுமை எல்லாம் தமிழனுக்கே

அஞ்சுவ தெல்லாம் பார்ப்பானுக்கே
அலுவ லெல்லாம் பார்ப்பானுக்கே
மிஞ்ச விட்டாள் இந்தி நனைய
மெலிய வைத்தாள் தமிழ்த்தாயை.
   தமிழ் மொழியை வெறுப்பதேன்
   தரும புரத்துத் தம்பிரான்? செந்
                 தமிழ்மொழியை வெறுப்பதேன் ?

( 165 )





( 170 )





( 175 )





( 180 )





( 185 )




( 190 )

தருமபுரத்துத் தம்பிரான்
தக்கவாறு நடந்து கொள்


தமிழ் மொழியை வெறுப்பதேன்
தரும புரத்துத் தம்பிரான்? - செந்
           தமிழ் மொழியை வெறுப்பதேன் ?
தமிழ் மொழி என்ன எட்டியா ! - அவ்
வடமொழி வெல்லக் கட்டியா ? - செந்
           தமிழ்மொழியை வெறுப்பதேன்
தமிழகத்தில் தமிழ்ப் பயிர் - அது
தமிழர் கட்கெல்லாம் உயிர்
தமிழிற் சிவம் பெரிதென்றால் - அது
தலையின் இழந்த சிறுமயிர் - செந்
           தமிழ்மொழியை வெறுப்பதேன் ?
சரி இருந்திட வேண்டுமாம் - தமிழ்த்
திரு ஒழிந்திட வேண்டுமாய்
குரு வென்றெண்ணிய தமிழர்கள் - இனிக்
குருக்கள் என்றிட வேண்டுமாம் - செந்
           தமிழ் மொழியை வெறுப்பதேன் ?
தாயும் தமிழை எதிர்த்திட்டால்-நெடி
தாழ்ந் திடாது தமிழன் வேல்!
வாய் கொழுத்த பண்டாரம்-இனி
வகையாய் நடந்திடுதல் மேல்-செந்
           தமிழ்மொழியை வெறுப்பதேன்!





( 195 )




( 200 )




( 205 )




( 210 )

புலவர் சிவபெருமான் திருவதி அடைத்தார்

தமிழகத்திற் பிறந்தும்,
தமிழெனும் அமிழ்தது நிறை உண்டும்
அதனால் செல்வம் நிறையச் சேர்த்தும்,
உடம்பு புல்வாய்ப் பலனெலாம்
செல்லரித்து மருத்துவ மனையில் புரளும்
ஒருத்தர்க்குத் தமிழ்ப்பற்று மருந்து தேவை
அதைக் குருதியில் ஏற்றுமுன்
சிவபிரான் திருவடி நிழல் சேர்ந்தார் புலவரே




( 215 )



சிவமா பெரிது? செந்தமிழ் பெரிது!

சமையமா பெரிது தம்பிரானே-நல்ல
   தமிழேபெ ரிதுமடத் தம்பிரானே
தமிழைவெ றுப்பதென்ன தம்பிரானே-உன்
   தாயை வெறுப்ப தென்ன தம்பிரானே?
சமையம் ஒழிந்திட்டால் தமிழர் உண்டு-நல்ல
   தமிழ்ஒழிந் தால் தமிழ் இனம் உளதோ
தமிழுக்குத் தொண்டு செய்த தம்பிரானே-தமிழ்
   தமிழனின் உயிர்! மடத் தம்பிரானே,

சிவமா பெரியது தம்பி ரானே-நல்ல
   செந்தமிழ்பெ ரிதுமடத் தம்பிரானே
சிவமொழிந் தால்தமிழ் இன மிருக்கும்-தமிழ்
   செத்தால் இனம்சாகும் தம்பிரானே.
சிவநெறி சொல்லி இங்குத் தமிழ் நெறியை-நீ
   சீறுவ தோமடத் தம்பி ரானே?
சிவத் தொண்டுமேல் அன்று தம்பிரானே?- தமிழ்த்
   திருத்தொண்டு மேல்மடத் தம்பிரானே;

கோயி லாபெரிது தம்பி ரானே-அங்குக்
   கொள்ளையா பெரிது தம்பி ரானே?
கோயிலினும் பெரிது தம்பி ரானே - தமிழ்க்
   கொள்கையன் றோமடத் தம்பி ரானே
தாயிற் பெரியதொன்று தம்பிரானே - அது
   தமிழல்ல வோமடத் தம்பிரானே?
நேயத் தமிழ்வெறுத்துத் தம்பி ரானே? - தமிழ்
   நிலத்தில் வாழ்வதென்ன தம்பி ரானே?

( 220 )




( 225 )





( 230 )




( 235 )





( 240 )

தமிழன்னை

உளங்குளிர் தமிழ்மாலை ஒளிகொள் இன்னிசைச் சோலை
அளவின்றிக் கொடுத்ததே அன்னையின் முலைப்பாலை.
                                   (உளங்குளிர்)

ஏழிசைத் தாலாட்டி இலக்கியச் சோறூட்டி
வாழிய வாழிஎன்று வளர்த்தனள் உணர்வூட்டி,
                                   (உளங்குளிர்)

திருக்குறள் நூலோடு சிறப்புறுசங்க ஏடு
விருப்புடன் கருத்துடன் விளைத்திட்டாள் இன்போடு
                                   (உளங்குளிர்)

பண்புகளுக்கோர் எல்லை பைந்தமிழன் எனும் சொல்லை
மண்ணுலகில் வைக்கும் தமிழ் மணக்கும் கொல்லை.
                                   (உளங்குளிர்)


( 245 )






( 250 )





( 255 )

தமிழகம் மீள வேண்டும்
ஆரிய ஆட்சி ஒழிய வேண்டும்


செந்தமிழ்ச் சொற்களை இந்தியால் எழுதுதல்
அறிவிலாச் செயல்? அறமிலாச் செயல்!
வடவரின் இந்த மடமை எண்ணத்தை
முளையிலே கிள்ளி எறிதல் நம்முதற்கடன்.
ஏனெனில்,

எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே;
இனத்தைக் கொல்வ தெதற்கெனில், தமிழர்
நிலத்தைச் சுரண்டி தமது நிலையினை
உயர்த்த, வடவரின் உள்ளம் இதுதான் .

நேருவின் ஆட்சி நெடுநாளாக
செந்தமிழர்க்குச் செய்யும் தீமைகள்
இம்மியேனும் குறைந்த பாடில்லை
நேருவின் ஆட்சி மாறவேண்டும்
ஒழிக்க வேண்டும் உயர் தமிழ்மக்கள்
இந்தியை எத்துப் பேசிப் புகுத்தியது!

சாதி ஒழிப்பாரைச் சாகடித்தது!
பாரோ அறியப் பார்ப்பனர் ஆட்சியை
நிறுவிற்றுத் தமிழரைக் கறுவிற்றுக் கொல்லவே!
எந்தத் துறையிலும் இம்மி அளவும்
உரிமை தாரேன் என உருமிற்றுப் பன்றி
தமிழர் செல்வத்தைத் தயங்காது சுரண்டிற்று.

எங்குள தமிழ் இனத்தார் தம்மையும்
கயமை மனத்தாற் காட்டிக் கொடுத்தது,
தமிழர் நன்செய்தரு நெல்லை எல்லாம்
அயலார்க்கென்றது; பசி உமக்கென்றது!

நம் இனத்தார் செம்மைத் தமிழர்கள்
இலங்கை அரசினால் எய்தும் இன்னலை
ஆதரித்தது நேருவின் ஆட்சி!

மலையத் தமிழர்கள் நிலைமை நன்றெனில்
நெஞ்சு கொதித்தது நேருவின் ஆட்சி.
அங்குள தமிழர் தொல்லை அடைந்திடில்
ஆம்ஆம் என்றது அறமிலான் ஆட்சி!

தமிழை அழிக்கத் தமிழனைத் தேடிச்
காசு தந்து அலுவல் காட்டி
ஊக்கம் செய்தது உயர்விலான் ஆட்சி.

"ஆகாஷ் வாணி" - அதனை நீக்குக!
"வானொலி" - ஆக்குக ! என்று கெஞ்சினும்
இதற்கும் மறுப்பா எங்கே அடுக்கும்?
தமிழன் உயிரையா தருதல் வேண்டும்
இந்த உரிமை எய்துதற்கு?

ஆரியர் ஆட்சி நீங்க வேண்டும்
ஒழித்துக் கட்ட வேண்டும்
விழுப்பத் தமிழகம் மீட்சிபெறவே!





( 260 )





( 265 )





( 270 )





( 275 )





( 280 )






( 285 )





( 290 )





( 295 )




கோயிலில் தமிழில்லை

( தமிழன் தமிழகக் கோயில் கடவுளுக்கு அருச்சனை
செய்விக்கச் செல்லுகின்றான் . கருவறைக்கு இப்புறமே
நிற்கின்றான் . அருச்சகன் அருச்சனைக்குக் கூலி
கேட்கின்றான் , தமிழ்ப் பெரியார் ஒருவர் குறுக்கிட்
டுத் தமிழனுக்கு அறிவுறுத்துகிறார் .)

பெரியார் ;
சிவனாரை வழிபடத் திருக்கோயிலிற்புகுந்தாய்
இவர் வழிமறித்து நில்லென்றான் நில்லென்றான்.

தமிழன் ;
இவனே கருவறைக்குள் இருக்கத் தகுந்தவனாம்
எட்டி இருந்துசேதி சொல்லென்றான்.

பெரியார் ;
கருவறைக்குள் இவன்தான் கால்வைக்க வேண்டும்
என்றால் சரியான காரணமும் வேண்டுமே வேண்டுமே!

தமிழன் ;
சுரர்களில் பூசுரனாம் நாமெல்லாம் சூத்தராம்
சூத்திரன் தாழ்ந்தவனாம் யாண்டுமே யாண்டுமே.

பெரியார் ;
தேவனும் இவனானால் தேவருல கிருக்கப்
பூவுலகைச் சுரண்டல் ஆகுமா? ஆகுமா?

தமிழன் ;
பூவுல கைக்காக்கப் புறப்பட்ட பேர்வழிகள்
சுரண்டாவிட்டால் பொழுது போகுமா? போகுமா?

பெரியார் ;
அப்பனிடம் பிள்ளைகள் அணுகாமல் குறுக்கிட்டுச்
சிப்பாய் போல் ஏன்இவ்விடம் நின்றனன்? நின்றனன்?

தமிழன் ;
அப்பனுக் கருச்சனை அவன்தானே செய்யவேண்டும்
அதற்குத்தான் பணம் வேண்டும் என்றனன் என்றனன்.

பெரியார் ;
அரிப்புடையவன்தானே சொரிந்து கொள்ளுதல் வேண்டும்
அருச்சனை நீ புரிந்தால் தீமையா? தீமையா?

தமிழன் ;
அருச்சனை தமிழாலே ஐயையோ நடத்தினால்
அப்பனே கதைமுடிந்து போமையா? போமையா?

பெரியார் ;தமிழ்ஒலியால் செவித் தகடுகிழியும் சிவம்
நமக்கெதற்காகத் தம்பி இவ்விடம்? இவ்விடம்?

தமி.ழன் ;
சமக்ருதம் செத்தும் அதன் பேரையும் சாகடித்தால்
நமக்கெல்லாம் வாழ்விடம் எவ்விடம்? எவ்விடம்?

பெரியார் ;
தமிழைக் கெடுக்க வந்த வடமொழி மறைவதால்
நமக்கொரு கேடுமில்லை நல்லதே நல்லதே .

தமிழன் ;
சமக்ருதம் தேவமொழி தமிழுக்கும் தாய்மொழி
தமிழைக் காத்திடவும் வல்லதே வல்லதே.

பெரியார் ;
தமிழ்மொழி தனிமொழி உலகத்தின் தாய்மொழி
சமக்ருதம் கலப்பட நஞ்சப்பா! நஞ்சப்பா!
சுமந்தபொய் மூட்டையும் சும்மாடும் பறந்திடத்
தூயோர் பறக்கடித்த பஞ்சப்பா! பஞ்சப்பா!







( 300 )








( 305 )










( 310 )







- ( 315 )









( 320 )








( 325 )






( 330 )