பக்கம் எண் :

73
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

இவ்வாதி காலத்து நூல்களுட் கடல்கொண்டழிந்தனவும் இன்னும் கண்டு பிடிக்கப்படாதனவும் போக, இப்போழ்தத்துக் கிடைப்பன தலைச்சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட ‘அகத்தியம்’ என்ற நூலின்கட் சில சூத்திரங்களும், இடைச்சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கண நூலும், கடைச்சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட ‘எட்டுத்தொகை’ என்ற நூற்றொகையுளடங்கிய எட்டு நூல்களும் ‘பத்துப்பாட்டு’ம், ‘பதினெண்கீழ்க்கணக்கு’ மாம். எட்டுத்தொகை நூல்களைப் பின்வரும் பாட்டாலுணர்க:

"நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்துங் கலியோடகம்புறமென்
றித்திறத்த வெட்டுத்தொகை."

இவ்வெட்டுத் தொகையுட் ‘கலித்தொகை, ஐங்குறுநூறு, புறநானூறு’ என்ற மூன்று நூல்களும் அச்சாகி வெளிப்போந்துள. இம்மூன்றனுள் முன்னைய இரண்டும் அகப்பொருளும் பின்னையதொன்றும் புறப்பொருளுங் கூறுவனவாம்."

மேற்கண்ட சில குறிப்புக்களினால் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கடைச்சங்கப் புலவர் காலமிருந்தாரென்றும், அது இற்றைக்கு 1,800 வருஷங்களுக்கு முன் இலங்கையின் அரசனாகிய கயவாகுவின் காலமென்றும் விளங்குகிறது. இறையனாரகப் பொருளுக்கு உரை எழுதிய நக்கீரனார் இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் சிலவரிகளை மேற்கோளாக எடுத்தாளுகிறார் என்பதைக் கொண்டும், நக்கீரனார் கடைச்சங்கப் புலவர்களில் ஒருவர் என்பதைக் கொண்டும், இவர் காலமும் கடைச்சங்க காலமென்று திட்டமாய்த் தெரிகிறது. இறையனாரகப் பொருளுக்கு உரையெழுதிய நக்கீரனார் உரையில், முதல் ஊழியின் இறுதியின்கண் தென்மதுரையகத்துத் தலைச்சங்கம் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இருந்ததென்றும், அதில் வருஷம் ஒவ்வொருவராக 4,449 வித்வசிரோமணிகள் சங்கத்திற்குத் தலைமை வகித்தார்களென்றும், காய்சின வழுதிமுதல் கடுங்கோனீறாகவுள்ள 89 பாண்டிய ராஜாக்கள் ஆண்டு கொண்டிருந் தார்களென்றும், அவர்களுள் 7 பாண்டியர்கள் கவியரங்கேறித் தலைமை வகித்தார்களென்றும் தெளிவாக அறிகிறோம். அவருள் ஒருவனான சயமாகீர்த்தியனாகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் காலத்தில் தொல்காப்பியம் என்னும் சிறந்த நூல் எழுதப்பட்டது. இவர் காலத்தில் அவன் அரசாண்டு கொண்டிருந்த தென்மதுரையும் அதைச் சேர்ந்த 49 நாடுகளும் கடலால் அழிக்கப்பட்டன. புறநானூற்றில் கடல்கொண்ட தென்னாட்டில் பஃறுளி என்னும் ஆறு வடிம்பலம்ப நின்ற பாண்டியனால் வெட்டப்பட்டதென்று சொல்லப்படுகிறது. செங்கோன்றரைச் செலவு என்றதோர் சிறு நூலினால் முதல் ஊழியிலிருந்த சில நாடுகளின் பெயரும் மலைகளின் பெயரும் ஊர்களின் பெயரும் சில புலவர்களின் பெயரும், சில நூல்களின் பெயரும் வெளியாகின்றன. இது குமரியாற்றிற்கும் பஃறுளியாற்றிற்கும் இடையிலுள்ள பெருவள நாட்டரசனாகிய செங்கோவைத் தனியூர்ச் சேந்தன் என்னும் புலவன் பாடினதென்று தெரிகிறது. இது முதல் ஊழியின் காலமாம்.

முதல் ஊழியில் தமிழ்ப்பாஷையின் உன்னத நிலை.

முதல் ஊழிகாலத்தில் நாரதர் அகத்தியர் முதலிய பெரியோர் எழுதிய சில சூத்திரங்களினால் தமிழ்ப் பாஷை விருத்தியடைந்து மிகவும் உன்னதமான நிலையெய்தி மிக மதுரமுடையதாய் எவ்விதக் கலப்பும் கடினமுமின்றி அமுதமொத்திருந்ததென்று தமிழின் அருமை தெரிந்த யாவரும் அறிவார்கள். பிரளயத்திற்குப்பின் தமிழர் பல இடங்களுக்கும் பரவினதினாலும் பல பாஷை பேசுவோர் இடைச்சங்கத்திலும் கடைச்சங்கத்திலும் கலந்ததினாலும் பல பாஷைகளும் கலந்து அதன்