பக்கம் எண் :

பக்கம் :4

  காத்தல், வளர்த்தல், பரப்புதல் முதலியவற்றிற்காக இவர் படைத்த பாக்கள் பல. தான் ஏற்றதொரு கருத்தை எடுத்துச் சொல்லும் உறுதியினர். சொல்லால், நூலால், செயலால் இவர் ஆற்றிய தமிழியக்கப் பணிகள் பல. சலுகை போனால் போகட்டும் தமிழ் உயரட்டும் என உழைத்தவர். இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் பாவேந்தர் வழித்தோன்றல்களில் முடியரசனார் பெயர் 70, 80களிலே பதிவு செய்யப்பெற்றுள்ளது.  
            மணிவாசகர் பதிப்பகம் தமிழ்நெறி இயக்கங்கண்ட பதிப்பகம். தமிழியக்கம் தொடர்பான அரிய நூல்கள் பல வெளியிட்டுத் தமிழியக்கம் வேர்கொள்ள விழுதுவிட ஒல்லும் வகை உழைத்துவரும் முதல்நிலைப் பதிப்பகம். தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழியக்க வேர்கள், தமிழியக்க விழுதுகள், தமிழியக்கக் கும்மி என நாடெங்கிலும் தமிழியக்க நீர் பரவும் வகையில் இயக்கச் சார்புடைய நூல்களைச் செம்பதிப்பாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. பதிப்பகக் குறிக்கோள்களில் தமிழியக்கம் செழிக்கச் செய்வது ஒன்று. ஆதலால் அவ்வகையில் கவியரசு முடியரசன் படைத்த பூங்கொடி என்னும் தமிழியக்கக் காவியத்தைத் தலைமேற்கொண்டு போற்றிப் பாராட்டி இச்செம்பதிப்பை வெளியிடுகிறோம். மீண்டும் ஒரு தமிழியக்கம் பூத்துக் குலுங்குவதற்கு இப்பூங்கொடி எல்லாவகையிலும் உதவும். துணைநிற்கும். நூலின் மூலஇழை தமிழியக்க உணர்வு. காப்பியத்தின் பாவிகப் பொருள் தமிழர் நலம். காப்பியம் எடுத்துச்சொல்லும் செய்தி தமிழ்நாடு மேம்பாடு எய்தல். தமிழும், தமிழரும், தமிழ்நாடும் செழித்தோங்க எழுந்த முதல் முத்தமிழ்க்காப்பியம் இது.  
            அன்று மணிமேகலை ஆருயிர்களுக்கு அமுது படைத்தாள். உயிர்வளர உணவிட்டாள் மணிமேகலை. இன்று உணர்வு சிறக்க தமிழ் உணவு தருகிறார் முடியரசன்.  
 

1. எளிய இனியநடையில் எழுந்த காப்பியம்

2. ஆற்றொழுக்கான நடை

3. வரிக்குவரி தமிழ் உணர்ச்சி

4. வளமான கவிதை வளம்

5. சிறந்த காப்பியக் கட்டமைப்பு