குயில் பாடல்கள்
கற்புக் காப்பியம்
|
பொன்னி:
வருக அத்தான் இரவில்! எட்டுமணி
ஆகி விட்டதே! ஆக்கிய சோறும்
ஆறி விட்டதே.
( என்று கூறிப்
பொன்னனை வரவேற்றுள்ளே போய் அவன்
சட்டையை கழற்றி வைக்கச் சொல்லி
இட்ட நாற்காலியில் இருக்க வைத்து
விசிறியால் மெல்ல விசிறிப் பின்னர்
கைக்கு நீர் வார்த்துக் கழுவ விட்டே
இட்ட இலையில் இருத்திச் சோறு, கறி
இட்டு கணவனுக் கருத்தி மகிழ்ந்தாள். )
பொன்னன்:
பொன்னியே. வெளியில் போக வேண்டும்
அன்பர் ஒருவர் என்வரு கைக்குக்
காத்திருப்பார். கதவைத் தாழிட்டுப்
படுத்துறங்கு. பதினொரு மணிக்கெல்லாம்
வந்து விடுவேன் வருத்தம் வேண்டாம்.
பொன்னி:
தொல்லைக் கெல்லை இல்லை அத்தான்!
விடிய வெயிலும் எழுமுன் சென்றீர்
எட்டு மணிமுதல் இடைவி டாமல்
தச்சு வேலையில் தளரா துழைத்தீர்
பாயிட்டுத் தலையணை இட்டேன்! படுங்கள்;
காலுக்கு வருடுவேன்! காற்றுக்கு விசுறுவேன்;
விரும்பம் முடித்து விடியும் வரைக்கும்
தூங்கலாம்! சொல்லுவதைக் கேளுங்கள்.
பொன்னன்:
தாழ் இடு! போய்ப் படு. தடுக்க வேண்டாம்.
( என்று வெளியிற் சென்று விட்டான் )
பொன்னி தாழிட்டுப் போய்ப் படுத்தாள்
துன்பம் அவனுக்குத் தோன்றுமோ என்று
நினைத்து நினைத்து நெஞ்சம் உறுகினாள்.
இரவோ பதினொரு மணியை எய்தியது.
தெருவின் திண்ணையில் இருவர் பேசுவது
மெதுவாய்ப் பொன்னி காதிலவிழுந்தது.
குப்பன்
பரத்தை ஒருத்தி; அவளிடத்தில் ஒரு
கம்மாளன் ஒருவன் கும்மாளம் போடவந்தான்: இருவரும் வீட்டினுள் பேசி இருக்கையில்
மளதள வென்று மஞ்சினி என்பவன்
வருவதைப் பரத்தை வகையில் உணர்ந்து
கம்மா ளன்தனை அறைக்குள் சாத்தி
மஞ்சினிக்கு வரவேற் பளித்தாள்
மஞ்சினி மனத்தில் ஐயம் வந்தது;
கதவைத் திறந்து காட்டென்று கேட்டான்.
அதற்குப் பரத்தை "அவன் என் மாமன்
கண்ணில்லாதவன் காது கேளாதவன
என்று கூறிச் சென்று, கதவைத்
திறந்து பொன்னனின் செங்கை பற்றி
விரைந்து வெளியே சென்றுவிட்டாள்.
வருவாள் என்று மஞ்சினி இருந்தான்.
( குப்பன் இப்படிச் செப்பக்கேட்ட
கண்ணம்மா எனும் கைம்பெண் கூறுவாள்; )
கண்ணம்மா;
ஐயா இவையெல்லாம் எங்கே நடந்தன?
அந்தத் தெருப்பெயர் என்ன? அந்த
வீட்டின் எண்ணையும் விளம்பவேண்டும்.
குப்பன்:
தெருவின் பெயரும் எனக்குத் தெரியாது.
வீட்டின் எண்ணும் விளம்ப அறியேன்.
( இதனை அறையில் இருந்து பொன்னி
கேட்டவள் திடுக்கென்று கதவைத் திறந்து
வெளியிவ் வந்து குப்பனை வேண்டுவாள்; )
பொன்னி;
அந்த இடத்தை நான் அடைய வேண்டும்
காட்ட முடியுமா? காட்ட முடியுமா?
குப்பன்;
அவன் உன் கணவனா? ஆனால் வருவாய்!
கண்ணம்மா;
என்னைத் தனியே விட்டு நீர் எங்கே
போக எண்ணினீர்! புதுமை புதுமை!
குப்பன்:
புதுமை ஓன்று மில்லை! இது மெய்,
வீடு காட்டிவிட்டு மீளுவேன்.
(திண்ணையில் கண்ணம்மா இருந்தாள். இருவரும்
பரத்தை வீடு நோக்கிப் பறந்தனர்.
குப்பன் தெருவில் குந்தி இருந்தான்.
வீட்டிற் புகுந்த பொன்னி. வீட்டின்
அறையை எட்டிப் பார்த்தாள், அதிர்ந்தாள்.)
மஞ்சினி:
நீ யார்? யாரைப் பார்க்கின் றாய்நீ
எதற்கஞ்சுகின்றாய்? எல்லாம் தருவேன்.
( என்ற குரலைப் பொன்னி கேட்டாள், )
பொன்னி:
என்றன் கணவரைத் தேடி இங்கே
வந்தேன். (என்று வருந்தி நின்றாள்) மஞ்சினி:
நானும் மனிதன்! நாயா! பேயா!
( என்று கூறி எதிரில் வந்து
கையைப் பற்றி, மற்றொரு கையால்
தெருவின் கதவைத் திடுமெனச் சாத்தினான்.
பொன்னனும் பரத்தையும் போனார். வழியில்
வடிவு தன் வீட்டு வாயிலில் நின்று
காரிருள் பிளந்து கண்ணைச் செலுத்தினாள். )
வடிவு:
முகவரி முற்றலும் மறந்து போனதா?
( என்றாள். பொன்னன், பரத்தை நீட்டிய
இருக்கை விலக்கி வடிவின் இல்லம்
நோக்கி நடந்தான். நுணுக்கம் அறிந்தே!
வருவான் என்ற வடிவுதன் வீட்டின்
அறையை அணுகினாள் அங்கொரு
கரும்பேய்! அழுதுகொண்டிருந்தது. )
வடிவு:
பேய் பேய் ஐயோ ஐயோ பேய் பேய்,
இக்குரல் கேட்ட பொன்னன் ஓட்டம்
பிடித்தான் பேயும் பேசிறறு அங்கே; )
பேய்:
பேய் நான், பிழை செய்யும் பெண்கட்குத் தாய் நான்
காசுக் குடலை விற்கும் கயமை வேண்டாம்
உயிர் தந்தும் கற்பைக் காப்பதே உயர்வாம்
என் வலக்கையை அயலான் இடது கை
தொட்டது.
அக் கையைத் தொலைத்த தென்கை.
ஒரு கையால் என்னை ஒரு கை பார்ப்பதாய்
அம்மியின் குழவி கொண்டென் தலையில் அடித்தான்.
மண்டை உடைந்த புண்ணின் குருதிபார்!
ஆயினும் அவனால் தூக்க இயலா
அம்மி தூக்கி அவன் மேல் எறிந்தேன்;
அம்மி தோளிற் பட்டிருந்தால் அவன்
இருப்பான்; மார்பில் பட்டதென்றால்
இறப்பான். தோட்ட வழியால் இங்கே
வந்தேன். இனி நீ வாழ்வாய் அம்மா
என்று தன் வீட்டை நோக்கி ஏவினான்.
தெருக்கதவு சாத்தியிருந்தது. தெரிந்த
பரத்தை, தெருவில் குப்பனைப் பார்த்தாள்.
பரத்தை:
யாவர் நீவிர்? எங்கு வந்தீர்?
யாருக்காகக் காத்திருக்கின்றீர்?
குப்பன்:
உன்னிடம் வந்தவன் வேறொருத்தியை
அன்பு வேண்டி அறையில் உள்ளான்.
வேறொருத்தியை விரும்பிய எனக்கு
நீதர வேண்டும் நிலைத்த இன்பம்,
வாராய் என்னிடம்! (என்று வணங்கி
இருவர் அடுத்துள்ள இலுப்பைத் தோப்பை
அடைந்தனர் அன்பு செய்வதற்குமுன்
பேசிப் பேசிக் காலங் கடத்தினார்;
அதே நேரத்தில் பேயொன்று கண்டனர்)
பேய்: எந்தப் பரத்தை? எந்த மனிதன்?
என்ன வேலை? இயம்ப வேண்டும்
பரத்தை பறந்தாள்! குப்பனும்
எடுத்தான் ஓட்டம்; பேய் பேய் என்றே
பொன்னன் வீட்டை அடைந்தான். அறையில்
கண்ணம் மாவைக் கட்டிலில் கண்டான்.
பொன்னன்:
நீயார்? புதிய நிலை காண்கின்றேன்
அஞ்சுதல் வேண்டாம், படுத்திரு, படுத்திரு.
கண்ணம்மா:
நானும் குப்பனும் திண்ணையை நண்ணினோம்
குப்பன் பொன்னிக்கு வீடு குறிக்கப்
போனான். நானோ இங்குப் புலம்பினேன்
பொன்னன்:
புலம்ப வேண்டாம். பெண்ணே கண்ணே
எனக்கும் இந்தப் படுக்கையில் இடங்கொடு.
கண்ணம்மா:
திருமணம் புரிந்து கொள்ள வேண்டும்
பொன்னியைத் தாய்வீடு போகச்சொல்லுக.
பொன்னன்:
அதுவும் சரிதான். அவளும் உன்போல்
அழகுடையவளும் அல்லள் அல்லள்.
என்று கூறிக் கண்ணம்மாவிடம்
நெருங்கிப் படுத்தான்! ஒரு குரல் கேட்டான்
--
குரல்:
பெண் எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது,
மாதரும் கற்பை மறப்பாராயின்!
தீதெல்லாம் செழித்து வளரும் நாட்டில்!
ஒருத்தியைக் கண்டால் ஒன்பது நாய்கள்
துரத்துவது தெலைவதெந்த நாளோ?
காசுக்குக் கற்பிழக்கும் பெண்கள்
மாசுக்கே வாழ்கின்றனர் நாட்டில்!
பொன்னியின் முழக்கம் கேட்ட பொன்னன்
கண்ணம்மாவின் கழுதைப் பிடித்துக்
தோட்டத்துப் பக்கம் துரத்தி வந்தான்.
பொன்னி வீட்டிற் புகுந்தாள், தலையில்
செந்நீர் ஆறு தோளெலாம் செறிந்தது.
அவள் தலை அவிழ்ந்து மெய்யை மறைத்தது;
பெருமூச்சு தீக்கக்கும் பெருமலை!
அவளைப் பொன்னன் கண்டான். அஞ்சிடான்.
பொன்னன்:
இரவு மூன்று மணி எய்திற்று
வீட்டை விட்டு நீ எங்கே சென்றாய்?
என்று கேட்டான்: நின்று நடுங்கினாள்.
அதே நேரத்தில் கண்ணம்மாவும்
அங்கு வந்தாள் அலறலானாள்: --
கண்ணம்மா:
திருமணம் என்னைச் செய்து கொள்வதாய்ப்
புகன்றனை. என்னைப் புணர்ந்தனை இந்தப்
பரத்தை இடத்திலும் பழக எண்ணினை
என்று தோற்பாவை எழுந்தாடல் போல்
ஆடினாள். அங்கே அதே நேரத்தில்
மஞ்சினி தன்னை மார்பில் சாய்த்துத்
தோகை என்பவள் தோன்றலானாள்.`
தோகை:
என்றன் கணவனை இந்தப் பொன்னி
அம்மியால் தோளில் அடித்து வீழ்த்தி
இங்கே வந்து கொஞ்சுகின்றாள்.
பழிக்குப் பழி வாங்கிடுதல் வேண்டும்
என்று பொன்னியை இருகையால் தாவினாள்.
தோகையைப் பொன்னன் இருவென்று சொல்லிப்
பொன்னியை நோக்கிப் பின்னும் கேட்டான்.
பொன்னன்:
எதற்குத் தனியாய் வீட்டை விட்டோடினாய்
கற்பை விலைக்குக் காட்டவா சென்றாய்?
போகும் உயிரைப் போகாது காத்து
நாவும் குழறப் பொன்னி நவில்வாள்:
பொன்னி:
பரத்தை வீட்டில் படுதுயர் நீக்க
எண்ணினேன், வந்தேன். நீங்கள் இல்லை
மஞ்சினி என்னை மடக்கிப் பிடித்தான்
கையை முறித்தேன். குழவியால் அடித்தான்,
அம்மி தூக்கி அவன் மேல் எறிந்து
கொல்லையால் ஓடி உம்மைக் கூவிய
வடிவுக்கு வாய்மை கூறிவந்தேன்
என்று கூறினாள். பொன்னன் இயம்புவான்;
பொன்னன்:
நீயேன் வீட்டை விட்டு நீங்கினாய் அதைச்சொல்?
இதற்குள் தோகை அங்கே இருந்த
கொடுவாள் ஒன்றை எடுத்துக் கொண்டாள்;
பொன்னனும் அங்கொரு புதிய உலக்கையைக்
கையில் எடுத்துக் கண் சிவந்திட்டான்
இருவர் முயற்சியும் பயன் படுவதற்குள்
குவளை விழிகளும் கூம்பின, பொன்னி
துவளத் துவள இடை ஆடியது
அடியற்ற மரமே ஆயினாள்! வீழ்ந்தாள்.
அவளொரு பரத்தையா? அந்தக் கற்பரசி
கொலையா செய்தனள்? இந்த
நிலவுலகு பொன்னி பின்சென்று நிலைகவே. |
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 )
( 185 )
( 190 )
( 195 )
( 200 )
|
தமிழுள்ளம்
மனமே அவளிடம் அகப்படாதே
|
தென்னகம்
திருவிழாக் கண்டாற் போல
என்னகம் இவளைக் கண்டு வியந்தது!
உண்மையில் வியப்புக் குரியவள், வெண்ணிலவு
பெண்ணின் முகமென்று பேசினும் பொருந்தும்!
அதோ அக் கருங்குயில் கூவியது -- ஆயிழை
இதோ தன் தோழியை 'இந்தா' என்றாள்;
குயிலினும் கோதை குரலே இனிது!
பார்க்கின்றாள் எனைப் பார்க்கின்றாள் அவள்.
மனமே மனமே, பழிவாங்கும் நிறுவனம்!
பறிப்பாள் உன்னை! பறந்துவா! பறந்துவா!
நிற்றல் வேண்டா! அவள் அழகு
பற்றுமுன் பறந்துவா! பணிஉண்டு வேறே!
|
( 205 )
( 210 )
|
|
அவள் அனுப்பிய தோழி
நேற்று நேரில் உனைக் கண்டாளாம்!
காற்றுக் காகச் சோலை வந்தாயாம்!
அவள்மேலே நீ ஆசை கொண்டாயாம்!
குவளைகண்டு, பின் கோதை விழிகண்டு,
மகிழ்ந்ததை உன்முகம் சொல்லிற்றாம்!
ஆனால், அங்கிருந்து புறப்படுங்கால் உன்
முகவரி சொல்ல வில்லையாம்
முகவரி அவளையும் கேட்கிலையாமே!
அவள் வேண்டாம் காரணம் பிறகு ... !
சோலையில் அந்தத் தோகை தன் விழியை
ஆலிலைத் தொன்னை ஆக்கி -- என் அருளைப்
'பெய்' என்று கெஞ்சினாள். பெரிதும் அஃது
மெய்யே! மேலும் என் மனப் புள்ளிமான்
அவளின் அழகு வலைக்குத் தப்பிடப்
பட்ட பாடு பஞ்சு படாது!!
தென்றல் குளிரைச் செய்த போதும்
தேன்மலர் நறுமணம் செய்த போதும்
அழகும் இளமையும் அமைந்த அவ் வுருப்படி
எழுதிய காதல் எழுத்தையும் விலக்கினேன்!
காரணம் கழறுதற் கில்லை!
ஓரிரு நாள் காத்திருக்க உலகமே! |
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
|
காதல் இன்பத்தினும் இன்பம் வேறுண்டு
|
சின்ன நாய்க்குட்டி திண்ணையில் குதிக்கும்
அன்னையார் அதற்குப் பால் வாங்கி வைக்கக்
காசில்லாமல் கண்ணீர் விட்டனர்!
பூச, 'முகப்பொடி' கேட்டாள் பொன்னி!
அண்ணன் வாங்கித் தராததேன்? ஆதலால்
'மண்ணாய்ப்போக'! என்று வாழ்த்துவாள்!
மெத்தென்று செருப்பு விற்கும்; வாங்க
இத்தனை நாள்களாய் முடிந்த பாடில்லை.
அரசினர் ஆணை அனுப்பினர் "நீவிர்
வரும் இத் திங்கள் இரண்டாம் நாளன்று
வருமானவரி வாங்கும் துறைக்கே
பெரியதிகாரி, ஓராயிரம் பணம்
திங்கள் ஊதியம் கொள்க" என்றனர்.
எங்கள் வறுமையை எண்ணினால் -- இது
பாரிவள்ளல் வாரிக் கொடுத்ததே!
எனினும் அலுவலை வேண்டேன்!
இனிதினும் இனிது மற்றொன்றுளதே! |
( 235 )
( 240 )
( 245 )
( 250 )
|
வலிய அணைத்தாய் வேண்டாம் அதோ போர் முரசு!
|
வலிய அணைத்தாய் மார்பில் இறுக நீ
மலிவு விலைக்கு வந்த மாணிக்கம்!
அடித்து வாய் திறந்தூட்டிய அமிழ்தே!
படித்து வரப்பண்ணிய பழத்தமிழ்ப் பாட்டே!
ஆயினும் வேண்டாம் எனைவிடு! செந்தமிழ்த்
தாயினும் நான் தொழத்தக்கது ஒன்றுண்டோ?
கேள்! கேள்! போர்முரசு! தூக்கிய
வாள் இது வெல்க! வண்டமிழ் வாழ்கவே!
|
( 255 )
|
காட்டுக் கதிகாரி கண்ணையன். காலையிலே
வீட்டுக்குப் போக மிதிவண்டி ஏறினான்.
ஆலஞ்சா லைதாண்டி அல்லிக் குளம் தாண்டி
வேலங்கா டொன்றும் விலக்கிச் செலும்போது
செந்தாழை வேலிக்குத் தென்னண்டை ஓர்புலியை
'அந்தோ!' என்றான் கண்டே! அங்கோர் இளவஞ்சி
பாவாடை கட்டிப் பலாவின்கீழ் மென்பட்டுப்
பூவாடை போர்த்துப், புனலொழுகு கண்மூடி
நீளக் கிடந்தாள்! நிலாமுகத்தைத் தின்னாமல்
வேளைப் புதர் ஓரம் வெள்ளாட்டைத் தின்னுதற்குப்
போன புலிகண்ட கண்ணையன் "போபோ" என்
மானை விடுத்தாயே!" என்று மனந்தேறி
நின்றான்! மிதிவண்டி என் செய்வேன்? நீண்டபனை
ஒன்றிலே சார்த்தி உணர்ச்சிப் பெருக்கால்
வழியை மறிக்கும் மலர்ஓடை தாண்ட
விழியூன்றி நீரில் விரல்பட்ட நேரத்தில்
"நில்லப்பா" என்று சொல்கேட்டான், நிலைமாறிச்
சொல்வந்த திக்கைச் சுவைத்தான் இருவிழியால்.
நீண்ட சடைமுடியை, நெற்றித் திருநீற்றை
ஆண்டியைக் கண்டான். அடஇழவே என்றெண்ணி
ஓடையின் அப்புறத்தில் ஓவியத்தைத் தான் காட்டிக்
காடு விழுங்குமுன்னே காப்பாற்ற வேண்டுமென்றான்.
ஆண்டி சிரித்துரைப்பான்; அப்பனே! காப்பவன்
ஈண்டு நீதானா? -- இது கேட்ட கண்ணையன்.
உம்மால் முடிந்தால் ஒரு தொல்லை இல்லை என்றான்!
"என்னால் முடிவதென்றால் என்னப்பன் ஏன்? என்
றுரைத்தான் துறவி! உமக்கப்பன் இங்கே
வரத்தகுந்த போது வரட்டும் அதற்குள்ளே
ஓநாய் கடித்துண்ணும். ஒண்டொடிக்கு மீட்சிதர
ஏனோ தயக்கம்?" எனக்கேட்டான் கண்ணையன்!
"வேண்டாம் குழந்தாய் கேள்! மெய்யான பெண்ணல்ல,
தூண்டிலே! நீயோர் துடுக்கு மீன்!! அண்டாதே,
பற்றுள்ள கண்ணுக்குப் பச்சைக் கிளி அவள்!
பற்றற்றுக் காண்பாய் புரளும் மலைப்பாம்பை!"
என்றான் துறவி! அதே நேரம் எந்திழையும்
நன்று விழிமலர்ந்தாள்! நாற்புறமும் நோக்கினாள்!
அண்டிக்கை கும்பிட்டாள்! ஆளனைக்கை ஏந்தினாள்.
கண்ணையன் விண்ணிற் பறந்தானா! காரோடைத்
தெண்ணீரை நீந்தித்தான் சென்றானோ, யார் கண்டார்?
பெண்ணருகில் நின்று பிறைநுதலே என்னென்றான்.
"அன்னை இல்லை! தந்தை இல்லை! அத்தையிடம் நான்வளர்ந்தேன்
என்னைஎன் அத்தைமகன், 'ஏற்றுக்கொள்' என்றான் ஒழுக்கம் இலாஇடத்தை உள்ளம் தொடுமா?
வழிக்கு வரமாட்டேன் என்பதுணர்ந்தான்,
கசக்கிப் பிழிந்துண்ணக் காத்திருந்தான் காட்டின்
பசிக்கிரை ஆவதுவும் பாக்கிய மென்றிங் குற்றேன்
என்றாள்; அதே நேரம் நீந்தி எதிர்வந்து
நின்றான் துறவி நிலை ஆய்ந்தாள் நேரிழையாள்.
"என்ன குறை உனக்குப் பெண்ணே?" எனக்கேட்டான்;
பின்னையும் ஆண்டியவன் பேசத் தொடங்குமுன்னே
கண்ணையன் தோள் புறத்தில் கானமயில்போய் -- மறைந்தாள்.
கத்தி யெடுத்துக் கடிமுனை நேர்நிறுத்தி
"ஒத்துக்கொள் என்னை! மறுத்தால் ஒழிந்துபோ!
என்று துறவி சொல்ல -- "என்ன இது என்ன இது
நின்ற துறவி உன் நேர் மாமனா?" என்று
கண்ணையன் கேட்டான். அக்கன்னல் பதைத்துரைத்தாள்;
பெண்ணாசை தீர்ந்த பெருமான் இவன் அல்லன்
அத்தை மகன்தான் அறங்காணாத் தீயன், அவன்
கத்தியால் குத்தட்டும்; கண்டதுண்ட மாக்கட்டும்!
அண்டிருங்கள்! ஆனால்இக் கைக்காரன் என்உடலைக்
கொண்டு போகாமல் குழிபறித்து மூடுங்கள்!"
என்றாள்: எதிர்வந்தாள்; "எடுத்துக்கொள் கத்தி" -- என்றாள்!
நின்றாள், இடியைச் சிரிப்பாக்கி நேர் இறைத்தாள்!
கண்ணையன், அத் தீயோனின் கத்தியைக் கைப்பற்றிப்
"பெண்மணியைக் கொல்லுமுன் பேதாய்! எனைக்கொல்க
என்றான், துறவிதான் ஏந்திய கத்தியைத்
தன்மார்பிற் பாய்ச்சிக் குருதிதனில் மிதந்தான்!
கண்ணொப்பான் கண்ணும் கருத்தும் புரிந்ததென்ன?
விண்ணும் விரிபுனலும் வேடிக்கை பார்த்தனவாம்!
செத்தான் மேல் கண்ணீர் செலுத்தி உயிர்காத்த
அத்தான்மேல் வைத்தாள் மெய்யன்பு! |
( 260 )
( 265 )
( 270 )
( 275 )
( 280 )
( 285 )
( 290 )
( 295 )
( 300 )
( 305 )
( 310 )
( 315 )
( 320 )
( 325 )
|
|
|