பக்கம் எண் :

பாரதிதாசன் பன்மணித்திரள்

முதியோர் காதல்

"தோழனே உன்னிடத்தில் சொல்லுகின்றேன் என்காதல்
பாழாகக் கூடாது. பாழானால் வாழ்வேது?
நேற்றுமுன்னாள் நேரிழையை நேரினிலே கண்டேன் நான்.
நேற்றிரவு கண்டு நெடுநேரம் பேசினேன்.
என்னைக் கணவனென எண்ணிவிட்டாள் ஆதலினால்
பொன்னான வாய்திறக்கப் பூவையவள் நாணமுற்றாள்.
மின்னல் இடையாள் மிகுமையல் கொண்டுள்ளாள்.
என்னையிவள் காதலித்தல் நானறிவேன் நானவளைப்
பொன்னாய் மதிப்பதையும் போயுரைக்க வேண்டாமா?
ஆதலின் நீபோய் அவளிடத்தில் கூறிவிடு
மாதரசி சொல்வதைநீ வந்துசொல்வாய் என்னிடத்தில்
செங்கதிரே மேற்கில் மறைந்ததுகாண்! தேனிதழாள்
அங்கிந்த நேரம் அழகாக வந்து நிற்பாள்
மாமரத்தின் தெற்கில் வழிபோகும் அங்கேஓர்
பூமரமும் நிற்கும் புளியமரத் தண்டையிலே!
சோளம் வளர்ந்திருக்கும் கொல்லையொன்று தோன் றுமதன்
நீள வரப்பினில்தான் நின்றிருப்பாள் என்கின்றேன
என்று தலைவன் இசைக்கவே அத்தோழன் --

"இன்றிரவே இன்னும் அரைநொடியில் அன்னவளை
மெய்யிறுக நான்தழுவ வேண்டுமடா தோழா!
விரைந்தோடு மங்கையிடம் என்னுடைய மேன்மை
பெருஞ்செல்வம் கல்வி பெரியபுகழ் அத்தனையும்
சொல்லி மடமயிலாள் தொட்டிழுக்கத் தோதுசெய்வாய்
வல்லியிடம் என்றன் வயதைமட்டும் கூறாதே!
வாங்கிய வில்போல் வளைந்த உடல் எனினும்
ஆங்கே பிறப்பில் அமைந்ததென்று சொல்லி வைப்பாய்!
தேன்தடவ நேர்ந்ததனால் சேர்ந்தநரை என்று
மான்விழியா ளுக்குரைத்து வைத்துவிடு முன்னமே!
முப்பத் திரண்டுபல்லும் மோழையே! ஏனென்றால்
உப்பில்லாப் பத்தியத்தில் அப்படிஎன் றோதிவிடு!
கண்ணின் ஒளி மங்கியதைக் காதலிக்குக் கூறாதே!
பெண்ணரசை மெல்லத் தடவிப் பிடித்திடுவேன்
சார்ந்த இருட்டில் தடுமாற்றம் யாருக்கும்
வாய்ந்த இயற்கைஎன வஞ்சியவள் எண்ணிடுவாள்
கற்பை எனக்களித்த பின்பு கதைதெரிந்தால்,
குற்றமில்லை! போபோபோ என்றான் கொடுங்கிழவன்
தோழன்போய் மீண்டுவந்து சொல்லுகின்றான்; ஐயாவே
வாழைத் துடையுடைய வஞ்சிவந்து காத்திருந்தாள்
சொன்னதெல்லாம் சொன்னேன் துடித்துவிட்டாள்
                              
காதலினால்

மின்னலின் சாற்றைக் கடிதுண்ண வேண்டுமென்றாள்,
காற்றாய் விரைந்துவந்து கட்டித் தழுவிமையல்
ஆற்றா விடில் நான்போய் ஆற்றில் விழுந்திறப்பேன்
என்று பறந்தாள். இதோஎன்றேன் ஓடிவந்தேன்
சென்றுபேரின்பத் திரைக்கடலில் மூழ்கிடுவீர்
போய்வாரீர்! என்று புகன்றுதோழன்மறைந்தான்
வாய்வழியும் எச்சிலொடு காலால் வழிதடவி
முன்னில் விழுந்தெழுந்து முன்காலில் புண்ணடைத்து
கள்ளுண்டான் போலஉடல் தள்ளாடிக் காலிடறச்
சோளம்வளர் கொல்லையிலே நின்றிருந்த தோகையினை
மூளும் வெறியாலே மொய்குழலே என்றணுகித்
தாவி அணைந்தான் தனித்திருந்த அவ்வைக்கோற்
பாவையுடன் வீழ்ந்தான் படுகிழவன்! அண்டை
மறைந்திருந்த தோழன் அங்கு வந்திருந்த நல்லவர்பால்
அறைவான்; கிழவன் மணம்கேட்பான். அஃதியற்கை
தன்னொத்த மூத்தாளைத் தான்தேட வேண்டும்இள
மின்னொத்தாள் வேண்டும் எனல் தீது.





( 5 )




( 10 )
 



( 15 )





( 20 )




( 25 )




( 30 )




( 35 )




( 40 )





( 45 )




( 50 )




( 55 )

பிழைத்தேனா? செத்தேனா?

"நாம்வைத்த அன்பு மலையினும் பெரிதே
நம்தோழன் அன்பு கடுகினும் சிறிதே! (நாம்)

பாம்பொன்று சீறும்; தென்றலாம் அதன்பெயர்
பழிபேசித் திரியும்; குயிலாம் அதன்பெயர்!
தேம்பி அழவைத்தான் மாலைச் சுடுகாட்டில்
திறங் கெட்டுப்போகுமோ முகம்காட்டிப் போனால் (நாம்)

கண்ணிருந் தும்உடல் மரத்தினில் மோதும்
காதுகள் இருந்தும் கேட்கிலேன் யாதும்!
பெண்ணிருந் தேன்பெறும் பேறென்ன பெற்றேன்?
பிழைத்தேனா செத்தேனா வந்தானா அவன்றான்? (நாம்)

மார்பின் பூச்சோ எனஎன்னும் மூக்கு;
வண்டுசொற்படி அது முல்லையின் தாக்கு!
தேரின் மணியோ என்றும்என் நெஞ்சம்;
சிட்டுக்கள் அப்படி அல்லவா கொஞ்சும்; (நாம்)

பன்முறை அல்ல, ஒருநொடி விருந்து
பழந்தமிழ்! ஒருசொல்! என்சாவா மருந்து
பொன்னுடல் காதல் தணலால் உருகிற்றே
பூவிதழ் அவனைக் காணாது கருகிற்றே.




( 60 )





( 65 )
 




( 70 )





( 75 )

சாதி புதைந்த மேட்டில்
மாது புதைந்தாள் அழகன் மார்பிலே

                    [ 1 ]

அன்புடை அழகர்க்கு வரையும் அஞ்சல்;
நீர்ஒரு சாதி! நான் ஒரு சாதி!
ஆயினும் அன்பால் இருவரும் ஒருவர்,
நம்மைப் பெற்றவர் நச்சுச் சாதியாம்
பாழுங் கிணற்றில் வீழ்ந்தி ருப்பவர்
அம்மணல் தவளைகள் நம்மணம் ஒப்பார்!
என்னைப்பிரிந் திருப் துமெக்கெப் படியோ,
உமைப்பிரிந் திருப்பதென் உயிர்பிரிந் திருப்பதே.
இன்றே இருவரும் எங்கேனும் ஓடலாம்
ஒன்றாய் -- உயிரும் உடலுமாய் வாழலாம்.
எழுதுக உடன்பதில்! இங்ஙனம் "அன்றில

                    [ 2 ]

இனிய காதல் அஞ்சலை எழுதினாள்
எழுதிய அதனை எவர்கொண்டு போவார்?
என்று நன்று கருதியிருந்தாள்.

                    [ 3 ]

அழகன் அழகுடல் அங்குவைத் தழகனின்
அன்பு நெஞ்சை அன்றில்பால் வைத்தான்
அவளுடல் தழுவி இவண்வரும் தென்றலைத்
தழுவலால் சாகா திருந்தேன் ஆயினும்
நாணிக் குனிந்தொரு நாள் அவள் சிரித்த
மாணிக்கச் சிரிப்புத் தென்றலில் வருமா?
ஐயோ என்றே அலறினான் அழகன்!
சாதி முடிச்சு மாறித் தனத்தை
நம்புவார் பிடிக்குத் தப்பிநான் அவளோடு
கம்பி நீட்டினால் கனிகசந்திடுமோ!

என்றே அழகன் எதிர்நோக் குகையில்
இந்தா அஞ்சல் என்றொரு கிழவர்
தந்தார்! அழகன் சடுதியிற் படித்தான்

அவன் எழுதிய பதில் :-

         அன்புடை அன்றிலே!
இன்றே இரவே இரண்டு மணிக்கே
இரண்டு பேரும் பரங்கிப் பேட்டைக்
கோடி விடலாம்! உறங்கிவிடாதே!
மெலுக்காய் எழுந்து வளையலைக் குலுக்காது
நடந்துதாழ் திறந்து குறட்டை நண்ணுக,
வாழைக் குலையை வேழம் தூக்கல்போல்
எடுத்துச் செல்வேன். இங்ஙனம் "அழகன

                    [ 4 ]

எழுதி முடித்த இந்த அஞ்சலைக்
கிழவ ரிடத்தில் அழகன் கொடுக்க
அஞ்சினான்! அவன்பா டையப்பா டானதே!
தவறா தவளிடம் தருதல் வேண்டுமே
என்றான் அழகன். இணங்கினார் கிழவர்.
எவரும் அறியா திருக்க வேண்டுமே
என்றான் அழகன் எவரும் அறியார்
என்றார் கிழவர். என்னஇது என்று
பிடுங்கினால் பெருங்கே டன்றே என்றான்.
நெடுமூச் செறிந்து கிழவர் "நீர் இவ்வாறு
ஐயப் படுதல் அடுக்குமோ'' என்றார்.
இவ்வாறு இருவர் பேச்சும் நீண்டது.

                    [ 5 ]

அழகன் தந்தை அறையின் சன்னலின்
வழியாய் இந்த வழக்கறிந்தவனாய்க்
கொல்லையால் குடுகுடு வென்றே ஓடி
அன்றிலின் தந்தையை அழைத்து வந்தான்,
பதுங்கி இருந்து பார்த்திருந் தார்கள்.

                    [ 6 ]

கெட்டவர் அஞ்சலைக் கேட்கவும் கூடுமே
என்றான் அழகன். இரார்என் றார்அவர்.
உம்மை நம்ப ஒண்ணுமோ என்றான்
என்னை நம்புக என்றார் கிழவர்
இதற்குமுன் உம்மை யானறி யேனே
என்றான் அழகன்

எதிரில் கிழவன்
அன்றிலாய் நின்றே ''யான் தான் அத்தான்
அன்றில்'' நாழிகை ஆயிற் றென்றாள்
ஒருவெண் பொற்காசுக் கிரண்டுபடி அரிசி
கண்டநல்லாட்சி கண்டான் போல

மகிழ்ச்சி மனத்திற் தாண்டவ மாடக்
கொடிய சாதிநாய் குலைக்கு முன்னே
நடந்துவா அன்னமே விரைந்துவா மானே
தொத்தடி கிளியே தோளில்! என்றான்.

                    [ 7 ]

அழகனும் அன்றிலும் வியக்கும் வண்ணம்
இருவரின் தந்தைமார் எதிரில் வந்தனர்.
இருவரும் திருமண மக்கள் என்றனர்
சாதி புதைந்த மேட்டில்
மாது புதைந்தாள் அழகன் மார்பிலே!







( 80 )




( 85 )










( 90 )




( 95 )





( 100 )






( 105 )




( 110 )







( 115 )




( 120 )







( 125 )







( 130 )





( 135 )





( 140 )







( 145 )

வந்த சேதி முடிந்ததே?

வந்த சேதி முடிந்ததே -- இயங்கு
வண்டி ஓட்டுவாய் வலவனே விரைவாய்         (வந்த)

செந்தேன் உண்டநினைவு சிறிதுநேரம் இருக்கும்
சேயிழை இன்பநினைவு எப்போதும் இருக்கும்
நொந்தது நோக்காது விழிபார்த்து நிற்கும்
நூலிடை எனைக்கூவிக் கூவி அழைக்கும்         (வந்த)

புதுவை நகருக்கு விரைந்துபோக வேண்டும்
பொறி இயக்குநெய் எத்தனைபடி வேண்டும்?
இதோஎன்று பொறியினை முடிக்கிடு தாளில்
இன்பம் என்று போய்விடுவேன் அவள்தோளில்     (வந்த)

தாவும்வழியில் புக்கத்துறை கண்டு நிறுத்துத்
தமிழன் உணவுவிடுதி காண்பதென் கருத்து -- நல்
ஆவல் ஊசலாட்ட அகத்தும்புறத்துமாகி
அழுவாளின் மார்பில் எனைக்கொண்டு பொருத்து    (வந்த)


( 150 )




( 155 )




( 160 )




( 165 )

காதல் ஒப்பந்தம்

விழலாக வில்லை என்
காதல் விண்ணப்பம்!
அழகிய மயிலுக்கென் நன்றி!
விழியினால் எழுதினாள் ஒப்பந்தம் முற்றும்
வெண்ணகையாள்இட்டாள் கையெ ழுத்தும்  (விழ)

பிழைசெய்த தச்சுக்கு வழிகாட்டும் வடிவு!
பெண்ணமைப்புக்கு முடிந்தஓர் முடிவு!
வழியிலோ ஏழைக்கு வாய்த்தபொற் குவியல்!
வளவயல்நான்; அவள் சம்பா நடவு         (விழ)

மங்கைதரு மின்பம் மட்டுப்பட வில்லை
வையம்என் நினைவில் தட்டுப்பட வில்லை
ஐயோ அவளைப் பிரியமுடிய வில்லை
ஆர்பொறுப்பார் பிரிவால்வரும் தொல்லை          (விழ)

தமிழகம் நெல்லையும் விலக்குதல் முடியும்
தையல்கை விலக்குதல் எப்படி முடியும்?
கமழ்ந்திரும் முல்லையிற் படிந்த வண்டு
கடைப்பார்ப்பாள் உணவுண்ணல் எங்கே உண்டு! 
                                            (விழலாக)
வையமல்ல இன்பக் கடல்இது!
வாழ்க்கை அல்ல அன்பின் தொடர்பிது!
எய்திய இந்நிலை மாறாமை வேண்டும்
இருபத் தைந்து கோடி ஆண்டும்!         (விழலாக)



( 170 )




( 175 )




( 180 )




( 185 )




( 190 )

மாடியில் நிலவு

மாடியிலே உலவும் வானப் புது நிலவு
கூடிக் குலவ எனைக் கேட்டு -- மெல்லப்
பாடினாளே ஒரு பாட்டு -- நல்
வாழ்வுக் கினிதாகிய நாள்
மகிழச்செய்யுந் திருநாள்
தேடிய நற்சுவைக் கூட்டு -- வந்து
சேந்தினாளே வலை -- போட்டு!

ஏடு விரிந்தமலர் எட்டிப் பார்த்தெனையே
மாடிக்கு வரும்படி கூவும் -- கைம்
மலர்கள் நீட்டி எனைத் தாவும்
வாளப் பறவையும் நானா?
மங்கை வராததும் ஏனோ?
வீடு நுழையவும்அ வாவும் -- அந்த
வீட்டார் தடுத்தால் உளம் நோவும்.

கண்கள் அழகை எட்டும் காதுமொழியை எட்டும்
பெண்ணைத் தொடவோ கைஎட் டாது -- நல்ல
பேரின்பம் இன்றுகிட் டாது.
பிசைமுக் கனியின் சாறே
மிகவும் பெரியதோர் ஆறாய்
அண்டையி லேஓடும் போது -- நான்
அள்ளி அருந்த முடியாது.

தண்ணென்ற தென்றலே சாற்றுவேன் ஒன்றையே
கண்ணாட்டிக் கேசென்று கூறு -- நான்
கழறுவதையே ஒரு வாறு
கதிரொளி மங்கிற்று
விரைவினில் தோட்டத்துத்
திண்ணையின் மேலேவந் தேறு -- வந்து
சேறுவேன் ஏதிடை யூறு?


( 195 )




( 200 )





( 205 )





( 210 )





( 215 )




( 220 )

அவள் அப்படி

 (தனித்தமிழ் வண்ணம்)

                  

(இசை ; கானடா               தாளம் ; ஆதி)

         தனதன தனதன தனதன தத்தன
         தனதன தனதன தனதன தத்தன
         தனதன தனதன தனதன தத்தன
         தனதன தனதன தனதன தத்தன தனதானா

அமிழ்தமிழ் தமிழ்தெனில் இருதமிழ் கிட்டிடும்
அவளிதழ் நினைவினில் விளைவன முத்தமிழ்
அழகிய முழுமதி அவள்முகம் ஒப்பது
கருவிழி இருகயல்! மொழிகனி ஒப்பது -- கதையாமோ!

கமழ்குழல் மலரொடும் அணிகள் சுமப்பது!
குறுநகை உலகினை ஒளியில் அமைப்பது!
கனமணி அணியிழை கவிஞர்ம லைப்பது!
கலையது கதிரிழை நெசவில்விரித்தது -- மிகையாமோ!

சுமையுடல் எனமிகு துயர்கொ ளுடுக்கையை
மெலிவுறு கொடியினை நிகருமி டுப்பினள்
சுனையினை அழகுசெய் மரையின்ம லர்க்கையின்
விரலிடை நகமது கிளியைநிகர்ப்பது -- தவறாமே

நமதொரு தமிழகம் அடைதோர் வெற்றியும்
நடைமுறை தனிலுறும் மகிழ்தரு பெற்றியும்
நணுகிய தெனமனம் மகிழ்வையளிப்ப
நடுவெயில் இடையவள் நறுநிழல் ஒப்பவள் -- அறிவாய்நீ










( 225 )





( 230 )





( 235 )





( 240 )

நீ வேண்டாம்

இலவுகாத்த கிளியானேன் நானே -- அவன்
என்னைத்தெருவில் விட்டுச்சென்றிட் டானே
நிலையாக நம்பியிருந் தேனே -- அவன்
நினைத்ததைநான் அறியவில்லை மானே!

தலையில்அடித் தான்மணப்பேன் என்று -- ''நீ
தமக்கை மகளே'' எனப்பு கன்று
குலையில்அடித் தான்பாவி இன்று -- கருங்
குரங்கிடத்தில் அன்புவைத்தான் சென்று!

தேனிருக்க வேம்புகொள்ள லாமா? -- என்னைத்
திகைக்கவிட்டா யோஅருமை மாமா!
நானிருக்க அவளைஎண்ண லாமா? -- என்னை
நலியவிட்டா யோஅருமை மாமா?

நானிப்படி கேட்டேனடி கெஞ்சி -- அவன்
நவின்றமொழி கேளடிஎன் வஞ்சி;
யானெழுதும் அஞ்சலையும் மிஞ்சி -- பள்ளி
ஏகலில்லை நீசிறுநெ ருஞ்சி !

உருவணக்கம் தரும்உனக்கே இன்பம் -- வே
றொருவனைஏன் மணக்க வேண்டும் பின்பும்?
திருமாலின் சிவனாரின் முன்பும் -- நீ
செங்கைகூப்ப வாய்த்ததாஉன் அன்பும்?

வரும்பார்ப்பைச் சாமிஎன் றழைத்தாய் -- உன்
மாண்குடியும் நாணமுற வைத்தாய்
பெரியாரின் நன்னெறிப ழித்தாய் -- தமிழ்ப்
பெருநாட்டின் பெருமையைக்குலைத்தாய்!






( 245 )





( 250 )





( 255 )





( 260 )





நெட்டுக்காரி

கொஞ்சம் திரும்பிப் பாராயா? -- நான்
கூப்பிடும் போதும் வாராயா?
நெஞ்சின் ஆசை தீராயா? -- உன்
நேயம் எனக்குத் தாராயா?

கெஞ்சும் மொழியும் கேளாதா? - நீ
கேட்டுத் திரும்ப மாளாதா?
தஞ்சம் அளிக்கத் தாளாதா? -- உன்
தாராளம் என்னை ஆளாதா?

ஒருசொல்லுக்குப் பஞ்சமா? -- என்
உள்ளக்கொதிப்புக் கொஞ்சமா?
இரும்புதான்உன் நெஞ்சமா? -- அடி
என்மேல்உனக்கு வஞ்சமா?

திருவி ளக்கடி வீட்டுக்கே! -- நீ
செந்தமி ழடிஎன் பாட்டுக்கே!
உருவி ளக்கடி நாட்டுக்கே! -- தீ
உயிரடி என் கூட்டுக்கே!

அன்னத் தொடுநடைப் போட்டியா? -- என்
ஆசைம னத்தினில் ஈட்டியா?
பின்னழ கைமட்டும் காட்டியா -- நெஞ்சு
பிளந்தனைமையல் மூட்டியா?

முன்னழ கும்நகை முத்தழகும் -- நல்ல
முத்தமிழ் கொட்டும்உ தட்டழகும்
என்னழகும் சேர்இ ரண்டழகும் -- அடி
இன்பத்திலே நீந்தப்பழகும்!

( 265 )





( 270 )






( 275 )





( 280 )






( 285 )

கைப்புண் நோக்கக் கண்ணாடியா வேண்டும்?

        என் மேல் ஆசை இல்லாவிட்டால்
        எனைக்கண்டு சிரிப் பாளா?

அன்னநடை நடப்பாளா? -- என்
முன்னே முன்னேவரு வாளா?
தன்னுடை திருத்து வாளா? -- தன்
மின்னிடை குலுக்கு வாளா? -- அவளுக்
        கென்மேல் ஆசை இல்லாவிட்டால்
        எனைக்கண்டு சிரிப் பாளா?

இப்படி வந்தால் தோளா -- லெனை
இடித்துக் கொண்டு போ வாளா?
அப்படிப் போகவி டாளா? - என்
அடியை யும்மதிப் பாளா? -- அவளுக்
        கென்மேல் ஆசை இல்லாவிட்டால்
        எனைக்கண்டு சிரிப்பாளா?

காலங் கடத்தக் கூடா -- தென்று
கையோடு பிடிப் பாளா? -- அவள்
ஆலம் பழத்தைப் பொறுக்கிப் பொறுக்கி
என்மேலே அடிப் பாளா? -- அவளுக்
        கென்மேல் ஆசை இல்லாவிட்டால்
        எனைக்கண்டு சிரிப்பாளா?

கொல்லைக்கு நான்போம் போதே -- அவள்
கொஞ்சும் கருங்குயில் போலே
மெல்ல மெல்லப் பாடு வாளா? -- அவளுக்
        கென்மேல் ஆசை இல்லாவிட்டால்
        எனைக்கண்டு சிரிப்பாளா?

என் நாய்க்குட்டிக்கு முத்தம் -- அவள்
என்னெதிரேகொடுப்பாளா?
சின்னசிட் டுக்களின் கூடல் -- கண்டே
என்னையும் பார்த்தழுவாளா? -- அவளுக்
        கென்மேல் ஆசை இல்லாவிட்டால்
        எனைக்கண்டு சிரிப்பாளா?


( 290 )





( 295 )





( 300 )





( 305 )





( 310 )





( 315 )



இன்ப வெள்ளம்

அன்றைக்குத்தான் சரிஎன்றாயே
அப்புறம் என்னடி        நாணம்?
இன்றைக்குத்தான் தனித்திருந்தாய்
இன்னும் என்னடி        வேணும்?
ஒன்றுக் கொடு கன்னத்திலே
உயிரைக் காக்க          மயிலே
ஓடைப் புனலில் ஆடவேண்டும்
உறவு செய்யடி          குயிலே

நன்றாகஉன் முகத்தைக் காட்டு
நட்டுக் கொண்டதும்        ஏனோ?
குன்றில்ஏறிக் கொம்புத் தேனைக்
கொள்ளை கொண்டிடு       வேனோ
அன்றிலைப்பார் சிட்டுக்கள் பார்
அலுப்பில்லாத             காதல்
ஆளிருந்தும் அறிவிருந்தும்
உனக்கேனடி              சாதல்?

வலிதிழுப்பான் மகிழ்ச்சி கொள்வோம்
என்று சும்மா        நின்றாய்
கலிதவிர்க்க வந்தவளே
கண்டுகொண்டேன்    நன்றாய்
எலி இழுக்கும் மாம்பழம்போல்
இருந்தேன் முன்     னாலே
எட்டி இழு! கட்டித் தழுவ
ஏன் சுணக்கம்       மேலே!

மலை காணேன் மலர் காணேன்
வைய கத்தைக்        காணேன்
நிலை காணேன் உடல் காணேன்
நிறை பொருள்கள்      காணேன்
கொலைபுரிந்தாய் என்உடலைக்
கொள்ளை கொண்டாய்   உள்ளம்
கூடிவிட்டாய் காண்ப தெலாம்
ஓர் இன்ப            வெள்ளம்

( 320 )





( 325 )





( 330 )





( 335 )




( 340 )





( 345 )




( 350 )

அவன்மேல் நினைவு

மனவீட்டினில் அவனிருக்கையில்
மறந்துறங்குவ தெப்படி! -- அடி
வஞ்சிக்கொடியே செப்படி -- அவன்
இனிக்கும்தமிழ் நாடிச் சென்றான்
என்று சொல்லவதும் தப்படி -- என்
       மனவீட்டினில் அவனிருக்கையில்

இனிக்கப்பேசும் வாய் மறந்தே
யான் உறங்குவ தெப்படி? -- அடி
ஏந்திழையே செப்படி! -- அவன்
எனைவிடுத்தான் படிக்கச் சென்றான்
என்று சொல்வதும் தப்படி -- என்
       மனவீட்டினில் அவனிருக்கையில்

கட்டி அணைக்கும் கையை மறந்து
கண்ணு றங்குவ தெப்படி? -- அடி
கானக்குயிலே செப்படி! -- அவன்
எட்டிச் சென்றான் தமிழ் ஆய்ந்திட
என்று சொல்வதும் தப்படி -- என்
       மனவீட்டினில் அவனிருக்கையில்

ஒட்டும் அன்பன் உடல் மறந்தும்
உறக்கம் கொள்ளுவ தெப்படி? -- நடை
ஓவியமே செப்படி! -- அவன்
எட்டச் சென்றான் தமிழ் பரப்பிட
என்று சொல்வதும் தப்படி -- என்
       மனவீட்டினில் அவனிருக்கையில்

தொட்டால் சுவைக்கும் விரல் மறந்தே
தூக்கம் கொள்ளுவ தெப்படி? -- அடி
தோகை யேநீ செப்படி -- அவன்
எட்டுத் திசையும் தமிழுக்குச் சென்றான்
என்று சொல்வதும் தப்படி -- என்
       மனவீட்டினில் அவனிருக்கையில்

பட்டால் இனிக்கும் உதட்டை மறந்து
பாயிற் படுப்ப தெப்படி? -- அடி
பச்சைக் கிளியே செப்படி? -- அவன்
இட்டே தமிழ் பரப்பச் சென்றான்
என்று சொல்வதும் தப்படி -- என்
       மனவீட்டினில் அவனிருக்கையில்





( 355 )





( 360 )





( 365 )





( 370 )





( 375 )




( 380 )





( 385 )

அவன் எழுதிய அஞ்சல்
(அஞ்சல் விளக்கம்)

கேளாய் தோழி? கேட்டில் உழன்றநான்
ஆளன் எழுதிய அஞ்சலால் மகிழ்ந்தேன்.
செய்திச் சுருளுக்குச் செப்பும் பெயரே
அஞ்சல் என்பதாம்; அதுகாரணப் பெயர்!
நானதை விளக்குவேன் நன்று கேள்நீ:

எழுதிய செய்திச் சுருளை எவரும்
ஆவ ணத்திற் சேர்ப்பர்; அவற்றை
ஊர்க்கொரு பையே யாகச் சேர்த்தே
அஞ்சற் காரன் வாயிலாய் அனுப்புவர்.

தகட்டுச் சிற்றிலை மிகப்பல கோத்த
வளையம் தலையில் வாய்ப்புறப் பொருந்திய
கலகலத் தடியும் கையும் ஆகிய
வலியான் ''அஞ்சல் வன்சுமை'' தாங்கிய
நெடுவழி செல்லுவான் நீகண் டிருப்பாய்!
அஞ்சலோன், அதைப்பிறர் பறிப்பார் என்றே
அஞ்சலால் செய்திச் சுருளுக்கு அஞ்சல்
என்பதோர் ஆகு பெயராயிற்று.

மற்றுமோர் காரணம் வழுத்துவ துண்டு
''அரசினர் ஆள்இவன்'' என்று சலங்கை
உரைத்தலால் பறிக்க எண்ணுவார் உள்ளம்
அஞ்சலால் செய்திச் சுருளைத் தமிழர்
அஞ்சல் என்றனர்! என்பதும் அறிக.

இவ்விரு காரணம் இருக்க நானுமோர்
காரணம் கழறு கின்றேன்! அயலூர்
சென்ற காதலன் சேயிழை என்னை
மறந்தானோஎன மருண்டிருக்கையில்
அஞ்சாதேஎனும் அருமைப் பொருள்படும்
அஞ்சல் என்றதால் சுருளுக்கு
அஞ்சல் என்றபேர் அமைந்தது நன்றே!




( 390 )







( 395 )




( 400 )





( 405 )





( 410 )

அம்மாபோய்விட்டாள் அன்பை அழை!

காளையடி வீட்டுக் கொல்லையிலே! -- சென்று
கட்டிப்போட்டுவாடி என்மயிலே
வேலையோடு சென்று புல்லிடுவேன் -- பயன்
விருந்துக்கு நன்றி சொல்லிடுவேன்
தாளினைப் போடடி! என்அன்னை -- வீட்டில்
தனியே விட்டுச்செல் வாளென்னை
பாளை பிளந்த சிரிப்புடையாய் -- அந்தப்
பத்தமடைப்பாயை நீவிரிப்பாய்!

என்னம்மை இன்னமும் போகவில்லை -- தோழி
இங்குநம் ஆசையும் தீரவில்லை
இன்ப இலக்கியம் கையிலுண்டு -- நம்
ஏக்கம் தவிர்த்திட வாய்ப்புமுண்டு

இன்றைய வாய்ப்பினை நானிழந்தால் -- வே
றெப்போது நான்பெறக் கூடுமடி?
அன்பனைச் சென்றழை என்தோழி -- என்
அம்மையும் சென்றுவிட்டாள் வாழி!

( 415 )





( 420 )





( 425 )