| சுப்பிரமணிய ஐயர். இவருக்குத் திருவையாற்று சுப்பிரமணிய ஐயர் என்று பெயர். மைசூர் சமஸ்தானத்தில் வித்வானாயிருக்கிறார். தாளத்தில் விசேஷ ஞானமுள்ளவர். அநேக ஜாதி பேதங்களைச் செய்து பல்லவி பாடுவார். சுப்பிரமணிய ஐயர். நேமம். இவர் தியாகராஜ ஐயரின் மாணாக்கர். இராகம் பல்லவி நன்றாய்ப் பாடுவார். தியாகராஜ ஐயர் கீர்த்தனைகளை வெகு சுத்தமாய்ப் பாடுவார். சுப்பிரமணிய ஐயர். வேட்டனூர், இவர் புதுக்கோட்டையிலிருக்கிறார். நன்றாய்ப் பாடுவார். ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர். திருவாவடுதுறைத் தம்பிரான்சுவாமி, மகாவைத்தியநாத ஐயரிடம் சொல்லிக் கொண்டு வாய்ப்பாட்டிலும் வீணை வாசிப்பதிலும் வல்லவராயிருந்தார். சுப்புக்குட்டி ஐயர். இவரை வீணை சுப்புக்குட்டி ஐயர் என்றழைப்பார்கள். இவர் பச்சிமிரியம் ஆதப்பையாவின் பௌத்திரர், புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வித்வான். வீணையில் இராக ஆலாபனை மத்திம கால பல்லவி சுரகல்பனைகள் தசவித கமகங்கள் பிரகாசிக்கும்படியும் அதீத அனாகத சம விஷம கிரகங்கள் விளங்கும்படியும் நன்றாய் வாசிப்பார். இவர் 70-வயது வரை வீணை வாசித்துக் கொண்டிருந்து சுமார் 1870-ல் காலஞ் சென்றிருப்பதாகத் தெரிகிறது. இவர் குமாரர் வீணை சுப்பண்ணா. சுப்புக்குட்டி ஐயர். மைலாப்பூர். திருவத்தூர் தியாகையர் மாணாக்கரான வீணை வேணுவின் மாணாக்கர். சங்கீதம் நன்றாய்த் தெரியும். சுப்புச்சா வையர். வக்கீல், கும்பகோணம். இனிமையான சாரீரத்துடன் ஐயரவாள் கீர்த்தனைகளை நன்றாய்ப் பாடுவார். உமையாள்புரம் கிருஷ்ணசுந்தர பாகவதரின் மாணாக்கர். சுப்பையர். இவருக்கு அந்தனூர் சுப்பையர் என்று பெயர். இவர் தியாகையர் மாணாக்கரான நங்கபுரம் நீலகண்டையரின் மாணாக்கர். சாதாரண வித்வான்களால் சாதிக்க முடியாத கமகமார்க்கங்களையும் அதீத அனாகதங்களையும் மிக சுலபமாய் வாசிப்பார். இவர் க்ஷேத்திரஞ்ஞர் பதங்களை வாய்ப்பாட்டாகவும் வாத்தியத்துடனும் நன்றாய்ப் பாடுவார். இவர் மாணாக்கரும் பட்டணம் சுப்பிரமணிய ஐயர் பந்துவுமான குருசாமி ஐயரும். பிடில் நன்றாய் வாசிப்பார். ஸ்ரீரங்கம் இரங்கசாமியும் இவருடைய மாணாக்கர். சுப்பையர். இவருக்கு ஜெஞ்சாமாருதம் சுப்பையர் என்று பெயர். தஞ்சாவூர் கன்னையரின் மாணாக்கர். மூன்று ஸ்தாயியிலும் சுகமாய்ப் பாடுவார். மைசூர் மகாராஜா சபையில் ‘ஜெஞ்சாமாருதம்’ என்று பட்டப் பேர் கொடுக்கப் பெற்றவர். சுப்பையர். இவருக்கு விட்டே சுப்பையர் என்று பெயர். இவரும் தஞ்சாவூர் கன்னையரின் மாணாக்கர், நன்றாய்ப் பாடுவார். சுப்பையர். ஸ்ரீவைகுண்டம். அதி ரமணீயமாய்ப் பாடுவார். சுப்பையர். ஸ்ரீரங்கம், அந்தனூர் சுப்பையரின் மாணாக்கரான ரெங்கசாமியின் மருமகர். இவர் நன்றாய்ப் பாடுவார். சுப்பையா பாகவதர். திருநெல்வேலி ஜில்லா. பிடில் நன்றாய் வாசிப்பார். அரிகதையும் செய்வார். சுயம்பிரகாச எதீந்துருலு. இவர் சுமார் 60 வருஷங்களுக்கு முன் மாயவரத்தி லிருந்தார். சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகள் செய்திருக்கிறார். சுவாமி பாகவதர். இவரை உமையாள்புரம் சுவாமி பாகவதர் என்றழைப்பார்கள். கிருஷ்ண பாகவதர், சுந்தர பாகவதர் ஆகிய இவர்களின் தமயன் குமாரர், தியாகராஜ ஐயர் கீர்த்தனைகளில் அநேகம் பாடமுண்டு. இக்கீர்த்தனைகளைத் தவிர வேறு கீர்த்தனைகளைப் பாடுகிறதில்லை என்ற விரதமுடையவர். தற்காலத்திலுள்ளவர்.
|