பக்கம் எண் :

பாரதிதாசன் பன்மணித்திரள்

விடுதலை முழக்கம்

(அகவல்)

இசை : சாமா தாளம் : ஆதி

        நம்தமிழ் நாடே நம்தாய் நாடு!
        நம்தாய் நாடு வெல்க வெல்க!
        நம்தமிழ் நாடு வாழ்க வாழ்கவே."
        இந்த முழக்கம் எழுப்புக நன்றே
        வீடெலாம் விடுதலை முழக்கம் மேவுக!
        ஊரெலாம் விடுதலை முழக்கம் உயர்க!
        காலையில் விடுதலை முழக்கம் காட்டுக!
        உண்ணுமுன் விடுதலை முழக்கி உண்க!
        உறங்குமுன் விடுதலை முழங்கி உறங்குக!

   அன்னைமார் விடுதலை முழக்குவா ராகுக!
   தந்தைமார் விடுதலை முழக்கம் தழுவுக!
   மக்கள்மார் விடுதலை முழக்கம் வளர்க்க!
   அலுவல்முன் விடுதலை முழங்குவார் ஆகுக!
   தொழில்முன் விடுதலை முழக்கித் தொடங்குக!
   விற்பனை விடுதலை முழக்கித் தொடங்குக
   படிக்குமுன் விடுதலை முழக்கிப் படிக்க!
   அழகிய விடுதலை மணிக்கொடி எழும்வரை
   பகைவர்க்கென்றுமிங்கு இடியென முழக்கவே!
( 1 )



( 5 )





( 10 )




( 15 )


வெற்றி நமக்கென்று கொட்டடா முரசு

   எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே
   இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே (எங்கு)

   செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும்
   சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும் (எங்கு)

   சிங்கக் குகையில் நரிக்கிடம் தந்தோம்
   செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம்!
   பொங்கும் உணர்வால் எழும்தமி ழரசு
   போர்தொடங் கிற்றுக் கொட்டடா முரசு (எங்கு)

   ஆண்ட தமிழில் ஆரியம் சேர்த்தார்
   ஆயினும் தமிழர் நெறிகண்டு வேர்த்தார்
   மூண்டுணர் வால்எழுந் ததுதமிழரசு
   முற்றும் வெற்றிஎன்று கொட்டடா முரசு (எங்கு)

( 20 )






( 25 )





( 30 )
தமிழினத்தார் ஒன்றுபட வேண்டும்

நாமெல்லாம் திராவிடர்கள் என்ற எண்ணம்
நம்முளத்தில் வேரூன்ற வேண்டும்! மேலும்
நாமெல்லாம் ஒரேவகுப்பார் என்ற எண்ணம்
நன்றாக நம்முணர்வில் ஏற வேண்டும்
தீமையுற நமைஎல்லாம் சமையம், சாதி
சிதறடிக்க இடங்கொடுத்தல் நமது குற்றம்.
ஆமைஉயிர் காக்குந்தன் முதுகின் ஓட்டை
அகற்றென்றால் அவ்வாமை கேட்க லாமா?

ஒற்றுமையைக் காப்பதற்கு மதமா? அன்றி
ஒன்றாகச் சேர்க்கத்தான் மதமா? சாதி,
அற்றஇடம் அல்லவோ அன்பு வெள்ளம்
அணைகடந்து விளைநிலத்தில் பாயக் கூடும்!
பற்றற்றோம் என்பவர்கள் சமயம், சாதி
படுகுழிநீங் குகஎன்னும் முரசு கேட்டோம்.
உற்றநலம் உணர்ந்திடுக தமிழி னத்தார்.
உள்ளூர ஒன்றுபட்டால் வாழ்தல் கூடும்!

மக்கள்தமைப் பிரிப்பதென ஒன்றி ருந்தால்
மடமைதான் அதுவென்பேன். நாமெல் லாரும்
திக்கற்ற பிள்ளைகளாய் இருக்கின் றோம்இத்
தீயநிலை நீக்குதற்கு முடியும் நம்மால்!

எக்குறையும் தீர்ந்துவிடும்; வறுமை போகும்
எந்நலமும் பெற்றிடுவோம் அனைவ ருக்கும்
சர்க்கரைப்பந் தலிலேதேன் மாரி பெய்யும்;
சாதிவெறி சமயவெறி தலைகவிழ்ந்தால்!

நம்தலையில் ஆணியைத்தா மேய டித்துத்
தாம்புதனை அதிற்கட்டிப் பிறரி டத்தில்
தந்துவிடும் மடமைதனை என்ன என்பேன்!
சாதிசம யத்தினிலே வீழ்ந்தோர் அன்றே
தொந்திபெருத் தோர்அடியில் வீழ்ந்தோ ராவார்!
தூவென்று சாதிமதம் கான்று மிழ்ந்தால்
அந்தநொடியேநமது மிடி பறக்கும்
அடுத்தநொடி திராவிடரின் கொடிபறக்கும்!

உடையினிலே ஒன்றாதல் வேண்டும்! உண்ணும்
உணவினிலே ஒன்றாதல் வேண்டும்; நல்ல
நடையினிலே ஒன்றாதல் வேண்டும்; பேசும்
நாவிலும்எண் ணத்திலும்ஒன் றாதல் வேண்டும்
மடைதிறந்த வெள்ளம்போல் நம்தே வைக்கும்,
மாற்றாரை ஒழிப்பதற்கும் ஏறிப் பாயும்
படையினிலே ஒன்றாதல் வேண்டும்; வாழ்வின்
பயன்காண வேண்டுமன்றோ தமிழினத்தார்!




( 35 )




( 40 )




( 45 )





( 50 )





( 55 )





( 60 )





( 65 )




( 70 )

இன்னும் கொஞ்சம் எரிச்சல் கொள்க!

முதலமைச்சர்க்கு
தூக்கம் கலைந்தது துடுக்கு நினைவால்
தாக்கப் பட்டேன் தலையைக் கிளப்பி
வட்டு மின்விசையைத் தட்டினேன் மளக்கென்று;
வெட்ட வெளிச்சம் விளைத்தது விளக்கு
மணிப்பொறி இரண்டரை மணிகாட்டியது
தனிப்பரும் அவாவுடன் தாள்இறகு எடுத்தேன்
எழுந்த எண்ணத்தை எழுதத் தொடங்கையில்
முழந்தொங்கு தாடி முதியோர் ஒருவர்
நெஞ்சில் தோன்றி "நீஇதை எழுதுதல்
கொஞ்சமும் சரியல்ல என்று கூறினார்.
இளைஞன் ஒருவன எழுதினால் தீமை
விளைந்தி டாது விளைந்திடாது என்றான்.

இந்தத் தொல்லை எதற்கு நமக்கு
வந்த எண்ணத்தை மனதில் அழுத்தி
ஏடுநிறைத்திட ஏதாவ தொன்றைத்
தேடுக என்று செப்பினான் ஒருவன்.
என்னடா இழவா இருக்கின்ற தென்று
முன்போல் வட்டு முனையைத் தொட்டேன்
இருண்டது படுத்தேன்; எனினும் தூங்கிலேன்
ஒருவர் பேச்சுக்கு உடன்படேன் என்று
வட்டுமின் விசையைத் தட்டி உட்கார்ந்து
பட்டதை எழுதிப் படித்துப் பார்த்தேன்;
முதலமைச்சரே இதனைக் கேட்பீர்;
பதினாயிரவர் பார்ப்பனர் கூடி
உமதுநல் லாட்சியை ஒழிக்கத் திட்டம்
அமைத்தனர் நீர்உம் அருமைத் திராவிடர்
கழகந் தன்னைக் கடிதே வளர்ப்பீர்.
கிழவரே அதற்கோர் வழியும் சொல்வேன்
"கருஞ்சட்டைப் படைமேல் எரிந்து விழுக
வருந்திங்களுக்குள் வளர்ந்திடும் கழகம

அமைச்சருக்கு இதனை அனுப்ப லாமா?
அனுப்பலாம் என்றதோர் அறிவு; நீ அதை
மடித்துவை என்றதோர் மற்றோர் அறிவு.
மணிப்பொறி ஐந்து மணி அடித்தது
என்னடா இழவாய் இருக்கின்ற தென்று
மடித்து வைத்தேன் மற்றிரண்டு நாளில்
கருஞ்சட்டைப்படை கலைக்கப் பட்டதாய்த் தெரிந்தேன் நாள்வரிச் செய்தித் தாளால்
மறுநாள் கழக வளர்ச்சியும் தெரிந்தேன்.

முழுதுணர்ச்சியால் எழுதுவேன் இதனை
முழுதும் உணர்ந்த முதலமைச்சரே
கவினுறு திராவிட கழகத் தின்மேல்
இன்னும் கொஞ்சம் எரிச்சல் கொள்க
இன்னும் ஒருகோடி இளைஞரைத் தருக,
பொன்னும் ஒளியும் நீவிரும் யாமும்,
இன்னும் கொஞ்சம் எரிச்சல் கொள்க
வன்மனக் கூட்டமும் மகிழும் உம்மை
இன்னும் கொஞ்சம் எரிச்சல் கொள்க
திராவிடம் திராவிடர் ஆளும்
ஒரேஇடம் ஆகும் உம்பெயர் ஓங்குமே!



( 75 )




( 80 )





( 85 )




( 90 )




( 95 )




( 100 )





( 105 )




( 110 )





( 115 )




( 120 )
அண்ணல் பெயர் வாழ்க

                          எடுப்பு

பிறந்தவர் யாவரும் பெற்றறி யாப்புகழ்
பெற்ற காந்தி அண்ணலைப் பிரிந்தோமே உலகில் (பி)

          உடன் எடுப்பு

இறந்தார் அண்ணல் எங்கணும் பிறந்தார்
ஈந்துவக் கும்அனைத்தும் உலகுக்கு ஈந்தார் (பி)

          அடிகள்

அறிந்தோர் யாவரும் அறிஞரென் றேத்தினார்
அருளே உருவென உலகினர் வாழ்த்தினார்
திறந்தெறிந் தாங்கிலர் படிப்பையும் மாற்றினார் (பி)
திருநாட்டுரிமைகண் டனைவரும் போற்றினார்

மதவெறி தன்னலம் மறைந்திட உழைத்தார்
மாபெரு நிலைநோக்கி நாட்டினை அழைத்தார்
உதவா வேற்றுமை அனைத்தையும் பழித்தார்
உலகின் நினைவில்தன் பெயரைவைத் திழைத்தார் (பி)

வாழிய காந்தி அண்ணலின் நினைவே
வாழிய வாழிய அன்னோர் பெயரே!
ஆழிசூழ் உலகில் அவர்கண்ட பாதை
அனைவரும் தொடர்க இன்புற்று வாழ்க (பி)








( 125 )








( 130 )




( 135 )
எங்கள் கொடி!

வைகறை இருட்டையும் செங்கதிர் நகைப்பையும்.
திராவிடர் மணிக்கொடி குறிக்கும்!
வாழ்விருள் தவிர்ப்பதோர் தனிப்பெரும் புரட்சியை
வரவேற்றல் கொடியின் நோக்கம்!

துய்யபன் னூறாயி ரந்திரா விடமக்கள்
கொடிநெடுந் தறியினைச் சூழ்ந்தே
தோய்கருஞ் சட்டையால் துயருளங் காட்டியும்
சுடர்விழிகள் நாளின்மேல் வைத்தும்

ஐயகோ வாரிரோ திராவிட மக்களே
ஆனஉம் மானத்தைக் காப்பீர்
அடிமையினை மிடிமையினை மாற்றுவீர் என்னவே
அழைத்தனர் இதைமறுத்தே

வையகம் எதிர்க்கட்டும்! அதிகார மக்கள்தாம்
வாட்படை யொடும்வரட்டும்
வன்சிறை இதோஎன்று காட்டட்டும்! திராவிடம்
மீட்பதெம் குறியாகுமே!


( 140 )




( 145 )




( 150 )

டாக்டர் சுப்பராயன்

பிறர்க்குநலம் செய்வதிலே தனக்குண் டான
பெரும்பற்றால் வீழ்ச்சியுற்றான் சுப்பு ராயன்!
அறத்தினிலே தவறுகிலான் பிறர்செல் வத்தை
அணுவளவும் தான் அடைய எண்ண மாட்டான்.
திறத்தினிலே எவனுக்கும் இளைத்தா னில்லை
செய்கையிலே உறுதியுளான் தன்மா னத்தைக்
குறைத்துக்கொண் டுயிர்வாழான் அலுவல் ஒன்றே
குறியென்று நினைக்குமொரு குள்ளனல்லன்

சாதியினை நம்புகிலான் சமயப் போர்வை
தானணிந்து வாழுமோர் சழக்க னல்லன்
நீதியிலே பற்றுடையான் திராவி டத்தின்
நிலைமையிலே கருத்துடையான் தோழ ரேநாம்
பாதியிலே அவன்செயலை அளக்க வேண்டாம்
பயனுண்டு சுப்பரா யன்தன் னாலே.
மீதியுள்ள நாட்களிலே சுப்பராயன்
மிகுதிறமை திராவிடர்க்கே நன்மையாகும்!

( 155 )




( 160 )





( 165 )



செந்தமிழ் நாடு

            { இருபொருள் வெண்பா }

   அண்டிமுயல் வேங்கைவர அன்புடையாள் ஆளன்வர
   கண்டிறக்கும் காடு கமழ்நாடு -- வண்டு
   பறக்குமென் கூந்தலார் பற்றும் அறமே
   சிறக்குமென் செந்தமிழ் நாடு.

   (இதில் கண்டிறக்கும் என்ற தொடரானது :
   கண்டு+இறக்கும் என்றும் கண்+திறக்கும் என்றும்
பிரிக்கப்படும் வகையால் இருபொருள் தருகின்றது. எனவே,
அண்டும் முயல் வேங்கைவர, கண்டு இறக்கும் காடுகமழ் நாடு
என்றும், அன்புடையாள் ஆளன் வரக் கண்திறக்கும் காடுகமழ்
நாடு எனவும் வரிசைப்படுத்திப் பார்த்துப் பொருள் கொள்ள
வேண்டும்.)

ஒருபுறம் அண்டிய முயலானது -- வேங்கை (திடீரென)
வரக்கண்டு (அச்சத்தால்) இறந்து போகின்ற காடு; தன்னிட
மிருக்கும் சந்தனம் அகில் முதலியவற்றால் மணம் வீசுகின்ற
நாடு.)

மேலும்;
அன்புள்ள குறப்பெண் (தோழி முதலியவர்கள் என்ன
கூறியும் நட்டதலை நிமிராமல்) ஆளன் வரவே, கண் திறந்து
மகிழ்கின்ற காடு கமழ் நாடு;

இத்தகைய நாடு எப்படிப் பட்டது? யாருடையது எனில்,
வண்டானது குடியிருக்கும மலர்த்தேன் கருதிப் பறந்து கொண்
டிருக்கும், கூந்தலுடைய பெண்கள் விரும்பி நடத்துகின்ற
அறமே சிறந்திருக்கின்ற என் செந்தமிழ் நாடு என்பது இச்
செய்யுளின் பொழிப்புரை.)

   கூடிக் குலவுநரும் கொல்புலியைச் சீறுநரும்
   ஓடத் துலாவெடுக்கும் ஒண்குன்ற -- நாடுதான்
   ஆர்ந்ததென் பாற்குமரி ஆம்வடக்கு வேங்கடமே
   சேர்ந்ததென் செந்தமிழ் நாடு.

ஓடத்து+உலா எடுக்கும் என்றும் இருவகையாய்ப்
பிரித்துப் பொருள் கொள்க. உலா எடுத்தல் -- உலாவி வருதல்,
துலாஎடுத்தல் -- துலாக்கோலைத் தூக்குதல். குலவுநர் -- குலவு
கின்றனர். காதலர்கள் சீறுநர் -- சீறுகின்றவர் ஒண் குன்றம் --
ஒளி மிக்க மலை, ஆர்ந்த -- நிறைந்த புனல் நிறைந்த என்றபடி,
சேர்ந்தென் -- சேர்ந்தது என் எனப் பிரிக்க.



( 170 )




( 175 )




( 180 )






( 185 )





( 190 )





( 195)





( 200 )


ஆள வந்தார் இறுதி அறிக்கை

            (எடுப்பு)

   இந்த --
   இறுதி அறிக்கையை
   ஆளவந்தார்க்கு விடுப்போம் -- அவர்
   இணங்கி வராவிடில்,
   கிளர்ச்சிப் படை எடுப்போம்!

            (உடனெடுப்பு)

"பிறர்க்கிட மின்றித் திராவிட நாட்டைப்
பிரித்திட வேண்டும்இப் போதே -- இதைப்
பின்னும் வடக்கர் சரக்கினை விற்கப்
பெருஞ்சந்தை ஆக்குதல் தீதே!

    இந்த --
    இறுதி அறிக்கையை
    ஆளவந்தார்க்கு விடுப்போம்!

            (அடிகள்)

இறைமையும் ஆட்சி முறைமையும் மக்கள்
இணக்கமும் ஆம்அமைப் போடு -- மண்ணில்
எவர்க்கும் அரசியல் நுணுக்கம் உணர்த்திய
இன்பத் திராவிட நாடு

கறைபட்டு மற்றவர் கையில் அகப்பட்டுக்
கால மெல்லாம் பட்ட பாடு -- நன்று
கருதுகின் றோம்இனி வரைந்திட வேண்டும்
புதிய இலக்கிய ஏடு!

   இந்த --
   இறுதி அறிக்கையை
   ஆளவந்தார்க்கு விடுப்போம்!

ஆங்கிலர் தம்மை அடுத்தார்; துருக்கரின்
ஆட்சியை ஆத ரித்தார் -- நம்
ஆள்வலி கொண்ட திராவிடர் தம்மை
அழுத்த இவ்வாறு செய்தார்
தீங்குறும் ஆளவந் தார்க்கும் சிறைக்கும்
திராவிடர் அஞ்சுதல் இல்லை -- எழில்
தெற்கு முனைவங்கம் மேல்கீழ்க் கடல்கள்
திராவிட நாட்டினர் எல்லை.

   இந்த --
   இறுதி அறிக்கையை
   ஆளவந்தார்க்கு விடுப்போம்!

வேதத்தின் பேர்சொல்லித் தெற்கை வளைக்க
விளைத்தனர் சூழ்ச்சிகள் அந்நாள் -- வந்த
வெள்ளையர் ஆட்சி தொலைப்பதன் பேரால்
விழுங்க நினைத்தனர் இந்நாள்
சாதி மதங்கள் வடவர் காலூன்றும்
சாரக்கட்டானது கண்டோம் -- நம்
தாயகம் காக்கத் திராவிட மக்கள்
அனைவரும் ஒன்றெனக் கொண்டோம்!

   இந்த --
   இறுதி அறிக்கையை
   ஆளவந்தார்க்கு விடுப்போம்!                   




( 210 )






( 215 )




( 220 )







( 225 )





( 230 )





( 235 )





( 240 )





( 245 )




( 250 )



எனது நன்றி

   என்தமிழ்க் கவிதைத் தொண்டும்
   இனியதோ? நான்பி றந்த
   முன்னாள்நன் னாளோ? என்னை
   முதிர்அன்பால் வாழ்த்தல் நன்றோ?
   இன்னும்நான் பன்னாள் வாழ்ந்தால்
   என்னால்இப் பொன்னாட்டார்க்கே
   என்னதான் நன்மை என்ப
   தெனக்கேதும் விளங்கவில்லை!

   மலேயாவில் அங்கங் கேயும்
   மன்னிய நிறுவ னத்தார்
   பலரும்என் பிறந்த நாளில்
   பகர்ந்தனர் எனக்கு வாழ்த்து!
   நிலவிய அன்புத் தோழர்
   நேருற வாழ்த்துச் சொன்னார்
   அலைகடற் கப்பால் வாழ்வார்!
   அன்பால்என் அகத்தில் வாழ்வார்!
   ஊக்கத்தை எனக்க ளித்தார்
   உயர்மல யாவில் உள்ளார்
   தூக்கத்தில் பிதற்ற நேர்ந்தால்
   தூய்தமிழ் பிதற்றும் என்வாய்
   ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
   அளித்திட்ட அறிவை எல்லாம்
   தேக்கியென் தமிழ்மேன்மைக்கே
   செலவிடக் கடமைப் பட்டேன்.

   மலேயாவின் தோழர்க் கெல்லாம்
   மனமார்ந்த நன்றி! அன்னார்
   கலையாத அன்பி னோடும்
   கலந்துற வாகிச் செல்வம்
   தலையான தென்றே எண்ணித்
   தக்கதாம் வழியிற் றேடிச்
   செலவுமட்டாகச் செய்து
   செந்தமிழ் போற்றி வாழ்க!

{ தமது பிறந்ததினத்தை ஒட்டி மலேயாவிலிருந்து
வாழ்த்துத் தந்திகளும். பாராட்டுச் செய்திகளும் அனுப்பி
அன்பர்கட்குக் கவியரசர் பாரதிதாசன் அவர்கள் தெரிவித்த
நன்றியறிதல் }

மெதுப் போக்குத் திராவிடனுக்கு
முற்போக்குத் திராவிடன் மொழிதல்

வாய்ப்பான வேளையடா அண்ணே -- நீ
வால்குழைத்து வாழ்வதுண்டோ அண்ணே!
தீர்ப்பான சேதிஒன்று சொல்வேன் -- தி
ராவிடத்தை மீட்கமுயல் அண்ணே!
காய்ப்பேறிப் போனதடா அண்ணே -- உன்
காட்டிக் கொடுக்கும் இழிதன்மை
தாய்ப்பால் குடித்திருப்பாய் அண்ணே -- எனில்
தன்மானம் போனதென்ன அண்ணே!

பண்டைத் திராவிடநா டண்ணே -- இது
பாராண்ட தாயகமாம் அண்ணே!
கொண்டு வடக்கனிடம் தந்தாய் -- அங்குக்
கொடிதூக்க ஒப்பினையே அண்ணே!
சுண்டைக்காய் அதிகாரம் பெற்றாய் -- உன்
தூய்மையினை நீஅதற்கு விற்றாய்
வண்டியிலே ஏற்றிவிட்டாய் மானம் -- உன்
வாளெடுக்கநீ மறந்தாய் அண்ணே!

உன்னருந் திராவிடத்தை அண்ணே -- அவர்
உருக்குலைக்க உனையழைத்தார் அண்ணே!
"என்னருந் திராவிடத்தில் நீர்யார் -- என்
றே" கேட்க நிறைந்தாய் அண்ணே!
தின்னவரும் நாய்நரிகள் கையால் -- நீ
சீரடைதல் இல்லையடா அண்ணே
அன்னைஉனை வேண்டுகின்றாள் அண்ணே -- அவளுக்
காட்சிதர நீவருவாய் அண்ணே!


( 255 )



( 260 )





( 265 )




( 270 )




( 275 )





( 280 )




( 285 )









( 290 )




( 295 )





( 300 )




( 305 )





( 310 )


  மெதுப் போக்குத் திராவிடனுக்கு
முற்போக்குத் திராவிடன் மொழிதல்

வாய்ப்பான வேளையடா அண்ணே -- நீ
வால்குழைத்து வாழ்வதுண்டோ அண்ணே!
தீர்ப்பான சேதிஒன்று சொல்வேன் -- தி
ராவிடத்தை மீட்கமுயல் அண்ணே!
காய்ப்பேறிப் போனதடா அண்ணே -- உன்
காட்டிக் கொடுக்கும் இழிதன்மை
தாய்ப்பால் குடித்திருப்பாய் அண்ணே -- எனில்
தன்மானம் போனதென்ன அண்ணே!

பண்டைத் திராவிடநா டண்ணே -- இது
பாராண்ட தாயகமாம் அண்ணே!
கொண்டு வடக்கனிடம் தந்தாய் -- அங்குக்
கொடிதூக்க ஒப்பினையே அண்ணே!
சுண்டைக்காய் அதிகாரம் பெற்றாய் -- உன்
தூய்மையினை நீஅதற்கு விற்றாய்
வண்டியிலே ஏற்றிவிட்டாய் மானம் -- உன்
வாளெடுக்கநீ மறந்தாய் அண்ணே!

உன்னருந் திராவிடத்தை அண்ணே -- அவர்
உருக்குலைக்க உனையழைத்தார் அண்ணே!
"என்னருந் திராவிடத்தில் நீர்யார் -- என்
றே" கேட்க நிறைந்தாய் அண்ணே!
தின்னவரும் நாய்நரிகள் கையால் -- நீ
சீரடைதல் இல்லையடா அண்ணே
அன்னைஉனை வேண்டுகின்றாள் அண்ணே -- அவளுக்
காட்சிதர நீவருவாய் அண்ணே!


( 315 )




( 320 )





( 325 )





( 330 )



( 335 )