பக்கம் எண் :

பக்கம் : 15

  அந்நகருக்கு வந்த இலக்கியர் என்னும் நாவலர், பூங்கொடியைக் கண்டு தம்முன் வரலாறுரைத்து, அவளுக்கு ஊக்கமூட்டித் திருக்குறட்குத் தெளிவுரையும் கூறி, விடை கொண்டனர்.  
          தாமரைக்கண்ணி மீண்டும் கடல் நகருக்கு வந்து, பூங்கொடிபால் கோமகன் செய்யும், தமிழ்ப்பணி யுரைத்துப் பன்மொழிப் பயிற்சி பெறப் பணித்து, தொல்காப்பிய விளக்கம் மொழிந்து மீண்டனள். பூங்கொடி அந்நகரில் தங்கியிருக்கும் பொழுது, தமிழேடுகள் தேடித் தொகுக்கும் பணியை மேற்கொண்ட நாவலூர் அமுதம் என்னும் மூதாட்டி, ஆங்கு வந்து, இவளை வாழ்த்திக் கலைமகள் நிலையத்திலிருந்து தான் பெற்ற இசையுங் கூத்துங் கூறும் இருபெரும் சுவடிகளை ஈந்தனள். பூங்கொடி வணங்கிச் சுவடிகளுடன் தாயகம் மீண்டனள்.  
          மீண்ட பூங்கொடி மலையுறை யடிகளிடம் நிகழ்ந்தவை கூறி, மீனவன் என்பான் விடுத்துச் சென்ற இருபெருஞ்சுவடிகளையும் நாவலூர் அமுதம் தந்தமையையும் மொழிந்து நின்றனள். அடிகளார் மகிழ்ந்து, மாந்தர்க்கு எழுச்சியூட்ட, மீண்டும் இசைப்பணி புரிய எழுமாறு பணித்துப் பொதுப்பணிக்கு வேண்டும் பண்புகளையும் விளக்கி வாழ்த்தியருளினர். மேலும் அவர் மீனவன் வரலாற்றையும் கூறியருளினர்.  
          "நெல்லூர் என்னும் ஊரில் பொன்னி என்பவள் தன் தந்தையை மீறி வில்லவன் என்பானைக் கலப்புமணஞ் செய்துகொண்டனள். அவள் ஆண்மகவொன்றைப் பெற்று மறைந்தனள். வில்லவன் மனம்நொந்து, குழந்தையை ஒருவரிடம் கொடுத்து, உலகை வெறுத்துச் சென்றுவிட்டான். கற்றுவளர்ந்த அவ்விளைஞனே மீனவன். அவன் புரட்சிமனப்பான்மை யுடையவனானான். ஒருநாள் சிலரால் தாக்குண்டான். பழமையில் ஊறிய மாந்தர், அவனை வளர்ப்போர்க்குப் பல தொல்லைகள் தந்தனர். தன்னாலன்றோ இத்தொல்லைகள் இவர்கட்கு நேர்கின்றன என எண்ணிய மீனவன் யாரும் அறியாவகையில் புறப்பட்டுக் கூடல் நகரினை அடைந்தான்.