17. தலைச்சங்க காலத்தில் சங்கீதத்தின் உயர்நிலை. இம் முதல்ஊழியில் 4,440 வருஷங்களாகச் சங்கமிருந்தது. சங்கத்தாரால் செய்யப்பட்ட முதுநாரை, முதுகுருகு, பஞ்சபாரதீயம், களரியாவிரை என்பவையும் இவற்றிற்கு முதல் நூலாயிருந்த அகத்தியமும் கடலால் அழிக்கப்பட்டன. இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் சொன்ன அகத்தியத்தில் இசையின் (சங்கீத) பாகமும் இசைத் தமிழையே தனித்துச் சொன்ன பெருநாரை பெருங்குருகு பஞ்சபாரதீயமும் முதல் ஊழியில் மிகவும் விரிவாக வழங்கி வந்திருக்க வேண்டும். அந்நூல்களுக்கிணங்க அமைந்த பெருங்கலம் அல்லது 1,000 தந்திகள் பூட்டிய பேரியாழ் என்னும் வீணையும், 21, 17, 14 தந்திகள் பூட்டிய மற்றும் சில வீணைகளும் அழிந்தன. பெருங்கலத்தையே நாரத வீணையென்பார். ‘யாழாசிரியனாகிய நாரதன்’ என்று அக்காலத்து நூல்களில் சொல்லப்படுவதை நாம் கவனிக்கையில், முதல் சங்கத்தின் காலத்திலே அவர் வீணையில் வல்லவராயிருந்தாரென்றும் மற்றவர்களுக்கு வீணை கற்பிக்கும் குருவாயிருந்தாரென்றும் சங்கீதத்தைப் பற்றிப் பஞ்சபாரதீயம் என்னும் நூல் எழுதியிருந்தாரென்றும் தெரிகிறது. முதல் ஊழியில் எழுதிய சங்கீத நூல்களிலுள்ள சில அகத்தியச் சூத்திரங்களும் மிகக் கொஞ்சமான நாரதச் சூத்திரங்களும் மேற்கோளாக அங்கங்கே காணப்படுகின்றனவன்றி முழுநூலும் அகப்படுகிறதில்லை. அகப்பட்ட சூத்திரங்களுள் சில இற்றைக்கு 1,800 வருஷங்களுக்கு முன் எழுதிய சிலப்பதிகாரத்திலும் அதற்கு அடியார்க்கு நல்லாரால் எழுதிய உரையிலும் வெளிப்படுகின்றன. ஜலப்பிரளயத்திற்கு முன்னிருந்த காலத்தில் 4,440 வருஷங்கள் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ச்சங்கம் இருந்ததையும், 4,449 வித்வ சிரோமணிகள் தலைமை வகித்ததையும், அச்சங்கத்தில் சங்கீத நூல்கள் ஏராளமாயிருந்ததையும், பெருங்கலம் முதலிய வாத்தியங்கள் இருந்ததையும் இற்றைக்கு 1,800 வருஷங்களுக்கு முன்னிருந்த ஒரு இளவரசனும் 1,000 வருஷங்களுக்கு முன்னிருந்த அடியார்க்கு நல்லாரும் சொல்லும்போது அதை யார் மறுக்கக்கூடும்? இதற்கு நூறு, இருநூறு வருஷங்களுக்கு முன்பின்னானகாலமே கரிகால் சோழன், கயவாகு முதலியவர்களின் காலமாகும். 18. முதல் ஊழியில் பெருமைவாய்ந்திருந்த சங்கீதம்பின் ஊழியில் குறைந்த விதம். பூர்வகாலத்தின் சரித்திரங்களை நாம் நன்றாய்க் கவனிப்போமானால், சங்கீதமானது தெய்வ சந்நிதியில் ஆராதனைகளில் மிகவும் உபயோகிக்கப்பட்டு வந்ததென்று காண்போம். எவ்வித பிரதிப்பிரயோஜனத்தையும் விரும்பாமல், அரசன் முதல் குடிகள் வரையும் சங்கீத அப்பியாசம் செய்திருந்தார்களென்று தெரிகிறது. தாவீது ராஜன் எப்படிக் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தன் ஜனங்களுடன் சங்கீதம் பாடி நர்த்தனம் பண்ணிக்கொண்டு வந்தானோ, அப்படியே சுமார் 1,800 வருஷங்களுக்கு முன்னுள்ள காவிரிப்பூம்பட்டினத்தில் கரிகால் சோழனும், மதுரையில் ராஜசேகர பாண்டியனும், அதன்முன் சிதம்பரத்தில் நடராஜனும், பரத சாஸ்திரத்தில் தேர்ந்தவர்களாய் நடனம் பண்ணினார்களென்று அறிவோம். தமது பக்தனாகிய பாணபத்தினுக்காக வீணையில் சாதாரி ராகம் பாடியதும், பாணபத்திரனுடைய மனைவியின் வீணாகானம் சிறந்ததென்று சாட்சி சொல்ல வந்ததும், பரமசிவனென்று சொல்லப்படுகிறதே. இவ்வளவு மேன்மை பொருந்திய சங்கீதமும் பரதமும் நாள் செல்லச் செல்லக் குறைவுபட்டு, சமணராலும் பௌத்தராலும் அருமையறியாத ராஜாக்களாலும் கண்டிக்கப்பட்டுத் தேய்ந்து, தற்காலத்தில் ஏழைகள் கைப்புகுந்திருக்கிறதே என்று விசனப்படுகிறேன்.
|