பக்கம் எண் :

பாரதிதாசன் பன்மணித்திரள்

திராவிடர்க்கு விண்ணப்பம்


தென்னாட்டுத் தாய்மாரே தந்தை மாரே!
திராவிட நல் இளைஞர்களே உடன் பிறந்தீர்!
முன்னாட்கு முன்னாளே நாவற் றீவை
முழுதாண்ட மூவேந்தர் மரபி னோரே
மன்னர்க்கு மன்னரென வடவர் வாழ்த்த
வாழ்ந்திட்ட வாழைக்குக் கீழ்க்கன் றன்னீர்!
கன்னடரே கேரளரே துளுவப் பாங்கீர்
கவின்தெலுங்கப் பாங்கினரே உணர்வு மிக்கீர்

திருத்தமிழத் துருக்கர்களே சமண மக்கான்
திராவிடத்துக் கிறித்தவரே, புத்தச் சார்பீர்;
திருத்தமிகு வைணவரே சைவத் துள்ளீர் --
தென்னாட்டுப் பார்ப்பனரே என்விண் ணப்பம் ;
தெருத்தோறும் ஊர்தோறும் வீடுதோறும்
செல்லுமா றேவிடுத்த என்விண் ணப்பம்!
வருத்துகின்ற நாட்டுநிலை மாறச் செய்து
மானத்தைக் காத்திடுமோர் ஆவலாலே

நெடுங்குன்றத் தோளுடை யார் திராவி டர்தம்
நெஞ்சுதொறும் ஏறவிட்ட எண்விண் ணப்பம்?
அடங்காத எழுச்சி்யினைச் செய்க! வெற்றி
அடையுமட்டும் உருவியவாள் உறைகா ணாத
கடும்போரை வளர்த்திடுக குருதி யாற்றங்
கரையினிலே திராவிடர்கள் வாகை சூடி
நடுந்தறியான் மணிக்கொடியால் திராவி டர்தம்
நல்வாழ்வை உயர்த்துகவிண்ணப்பம் கேளீர்!

இன்றல்ல நேற்றல்ல பன்னனூற் றாண்டாய்
இந்நிலத்தைப் பொன்னிலத்தைதத், திராவிடத்தை
என்றேனும் எவ்வகையி லேனும் பற்றி
ஈடழிக்க வழிபார்த்தார் வடக்கு நாட்டார்!
ஒன்றல்ல அவர்சூழ்ச்சி மனுநூல் தன்னை
ஒழுக்கநூல் எனச்சொல்லி வலைவிரித்தார்
அன்றுமுதல் இருடியரை முனிவர் தம்மை
ஆள்வளைக்கத் திராவிடத்தில் அனுப்பிப் பார்த்தார்.

திராவிடரை இழிவுறுத்தும் கதைகள் கோத்துத்
திராவிடரை நம்பும்வகை செய்து பார்த்தார்,
இராவிடத்தில் தலைநிமிர்ந்தும் மறவர் மக்கள்
இருப்பிடத்தில் அடிவீழ்ந்தும் பார்த்தார்; தெய்வ
மரபினர்கள் தாம்என்று கூறிப் பார்த்தார்.
மன்னர்களைப் பல்வகையால் மயக்கிப் பார்த்தார்
ஒரேநாட்டார் நாம் என்று சொல்லிப் பார்த்தார்
ஒரேஇனத்தார் நாம் என்று புளுகிப்பார்த்தார்

மொகலாயர் முதல்அயலார் படை எடுப்பால்
முழுகிவிடும் இந்துமதம் என்று கூறி
மிகநயமாய்த் திராவிடத்தை வளைக்கப் பார்த்தார்
வீழ்ஆலின் வௌவாலைக் குயில்என் பார்போல
தகுமொழிஎன் றும்தேவ மொழியீ தென்றும்
தம்மொழியைத் திராவிடத்தில் உயர்த்தப் பார்த்தார்.
புகழ்தமிழாம் பூங்காவில் குயிலை மண்ணிற்
புதைத்திடவும் ஏதேதோ செய்து பார்த்தார்.

மேனாட்டார் இங்குவந்தார் அவரிடத்தே
மிகத்தாழ்ந்து தம்கொள்கைஒப்ப வைத்து
வால்நாட்டி அவரைப்பின் ஆழம் பார்த்து
வாலறுக்கத் தலைப்பட்ட மேனாட் டாரை
ஆனமட்டும் எதிர்ப்பதுபோல் வெளிக்குக் காட்டி
அலுவல்பெறக் கால்பிடித்துத் தலை நிமிர்ந்துதேன் அடடா தேசபக்தி என்று கூறி
திராவிடத்தில் விளம்பரமும் செய்துகொண்டார்

நானிலத்துப் போர்வரவே ஆங்கி லத்து
நரிக்குள்ள வலியொடுங்கிப் போனதாலே,
மானிகள்போல் இந்நாட்டின் அதிகா ரத்தை
வால்குழைத்த வடக்கரிடம் ஒப்ப டைத்தார்
ஓநாய்க்கோர் அதிகாரம் வந்து விட்டால்
உயர்புலியும் ஆடாகத் தோன்றி டாதோ?
தீநினைப்பை வெளிக்காட்டலானார் இங்கே!
திராவிடர்என் றோரினமே இல்லை என்றார்.

செங்குட்டு வன்பிறந்த திராவி டத்தைச்
சிறுவடக்கர் ஆளுவதோ நன்று! நன்று
மங்கிற்றுத் திராவிடந்தான் எனும் நினைப்போ?
மாண்டார்என் றெண்ணினரோ மறவர் மக்கள்!
எங்குற்றீர் உறவினரே! ஏன் உறக்கம்?
எழுந்திருப்பீர் பகைநினைப்பை ஒழிக்க வேண்டும்
செங்குத்துத் தோளெங்கே மறத் தனத்தைச்
சிறிதறிய வேண்டுமிந்தப் பகைவர் கூட்டம்.

வடமொழியாற் பிறந்ததென்றார் தமிழை! என்ன
வாய்ப்பதட்டம்! இவ்வையம் அறிய நம்மேல்
சுடுமொழியை வீசுகின்றார் அன்றோ? நம்மைத்
துரும்பெனவே எண்ணுகின்றார் அவ் வடக்கர்
படியரிசித் தேவைக்கும் முழத் துண்டுக்கும்
பல்லிளித்துத் தமைநோக்கிக் கெஞ்சத்தக்க
அடிமைநிலை நோக்கவந்தார் இதுவும் சொல்வார்
அடக்காமல் விட்டுவைத்தால் எதுவும் சொல்வார்!

வடநாட்டுப் பொருள்விற்கும் சந்தை யாக்கி
வடிகட்ட வழிசெய்தார் திராவி டத்தை!
அடிப்படையாம் விளைபொருள்கள் அவர் ஒப்பந்தம்
அரசினரின் சலுகைக்கோ குறைச்ச லில்லை!
விடிவிளக்கில் தூங்காமல் வடவர் இங்கே
மிகும்வட்டி குவிப்பதுவும் பெரும் வேடிக்கை! உடனடியாய்ச் செயத்தக்க தொன்றே ஆகும்
உள்ளதிரா விடர்நமக்குள் பிளவு வேண்டாம்,

அமைச்சரென நம்மவர்க்குப் பெயர் அமைத்தே
அவர்கையால் திராவிடரைக் கெடுப்ப தன்றி
இமைப்போதும் அவர்விருப்பம் போல் நடக்க
எள்ளளவும் இடந்தரார் இதைஎண் ணாமல்
நமக்குரிய திராவிடர்கள் சில்லோர், இன்று
நம்கொள்கைக் கெதிராக நடக்கின் றார்கள்
தமக்குரியார் வடவரல்லர் என்னும் உண்மை
தாமறிவார் இன்றில்லாவிடினும் நாளை !

பழையவர லாறுண்டு நடப்பும் கண்டோம்
பச்சைநஞ்சாம் வடவருக்குத் திராவி டர்கள்
தழைந்ததிரா விடநாட்டை அடக்கி ஆளத்
தலைமுறைத லைமுறையாய் முயற்சி செய்தார்
இழைத்துணையாய்ப் பழகிடினும் திராவி டர்கள்
இராக்கதர்என் றருவருக்கின் றார் வடக்கர்.
வழுக்கிவிட நேர்ந்திடினும் வடக்கன் போட்ட
வலைக்குள்விழும் திராவிடன்தன் மானம் விற்போன்

"கீரையுண்டு நாள்கழிப்பர் திராவிடர்கள
கெட்டழிவார் இவ்வாறு நம்மைச் சொன்னார்.
தேரைஎன மதிக்கின்றார் வேங்கை தன்னை!
தென்னாட்டை இவர்தாமோ வாழ வைப்பார்?
ஊரையடித்து உலையிடும் வடக்கர் கொள்கைக்கு
ஒத்துழைத்தல் பொதுத்தொண்டாம், தம்மின்னத்தின்
பேரைஅழிக் கின்றார்கள் திராவி டத்திற்
பிறக்கின்ற பெரும்பேறு பெற்ற சில்லோர்!

சிறப்புடைய குடித்தனத்தான் மறத்தனத்தால்
செங்கோல்கொண் டிந்நாட்டை ஆளத் தக்கான்,
அறத்துறையில் பண்பட்டான் "தன்நாட் டார்க்கே
ஆவதொன்றை" ஈகஎன்று நாண மின்றித்
தறுக்குடைய வடக்கனிடம் செல்லுகின்றான்
தனித்துநின்று வடபுலத்தைத் தகர்க்க வல்லான்!
துறக்கின்றான் தன்மானம்; தூதூ தூதூ
துடிக்கின்றோம் உடன்பிறந்தான் நிலைமை கண்டே!

இதுவேநம் தலைமுறைக்குத் தேர்தல் காலம்
இடர்சூழ்ந்த திராவிடத்தை மீட்க வேண்டும்
முதுவேனில் காலத்தே எறும்பின் சாரை- முடுகுதல்போல் அணிவகுத்து முன்னே றிப்போய்ப்
புதியதொரு வரலாற்றில் பொன்னெ ழுத்தால்
புறங்காட்டி னார்பகைவர் என்று தீட்ட
எதிரிகளை வலியடக்கி வாகை சூடி
இனவெற்றிக் கொடிதன்னை ஏற்ற வேண்டும்.



( 5 )





( 10 )




( 15 )





( 20 )





( 25 )




( 30 )





( 35 )




( 40 )




( 45 )





( 50 )




( 55 )





( 60 )





( 65 )




( 70 )





( 75 )




( 80 )





( 85 )





( 90 )




( 95 )





( 100)





( 105)




( 110 )





( 115 )




( 120 )





( 125 )



தமிழ் நாட்டை விடுதலை செய்வோம்

தமிழ்நாட்டை விடுதலை செய்வோம் -- கெட்ட
சழக்கர் ஆட்சியை வேரோடு கொய்வோம்

அமையாப் பார்ப்பனப் பகைவர்க்குத் தமிழரை
அண்ணாத் துரைகள் காட்டிக் கொடுத்தாலும்,
தமிழுக்கு வடமொழி தாய்என்று தெ. பொ
மீனாட்சி அழகுகள் சாற்றித் திரிந்தாலும்
தமிழ்நாட்டை விடுதலை செய்வோம் -- கெட்ட
சழக்கர் ஆட்சியை வேரோடு கொய்வோம்!

நேருவின் அடியில் காம ராசர்கள்
நெடுஞ்சான்கடையாய் விழுந்திட்ட போதிலும்
தீராப் பகையொடு தமிழர்கூட் டத்தைச்
சிறையில் தள்ளிக் கொலைசெய்த போதிலும்
தமிழர்நாட்டை விடுதலை செய்வோம் -- கெட்ட
சழக்கர் ஆட்சியை வேரோடு கொய்வோம்!

தமிழர் செய்த தவம்பலித் திட்டது
பெரியார் திருவுளம் எமைக்காக்க வந்தது
சமையம் சாதி ஆரியம் இந்தி
தலைதூக்கி எங்கள் காலைக் கவ்வினும்
தமிழ்நாட்டை விடுதலை செய்வோம் -- கெட்ட
சழக்கர் ஆட்சியை வேரோடு கொய்வோம்!

( 130 )





( 135 )





( 140 )





( 145 )

தமிழ்நாட்டு வாழ்த்து

தமிழ் நா டே வாழ்க -- எம்
தாய் நா டே வாழ்க
அமிழ் தா கியஇய லிசைகூத் தென்னும்
தமிழா கிய உயிர் தழையும் விழுமிய
                   தமிழ்நாடே -- வாழ்க!

இலங்கை சிலம்பும் குமரித் திருவடி தென்பால்
எழிலார் விந்தக் குழலார் வேங்கடம் வடபால்
கலங்கொள் முத்துக் கடலும் பவழக்
கடலும் கிழக்கு மேற்கில் உடுத்த
                   தமிழ்நாடே -- வாழ்க!

குன்றுகள் வான்தொறும் எரிமலை அறியாய்
பெருநில முடையாய் நடுக்க மறியாய்!
தென்றற் குளிரும் செங்கதிர்ச் செல்வமும்
தெண்ணீர் வளவயல் செந்நெலும் கொழிக்கும்
                  தமிழ்நாடே -- வாழ்க!

( 150 )





( 155 )





( 160 )

நாடு நலம்பெற வேண்டும்

நாடு நலம்பெற வேண்டும் -- மக்கள்
நாகரிகம்பெற்று வாழ்ந்திட வேண்டும் -- நாடு

ஏடுகள் மெய்பேச வேண்டும் -- பிழை
எங்குக்கண் டாலும்இ டித்திடல் வேண்டும்
ஆடுகள் போல்விழ வேண்டாம் -- இங்
கவரவர் எண்ணத்தை மேற்கொள்ள வேண்டும்.
வீடிருந்தாற்குடி தோன்றும் -- நல்ல
விடுதலை உள்ளத்தில் நடுநிலை தோன்றும்
மேடுபள்ளங்களைக் கண்டே - நலம்
விதைக்க எழுத்துழுவோன் எழுத்தாளன் -- நாடு

அன்னையும் தந்தையும் போலே - மக்களை
ஆளவந் தாரைநி னைத்திடும் வண்ணம்
தன்னலம் என்பதை நீக்கி -- ஒரு
சார்பிலும் சாராமல் ஆளுதல் வேண்டும்
இன்னல் விளைத்திடும் சாதி - மதம்
யாவினு மேதமை நீக்கிஎல் லார்க்கும்
தன்மை விளைப்பவர் தம்மை -- இந்த
நாடு வணங்கிடும் நாடோறும் என்பேன் -- நாடு

அலுவல கத்தவர் யாவரும் -- அந்த
அலுவல கத்தின்த லைவர்கள் யாரும்
சலுகைகள் காட்டுதல் இன்றி - எங்கும்
சரிநிகர் நீதிசெ லுத்துதல் வேண்டும்
கொலைகள் என்பன யாவும் -- அவர்
கோணல்உளத்தில்விளைவன அன்றோ?

தலைவர் நம் காந்தியின் சாவும் -- அந்தச்
சாய்ந்தத ராசின்வி ளைவென்று சொல்வேன் -- நாடு

நாட்டின் தலைவர்கள் சாதி -- மத
நாய்வெறி தன்னைந றுக்குதல் வேண்டும்.
கோட்சேயைக் கண்டன ரன்றோ -- அவன்
கூட்டத்தின் உள்ளக்கி டக்கையும் கண்டோர்
கேட்டைத்த விர்த்திட வேண்டும் -- மக்கள்
கேண்மையும் ஆண்மையும் நாளும்வ ளர்த்தே
வாட்டம் தவிர்த்திட வேண்டும் -- அன்பே
வாழ்வுக்கு நல்லவகைசெய்ய வேண்டும்! -- நாடு

( 165 )





( 170 )





( 175 )




( 180 )





( 185 )






( 190 )




( 195 )

சாதி உண்டு

ஒட்டாரம் செய்வதென்ன        தங்கச்சி? - நீ
உன்கணவன                 வீட்டுக்குப்போ தங்கச்சி
வட்டாரம் சிரிக்குமடி           தங்கச்சி -- உனை
வாழாவெட்டி என்று சொல்லும்    தங்கச்சி

கட்டினான் தாலியடி           அக்கச்சி -- என்
கைதொட்டதில் குறைக்கவில்லை  அக்கச்சி
தட்டினான் அவன் உறுதி       அக்கச்சி -- எனைத்
தாழ்ந்தசாதி என்று சொன்னான்    அக்கச்சி

இழிந்தவேலை செய்திருக்கத்       தங்கச்சி -- நீ
ஏற்றுக்கொண்டால் வாழமுடியும்     தங்கச்சி
ஒழிந்தநேரம் உனை அழைத்தால்   தங்கச்சி -- நீ
ஒத்துக்கொண்டால் வாழமுடியும்     தங்கச்சி

தழைத்திருந்த தமிழ்நாட்டில       அக்கச்சி -- இந்தச்
சாதிஉண்டோ சொல்லேடி        அக்கச்சி
தன்னரசு போனதடி             தங்கச்சி -- நம்
தலையரசும் போனதுண்டோ?     அக்கச்சி

என்னதீர்ப்பைக் கோருகின்றோம்   தங்கச்சி? -- சாதி
இல்லைஎன்ற தீர்ப்புவேண்டும்    அக்கச்சி
உன்னரசின் தன்மையைக்கேள்    தங்கச்சி, -- சாதி
உண்டென்னும் சட்டமுண்டு      தங்கச்சி!







( 200 )





( 205 )




( 210 )




( 215 )

வீடுண்டு விளக்கில்லை

(எண்சீர் விருத்தம் )

வையப்போர் நடக்கையிலே ஒருநாள் காலை
வடிவேலன் வீட்டுக்கு முத்தன் வந்தே
"ஐயாஉம் இல்லத்தை நீரே ஆள்க
அரசினர்க்குத் தேவையில்லை" என்று சொன்னான்.
துய்யநடுப் பகல்தனிலும் முத்தன் வந்து
சொன்னான் "உம் மின்னியக்க வண்டி தன்னை
மெய்யில்அர சினர்வேண்டாம் என்றார என்றே'
விளக்குவைக்கும் வேளையிலும் மீண்டும் வந்தான்.

உம்வீட்டு நெல்லெல்லாம் உமக்கே ஆகும்
ஒருநெல்லும் அரசினர்க்கு வேண்டாம் என்றான்
இம்மொழிகள் கேட்டவடி வேலன் "ஐயா
இல்லும்பெற் றேன்நெல்லும் பெற்றேன் எண்ணெய்
இம்மியில்லை விளக்கில்லை வெளிச்ச மில்லை;
எனக்குரிமை இருந்துபயன் என்ன" என்றான்,
மெய்மை அது வடிவேலன் நன்று சொன்னான்
விடுதலையால் பயனில்லை கல்வி இன்றேல்!


( 220 )




( 225 )





( 230 )

வறுமை ஒழிப்பு

வீட்டுத் தெருக்கதவைச் சாத்தியவுடன் -- வந்து
வெளித்திண்ணை மேலுறங்கும் ஏழைமக்களும்
மாட்டுத் தொழுவத்தினில் கொசுக்கடியில் -- எரு
மண்ணில் உறங்குகின்ற எண்ணற் றவரும்,
பாட்டை இன்புறுத்தும் நாய்விலக்கியே -- அங்குப்
படுத்திர வைக்கழிக்கும் பாழ்மக்களும்,
கேட்கும் அறிவுமில்லை 'ஒண்டஇடந்' தான் -- எனில்
கெட்டதென்ன உங்கள்விழி ஆளவந்தீரே!

போக்கு வரவகன்ற பொட்டல்களிலும் -- புழு,
பூச்சி உலவுகின்ற சாலைகளிலும்
சாக்கடை, கழிவன போக்கறையிலும் -- பெற்ற
தாய்மடியில் பிள்ளையழக் கல்லடுக்கியே
ஆக்கி வடித்தெடுக்க அடுப்பெரிப்பார் -- உண
வருந்தியஅவ் விடம்துயில் புரிந்திடுவர்.
நீக்கத் தெரிந்ததில்லை தங்கள் குறையை -- எனில்
நீங்கள் புரிந்ததென்ன ஆளவந்திரே!

ஒண்டஇடம் இன்றிஇவர் துன்பமுறுங்கால் -- நீவிர்
உற்றுதவி செய்வதன்றி என்ன செய்கின்றீர்?
கொண்டபணக் காரர்களின் குறைகேட்டே -- அவர்
கொள்ளைஇன்னும் அடித்திட உழைத்தீரோ?
எண்டிசையும் தாயகத்தில் ஏழைகள ழும் -- கண்ணீர்
ஈட்டிஒக்கும் என்னுமொழி கேட்டதில்லையோ?
தொண்டுபுரிந் தின்பமுற எண்ணமிருந்தால் -- நீவிர்
துன்பமுறும் ஏழையர்க்குத் தொண்டுசெய்கவே!

( 235 )




( 240 )





( 245 )





( 250 )




( 255 )

தீவாளியா?

அசுரர் என்று தமிழர்களை ஆரியர்கள்
அழைத்தார்கள்; சுரர்என்று தம்மைச் சொன்னார்
பசிகொண்ட நரிபோலே ஆரியர்கள்
பழந்தமிழர் தமையணுகி வயிற்றைக் காட்டி
இசைந்தவர்பால் கூத்தாடி இனத்தைக் கூட்டி
இடம்பெற்றுக் கலாம்விளைத்துக் குடித்த னத்தை
வசம்பார்த்துப் பெரிதாக்கி வைத்த பின்னர்
வளநாட்டில் ஆதிக்கம் பெறநினைத்தார்!

செங்கதிரை நாழிகைகள் மேற்கில் தள்ளும்
செயல்போலே ஆரியர்கள் தமிழ் வாழ்வில்
பொங்குதமிழ்க் கலைச்செல்வம் மறையும் வண்ணம்
புனைசுருட்டுச் செய்துவந்தார் ஐய கோ! நம்
மங்காத தமிழ்மறவர் வரலாறெல்லாம்
மங்கும்வகை செய்தார்கள்: வையம் கண்ட
தங்கத்தை இரும்பென்று சொன்னார்; ஐயோ!
தமிழரெல்லாம் அசுரர்கள் தாம்சுரர்கள்!

அரக்கரென்றார்; அசுரரென்றார்; நம்மை எல்லாம்
அழகற்றோர் ஒழுக்கமிலார் எனமொ ழிந்தார்
சுரக்கவில்லை மலையருவி உணர்ச்சி வெள்ளம்
தோன்றவில்லை நெஞ்சத்தில் நமை மறந்தோம்
குரங்கினங்கள் என்றுரைத்தார் நம்மை எல்லாம்
குரங்கரடிக் கூட்டமென்றார் கேட்டி ருந்தோம்
அரிக்கின்ற செல்அழிக்க மறந்த தோள்கள்
அன்றுபோல் இன்றுமுண்டு குன்றத்தைப்போல்

வாலியின்பால் வஞ்சகத்தைச் செய்த ராமன்
வாலிக்கு மோட்சத்தை அருள்செய்தானாம்.
கோலைத்தன் வசமாக்கச் சதையை விற்ற
கொடியவன்பேர் ஆழ்வானாம் உடன் பிறந்தீர்
கேலிஎன்று கேட்பீரோ நரகன் என்போன்
கீழ்ச்செயல்கள் செய்தானாம் சுரர்கட் கெல்லாம்!
ஏலாத செயல்செய்த பாவியாம்அவ்
விந்திரனின் ஆட்சியையும் பறித்த துண்டாம்.

பெண்ணினத்தைக் கொல்லாமை கடைப் பிடித்த
பெரியானை நரகனெனும் தமிழச் சேயைப்
பெண்டாட்டி தனையனுப்பி மான மின்றிப்,
பெருவெற்றி கிழித்தாராம் கண்ண வீரர்
பண்டிகையாம் தீவாளி! அந்த நாளாம்;
பல்லக்கை வழிகாட்டி அனுப்பு கின்ற
பெண்டுக்குப் போடுதல்போல் கழுத்துக் கோடி
பெரிதுபெரிதாய்வாங்கிப் படையலிட்டே!

அணிந்திடவும் வேண்டுமாம் அந்த நாளில்
அகமகிழ வேண்டுமாம் அதுவு மன்றித்
தணியாத மகிழ்ச்சிதனை அறிவை அந்நாள்
தலைமுழுக வேண்டுமாம் தமிழர் மானம்
தணல்பட்டுப் படபடென வெடித்த தென்று
சாற்றுதல்போல் வெடிகொளுத்த வேண்டுமாம்! இப்
பணியிட்டோர் ஆரியர்கள் தமிழர் என்னும்
பண்டிதர்கள் இவற்றிற்குக் கவிதை செய்தோர்!

இனமழிப்பார் அடிசுமக்கும் படிச்சு வர்கள்
இனமழிப்பார் அடிசுமப்பார் படிச்ச வர்கள்
கனலென்று நடுங்கினரோ நம்மி னத்தை
கசந்தாரோ? வற்றியதோர் ஓலையைப் போல்
மனம்சுருண்டு போனாரோ? தம்மைத் தாமே
மறந்தாரோ ஐயகோ தமிழர் தம்முன்
முனமிருந்தார் சிலகம்பர் விட்ட தாலே
முளைத்தகம் பக்கிளைகள் மும்மடங்கோ?


( 260 )




( 265)





( 270 )





( 275 )




( 280 )





( 285 )





( 290 )




( 295 )





( 300 )




( 305 )





( 310 )
சுயமரியாதை எக்காளம்

நெருப்பில் துடித்திடும் மக்கட்கெல்லாம் நல்லகாப்பு -- நல்கும்
நீதிச்சுயமரி யாதைஎனும் குளிர் தோப்பு -- அங்குச்
சுரப்பெதெல்லாம் இன்ப மாகிய வண்புனல் ஓடை -- நீவிர்
சுகித்திடவோ அறிவானஇயக்கத்தின் வாடை -- இங்கு
விருப்ப மெலாம்விழ லாக்கியவாழ்க்கையின் கோணை -- அங்கு
விளையும் கருத்துக்கள் காதிலினித்திடும் வீணை -- இங்
கிருப்பதெலாம் ஒருவர்க்கொருவர்செயும் சேட்டை -- அங்
கெழுப்பி யிருப்பது சமத்துவ மானகற்கோட்டை!

உப்பினைஉண்டு கரிப்புக் கழும்சிறு பிள்ளை -- வாழ்வில்
ஊமைக்கடவுள் எதற்குத்தொட்டீர் அந்த முள்ளை -- தேயம்
முப்பத்து முக்கோடி மக்களி னால்பெற்ற பேறு -- இங்கு
மூச்சிவிடக்கூட மார்க்கமில்லா மதச்சேறு -- மண்ணில்
எப்பக்கங் காணினும் இன்பத்திலேறுமுன் னேற்றம் -- இங்
கீன மதப்பலி பீடத்திலேமுடை நாற்றம் -- சொல்விர்
எப்பதம் பெற்றனிர் இந்நாள் வரைக்கும் மண்மேலே -- நீர்
எதற்கும் உமக்குள் உதிக்கும் மதக்கொள்கையாலே!

''தாழ்ந்தவர்'' என்பர் உயர்ந்தவர்க்கு இம்மொழி
                            இன்பம் -- இந்தச்
சாத்திரத்தால் இந்த நாள்வரைக்கும்துன்பம் துன்பம்
                                  -- மண்ணில்
தாழ்ந்தவ ரென்றொரு சாதியுரைப்பவன் தீயன் -- அவன்
தன்னுட லைப்பிறர் சொத்தில்வளர்த்திடும் -- பேயன் -- நீர்
தாழ்ந்து படிந்து தரைமட்டமாகிய நாட்டில் -- இனிச்
சாக்குரு விச்சத்தம் நீக்கிடுவீர்மன வீட்டில் -- இன்று
வீழ்ந்தவர் பின்னர் விழிப்பதற்கே அடையாளம் -- வாய்
விட்டிசைப்பீர் சுயமரியாதை எக்காளம்!

( 315 )




( 320 )





( 325 )





( 330 )






( 335 )