யணன் கூறாமற் கூறுகின்றான்.] 276. வாகு - தோள் 278. ஒப்பு நோக்குக:- "தேரான் தெளிவுந் தெளிந்தான் கணையுறவுந் தீரா விடும்பை தரும்" - திருக்குறள் 51 அதி. 10ம் செய்யுள். 279-280. ஒப்பு நோக்குக:- "எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகு மாந்தர் பலர்" - திருக். 52. அதி. 4ம் செய். 289. உன்னுவ - நினைப்பவை. 303. கருப்போ - கரும்போ. 313. உறுப்புகள் - ஒப்புநோக்குக:- "படை குடி கூழமைச்சு நட்பரணாறும், உடையான் அரசருளேறு" - திருக். 39 அதி 1 ம் செய். 314. ஒருப்படில் - ஒருமைப்படில். ஒற்றுமைப்பட்டால், இணங்கினால். 316. இறந்த சிந்தையன் - சிந்தையற்வன் - மனத்தில் இயற்கைக் குணமொழிந்தவன் 322. சித்திரப் பார்வை யழுந்தார்க்கு - ஓவியத் துறை யுணர்ச்சி யற்றார்க்கு. 327. உறுகண் - துன்பம். 306-309. பாம்பிற்கு விடம்தலையிலும் தேளுக்கு வாலிலும் ஆதலால் யாவும் அடிமுதல் முடிவரை அரசர் கவனிக்க வேண்டுமென்பது கருத்து. [இக்களத்தில் நாட்டுவளம் - திணைமயக்கம் - தூதிலக்கணம் - செங்கோளன்மை அமைச்சு முதலியன ஒருவாறு கூறப்பட்டமை காண்க. ] இரண்டாம் அங்கம் இரண்டாங் களம் வைகறை - Early morning. 1-32. நடராஜன் சூரியோதயத்தைப் பார்க்க விரும்பில், இவ்விடம் மிகவும் பொருத்தமான இடம். சூரியோதத்தை நன்றாய்க் கண்டு பின் மற்றக் காரியத்திற்குச் செல்லுவோம். சித்திர மெழுதுவதில் கைவந்தவன், தான் படத்தில் எழுதப்புகுந்த சித்திரமானது அவனால் எழுதுவதற்கு எடுத்துக்கொண்ட தூரியக்கோல் படுந்தோறும் உருவம் இன்னதென்று தெரியவருவதுபோல் சூரிய கிரணங்கள் படப்பட, பொருள்கள்மேல் படர்ந்திருக்கிற இருள் நீங்கிப் பொருள்களெல்லாம் விளக்கமுறக் காணப்படுகின்றன. சூரியனுடைய பலவர்ணமுடைய கிரணங்கள் சராசரங்கண்மேற் படப்பட யாதொரு வடிவமுங் கண்ணுக்குப் புலப்படாதபடி ஏகமாய், துன்னிய காரிருட் பிழம்பானது மூடிக்கொண்டிருந்த தோற்றமானது போய், சிறிது சிறிதாய்ச் சராசரத்தின் உறுப்புகள் கண்ணுக்கு நன்றாய்ப் புலப்படும் படியாக விருக்குங் காட்சி மிக நன்றே! உச்சிக் கொண்டையையுடைய சேவற் கோழியானது சுரைக்கொடி படர்ந்திருக்கின்ற வீட்டினுடைய முகட்டின்மீது கர்வத்துடனடைந்து பின் இரண்டு பக்கத்து இறக்கைகளையும் தட்டிப் பெரிய வாயைத்திறந்து ஒருதரங் கூவிப் பக்கத்திலுள்ளவர் தன்னைப் புகழவேண்டிச் சுற்றிப் பார்க்கின்றாரைப்போல் நோக்குதல் மிகவினிதே. இருளுக்குப் பகைவனான சூரியன் காகந் தங்களையு மிருட் கூட்டங்களென்று கொல்லுவானோவென்று ஐயுற்று இரண்டு இறக்கைகளாகிய கைகளினால் தம்முடைய மார்பிலே புடைத்துக்கொண்டு கலக்கத்தை யடைந்து கா! கா! வெனக் கூவிக் காகத் தொகுதிகள் தட்டுக்கெட்டுத் தடுமாறி எப்பக்கங்களிலும் தனித்தனிப் பறந்தோடுவது மிக அழகா
|