ஜலப்பிரளயத்துக்கு முன் மிகவும் அருமையாக எண்ணப்பட்டதும் தெய்வசமுகத்தில் ஆடிப்பாடிக் கொண்டாடக்கூடியதுமாயிருந்த சங்கீதத்தைப் போதிக்கும் இசை நூல்களும் இசை வல்லோரும் ஜலப்பிரளயத்தால் அழிந்தபின் (நோவாவின் பேழையில் தப்பிய சொற்பப் பேர்கள் போல) சிலர் மாத்திரம் அப்பிரளயத்திற்குத் தப்பினார்கள். சமுத்திரத்தில் தென்னிந்தியாவிற்குத் தெற்கே 49 நாடுகளின் பிரதான நகரமாயுள்ள தென்மதுரை யழிந்தபோது அதன் வடகோடியிலிருந்த சொற்ப ஜனங்கள் மாத்திரம் அழியாமல் தப்பினார்களென்று நினைக்க இடமிருக்கிறது. ஜலப்பிரளயம் வரும் காலம் இன்னதென்று தெரியாதிருந்ததனால் அனேக வித்வான்களும் இசை வல்லோரும் பிரளயத்தில் அழிந்துபோனார்கள். அழிந்தவர்கள் போக அதன் வடபாகமாகிய தென்னிந்தியாவிலுள்ள அகத்தியர் போன்ற சில சங்கத்தலைவர்கள், கடல் கொண்டுபோன முதல் சங்கத்தைப்போல இரண்டாம் சங்கமொன்றைக் கபாடபுரத்தில் ஏற்படுத்தினார்கள். கொற்கையில் ஆளுகை செய்யத் தொடங்கின பாண்டிய ராஜாக்களைப் பற்றி விசாரித்தால், தென்மதுரையை யாண்ட ராஜாக்கள் தான் இங்கு வந்து ஆண்டார்களென்று சொல்ல இடமில்லை. ஆனால் அந்த ராஜவம்சத்தைச் சேர்ந்தவர்களே இங்கே அரசாண்டார்களென்று நினைக்கலாம். கொற்கையிற்போலவே, உக்கிரமன்னன் கோட்டை சுந்தரபாண்டிபுரம் தென்காசி கருவைநல்லூர் கோட்டாறு வள்ளியூர் பன்றிகுளம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆதித்தபுரம் மணற்படை செங்கோட்டை முதலிய சிறு நாடுகளிலும், பாண்டிய வம்சத்தவர்கள் ஆண்டு கொண்டிருந்தார்களென்பதாக, இடிந்துபோன கோட்டைகளாலும் சுவர்களாலும் இன்றும் காணக்கூடியதா யிருக்கிறது. தென்மதுரைக்கு வெகுதூரம் வடக்கிலிருந்த சிற் சிலசிற்றரசர்களாலும், அழிந்து போகாமல் மிஞ்சியிருந்த சில சங்கப் புலவர்களாலும் இரண்டாம் சங்கம் மறுபடியும் ஆரம்பமாயிற்று. இவர்களில் அநேகர், இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுள் இசை, நாடகம் என்னும் இரு தமிழையும் நன்றாய் அறிந்து கொள்ளாதவர்களென்றே சொல்ல வேண்டும். முதல் ஊழியில் மிஞ்சிய சிலபேருக்கும் அதை எடுத்து நிறுத்தும் ஊக்கமும் குறைந்தது. தாங்கள் அனேக நூறு வயதுடையவர்களாய்ச் சாதித்துக் காட்டிய அரிய வித்தைகளை அற்ப ஆயுளுள்ள மற்றவருக்குச் சொல்லவும் மலைத்தார்கள் போலும். முதல் ஊழியிலுள்ளவர்கள் ஆயிரம் வருஷங்களாகவும் அநேக ஆயிரம் வருஷங்களாகவு மிருந்தார்களென்று புராணங்கள் சொல்லுகின்றன. அப்புராணங்கள் உண்மைக்கு மிஞ்சிப் பாரித்துக் கூறுவதாக நாம் எண்ணினாலும், சத்தியவேதத்திலும் இற்றைக்கு 6,000-வருஷங்களுக்கு முன் 960-வருஷம் ஆயுளுள்ளவர்களிருந்தார்களென் றும் 4,500 வருஷங்களுக்கு முன்னிருந்த நோவா தன் 500-வது வயதில் சேமைப் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது. இவற்றை நோக்குமிடத்து தென்மதுரையிலிருந்த 4,400-க்கு மேற்பட்ட சங்கப்புலவர்களும் 4,400-க்கு மேற்பட்ட சங்கத்தின் காலமும் யுக்திக்குப் பொருத்தமாகத் தோன்றாதிராது. அப்படியே அக்காலத்திலிருந்த சங்கத்தார் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் நீண்டகாலம் பயின்றார்களென்பதும் உண்மைதானென்று ஒப்புக்கொள்வோம். ஜலப்பிரளயத்திற்குப் பின்னுள்ள மறற்வர் அற்ப ஆயுள் பெற்றவர்களானதினால் 1,000-தந்தி பூட்டிய பேரியாழில் பழகுவதை படிப்படியாக விட்டுவிட்டார்கள். நாரதரின் சுருதி முறைப்படி கானம் பண்ணும் நுட்பத்தை அறியாது வெறுத்தார்கள். கண் முகம் கரம் கால் சிரம் முதலிய அங்கங்களின் அபிநயத்தால் சரித்திரங்களை விளக்கும் பரதசாஸ்திரத்தின் அருமையைத் தெரிந்துகொள்ளாது மயங்கினார்கள். இப்படியிருக்குங்காலத்தில், இடைச்சங்கமிருந்த கபாடபுரம் கடலால் அழிக்கப்பட்டது. அங்கிருந்த முடத்திருமாறன் என்னும் பாண்டியன் வடநாட்டிற்கு வந்து அங்கே கடம்பவனத்தைக் கண்டு இப்போதிருக்கும் கூடல் ஆலவாய் என்னும் வடமதுரையைக்கட்டி அதில் மூன்றாவது சங்கத்தை ஸ்தாபித்தான். இக்கடைச்சங்க காலத்தில் பௌத்தமதமும் சமணமதமும்
|