மனோன்மணீயம் குறிப்புரை பாயிரம் பாயிரம் எனினும் முகவுரை யெனினும் நூன்முக மெனினும் ஒக்கும். பாயிரம் பொது, சிறப்பு என இரு வகைப்படும். இவற்றுள் ஒரு நூலுக்கு மட்டுமே உரியதன்றி எல்லா நூன்முகத்தும் உரைக்கத்தக்க கடவுள் வணக்கம் பொதுப்பாயிரத்தின் பாற்படும். ஒரு நூலுக்கே இன்றியமையாமல் உரிய தாய் அவ்வொரு நூன்முகத்தே உரைக்கப்படுவது சிறப்புப்பாயிரம். கடவுள் வணக்கம் வேதசிகை - வேதத்தின் முடிபாகிய உபநிடதம். வேதசிகை என்றது வேதத்தின் பிரிவு இரண்டனுள் முந்தியதான கரும காண்டம் ஒழிய பிந்தியதாய்ச் சிறந்து நிற்கும் பிரம காண்டம். விரிகலை-பரந்த சாத்திரம். விரிகலை-வினைத்தொகை. போதம்-அறிவு. சிந்தனை செய்தல் - தியானித்தில், நீளநினைத்தல். கூடுங்கால், வாராக்கால் : கால்ஈற்று வினையெச்சம், இவ் வெண்பாவின் முதலடியும் ஈற்றடியும் முற்று மோனைகள், மற்றையடிகளில் மேற்கதுவாய் மோனை. தமிழ்த்தெய்வ வணக்கம் பஃறாழிசைக் கொச்சக் கலிப்பா பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவாவது பல தாழிசைகள் வந்த கொச்சக் கலிப்பா. தரவு எனினும் எருத்தம் எனினும் ஒக்கும். தரவாவது தந்து முன்னிற்பது. தமிழ் - இனிமை, இணையில்லாதது, மற்ற மொழிகளி லில்லாத 'ழ' என்னும் எழுத்தைத் தனியே உடையது. கலைமகள் பெண்பாலாதலின் தமிழை அணங்கென்று கூறினார். தரவு. 1, வதனம்-முகம். பிறைநுதல் பிறைபோன்ற நுதல், உவமைத் தொகை : வடிவத்துக்கும் ஒளிக்கும் அழகுக்கும் பிறை, உவமை. திகலம்-பொட்டு. அணங்கு - தெய்வம். கடல், பூமி, பரதகண்டம், தக்ஷிணம், திரவிட நாடு, புகழ், தமிழ் என்பவற்றினிடத்து, முறையே ஆடை, மகள், முகம், நெற்றி, திலகம், மணம், தெய்வம் என்ற தன்மையை ஏற்றிக் கூறியதனால் உருவகவணி. ருஷப மகாராஜனது புத்திரனான பரத மகாராஜனால் ஆளப்பட்ட இடமாதல் பற்றி இந்தியா பரதகண்ட
|