கேளாய் தோழி? கேட்டில் உழன்றநான்
ஆளன் எழுதிய அஞ்சலால் மகிழ்ந்தேன்.
செய்திச் சுருளுக்குச் செப்பும் பெயரே
அஞ்சல் என்பதாம்; அதுகாரணப் பெயர்!
நானதை விளக்குவேன் நன்று கேள்நீ:
எழுதிய செய்திச் சுருளை எவரும்
ஆவ ணத்திற் சேர்ப்பர்; அவற்றை
ஊர்க்கொரு பையே யாகச் சேர்த்தே
அஞ்சற் காரன் வாயிலாய் அனுப்புவர்.
தகட்டுச் சிற்றிலை மிகப்பல கோத்த
வளையம் தலையில் வாய்ப்புறப் பொருந்திய
கலகலத் தடியும் கையும் ஆகிய
வலியான் ''அஞ்சல் வன்சுமை'' தாங்கிய
நெடுவழி செல்லுவான் நீகண் டிருப்பாய்!
அஞ்சலோன், அதைப்பிறர் பறிப்பார் என்றே
அஞ்சலால் செய்திச் சுருளுக்கு அஞ்சல்
என்பதோர் ஆகு பெயரா யிற்று.
மற்றுமோர் காரணம் வழுத்துவ துண்டு
''அரசினர் ஆள்இவன்'' என்று சலங்கை
உரைத்தலால் பறிக்க எண்ணுவார் உள்ளம்
அஞ்சலால் செய்திச் சுருளைத் தமிழர்
அஞ்சல் என்றனர்! என்பதும் அறிக.
இவ்விரு காரணம் இருக்க நானுமோர்
காரணம் கழறு கின்றேன்! அயலூர்
சென்ற காதலன் சேயிழை என்னை
மறந்தா னோஎன மருண் டிருக்கையில்
அஞ்சா தேஎனும் அருமைப் பொருள்படும்
அஞ்சல் என்றதால் சுருளுக்கு
அஞ்சல் என்றபேர் அமைந்தது நன்றே!
|
( 175 )
( 180 )
( 185 )
( 190 )
( 195 )
|