பக்கம் எண் :

174கவிமணியின் கவிதைகள்

Untitled Document
159. செட்டியார் நலஉரிமைச் சங்கம்

1094 பாரதத்தாய்க் குகந்தபல பணிபுரிந்து
     பசுந்தமிழைப் பாது காத்துச்
சீருயரத் தொழில்பேணி, அறம்பேணி,
     செப்பரிய செல்வம் பேணி,
காரைநகர்த் தனவணிகர் நலவுரிமைக்
     கழகமெக் காலும் வாழ,
ஆரணிந்து தில்லையிலே ஆடுகின்ற
     அம்பலவன் அருள்க மாதோ!

160. மீனாட்சிசுந்தரரேசர் உயர்நிலைப்பள்ளி

1095 சிந்தைக்கினிய திருக்காரைச்
     செல்வ நகரில் மீனாக்ஷி
சுந்த ரேசர் கருணையினால்
     தோன்றி வளரும் பள்ளியிலே
வந்து மலர்ந்த 'தாமரை' நீ
     வாடா தென்றும் மணம்வீசிச்
சந்தத் தெய்வ மலர்போலித்
     தரணி மீது வாழ்கவே!

161. தமிழிசைப் பள்ளி

1096 பாரணிந்த பெரும்புலவர் பகுத்து வைத்த
     பண்ணினங்கள் நடனங்கள் பலவும் கற்கச்
சீரணிந்து புகழோங்கும் தேவ கோட்டைத்
     திருநகரில் செல்வர்கலை வளர்க்கும் அன்பர்
தாரணிந்த முடிமன்னர் வியக்கு மாறு
     தந்ததமி ழிசைப்பள்ளி தழைத்து வாழ
நீரணிந்து பிறைசூடித் தில்லை மன்றில்
     நின்றாடும் ஈசனருள் செய்க மாதோ!