பக்கம் எண் :

77
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

ஊடாடின. அங்கு ஆண்டுகொண்டிருந்த அரசர்களில் சிலர், பௌத்த மதத்தையும் சமண மதத்தையும் தழுவலானார்கள். ஆரியரும் மெள்ள மெள்ளத் தென்னாட்டில் வந்து நிலைத்தார்கள்.

19. தென்னிந்திய சங்கீதமும் அதில் ஆரியக் கலப்பும்.

முதல் ஊழியின் இறுதியில் செய்யப்பட்ட தொல்காப்பியம் என்னும் இலக்கணநூல் இடைச்சங்கத்திற்கும் கடைச்சங்கத்திற்கும் ஆதார நூலாயிருந்ததென்று இதன்முன் நாம் பார்த்திருக்கிறோம். அவ்விலக்கணநூலில், முதல் ஊழிகாலம் சத்தியமும் நெறியுந் தவறாத காலமென்றும், பின் ஊழிகாலம் ஒழுங்கு தவறிய காலமென்றும், அதற்கேற்பச் சில கலியாண ஒழுங்குகளை ரிஷிகள் செய்தார்களென்றும் அவ்வாசிரியர் சொல்லுகிறார்.

தொல்காப்பியம், பொருளதிகாரம், 4-வது கற்பியல், 144-வது சூத்திரம்.

"மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்
கீழோர்க்காகிய காலமு முண்டே"

இதற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியார், முற்காலத்து நான்கு வருணத்தாருக்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது என்றும், அது இரண்டாம் ஊழி தொடங்கி வேளாளர்க்குத் தவிர்ந்தது என்றும், தலைச்சங்கத்தாரும் முதல் நூல் ஆசிரியர் (அகஸ்தியர்) கூறிய முறையே கரணம் ஒன்றென்று செய்யுள் செய்தார் என்றும் சொல்லுகிறார்.

தொல்காப்பியம், பொருளதிகாரம், 4வது கற்பியல், 145-வது சூத்திரம்.

"பொய்யும் வழுவுந் தோன்றிய பின்ன
ரையர் யாத்தனர் கரணமென்ப"

இதற்கு உரையாசிரியர் ஆதி ஊழிகழிந்தபின் இரண்டாம் ஊழி முதலாகப் பொய்யும் வழுவும் சிறந்து தோன்றியதினால் இருடிகளாகிய பெரியோர், மேலோர் கரணமும் கீழோர் கரணமும் வேறுபடக் கட்டினார் என்று கூறுகிறார். ஐயர் என்பது முதல் நூலாசிரியரையன்று, வட நூலோரைக் கருதியது என்கிறார். பின்னும் இவ்வாசிரியர் ஆதி ஊழியின் அந்தத்தே இந்நூல் செய்தலின், முதல் நூலாசிரியர் கூறியவாறே களவு நிகழ்ந்த பின்னர்க் கற்பு நிகழுமாறுங் கூறி, தாம் நூல் செய்கின்ற காலத்து, பொய்யும் வழுவும் பற்றி இருடிகள் கரணம் யாத்தவாறும் கூறினார் என்கிறார். மேற் குறித்த தொல்காப்பியர் சூத்திரத்தையும் நச்சினார்க்கினியார் செய்த உரையையும் நாம் கவனிக்கையில், முதல் நூலாகிய அகத்தியத்திற்கு வழி நூலாகிய தொல்காப்பியம் எழுதிய காலத்தில் மேலோருக்கு ஒரு சடங்கும், கீழோருக்கு வேறு சடங்குமாக, வட நூலோர் வகுத்தார்களென்றும், தலைச் சங்கத்திருந்தோர் காலத்து, அப்பேதமில்லாமல் நான்கு வருணத்தாருக்கும் சடங்கு ஒன்றாயிருந்ததென்றும் விளங்குகிறது. அக்காலத்தில் வேதத்தை வெவ்வேறாக வகுத்து நான்கு ஜாதியாரும் இன்னின்னது செய்ய வேண்டுமென்று வகுத்ததாகப பார்க்கிறோம். இதனாலே முதல் ஊழியில் வேதங்கள் வகுக்கப்படவில்லையென்றும், வருண ஆச்சிரம தருமங்கள் உண்டாகவில்லையென்றும், அது சத்தியம் தவறாமல் நடந்துகொண்ட காலமென்றும் அறிகிறோம். அக்காலமுதல் தமிழோடு வடபாஷையும் கொஞ்சங் கொஞ்சமாகக் கலந்துகொள்ள ஆரம்பித்தது. அதுமுதற்கொண்டு ஆரியரும் தமிழ்ப்பாஷைக்குச் சில உபகாரங்கள் செய்தார்களென்றும், தமிழ்ப் பாஷையின் அருமை தெரியாத மற்றவர்கள் தமிழையும் அதின் பூர்வ நூல்களையும் தலையெடுக்காது செய்தார்களென்றும் சூரியநாராயண சாஸ்திரிகள் B.A., எழுதிய "தமிழ் மொழியின் வரலாறு" இரண்டாம் அதிகாரத்தைக் கவனிக்கும்பொழுது