பக்கம் எண் :

74
முதல் ஊழியில் தமிழ்ப்பாஷையின் உன்னத நிலை.

தனிச்சிறப்புக் குறைந்ததென்று சொல்ல வேண்டும். அதுபோலவே அக்காலத்தில் தென்னிந்திய சங்கீதத்தின் நிலையும் கலப்புற்றிருக்க வேண்டுமென்று நினைக்க நாம் மறந்து போகக் கூடாது. இதோடு இடைச்சங்க காலத்தில், முந்தியிருந்த அகத்தியம் முதலிய சில பூர்வ நூல்களின் சிலபாகம் கொற்கை அல்லது கபாடபுரம் கடல் கொண்டபோது அழிந்தன. திருநெல்வேலியின் தென் கீழ்ப்பக்கத்தில், கடற்கரையோரத்தில் கடல் அலைகளால் மோதப்பட்ட மதில்களுடன் விளங்கி நிற்கும் திருச்செந்தூர்க் கோயிலுக்குச் சுமார் 10 மைல் சமீபத்தில், இப்போது கொற்கையென்று அழைக்கப்படும் கிராமத்திற்குக் கீழ்பக்கமாய்ப் பெரிய ஆலயங்களுடனும் அரண்மனைகளுடனும் மதில்களுடனும் ஒரு நகரம் கடலுக்குள் மூழ்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படியே தென்னிந்தியாவின் கீழ்கரைகளில் அனேக ஆலயங்களும் கோட்டைகளும் கடல்வாய்ப்பட்டு அழிக்கப்பட்டிருக்குமென்று எண்ண இடந்தருகிறது. விசாகப்பட்டணத்துக்குச் சமீபத்தில் கடலுக்குள்ளிருக்கும் சுப்பிரமணியர் ஆலயத்தையும், மகாபலிபுரத்துக்குச் சமீபத்தில் கடலுக்குள்ளிருக்கும் சிவாலயத்தையும் பார்த்தவர்களுக்கு இதன் உண்மை தெரியாமல் போகாது. கடலால் அழிக்கப்பட்ட தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் மதுரையிலும் சற்றேறக் குறைய 9,000 வருடங்களாய்த் தமிழ்ச்சங்கம் நடந்ததாக அறியலாம். 657 சங்கப்புலவர்க ளிருந்தார்களென்றும், 8,598 புலவர்கள் தலைமை வகித்தார்களென்றும், 197 பாண்டிய ராஜாக்கள் அதை ஆதரித்து வந்தார்களென்றும், அதில் 15 பாண்டிய ராஜாக்கள் கவியரங்கேறினார் களென்றும் தெளிவாய்த் தெரிகிறது.

செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரமும் திரணதூமாக்கினி எழுதிய தொல்காப்பியமும் கூலவாணிகன் சாத்தனார் எழுதிய மணிமேகலையும் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் பதினெண்கீழ்க்கணக்கும் மற்றும் பல தமிழ்நூல்களும் சங்கப் புலவர்களாலும் தமிழ்நாட்டு அரசர்களாலும் இயற்றப்பட்டுத் தமிழர்க்கு மிகப் பூர்வ நூல்களாக விளங்கி நிற்கின்றன. இந்நூல்கள் சொற்சுவை பொருட்சுவை பொருந்தியவைகளாய் இலக்கண வழுவின்றி எழுதப்பட்டவைகளாய்த் தமிழ் கற்றறிந்தோர் கொண்டாடக் கூடியவைகளாய் இன்னும் விளங்குகின்றனவென்று நாம் அறிவோம். இற்றைக்கு ஆயிரமாயிரம் வருஷங்களுக்குமுன் எழுதப்பட்ட இத்தமிழ் நூல்களின் கடைச்சிறப்பு தற்காலத்தவர் மேலானதென்று மதிக்கக்கூடியதாக விருக்கிறதே, தமிழ் மிகப் பழமையானதும் சிறந்ததுமான பாஷையென்று காட்டப்போதுமானது.

மேலும் உலகத்தார் யாவராலும் கொண்டாடப்படும் சிறந்த கருத்துக்கள் யாவையும் தன்னகத்திலடக்கிக் கொண்டிருக்கும் திருவள்ளுவநாயனார் இயற்றிய திருக்குறளினது தமிழருமையையும் சுவையையும் உயர்வையும் அறியாதவரும் உண்டோ? அவர் சகோதரியாகிய ஒளவையார் எழுதிய இருசொல் முதுமொழியாகிய ஆத்திசூடியையும் நாற்சொல் முதுமொழியாகிய கொன்றை வேந்தனையும் முதல்முதல் மனனம் பண்ணாத தமிழ் மக்களும் உண்டோ? இச்சீவியத்திற்கு இன்றியமையாத இதோபதேசம் யாவற்றையும் இலகுவான நடையில் தகுந்த உவமானங்களுடன் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும் குறள், ஆத்திசூடி போன்ற நூல்களின் பெருமையும், ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட அவைகளின் தொன்மையும் இதர பாஷையிலுள்ள நூல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் சாஸ்திர ஆராய்ச்சிக்காரருக்கு மிகவும் தெளிவாக விளங்கும். தேவாரம், திருவாசகம், திருவாய்மொழியென்னும் பக்திநூல்களின் அருமையை எடுத்துச் சொல்லவல்லவர் யார்?