பக்கம் எண் :

202
தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்.

சுந்தரம் ஐயர். உமையாள்புரம். மானம்புச்சாவடி வெங்கிடுசுப்பையரின் மாணாக்கர். இவர் இராகம், பல்லவி, கீர்த்தனைகள் மிக நன்றாய்ப் பாடுவார். பஞ்சாபகேச ஐயரும் கொரத்தவாசி வேங்கடரமண ஐயரும் பிடில் நடேச ஐயரும் இவருடைய மாணாக்கர்கள். நடேச ஐயர் பிடில் மிகவும் நன்றாய் வாசிப்பார்.

சுந்தரம் ஐயர். வக்கீல். சித்தூர். வீணை வாசிப்பிலும் பாட்டிலும் சமர்த்தர்.

சுந்தர ராவ். தஞ்சாவூர். சுகமான சாரீரத்துடன் நன்றாய்ப் பாடுவார். இவர்க்குத் தோடி சுந்தர ராவ் என்று பெயர். தஞ்சாவூர் மகாராஷ்டிர வம்சம். இவர் பிள்ளையும் தோடி ராகம் நன்றாய்ப் பாடுவார்.

சுபாங்கர். 1700. இவர் ‘சங்கீத தாமோதரம்’ என்ற புஸ்தகம் எழுதியிருக்கிறார்.

சுப்பண்ணா. இவர் வீணை சுப்புக்குட்டி ஐயரின் குமாரர். வீணையை கர்நாடக சம்பிரதாயமாய் ஒழுங்காய் வாசிப்பவர்.

சுப்பண்ணா. இவரை பக்ஷி சுப்பண்ணா என்று அழைப்பார்கள். மைசூர் சமஸ்தானத்தில் வீணை வித்வான். வீணை சாம்ப ஐயரின் மாணாக்கர். இவர் வாயால் பாடிக்கொண்டே வீணைவாசிக்கும் பத்ததி மிக அபூர்வமானது. இன்னும் அநேக வாத்தியங்களும் வாசிப்பார்.

சுப்பராம ஐயர். இவர் சேஷாசல ஐயரின் குமாரர், பிடில் நன்றாய் வாசிப்பார். இவர் தம்பியும் நன்றாய்ப் பாடுவார்.

சுப்பராம தீக்ஷதர். இவர் பாலசுவாமி தீக்ஷதரின் பேரனும், (மகள் பிள்ளை) சுவிகார புத்திரனுமானவர். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் சங்கீதத்திலும் விசேஷ பாண்டித்தியமுடயவர். பாலசுவாமி தீக்ஷதரிடத்தும், விளாத்திகுளம் கிருஷ்ணா மாத்தியரிடத்தும் காவியம் வீணை நாடகம் அலங்காரம் முதலானவைகளையும் சங்கீத இலக்கிய இலட்சணங்களையும் கற்றுக் கொண்டார். ஜெகதீஸ்வர ராம வேங்கடேஸ்வர ராஜா நாளில் எட்டையாபுரத்தில் சமஸ்தான வித்வானாயிருந்தார். சௌக்கவர்ணங்கள் தானவர்ணங்கள் கீர்த்தனைகள் இராகமாலிகைகள் இராகசஞ்சாரங்கள் செய்திருக்கிறார். இவைகளை இவர் செய்திருக்கும் "சங்கீதசம்பிரதாய பிரதர்சினி" யில் பார்க்கலாம். இவரும் சின்னச்சாமி முதலியாருமாக எட்டையாபுரம் இராஜாவின் உதவியைக் கொண்டு "சங்கீதசம்பிரதாய பிரதர்சனி" என்னும் சங்கீத நூலைச் செய்திருக்கிறார்கள். இவருடைய மாணாக்கர் எட்டையாபுரம் தியாகராஜ ஐயர்.

சுப்பராமையர். வைத்தீஸ்வரன்கோவில். தமிழிலும் சங்கீதத்திலும் வித்வான். இவர் முத்துக்குமர முத்திரையுடன் அநேக பதங்கள் செய்திருக்கிறார். சுமார் 50 வருஷங்களுக்கு முன்னிருந்தவர்.

சுப்பராய அண்ணாவி. திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலயத்தின் நட்டுவாங்க பரம்பரையைச் சேர்ந்தவர். இவர் தேவாரம், திருவாசகம் சொல்லும் ஓதுவாராயிருந்தார். சங்கீத சாஸ்திரங்களிலும் பரத சங்கீத சாகித்தியங்களிலும் தேர்ந்தவர்.

சுப்பராய சாஸ்திரியார். 1803. சாமா சாஸ்திரியாரின் குமாரர். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், சங்கீதம் இவைகளில் விசேஷ பாண்டித்திய முடையவர். அநேக கீர்த்தனைகளும் சுரஜதிகளும் செய்திருக்கிறார். இவர் மாணாக்கர் பொன்னுசாமி.

சுப்பராய சாஸ்திரியார். சென்னப்பட்டணம் பைடால குருமூர்த்தி சாஸ்திரியாரின் சகோதரர், நன்றாய்ப் பாடுவார். அநேக வர்ணங்கள் செய்திருக்கிறார். இவர் குமாரர் சுந்தரையர் மிக இனிமையாய்ப் பாடுவார்.