பக்கம் எண் :

பக்கம் :16

          கூடல் நகரில் மீனவன் பணிபுரியுங்கால் அங்கிருந்த தமிழ்ச் சங்கத்தில் ஓர் இசைச் சுவடி கிடைக்கப் பெற்றான். அதன் துணையால் இசை பரப்பும் நாளில், ஏமகானன் என்னும் வடபுலத்திசை வல்லான், தங்கத்தேவன் ஏவலால் மீனவனிடம் வந்து, வடநாட்டிசை பயிலச் சொன்னான். மீனவன் மறுத்து எள்ளி நகையாட வெட்கித் திரும்பிய ஏமகானனின் தூண்டுதலால் சீற்றங்கொண்ட தங்கத்தேவன் மீனவனைக் கொலை செய்ய முயன்றான். அத்தீமையிற்றப்பிப் பிழைத்த மீனவன், கூடலைவிட்டு வேறிடஞ் சார்ந்தனன். எனினும் கொடியோன் ஏவத் தீயோர் சிலர் அவனைக்கொலை செய்துவிட்டனர். அவன் இறக்கு முன் இசைச் சுவடியைக் கலைமகள் நிலையத்திற் சேர்க்குமாறு பணித்தனன். அச்சுவடி பூங்கொடியாகிய நின்பால் வந்துற்றது. இதன் துணையால் மீண்டும் இசைப்பணி புரிக" என அடிகள் உரைத்துச் சென்றனர்.  
          அருண்மொழியும் இசைவு தந்து, இசைச் சுவடியின் விளக்கத்தை எழிலி என்னும் மாதரசியிடம் சென்று பெறுமாறு பணித்தனள். பூங்கொடி, எழிலியின் வரலாறறிய விழைந்தனள். அடிகளும் கூறுவாராயினர்; "கொடுமுடியில் பிறந்த எழிலி இசைத்துறையில் ஒப்புயர்வின்றி விளங்கினாள். அப்பொழுது புகழ்பெற்ற கூத்தன் ஒருவனைக் கலப்புமணம் செய்துகொண்டாள். ஒருசமயம் கூத்தின் பொருட்டு அயல்நாடு சென்று திரும்புங்கால், புயலால் மரக்கலம் உடைய, அருகில் இருந்த தீவை அவன் அடைந்தான். தப்பிப் பிழைத்த சிலர், கூத்தன் இறந்ததாக எழிலியிடம் கூற, அளவிலாத் துன்பம் அடைந்திருந்தாள். தீவினுள் நுழைந்த கூத்தன் அத்தீவின் தலைவன்பால் தன் திறமை காட்டிப் பரிசில் பல பெற்று ஊர் திரும்பினன். திரும்பிய அவனைக் கண்டு எழிலி அளவிலா உவகை எய்தினள். அப்பெருமாட்டியிடம் இச்சுவடியிற் சொல்லிய செய்திகளைத் தெரிந்து கொள்க" என்றனர்.  
          பூங்கொடி எழிலிபாற் சென்று இசை நுணுக்கமும் யாப்பிலக்கணமும் தெளிந்து, இருதுறையிலும் வல்லவளாக விளங்கினாள். இதுகண்டு மகிழ்ந்த அடிகளார் இசைப்பள்ளி