பக்கம் எண் :

குயில் பாடல்கள்

திருவாரூர்த் தேர்

திருவாரூர்த் தேர் திருவாரூர்த் தேரென்று
தெருவாரும் ஊராரும் சேர்ந்த -- திருநாட்டார்
நெல்லுப் பொரிபோற் குதித்தார்கள், நீள் அன்பால்
கல்லுப்பாய் நெஞ்சு கரைந்தார்கள்! -- செல்வர்கள்

பின்னாள் புகைவண்டிச் சீட்டுப் பெறும் பொருட்டு
முன்னாள் பதிவை முடித்தார்கள் -- நன்செய்
நிலத்தை அடகு வைத்து, நீள்வெள்ளிக் கூசா,
புலித்தோலாற் கைப்பெட்டி, போர்வை -- விலை கொட்டி

வாங்கினார்! வாடகையாம் உந்து வண்டிக் கச்சாரம்
பாங்காய் அளித்தார்கள் பற்பலர்! -- நீங்கா
உறவினரை ஓடி அழைத்தார்கள் மற்றும்
பிறரிடம் பேசிக் களித்தார். -- நிறையப்

பொரிவிளங்காய் உண்டையும் போளியும் செய்தே
ஒரு பெரிய பெட்டியின் உள்ளே -- 'இரும்' என்றார்.
நல்லவகை எள்ளுருண்டை நானூறு! கண்ணான
வெல்லக் கொழுக்கட்டை, வேர்க்கடலை -- கொல்லிமலை
வாழைச் சுழியன், வடை, பொரிமா, உப்புமா
பேழை பிதுங்க எருக்கங்காய், -- தாழாமல்
வேகையிலே நெய்மணக்கும்; வெந்தபின் எள்மணக்கும்
பாகத்துக் கைமுறுக்கும் பண்ணியே, -- தோகையரும்

ஆடவரும், பானை, சட்டி பெட்டி, அழகுசால்
தேடி அவற்றினிலே சேர்த்திடுவார் -- கூடத்தில்
குந்தியே கையோடு கொண்டு போகும் சிப்பம்
ஐந்தாபத் தாஎன்றவை எண்ணிச் -- சிந்தாமல்
பொட்டுக் கடலை, பொரி, போம்போது தின்னவென்றே
எட்டுத் தகரத்தில் ஏற்றினார் -- நட்டபடி!
தேருக்குச் சென்று திரும்புகையில் என்னென்ன
ஊருக்கு வாங்கி வருவதென்றே -- காரியத்தை
எண்ணி எழுதி முடிக்கையிலே, அங்கிருந்த
பெண்ணாள் துடைப்பமென்பாள். பேர்த்தியோ -- மண்சட்டி

என்பாள். மருகி வடிதட்டு! வீட்டுப்பெண்
சின்னக் கரண்டி என்பாள். சீப்பென்பாள் -- முன்னின்ற

மூத்த பெண் முத்து வளையல்என்பாள்! பார்த்திருந்த
காத்தமுத்து நீலக்கண்ணாடி என்பான் -- கோத்த
மணி நடுவில் குண்டு மணி கோத்த -- நல்ல
அணிமாலை வேண்டுமென்பாள், அண்ணி, -- துணியில்லை

பட்டுக் கரைவேட்டி பார்த்தெடுக்க வேண்டுமென்று
சொட்டைத் தலையப்பன் சொல்லிநிற்பான். -- கிட்டக்

கமலாலை யத்துக் கடையிலுள்ள சீட்டி
எமலோகம் ஏகிடினும் சாயம் கமராது,
வாங்கத்தான் என்றுமணப் பெண்ணாள் வாய்திறப்பாள்; பூங்கத்தா ழைநிறத்தில் புள்ளிவைத்த -- பாங்கான
சேலைஒன்று கேட்டுநிற்பாள் தேன்மொழியாள், -- மான்விழியாள்

ஒடு தடுக்கொன்றே ஒன்றென்றாள் -- வேலை
முடிந்தது பட்டியல், முன்னிரவும் போக
விடிந்தது போழ்து; விரைவாய் -- முடிந்திருந்த
மாடவிழ்த்துக் கட்டிய வண்டிமேல் கூண்டு கட்டி
மேடுபட வைக்கோலை உட்பரப்பி -- மூடிய
சாக்குமெத்தை மேலே சரியாய் இருபதுபேர்
பாக்கடைத்த பையாக உள்ளடைவார்; -- ஏர்க்காலில்

ஓட்டுவானோ டொருவன் ஒட்டுவான் இம் முனையில்
பாட்டன் படிக்கட்டைப் பார்த்தேறி, வேட்டி
ஓருகையால்பற்றி, ஒருதொடையால் குந்தி,
சொரிசிரங்கும் தொப்பையுமாய்த் தொங்கி -- இருப்பார்.

பெரியவ ரோடு பிறரும் அமர
உரியபெட்டி பேழையும் உய்க்க -- விரிந்த
இடம் வேண்டும் என்றே இரண்டாள்கள் ஏங்கிக்
குடம், பானை, பெட்டி, குவளை -- அடங்கிய
மூட்டைகளை வண்டிமேல் போட்டு, முழுசாக்கை
நீட்டுப் படுக்கைகளை வண்டியின்கீழ் -- நீட்டுக்
கயிற்றினால் தொங்கவிட்டுக் கைப்பெட்டி எல்லாம்
குயில் மாதர் தம்மடிமேல் குந்த -- முயற்சி செய்து
வெற்றிலை பாக்குப்பெட்டி, வெல்லம் ஒரு துணியில்
சுற்றி, வீட்டம்மா சுமந்திடவே -- ஒற்றிக்
குழந்தைக்குக் கூண்டிலே ஏணைகட்டிக் கால்கள்
முழந்தொங்க விட்டு, முணுகி -- அழும்பிள்ளை
பாட்டி மடியில் பதுங்கவைத்து, வண்டியினை
ஓட்டென்று சொல்லவே ஓடுமாம் மாட்டுவண்டி!

ஒன்றல்ல நூறல்ல ஓரா யிரமிருக்கும்
இன்றல்ல நேற்றல்ல எவ்வாண்டும் -- சென்றவண்டி
மாட்டுவண்டி மட்டுமல்ல. மட்டக் குதிரைவண்டி
ஓட்டுவண்டி ஆயிரமாம்! உள்ளங்கால் -- நீட்டுமுள்ளால்
செங்குருதி பாயச் 'சிவசிவா' என்றுரைத்தே
அங்கு நடப்பார் அரைக்கோடி! -- திங்கள் இன்று

காலைப் புகைவண்டி என்று கலைந்தோடி
மூலை முடுக்கெல்லாம் முட்டவே -- நாலுதிக்கும்
கொள்ளாத மக்கள் நிலையத்திற் கூடியே
உள்ளே புகமுயன்ற ஓர்காட்சி -- விள்ளரிது!

கண்ட வண்டி நிற்கக் கதவு திறக்குமுன்னே,
பெண்டாட்டி பிள்ளையின் கைப்பற்றிக் -- குண்டானை
ஓர்கையில் ஏந்தியே உட்செல்லப் பார்ப்பாரை
ஆர் தடுப்பார்? அங்கே தடுத்தாலும் -- ஆர்கேட்பார்?

உள்ளிருக்கும் கூட்டம் இறங்கும்; அதேநேரம்
துள்ளி ஒருகூட்டம் தொடர்ந்தேறும்; -- வள்வள்
இரைச்சல் ஒருபக்கம்! இடுபட்டு நாய்போல்
குரைச்சல் ஒருபக்கம்! கூட்ட -- நெருக்கடியில்
எள்ளைப்போட் டாலும்எள் கீழே விழாதானால்
எள்ளிடு வார்நெருங்கக் கூட்டத்தில் -- எள்ளளவும்
இல்லை இடம்! புகை வண்டி நிலையமே
இல்லை! தமிழ்நா டிருந்தது! -- தொல்லை
இருந்தது! வண்டி நிலையமெல்லாம் -- இவ்வா
றிருந்தது! தேரூரை எண்ணித் தெரிந்தமட்டும்
சென்ற புகைவண்டி ஆயிரம் தேறுமன்றோ?
ஒன்றையொன்று தள்ளியே ஓடிய -- மின்வண்டி
ஆயிரத்துக் கப்பன்! அதற்கப்பன் காயும் வெயில்
தாயிட்ட செவ்வெண்ணெய் தான்சுழல, -- ஓயாமல்
மேனி எரிக்க, வியர்வை அதைப்போய் நனைக்க
கால்நடையாய்ச் செல்வார் கணக்கு!
(அகவல்)

கிழிந்த ஆடையும், கேடற்ற உள்ளமும்,
அழிந்து போவார்மேல் அருளைப் பொழியும்
இரண்டு கண்களும், இவைபோற் பிறவும்
திரண்ட ஒன்றைச் 'செல்லப்பர்' என்பர்,
இல்லப்பராய்ப்பின் எவர்க்கும் நலம் செயச்
செல்லப்பர் ஆகித் திருவாரூரில் ஓர்
ஆலின் அடியில் அமர்ந்திருந்தார்,
தேருக்காகச் செந்தமிழ் நாடே
ஊரில் இறங்கும் ஓர் உருக்கக் காட்சியை
'அப்பர்' காண்பார், 'ஐயோ' என்பார்,
புளிஇலை இடத்தில் நெளியும் பெருந்தொகைப்
புழுக்கள் போலப் புகும்பெரு மக்களில்
ஒருவர்மேல் ஒருவர் விழுந்தும் எழுந்தும்
உருண்டும் புரண்டும் ஒட்டியும் நெட்டியும்
வெருண்டும் வெகுண்டும் அடித்தும் கடித்தும்
செல்வதுதானா திருவிழா? என்றார்.
ஆலை உருளையில் அகப்படு கரும்பெனச்
செக்கில் எள்எனக் கிழவியர் சிற்சிலர்
அளவிலா நெருக்கால் அடிபட்டு மிதிபட்டு
'கொள கொள' வென்று குருதிபாய்த் தோலாய்க்
கிடப்பதும், உயிர்தான் துடிப்பதும் அறியாது
"தேர்தேர என்று மேற்சொல்லு கின்றனர்.

திருமணம் முடித்துச் சிலநாள் சென்றும்
அயலார் விரல்பட் டறியா ஒருபெண்,
திண்டாடி வேறொரு சேயுடன் செல்கையில்,
பெண்டாட்டி எங்கென்று பின்னிருந் தொருவன்
கூவி மற்றொரு கோதையைத் தொட்டதால்
'பாவி' என்றே அவள் பளீரென அறைவாள்!

"தேர் எங்கே?" என்று கேட்ட சேயிழையைப்
'பார் அதோ' என்று பரிந்து விரைந்து
தோளில் தூக்கினான்! தோகை குதித்தாள்.
குதித்த இடமும் மற்றொரு குரிசிலின்
தோளே! தோகை தொத்திய தோளும்
அயலான் தோளே! அவ்வாறே அவள்
தோளே வழியாய்த் தொத்தி நடந்து
'மாமா', 'மாமா', என்றே அலறி,
ஆமைபோல் கைக்குள் மார்பை அடக்கி,
வெற்பைத் தாவும் பொற்புறு புள்ளெனக்
கற்பைக் காக்கச் சாக்காடு காண்பாள்!

மலையினின்று மளமள வென்று
சரியும் சரிவின் நடுவிற் கொடியைப்
பிடுங்குவான் போலப் பேதை ஒருத்தியை,
மக்கள் நெருக்கில் சிக்காது காக்க
அணைத்தபடி சென்ற அருமைக் கணவன்,
சிறிது தொலைவு சென்று திரும்பி
அவள் முகம் கண்டான், ஆயினும் அவளின்
இடுப்புக் குழந்தையின் தலையைக் காணான்!
அன்னையர் அழுவார், தந்தையர் அழுவார்,
கன்னியர் அழுவார், காளையர் அழுவார்.
ஏன்என்று கேட்பார் எவருமே இல்லை!
தள்ளலும் இடித்தலும் தளரலும் உளரலும்
குறைந்த பாடில்லை எங்கும் குறைபாடு.
நிறைபாடாகும் அந்நேரம் "டும்! டும!
'விலகு வில'கென ஓசை கேட்டது
கரையிலா தோடும் மக்கள் காட்டாறு
இப்புறம் அப்புறம் ஒதுங்கி நடுப்புறம்
வழிவிட, மடத்தம்பிரானார் சிவிகையில்
அழகொடு வரச் செல்லப்பர் கண்டு
கண்ணில் களிப்புப் பொங்க, "அடிகளே, கண்டீரோ மக்கள் கலக்கம்? நெருக்கம்
நீக்க நீவிர் என்ன ஏற்பாடு
செய்தீர்?" என்று செப்பிய அளவில் --
"ஆரூர்ப் பெருமான் ஆற்றல் விளக்கம்
இது" என்றியம்பி அருளினார் தம்பிரானார்!
"ஐயன் ஆற்றலை விளக்க மக்களை
நைய விடுவதா? நம் செயல் அன்று;

எண்ணுவார் நெஞ்சில் தன்னுருக் காட்டித்
தண்ணருள் புரிவது சதாசிவன் வேலை;
அப்படி யிருக்க மக்கள் ஐயோ
ஆரூர் வருவதேன்? அல்லல் அடைவதேன்?

என்று செல்லப்பர் இயம்பி, மக்களை
நோக்கிக் கை தூக்கி உரக்க நுவலுவார்;
"மக்களே, மக்களே! திருவாரூர்க்கு
வருதல் வேண்டா! வாழ்ந்திருக்கின்ற
அங்கங் கிருந்தே அப்பனை எண்ணுவீர்,
அகத்தில் அப்பனைக் கண்டு தொழுவீர்,
இங்குவந் திப்படி இன்னல் எய்தாதீர்.
ஒத்துத் தம்பிரான் உங்களை நன்றாய்ப்
பத்தாயிரம் ஆண்டு சிவத்தில் பயிற்றினார்!
ஆரூர் அப்பனை அங்கிருந்தபடி
தேரோடு நெஞ்சில் சேர்க்கும் ஓர் ஆற்றலைப்
பெற்றிட வில்லை என்றால்
வெற்று வெடிக்கஞ்சிய நாள்கள் வீணே!






( 5 )





( 10 )





( 15 )




( 20 )





( 25 )




( 30 )





( 35 )






( 40 )





( 45 )




( 50 )






( 55 )




( 60 )




( 65 )





( 70 )





( 75 )





( 80 )





( 85 )



( 90 )




( 95 )







( 100 )




( 105 )




( 110 )




( 115 )




( 120 )





( 125 )





( 130 )




( 135 )





( 140 )




( 145 )



( 150 )




( 155 )




( 160 )





( 170 )





( 175 )




( 180 )




( 185 )
நீலவண்ணன் புறப்பாடு

நீலவண்ணன் நிலவிற் சென்றான்
        
    நீலவண்ணன் நல்ல நிலவில்
    சாலையில் தனியே செல்லும்போது
    தன்மான மில்லாத் தமிழன் ஒருவனை,
    'என் மாமா எனைத் தெரியுமா' என்றான்
    'எங்கோ பார்த்ததாய் எனக்கு நினைவுதான்!
    உங்கள் முகவரி உரைப்பீர்' என்றான்.
    இப்படி இளிச்சவாய்த் தமிழன் கேட்கவே,
    'முற்பட உங்கள் முகவரி சொல்வீர்
    என்றன் முகவரி பின்னர் இயம்புவேன்'
    என்று நீல வண்ணன் இயம்பினான்.

தமிழன் தன் முகவரி சாற்றுவான்

    'இந்தத் திரிச்சிதான் இ இ இ இ இ இ
    இந்தத் தெருவே இ இ இ இ இ இ
    அதோ தெரிகின்றதே அது என் வீடு தான்!
    என்றன் மகளை மணந்தவன் எங்கோ
    சென்றவன் பத்தாண்டு சென்றதும் வரவே
    யில்லை! என்ன செய்து தொலைவேன்!
    நேற்றுச் சோதிடம் கேட்க நேர்ந்தது;
    'மருமகன் ஊருக்கு வந்துவிட்டான்.
    வீடு தெரியாது அலைகின்றான், இனித்
    தெரிந்து கொள்வான் வீட்டைச் சேருவான்'
    என்று நன்றாய் இயம்பினார். ஆதலால்
    என்றன் மருமகனை எதிர்கொண்டழைக்கவே
    இப்படிக் கிளம்பினேன்' என்று முடித்தான்.

நீலவண்ணன் திடீர்ப் புளுகு

    "உங்கள் மருமகன், உங்கள் மருமகன்,
    நான்தான் மாமா, நான் தான் மாமா
    வேறு யார் மாமா? வேறு யார் மாமா?
    என் கண்ணீரும் உள்ளே இழுத்துக்
    கொண்டது மாமா! தொண்டையும் அடைத்துக்
    கொண்டது மாமா கூ கூ என்று, நான்,
    அழவும் முடியவில்லை, மாமா,
    தொடவும் முடியவில்லை, தொட்டுநான்
    கட்டிப்புரண்டு கழுதையைப் போல
    வெட்டிக்கு அலறவும் விலாவும், கையும்,
    இடந்தரவில்லை, என்றன் மாமா
    நடந்ததை மறந்து விடுவது நல்லது.
    நானே கொடுமையாய் நடந்திருந்தாலும்
    ஏனோ அதையெல்லாம் இழுக்க வேண்டும்
    ஓடினான். ஓடி மகளைக் கூப்பிட்டுப்
    "பாப்பா பார் உன் பல்லாய் நெய்யை!
    இந்தா உன்றன் எள்ளடை உண்பாய்!
    போடு சாப்பாட்டைப்! பொட்டணத்தை அவிழ்!
    கைத் தட்டினிலே, கணிசமாய் வை!
    பாக்கை நீயே கொடு! போ! துன்பம்     பச்சைப் புறாவாய்ப் பறந்து விட்டது!
    மிச்சமெல்லாம் விடிந்தால் பேசலாம்."
    என்று தமிழன் இயம்பினான்! தமிழ் மகள்,
    விரைவில் அனைத்தையும் முடித்து வீட்டின்
    தெருப்புறத்தில் தெற்குப்பார்த்த
    சன்னல் அறைக்குள் இன்பம் நுகர்ந்தாள்.

குறிப்பு;
    (நீலவண்ணன் நிகழ்த்திய வண்ணமே
    தமிழன் தனது முகவரி தந்தான்.
    முகவரி மட்டுமா? முன்வரி பின்வரி
    அனைத்தையும் அடுக்கினான்! -- நீலவண்ணனை
    உன்றன் முகவரி தன்னில் ஒருதுளி
    கிளத்துவாய் என்று கேட்டதுண்டா?
    இல்லவே இல்லை. இட்டுக் கொண்டுபோய்
    மகளோடு சேர்த்த மடச்சாம்பிராணி
    அவன் யார் என்பதை நன்றாய் அறிய
    எண்ணியதுண்டா? இல்லவே யில்லை!
    நீலவண்ணனோ, நீளக் கூந்தலை
    விழிக் கெண்டைகளைக் கிளிப்பேச்சுக் காரியைப்
    பெண்டாளுவதோர் பெருநிலை பெற்றான்.
    மறுநாள் மாமனார் பெட்டிச் சாவியைக்
    கைப்பற்றலானான்; கடைசியாக
    தமிழன் வீட்டின் தனி அதிகாரியும்
    ஆனான். ஐந்தாறு திங்களும் ஆயின!
    ஒருநாள் நடுப்பகல் ஒரு மணிக்குக்
    குளிக்கும் நீலவண்ணனுக்குக் கோதை
    முதுகு தேய்த்துக் கொண்டிருக்கையில்,
    இலங்கையினின்று முத்தன் வந்து
    முன்கட்டில் நின்றபடியே பின்கட்டில்
    வண்ணன் மனைவியைக் கண்டு கொதித்தான்;
    'யாரடா நீ' என்று ஓர் அதட்டு அதட்டினான்.
    'தமிழ் மகளே உன் சாயம் வெளுத்ததா?'
    என்று சொல்லி எரிந்து நின்றான்.

அவள் அவனைப் பார்த்தாளன்

    அப்போது அழகோடு கணவனைப் பார்த்த
    தமிழ் மகள், தனது தடித்தனத்தை
    எண்ணினாள், நடுங்கினாள்! அதற்குள் எதிரில்

நீலவண்ணன் மூக்கு உடைந்தது

    நின்ற நீலவண்ணன் மூக்கில்
    முத்தன் குத்தினான்; ஒருகுத்துக் கொளகொள
    என்று குழைந்தது; நீலன் மூஞ்சி
    மூக்கிருந்த இடத்தில் நீலனுக்குச்
    செந்நீர் கிணறு திடிரென்று திறந்தது.

அதற்குள் தந்தையும் அங்கு வந்தாள்

    தமிழ்மகள் தந்தையும் வந்து, முத்தனைக்
    கண்டான்! கண்ணை நாணம் மறைத்தது.
    'ஏமாற்றினாயே நாயே' என்று
    நீலவண்ணனை நோக்கி நிகழ்த்தினான்.

    'என் மகள் எங்கே எங்கே?' என்றான்.
    கிளிமகள் இல்லை; கிணற்றின் அண்டையில்
    துணிகள் துவைக்கும் கல்லும் இல்லை.
    'மகளே மகளே என்று கிணற்றை
    எட்டிப் பார்த்தான்; எழிலுறு கூந்தலே
    மிதந்தது! தாவணி, பூவாகி மிதந்தன!
    'இறந்தாள் என் கிளி, இறந்தாள் என் மகள்,
    இவனால் இறந்தாள்' என்று கூவினான்.
முத்தன் முடுகு

    நீல வண்ணன் நெட்டைக் கழுத்தைப்
    பிடித்திருந்த முத்தன் திடீரென்று
    கிணற்றில் பாய்ந்து, கிளியைத் தூக்கி
    மேலே வந்தான் மெல்லியை நோக்கினான்.
    சாகவில்லை என்று கண்டான்; தடாலென்று
    கீழே அடித்தான் உடம்பு கிழிந்தது;
    தொலைந்தாள் என்று நீலனைத் தொட்டான்.

நீலவண்ணன் அலறல்

    'ஒன்று கேளுங்கள்! ஒன்று கேளுங்கள்!
    ஒன்றைக் கேட்டபின் கொன்று போடுங்கள்!'
    என்று கைகளை ஏந்தினான் நீலன்,

நீலன் சொன்னதென்ன?

    'குற்றவாளி, நான் குற்றவாளி!
    ஆயினும் என்னை அடிப்பது தவறு;
    காரணம் நானோ கண்ணையர் மகன்;
    பார்ப்பான்; என்னை ஒறுப்பது பாவம்.'

தந்தை கும்பிட்டான்

    என்றே இயம்பக் கேட்ட தந்தை
    சாமி நீங்களா? சாமி நீங்களா?
    என்று கும்பிடக் கையை எடுக்குமுன்,
    முத்தன் ஒன்று வைத்தான் மாமனை,
    மூலையில் வீழ்ந்தான் முட்டாள் மாமன்.
    நீலவண்ணன் நின்றா இருப்பான்?

நீலவண்ணன் ஓட்டம்

    ஓடினான், ஓடினான், துரத்தத் துரத்த
    ஓடினான், ஓடினான், ஓடினான் மறைந்தான்.

பாண்டி நாட்டில்

    சேரன், பாண்டி நாடு புகுவதாய்
    வீரன் ஒருவன் வந்து விளம்பினான்.
    அதனைப் பாண்டிய மன்னன் கேட்டதும்,
    'வீட்டுக்கொருத்தன் படைவீடு சேர்க,
    நாட்டுக்கு வருவதோர் நலிவு தீர்க்க'
    என்று கட்டாய ஆணை இசைத்தான்.

பாண்டியன் பாசறை

    பாண்டி நாடே படை வீடானது;
    அங்கங் குள்ள மங்கையர் அனைவரும்
    பொன்நிகர் கணவரைப் போருக்கனுப்பி
    கல்நிகர் மனமும் கரைய அழுதனர்;
    மீன்நிகர் கண்களில் நீரைப் பெருக்கினர்.

கணவரைப் போருக்கு அனுப்பிய தெண்டிரை

    தேன்நிகர் சொல்லால், தெண்டிரை என்பவள்
    ஆளனை அறப்போர்க்கு அனுப்புகின்றவள்.
    'வெற்றி மாலையோடு மீளுக அல்லது
    பெற்ற புகழுடல் என்னைப் பேணுக'
    என்று கூறி. வாளை எடுத்து
    நன்று தழுவி நடையழகு பார்த்தாள்.

தெண்டிரைப் பிரிவைப் பொறாள்
    ஆயினும் அன்னவன் அகன்றதால், பிரிவு
    நோயினால் நுண்ணிடை மளுக்கென்று முறியப்
    பஞ்சனை ஏறிப் படுத்தவள், படுத்தவள்.

தெண்டிரை மகன்

    அவள் மகன். ஒருபுறம் அழுதுகொண்டிருந்தான்.
    பசி பசி என்று பகர்ந்தது வயிறு,
    கூவி அழுத ஓசை கேட்டொரு
    முக்காடிட்ட கிழவி முன்வந்து
    பக்கத்திலிருந்து வேடிக்கை பார்த்தாள்.
    பையனின் அழுகையோ பஞ்சணை தன்னைக்
    குலுக்கிய தாலே குப்புறக் கிடந்த
    அன்னை தலை நிமிர்ந்து 'என்ன வேண்டும்?
    சோறும் கறியும் சூடாறும் முன்னம்
    போய் நீ உண்பாய்' என்று புகன்றாள்.
    அழுத பையன் அங்கே செல்லுமுன்.
    கிழவி ஓடிக் கிடைத்தவை அனைத்தையும்
    பானையோடு சட்டியோடு கொல்லைப் பக்கம்
    திருடிச் சென்றாள்! சிறிய பிள்ளையோ
    சிறிது நேரம் சென்ற பின் வந்து
    தேடினான் சிறிதும் அங்கே இல்லை.
    வாடினான் மயங்கி வீழ்ந்தான், இறந்தான்.

பஞ்சணைப் பாவை நிலை

    பஞ்சணைப் பாவையின் நெஞ்சமோ அறையில்
    காதற் பாட்டுப் பாடியிருந்தது.
    பையன் இறந்ததும் பதைத்ததும் தமிழ்மகள்
    அறியவே இல்லை. இந்த அழகில்
    தமிழ்மகள் தன்னைப் பெற்ற தாயார்
    அங்கு வந்தாள். அவள் நிலை அறிந்தாள்
    பையனைத் தேடினாள்; கொல்லையிற் பார்த்தாள்;
    இறந்து கிடந்த பேரனைக் கண்டதும்
    அலறினாள்; 'அடி என் மகளே ஒடிவா'
    என்று கூவினாள். ஏந்திழை கேட்டாள்.
    
தமிழ்மகள் பிணத்தைக் கண்டாள்

    ஒடிவந்தாள்! வாடிய மாலையை
    அள்ளி அணைத்துக் கூவி அழுது.
    பிள்ளையைத் தரையில் போட்டுப் பின்புறக்
    கொல்லை வழியாய்க் குடுகுடு வென்றே
    சென்று பார்வையை நாற்புறம் செலுத்தினாள்,
    முக்காட்டுக் கிழவியும் செக்கெனப் பருத்த
    பார்ப்பனன் ஒருவனும் பலாஇலை தைத்ததை
    விரித்துச் சோற்றில் குழம்பை விட்டுப்
    பிசைவதும் மிசைவதுமாக இருக்கையில்,
    கண்டு கடிதில் நெருங்கிக் காலால்

நீலன் மாற்றுடை கழன்றது

    மண்டையில் உதைக்கையில் நீலவண்ணன்
    தன்னுருக் காட்டித் தரையில் வீழ்ந்தனன்.
    அன்னவன் சொன்ன தென்ன வென்றால்.
    'பசிக்குச் சோற்றுப் பானை திருடினேன்
    நசுக்கி என்னைக் கொல்லுதல் நல்லதா?
    நானொரு பார்ப்பனன்? நானொரு பார்ப்பனன்'
    என்றான். மற்றொரு பார்ப்பனன். இஞ்சு
    தின்ற குரங்கு போல் இருந்தான் அங்கே.
    குழந்தை உண்ணும் சோற்றைக் கிழவிபோல்
    வந்திது திருடிய நீலவண்ணனால்
    குழந்தை இறந்த செய்தி கூறவே
    முத்தன் காதிற் பட்டது, முத்தன்
    மன்னன் காதில் மாட்டினான்! மன்னன்     கள்வனை விடாதீர் என்று கழன்றான்.
    அந்நேரத்தில் அரசனும் எதிரியும்
    சண்டை நிறுத்தி தம்மில் ஒத்தனர்!
    தமிழே தமிழர் தாய்மொழி என்றும்
    தமிழே தனிமொழி சார்வு மொழியல்ல
    என்றும் நடுவில் எழுந்த ஐயம்
    இரண்டரசர்க்கும் இல்லா தொழிந்தது.
    பாண்டியன், சோழன் படைத்தலைவர்கள்
    ஈண்டினர் அரண்மனை தன்னில் -- ஈண்டி
    நீலவண்ணனை எம்முன் நிறுத்துவீர்
    சோறு திருடிய தொழும்பனைக் கொணர்க,
    பிள்ளையைக் கொன்ற பேழையை எம்முன்
    நிறுத்துக நிறுத்துக' என்று நிகழ்ந்தினர்.
    எதிரில் கூட்டநடுவில் இழிவுறு
    கோழைப் பார்ப்பான் கூறுகின்றான்.
    அரசரே, அந்த நீலவண்ணன்
    இங்கே இல்லை, தேவர் உலகம்
    சென்று விட்டான். தேட முடியுமா?






( 190 )




( 195 )






( 200 )




( 205 )




( 210 )






( 215 )




( 220 )



( 230 )



( 235 )




( 240 )






( 245 )




( 250 )




( 255 )




( 260 )




( 265 )






( 270 )






( 275 )






( 280 )





( 285 )



( 290 )







( 295 )






( 300 )






( 305 )






( 310 )





( 320 )







( 325 )





( 330 )





( 335 )





( 340 )






( 345 )






( 350 )




( 355 )




( 360 )





( 365 )





( 370 )




( 375 )






( 380 )




( 385 )






( 390 )



( 395 )




( 400 )




( 405 )




( 410 )




( 415 )