பக்கம் எண் :

பாரதிதாசன் பன்மணித்திரள்

எங்கள் திராவிடம்

தங்கம் விளைந்த நிலம் -- எங்கள்
தாய்நிலம் போற் காண்கிலம் -- உயர்
செங்கதிர் போல் -- திங்கள்போல் -- துலங்கும்தி
ராவிட மாநிலமே!

எங்கும் வளப்பம் மிகும் -- புகழ்
எண்ணத் தகும்நாயகம் -- கழை
தெங்கும்செந் நெல்கமுகும் -- விளையும்தி
ராவிட நல்லகமே!

அன்பு பதிந்த இடம் -- எங்கள்
ஆட்சி சிறந்த இடம் -- நல்
இன்பம் நிறைந்த இடம் -- எமைஎல்லாம்
ஈன்ற திராவிடமே!

மன்னும் அதன்புகழ் "வானே" -- சொல்லும்
வாய்க்கது தித்திக்கும் தேன் -- உயிர்,
என்பு, குருதி, நல்லூன் -- எலாம்எங்கள்
இன்பத்தி ராவிடந் தான்!

திராவிட நன்னாடு -- கொண்ட
சீருக் கொருகேடு -- தனைக்
கருதும் பிறநாடு -- போர்த்திறத்தைக்
காட்டுக நம்மோடு

அரியது செய்திடுவோம் -- தனி
ஆட்சி நிறுவிடுவோம் -- மிகப்
பெரியது நம்நாடு -- திராவிடம்
பெற்றியை வாழ்த்திடு வோம்!
( 1 )




( 5 )





( 10 )





( 15 )





( 20 )




உலகம் உன்உயிர்

உன்உயிர் இவ்வுலகம்!

      ஒவ்வொரு நினைவும் உன்றன்
      உலகிற்கே! செயல்ஒவ் வொன்றும்
      இவ்வைய 'நன்மைக் கே'என்
      றெண்ணுதல் பெற்றா யாகில்
      செவ்வையாம் நினைவுண் டாகும்
      செயலெல்லாம், நல்ல வாகும்!
      அவ்'வானின்' நோக்கம் காண்பாய்!
      அதன்பெருஞ் செயலைக் காண்பாய்!

      உன்வீட்டைப் போற்று கின்றாய்
      ஆயினும் உன்றன் வீட்டின்
      பின்வீட்டைக் கெடுக்க எண்ணல்
      பேதமை யாகும் அன்றோ?
      உன்வீட்டுக் குப்பை தன்னை
      அயல்வீட்டில் ஒதுக்க வேண்டா!
      பொன்என்றே உன்றன் ஊரைப்
      புகல்வதில் பிழையே இல்லை.

      ஆயினும் அயலூர் தன்னை
      அழித்திட எண்ண வேண்டாம்
      தூயஉன் வாய்க்கால் நீரைத்
      துய்ப்பாய்நீ! அயலூர் நோக்கிப்
      பாயும்நீர் அதிலே நஞ்சு
      கரைப்பது பழுதே யன்றோ!
      தீயன தவிர்த்த நெஞ்சம்
      வையகம் செழிக்கும் வித்து

      உன்பிரஞ் சிந்தி யாநல்
      உணர்வுக்கும் ஒழுக்கத் திற்கும்
      தன்மானத் திற்கும் ஏற்ற
      தன்மையில் இருப்ப தாயின்
      அன்புக்கொள். நாளும் போற்று
      மற்றுமுன் அணித்தா யுள்ள
      பொன்நகர் எதிர்த்த வைய
      முற்போக்கை எதிர்த்தல் போலாம்!

      அயலூர்ச்சட் டத்திற் கேநீ
      ஆட்பட வேண்டும் என்று
      மயலூர்ந்த நெஞ்சத் தார்கள்
      வாய்ப்பறை அடிப்பா ராயின்
      துயிலாதே அவர்கள் சட்டம்
      துன்பத்தை விளைப்ப தாயின்
      நயம்பட உரைஉன் அன்பின்
      நானில நன்மை எண்ணி.
( 25 )



( 30 )





( 35 )




( 40 )





( 45 )





( 50 )




( 55 )





( 60 )



காமராசர் வெற்றி

ஈண்டுகாங் கிரஸ்குழுவின் தலைமைக் காக
இற்றைநாள் தேர்தலினை நடத்தி னாராம்,
தூண்டினராம் திராவிடரைப் பார்ப்ப னர்கள்
தோற்கடிப்பீர் காமராஜ் தன்னை என்று!
மாண்டதுவாம் அப்போட்டி! பார்ப்ப னர்கள்
மண்கௌவிச் சாய்ந்தாராம் என்தோ ழர்கள்
மீண்டும்உயர் காமராஜ் வென்றார் என்றார்
வேறெவர்தான் வெற்றிபெற முடியு மென்றேன்.

அறிவுடையார் மானமுள்ளார் காம ராசர்
அன்புடையார் திராவிடநன் மக்கள் மீதில்!
நெறியறித்து செலத்தக்க ஆற்றல் உள்ளார்
நெஞ்சத்தில் தெளிவுடையார் தன்ன லத்தைச்
சிறிதேனும் எண்ணாத பெரும்பண் புள்ளார்
திராவிடத்தைக் காத்திடுமோர் உறுதி சொன்னார்
பிறரிடத்தில் நமைவிற்றுப் பெருமை கேட்கும்
மாபோசி டீகேசீ போன்றார் அல்லர்.

தீதுசெய வடக்குவந்து செப்பி னாலும்
சிறிதேனும் ஒப்பாமை அவர்பால் கண்டோம்.
வேதத்தைக் காட்டிஇது தணல்என் றாலும்
வேகாது விருதுநகர் பருப்பாம் என்றே
ஓதிடுமோர் ஆழ்ந்தபெருங் கொள்கை உள்ளார்
உயர்நோக்கும் இனப்பற்றும் உயிராய்க் கொண்டார்
சேதிஇனி ஒன்றுண்டு காமராசர்
திராவிடத்துத் திருமேனி இன்னும் என்ன?
( 65 )




( 70 )





( 75 )




( 80 )





( 85 )


வடமொழி எதிர்ப்பு

பூசாரி கன்னக்கோல் வடமொ ழிக்குப்
பொதுப்பணத்தைச் செலவழித்துக் கழகமெல்லாம்
ஆசிரியர் அமைத்திடவும் சட்டம் செய்தார்
ஐயகோ அறிவிழந்தார் ஆள வந்தார்!

பேசத்தான் முடிவதுண்டோ? அஞ்சல் ஒன்று
பிறர்க்கெழுத முடிவதுண்டோ அச்சொல் லாலே!
வீசாத வாளுக்குப் படைவீடொன்றா?
வெள்ளியினாற் பிடிஒன்றா வெட்கக்கேடே!

வடமொழியைத் தாய்மொழிஎன் றுரைக்கும் அந்த
வஞ்சகர்தம் இல்லத்தில் பேசும் பேச்சு
வடமொழியா? பிழைப்புக்கு வாய்த்த தென்ன
வடமொழியா? கிழமைத்தான் நாளின் ஏடு
வடமொழியா? எழுதும்நூல் பாடும் பாட்டு
வடமொழியா? நாடகங்கள் திரைப்ப டங்கள்
வடமொழியா? அலுவலக நடைமு றைகள்
வடமொழியா? மந்திரமென் றேமாற் றத்தான்
வடமொழிஎன் றால்அதைத்தான் மதிப்பாருண்டோ

திராவிடரை அயலார்கள் என்பார் அந்தத்
திராவிடரை எவ்வகையி லேனும் அண்டி
உருவடையும் நிலையுடையார் பேடி மக்கள்
உவப்படைய வடமொழிக்கே, ஆள வந்தார்
பெருமக்கள் வரிப்பணத்தால் சிறப்புச் செய்தார்
பிறர்காலில் இந்நாட்டைப் படையலிட்டார்
திராவிடரோ அன்னவர்தாம்? மானமுள்ள
திராவிடரோ? மக்களோ? மாக்கள் தாமோ!

( 90 )





( 95 )





( 100 )




( 105 )





( 110 )

ஞாலப் பெரியார் பாதை

இசை : செஞ்சுருட்டி               தாளம் : ஆதி

விடுதலை இல்லாத போது -- மொழி
               ஏது? -- இனம்
               ஏது? -- பண்டை

மேலான வரலாறும் ஏது? நீ
விலக்கல் இலாததமிழ் இலக்கியத் தின்சல்லி
வேரும் சிறிதும் நிலைக் காது
கொடிநாட்டி வாழ்ந்தனை மண்ணி -- லதை
                  எண்ணித் -- தமிழ்
                  எண்ணி -- அந்தக்

கொடியவரை நடுங்கப் பண்ணி -- கொடுங்
கோலைமுறித்த பின்புன் வேலை முடிந்ததென்று
கொட்டடா முரசு நண்ணி
தாய்க்கும கன்செய்யும் தொண்டும் -- ஒன்
                  றுண்டு -- நன்
                  றுண்டு -- தாய்

தளைநீக்க வேண்டும்வெ குண்டு -- மேலும்
தமிழன்நீ தமிழ்ப்பழங் குடிக்கோர் இழுக்கென்றால்
சாக்காடும் உனக்குக்கற் கண்டு.
பாக்கியம் பெற்றவன் நீதான் -- புலி
               நீதான் -- சிங்கம்
               நீதான் -- இந்தப்

பாராண்ட மறத்திஉன் தாய்தான் -- தமிழ்ப்
பண்பாட்டை மிதிப்பவன் பழிவாங்கப் படவேண்டும்
சும்மா இருந்தால் நீயோர் நாய்தான்.
தெற்கை வடக் காண்ட தெந்நாள்? -- இல்லை
                  முன்னாள் -- அஃ
                   திந்நாள் -- கேள்

சீர்பட வேண்டுமன்றே உள்நாள்? -- நல்ல
திருவேண்டும் புகழ்வேண்டும் தமிழ்க்குரி மைவேண்டும்
தீயர் தொலையும் நாளே பொன்னாள்
பொற்குவை தன்னைக் கரண்டி -- யாற்
                 சுரண்டிப் -- பல
                 வண்டி -- ஏற்றிப்

போனான் நமக்கே திங்கே உண்டி? -- உன்
பொய்யாத வாழ்வெங்கே மெய்யான உணர்வெங்கே
போயின வோஇருள் மண்டி?
இன்றே உனது முதல் வேலை -- இது                காலை -- கொடுங்
                கோலைத் -- துண்டாய்

ஒடிக்க வேண்டும்திறத் தாலே -- பார்
உன்படை! உன்னினம் நில்லதன் முன்னணி
உனக்குப் பகைவர் எந்த மூலை?
நன்றிக்கு வாழ்த்திட வேண்டும் -- உரம்
               வேண்டும் -- திறம்
               வேண்டும் -- உன்

நாட்டிற்கே நீவாழ வேண்டும் -- நம்
ஞாலப் பெரியார் செல்லும் பாதையினை விடாதே
விடுதலைப் பெரும்பயன் ஈண்டும்!



( 115 )





( 120 )





( 125 )





( 130 )





( 135 )





( 140 )





( 145 )





( 150 )





( 155 )




( 160 )

தமிழகம் மீளவேண்டும்
ஆரிய ஆட்சி ஒழிய வேண்டும்

செந்தமிழ்ச் சொற்களை இந்தியால் எழுதுதல்
அறிவிலாச் செயல்! அறமிலாச் செயல்!
வடவரின் இந்த மடமை எண்ணத்தை
முளையிலே கிள்ளி எறிதல்நம் முதற்கடன்
ஏனெனில்,

எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே
இனத்தைக் கொல்வ தெதற்கெனில், தமிழர்
நிலத்தைச் சுரண்டித் தமது நிலையினை
உயர்த்த, வடவரின் உள்ளம் இதுதான்

நேருவின் ஆட்சி நெடுநா ளாக
செந்தமிழர்க்குச் செய்யும் தீமைகள்
இம்மியேனும் குறைந்த பாடில்லை
நேருவின் ஆட்சி மாறவேண்டும்.
ஒழிக்க வேண்டும் உயர்தமிழ் மக்கள்

இந்தியை எத்துப் பேசிப் புகுத்தியது!
சாதி ஒழிப்பாரைச் சாக டித்தது!
பாரோர் அறியப் பாரப்பனர் ஆட்சியை
நிறுவிற்றுத் தமிழரைக் கறுவிற்றுக் கொல்வதாய்!

எந்தத் துறையிலும் இம்மி அளவும்
உரிமை தரேன்என உருமிற்றுப் பன்றி!
தமிழர் செல்வத்தைத் தயங்காது சுரண்டிற்று.
எங்குள தமிழ இனத்தார் தம்மையும்
கயமை மனதாற் காட்டிக் கொடுத்தது
தமிழக நன்செய் தருநெல்லை எலாம்
அயலார்க் கென்றது; பசிஉமக்கென்றது!

நம்இனத்தார் செம்மைத் தமிழர்கள்
இலங்கை அரசினால் எய்தும் இன்னலை
ஆதரித்தது நேருவின் ஆட்சி!

மலையத் தமிழர்கள் நிலைமை நன்றெனில்
நெஞ்சு கொதித்தது நேருவின் ஆட்சி
அங்குள தமிழர் தொல்லை அடைந்திடில்
ஆம்ஆம் என்றது அறமிலான் ஆட்சி!

தமிழை அழிக்கத் தமிழனைத் தேடிக்
காசு தந்து அலுவல் காட்டி
ஊக்கம் செய்த துயர்விலான் ஆட்சி!

"ஆகாஷ் வாணி" -- அதனை நீக்குக!
"வானொலி" -- ஆக்குக! என்று கெஞ்சினும்
இதற்கும் மறுப்பா எங்கே அடுக்கும்?
தமிழன் உயிரையா தருதல் வேண்டும்
இந்த உரிமை எய்துதற்கு?

ஆரியர் ஆட்சி நீங்க வேண்டும்
ஒழித்துக் கட்ட வேண்டும்
விழுப்பத் தமிழகம் மீட்சி பெறவே!

கோவையில் விளம்பி ஆவணி 30ல் நடந்த
உஷா -- நாராயணசாமி



( 165 )





( 170 )





( 175 )





( 180 )





( 185 )




( 190 )





( 195 )






( 200 )






( 205 )





திருமண வாழ்த்துப்பா

தமிழகம் போற்றும் நாரா
யணசாமி தகுதி மிக்க
அமிழ்துநேர் மொழிஉ ஷாவை
அடைந்ததால் எலாம் அடைந்தான்
கமழ்மலர்க் குழலி நல்ல
கற்புடை உஷாஆம் நங்கை
அமைந்தநற் சீர்த்தி நாரா
யணன்பெற்றாள் எல்லாம் பெற்றாள்!

பண்பமைந் திட்ட நல்யாழ்
பாணன்கைப் பதிந்த வாறும்
தெண்ணிறை வண்ணத் தும்பி
தேன்மலர் படிந்த வாறும்
வெண்ணிலா முகத்து ஷாவும்
நல்லிடம் மேவ லானாள்
அண்ணலும் அவ்வா றேயாம்
அவள்அவன் தமிழும் பாட்டும்!

தேசிய சேமிப் பென்னும்
திருநாட்டுப் பெருமன் றத்தின்
மாசிலாத் தலைவ னான
வரதரா ஜுலுவும், மிக்க
தேசுறு சந்தி யாவும்
செய்தவத் தாற்பி றந்து
பேசுமாங் கிலத்தும் தேர்ந்த
உஷாவின்சீர் பெரிதே அன்றோ!

பன்னுமல் லேக வுண்டன்
பாளையத் திராம கிருஷ்ணன்
அன்னபூ ரணம வர்தம்
அன்பினிற் பிறந்த மேலோன்
பொன்னிறை கோவை தன்னில்
பொறியியல் கல்லூ ரிக்கு
மன்விரி வுரைசெய் நாரா
யணசாமி மாட்சி என்னே!

ஒரேகாதல் பாட்டுப் பாடும்
இரண்டுள்ளம் ஒன்றை ஒன்று
சரேலெனத் தழுவக் கண்டோம்
தங்கத்து மணவ றைக்குள்!

வரா இன்பம் வரப்பெற் றார்கள்
மணமக்கள் குறைவோ ஒன்றும்
இராஇல்ல றத்தேர் தன்னை
இழுப்பார்கள் புகழூர் நோக்கி

மேற்றோளில் மாலை சூட்டிக்
கீழ்க்கண்ணால் நோக்கி னாள்பெண்!
கோற்றோளில் மாலை சூட்டிக்
குறுநகை புரிந்தான் ஆளன்!
ஆற்றோரப் புனலிருந்தும்
அவாமிக இருந்தும் இன்றும்
நேற்றேபோல் இருந்தோம் என்று
நினைந்தன இருநெஞ் சங்கள்!

தமிழிசை வடவர்க் கெல்லாம்
தந்தநற் கருவி தந்தஅமிழ்திசை மழையும், வானில்
அவிழ்மலர் மழையும், மேலோர்
கமழ்வாழ்த்து மழையும், பன்னீர்
கைம்மாற்று மழையும், கூடு
அமைமண மக்கள் நெஞ்சத்து
அன்பினை நனையச் செய்யும்!

திருமண மக்கள் நல்ல
திருவேந்திப் புகழு மேந்திப்,
பருதியும் நிலவும் வாழும்
பல்லாண்டு வாழ்வும் ஏந்திக்
கருவிலே தமிழ்ப்பண் பாடு
கமழ்மக்கள் பேரர் ஏந்திப்
பெருவாழ்வு வாழ்க உற்றார்
பெற்றோரும் தமிழும் வாழ்க!

( 210 )




( 215 )





( 220 )




( 225 )





( 230 )




( 235 )





( 240 )





( 245 )






( 250
)




( 255 )




( 260 )




( 265 )





( 270 )