| ஸில் பிரயாணம் செய்ததனால் ஜூஸு க்கும் விஸ்கிக்கும் பணம் கொடுத்தான் கோபால். ஒரு சிறிய உலகமே நகர்வது போல் விமானத்திற்குள்ளே யாவும் அழகாயிருப்பதை உணர்ந்தான் முத்துக்குமரன். உற்றுக் கவனிக்காத வேளையில் விமானம் விரையும் உணர்வு கூட இன்றி அப்படியே அந்தரத்தில் மிதப்பது போலிருந்தது. அந்த அநுபவத்தின் புதுமையையும் சுகத்தையும் இரசிப்பதில் ஈடுபட்ட அவன் மாதவியோடும் கோபாலோடும் அதிகம் பேசவில்லை. விமானத்திற்குள்ளிருந்த மைக், நிகோபர் தீவுகளுக்கு மேலே பறந்து கொண்டிருப்பதாக அறிவித்தது. கீழே புள்ளிகளாகத் தென்னை மரங்களும் ஓட்டுக் கட்டிடங்களும் மங்கித் தெரிந்தன. டிஸ்எம்பார்கேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டன. மூவருடைய கார்டுகளையும் மாதவியே பூர்த்தி செய்து கையெழுத்து வாங்கி ஹோஸ்டஸிடம் கொடுத்தாள். பகலுணவு விமானத்திலேயே வழங்கப்பட்டது. மறுபடியும் விஸ்கி வாங்கிக் குடித்தான் கோபால். விமானத்திலிருந்த தொண்ணூற்றுக்கு மேற்பட்ட பிரயாணிகளுக்கு ஹோஸ்டஸ் பெண்கள் வண்டுகள் போல் சுறுசுறுப்பாக அலைந்து முக்கால் மணி நேரத்திற்குள் உணவு வழங்கிய அதிசயம் முத்துக்குமரனுக்கு வேடிக்கையாயிருந்தது. இவர்களுடைய பூவை ஊதுவது போன்ற மெல்லிய குரலும், உதடுகளைக் குவித்து அழகாக அதிராமல் வினவும் அழகும் முத்துக்குமரனை வியக்கச் செய்தன. விமானம் முழுவதும் மெல்லிய குளிரோடு ஓடிகொலோன் வாசனை நிரம்பியிருந்தது. அவன் அது பற்றிக் கேட்டபோது ‘‘ஒவ்வொரு ஃப்ளைட்டுக்கு முன்னாலும் ‘ஏர்க்கிராப்ஃட்’டினுள்ளே வாசனை ஸ்பிரே செய்வார்கள்’’ என்று விளக்கினான் கோபால். கீழே அடுக்கடுக்காகக் கட்டிடங்களும், கடலில் கப்பல்களும் தென்பட்டன. விமானத்தில் சிங்கப்பூர் |