பக்கம் எண் :

மனோன்மணீயம்
8

நன்று ! நன்று !நின் னாணம்.
மன்றலு மானது போலும்வார் குழலே ! 1
 
வாணி, 5. ஏதம் மாநீ சூது நினைத்தனை?
ஒருபொரு ளும்யான் கருதினே னல்லேன்.
இச்சகத் தேவரே பாடினும்,
உச்சத் தொனியி லுயிர்ப்பெழ லியல்பே. 2
 
மனோ, மறையேல் ! மறையேல் ! பிறைபழி நுதலாய் !
10.திங்கள் கண்டு பொங்கிய கடலெனச்
செம்புனல் பாக்கச் செந்தா மரைபோற்
சிவந்தவுன் கபோல நுவன்று நின்மனக்
களவெலாம் வெளியாக் கக்கிய பின்ன
ரேதுநீ யொளிக்குதல்? இயம்பாய்
15.காதல னேற்றுனக் கோதிய தெனக்கே. 3
வாணி, ஐயோ கொடுமை ! அம்ம ! அதிசயம் !
எருதீன் றெனுமுன மெனன்கன் றென்று
திரிபவ ரொப்பநீ செப்பினை !
நான்கண் டேநாள் நாலைந் தாமே. 4
 
மனோ, 20.ஏதடி ! நுமது காதல் கழிந்ததோ?
காணா தொருபோ திரேமெனுங் கட்டுரை
வீணாயினதோ? பிழைத்தவர் யாவர்?
காதள வோடிய கண்ணாய் !
ஓதுவாய், என்பா லுரைக்கற் பாற்றே. 5
 
வாணி, 25.எதனையா னியம்புகோ ! என்றலை விதியே.
(கண்ணீர் சிந்தி) வா : விளை யாடுவோம் வாராய்.
யார்முறை யாடுதல்? வார்குழற் றிருவே ! 6
 
மனோ, ஏனிது ! ஏனிது ! வாணி ! எட்பூ
ஏசிய நாசியாய் ! இயம்புக.
30.மனத்திடை யடக்கலை ! வழங்குதி வகுத்தே.7
 
வாணி, எப்படி யுனக்கியான் செப்புவே னம்மா?
தலைவிதி தடுக்கற் பாற்றோ? தொலைய