பக்கம் எண் :

203
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

சுப்பராய சாஸ்திரியார். இவர் அலசூர் கிருஷ்ணையர் குமாரர். சாமா சாஸ்திரியாரிடம் சிட்சை சொல்லிக் கொண்டு பெரிய வித்வானாயிருந்தார். குமாரமுத்திரையுடன் அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். இவருடைய குமாரர் அண்ணாசாமி சாஸ்திரியாரும் மருகர் கச்சி சாஸ்திரியாரும் பலரும் மதிக்கும்படியான கெட்டிக்கார வித்வான்களாயிருக்கிறார்கள். பிரம்பூர் கிருஷ்ணையர், சந்திரகிரி இரங்காச்சாரியார், திருஞானமுதலியார், சிமிட்டா இராகவலுசெட்டி, பிடில் பாலு இவர்களும் சுப்பராய சாஸ்திரியாரிடம் சொல்லிக் கொண்டவர்கள்.

சுப்பராய நட்டுவனார். பரத சங்கீத சாகித்தியத்தில் தேர்ந்தவர். இவர் பாடிய வர்ணங்களும் கீர்த்தனைகளும் துளஜாமகாராஜா பேரிலும் கடவுள் பேரிலும் முத்திரையுடன் இருக்கின்றன. துளஜா மகாராஜாவால் பல்லக்கு முதலிய பிருதுகளும், பூமிகளும், ஆபரணங்களும் இப்போது நட்டுவன்சாவடி யென்றழைக்கப்படுகிற கட்டிடமும் இவருக்குக் கொடுக்கப்பட்டன. இவர் அநேகருக்கு சங்கீத வித்தையை போதித்திருக்கிறார். இவருக்கு பொன்னையா, சின்னையா, சிவானந்தம் என்ற மூன்று குமாரர்களுண்டு. அவர்களும் சங்கீதத்தில் மிகத் தேர்ந்தவர்கள்.

சுப்பராயர். இவரைப் பிச்சாண்டார் கோவில் சுப்பராயர் என்பார்கள். நீலகண்ட ஐயரின் மாணாக்கர். சங்கீதத்தில் அபார செயலுள்ளவர். இவர் பாடினால் கின்னர தந்தியில் வாசித்தது போல ஜனங்களுக்கு மயக்கத்தையுண்டு பண்ணும்.

சுப்பராயலு. பிச்சாண்டார் கோவில். அதிமனோகரமாய்ப் பாடுவார். இவருடைய மாணாக்கர் சிவசாம்பையர்.

சுப்பராயலு. திருவள்ளூர். இவர் திருவள்ளூர் செங்கல்ராயுடுவின் மருகர். நாகசுரம் நன்றாய் வாசிப்பார்.

சுப்பராயலு. திருப்பாதிரிப்புலியூர். இவரும் வையாபுரியும் முத்தும் மிருதங்கம் நன்றாய் வாசிப்பார்கள்.

சுப்பராவ். இவரை பிடில் சுப்பராவ் என்றழைப்பார்கள். பல்லவி சிவராமையரின் குமாரர். பிடில் தாளம் தவறாமல் வெகு சுத்தமாய் வாசிப்பார்.

சுப்பராவ். இவர் பித்தாபுரம் சமஸ்தானத்தில் சங்கீத வித்வானாயிருக்கிறார். வீணை மிகவும் நன்றாய் வாசிப்பார்.

சுப்பிரமணிய ஐயர். இவரைப் பட்டணம் சுப்பிரமணிய ஐயர் என்றழைப்பார்கள். திருவையாற்றிலிருந்து பிறகு சென்னப்பட்டணத்தில் போயிருந்தார். கனநயதேசிகங்களையும் இராகங்களையும் சம்பிரதாயமாய் பல்லவியுடன் நன்றாய்ப் பாடுவார். அநேக கீர்த்தனைகளையும் வர்ணங்களையும் ஜாவளிகளையும் தில்லானாக்களையும் சுகமான வர்ணமெட்டுகளுடன் செய்திருக்கிறார். பெரியோர் செய்த கீர்த்தனைகளை அவர்கள் போனவழி தவறாமல் சுகமாய்ப் பாடுவார். இவரும் இவர் தமயனார் பஞ்சநத சாஸ்திரிகளும் சேர்ந்து பாடும் கீர்த்தனைகளைக் கேட்டவர்களுக்கு மற்றவர் பாடும் பல்லவியைக் கேட்க விருப்பமிருக்காது. இராமநாதபுரம் சீனிவாச ஐயங்கார், பிடில் கிருஷ்ணமாச்சாரியார், காஞ்சி சேஷையர், சேஷகிரி ராவ் இவர்கள் மாணாக்கர்கள். இவர்கள் சுப்பிரமணிய ஐயர் செய்திருக்கும் கீர்த்தனைகளையும் பல்லவிகளையும் ஒழுங்காய்ப் பாடுவார்கள். சுமார் 15-வருஷங்களுக்கு முன் காலஞ்சென்றார்.

சுப்பிரமணிய ஐயர். கங்குந்தி. சம்பிரதாயமாய்ப் பாடுவார்.