பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு227

Untitled Document
1339 பாண்டியர் வந்தணை செய்தநாடு - சோழர்
     பண்டு முடிதரித் தாண்ட நாடு;
வேண்டு பொருள்கள் விளையும் நாடு - சோலை
     வேலியாய்ச் சூழ்ந்தணி செய்யும்நாடு.

1340 நெஞ்சில் மிகுந்த கருணையெல்லாம் - இங்கு
     நீராக மாறி நிறைந்திடவே,
வஞ்சிமன் கட்டிய பேய்ச்சிப்பாறை - ஏரி
     வற்றாது பாயும் வளநாடு.

1341 ஆயிரங் காலால் நடந்து நடந்தமுது
     அன்னை பழையா றளிக்கும்நாடு!
தீய்வு கரிவறி யாத நாடு - நித்தம்
     செல்வம் பொழியும் திருநாடு.

1342 சேமமாகப் பயிர் செய்திடவே - ஈசன்
     சேவடி போற்றிப் பணிந்துழவர்
பூமி பலிதமாம்நாளிலே ஆயிரம்
     பொன்னேர் பூட்டி உழும் நாடு.

1343 பண்ணை பெருத்த பழநாடு - சுற்றிப்
     பார்த்திடக் கண்கள் குளிரும் நாடு;
மண்ணையும் பொன்னாக மாற்றும்நாடு - கவி
     வாணர் புகழும் தமிழ்நாடு.

1344 செந்நெற் பயிர் அலை மோதும் நாடு - வாழை
     தென்னை கமுகு செழிக்கும் நாடு;
மன்னிய முல்லை மருக்கொழுந்தின் - நல்ல
     வாசம் எழுந்து கமழும் நாடு.

1345 காடு மலையெல்லாம் மேய்ந்துவந்து - பசு
     கன்றினை ஊட்டிக் களிக்கும் நாடு;
ஆடுகள் மந்தையாய் வாழும் நாடு - கண்ணுக்கு
     ஆனந்தக் காட்சி யளிக்கும் நாடு.

1346 தேவர் திருக்கோயில் ஓங்கும் நாடு - மேழிச்
     செல்வர் பதிகள் சிறக்கும் நாடு;
மூவர் தமிழும் முழங்கும் நாடு - திரை
     முகத்தினை வீசிக் கொழிக்கும் நாடு.