பக்கம் எண் :

பக்கம் : 13

 

முன்னுரை

 
          மொழிவளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, இல்லறந் துறந்து, தன்னலம் வெறுத்துப் பொதுநலம் ஒன்றே பேணித் தன் வாழ்வையே கொடுக்க வல்ல பெண் மகளொருத்தி நம் தமிழகத்துக்கு வேண்டுமென எண்ணினேன். அவ்வெண்ணத்தின் விளைவே இப்பூங்கொடி.
சமயங்கட்கெல்லாம் தனித்தனிக் காப்பியம் பெற்று மிளிரும் நம் தாய்மொழி, மொழிக்காக ஒரு காப்பியம் பெறுவதும் ஆக்கம்தானே!
 
          மொழிநலங்கருதி முற்பட்டுவரும் இப்பூங்கொடி, இக்காலத்து நிகழ்ச்சிகள் பலவற்றை உள்ளத்தில் இறுத்தி ஊருக்கு உரைத்து நிற்பாள்.
        உலகம் அவற்றைச் செறாது, வெறாது சிந்திப்பதாக. அவள் நடைபற்றிக் காய்தல் உவத்தல் அகற்றி, நடுநின்று உண்மை உரைப்பதாக.
 
          இப் பூங்கொடியை ஒப்பனை செய்து, தமிழகத்தே உலாவரச் செய்த மணிவாசகர் பதிப்பகத்தார்க்கும் பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பனார்க்கும் இவள் நன்கனம் உருப்பெற்றொளிர உற்றதோர் நற்றுணையாய் நின்ற புலவர்கள் தமிழண்ணல், ஆ. பழநி, முத்து. சம்பந்தன் முதலிய அன்பர்கட்கும் என் உளங்கனிந்த நன்றி உரித்தாகுக.

அன்பன்,