பக்கம் எண் :

பக்கம் : 5

  இத்தனையும் அமைந்த செந்தமிழ்க் காப்பியமாய் இது திகழ்கிறது. நம் காலத்தில் வாழும் தமிழறிஞர் அனைவரும் இதன் தமிழியக்கக் கூறுகளையும் பன்முக நலன்களையும் பாராட்டி உள்ளனர். முடியரசனார், பூங்கொடி, வீரகாவியம், ஊன்றுகோல் என முப்பெரும் காப்பியங்கள் படைத்திருந்தாலும், இக்காப்பியம் கொள்கையாலும், கருத்தாலும், கவிதை வளத்தாலும் முதன்மை பெறுகிறது. கவிஞர்தம் முன்னுரையில் கூறுவதுபோல் மணிமேகலையின் சாயல் படிந்திருந்தாலும் பாடுபொருளின் பல்வகைச் சிறப்புப் பெற்றுத் தனித்தன்மையுடன் திகழ்கிறது.  
          இக்காப்பியத்தின் தமிழ் ஒளி இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு நீண்டநெடிய ஒளிப்பாதையைக் காட்டும். காப்பியத்தில் காணப்படும் வைரவரிகள் பல.  
          பாரதிவழியில் தமிழை என் தெய்வம், தாய், நண்பன் எனப் போற்றிப் பாராட்டி வழிபாடு செய்கிறார். அதனைத் தமிழ்வழிபாடு என்று தனிநூலாக வெளியிட்டுள்ளோம்.  
          பாடுபொருளால் மணிமேகலை காலத்தை வென்று வாழ்வதுபோல் பூங்கொடியும் காலத்தை வென்று வாழும் என்பது எம்கருத்து. தூயவாழ்வும், கொள்கையில் உறுதியும், வாழ்வில் செம்மை சேர்ப்பவள் தமிழே என்பதில் அசையாத நம்பிக்கை உடைய கவிஞர் முடியரசர் வாழ்கிற காலத்தில் நாமும் வாழ்வது நமக்குப் பெருமை தருவதாகும். இவருடைய தமிழாற்றலுக்குக் கிடைத்த பரிசுகள் பல. வீரகாவியம் படைத்த இவர் பெற்ற விருதுகளும் பல. `ஊன்றுகோல்' படைத்த இவரின் கருத்துக்கள் இன்று தடுமாறும் உள்ளத்தார்க்குத் தேவையான ஊன்றுகோல். ஊன்றுகோலும், பூங்கொடியும் தமிழர்க்குக் கவிஞர் அளித்த வீரகாவியம். கவிஞர் மொழிக்கடமை எனப் பூங்கொடியைப் படைத்தார். மணிவாசகர் பதிப்பகம் தன் பதிப்புக்கடமை எனப் பூங்கொடியைப் பதிப்பிக்கிறது. தமிழர்கள் தம் தமிழ்க்கடமை என்று வாங்கிக் கற்றுணர்ந்து, வாழ்வில் உயர வேண்டும்.

_________