பக்கம் எண் :

205
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

சுவேதாரண்ய ஐயர். இவர் தீக்ஷதர் மாணாக்கரான வேட்டனூர் வேங்கடராமையரின் குமாரர். பிடில் நன்றாய் வாசிப்பார்.

சூ

சூரியநாராயண சாஸ்திரியார். இவருக்கு தூர்வாச சூரியநாராயண சாஸ்திரியார்என்று பெயர். விஜயநகரம் சமஸ்தானத்திலிருந்தார். வீணையில் ஷட்காலங்களை வாசிப்பதிலும் ஒவ்வொரு அட்சரத்தை மீட்டுவதிலும் விசேஷ ஞானமுடையவர். வீணையில் அதிக சாதகமுடையவர். அநேக சாகித்தியங்களும் செய்திருக்கிறார்.

செ

செந்தில்வேலண்ணாலி. திருநெல்வேலியில் ஒச்சர் என்ற ஜாதியில் பிறந்தவர். நெல்லையப்பர் கோயிலில் வீணை வாசித்துக் கொண்டும் பரதநாட்டியம் பயிற்றுவித்துக் கொண்டும் ஓதுவார்களுக்கு ராகத்தோடு பாடும்படியாக சொல்லி வைத்துக் கொண்டுமிருந்தார். புளையன் என்ற பிரபு இவரை ஆதரித்து வந்தார். சோழ நாட்டிற்கு வந்த இவர் மாணக்கராகிய ஓதுவார்களின் பாட்டைக் கேட்ட துளஜா மகாராஜா மனுஷாளை அனுப்பி இவரைப் போலவே சங்கீதத்தில் கெட்டிக்காரரான இவருடைய குமாரர் மகாதேவ அண்ணாவியை வரவழைத்து தஞ்சாவூர் சமஸ்தானத்தில் கர்நாடக சங்கீதத்தை விருத்தி பண்ணினார்.

செந்து மேனன். முன்சீபு. பாலக்காடு. நன்றாய் வீணை வாசிப்பார். பாடுவார். பரமேஸ்வர பாகவதரிடம் சொல்லிக் கொண்டவர்.

செல்வகணபதி தீக்ஷதர். சிதம்பரம். சென்னப்பட்டணம் சிங்களாச்சாரியாரின் மாணாக்கர். சங்கீதத்தில் நல்ல ஞானமுள்ளவர்.

சென்னமல்லப்பா. பெங்களூர். வீணை சம்பிரதாயமாய் வாசிப்பார்.

சே

சேதுராம ராவ். இவர் மிருதங்கம் நன்றாய் வாசிப்பார்.

சேதுராம ராவ். தஞ்சாவூர். மிருதங்கம் துக்காராம் ராவின் மாணாக்கர். மிருதங்கம் சுகமாய் வாசிப்பார்.

சேத்தூர் ஜமீன்தார். இவர் சங்கீத சாகித்தியத்திலும் தமிழிலும் வீணை வாத்தியத்திலும் கெட்டிக்காரர். இவர்கள் பரம்பரையாகவே தமிழிலும் சங்கீத சாகித்தியங்களிலும் வித்வான்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் முத்தையா பாகவதரைக் கூட வைத்துக் கொண்டு அப்பியாசித்துக் கொண்டார்.

சேஷ ஐயங்கார். இவர் அயோத்தியிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு வந்து ஸ்ரீரங்நாதர்பேரில் அநேக கீர்த்தனைகள் செய்து பாடிக் கொண்டிருந்தார். அதில் இப்போது அநேக கீர்த்தனைகள் வரை வழக்கத்திலிருக்கின்றன. இவர் கீர்த்தனைகள் சங்கீத சாஸ்திர ஒழுங்குப்படி சரியாயிருப்பதால் இவருக்கு மார்க்கதரிசி சேஷ ஐயங்கார் என்று பெயர் வழங்குகிறது.

சேஷகிரி சாஸ்திரியார். M. A. சங்கீத சாகித்தியங்களில் விசேஷ பிரக்ஞையுடையவர். வீணை நன்றாய் வாசிப்பார். இவர் தம்பி வேங்கடேச சாஸ்திரி வீணையும் பிடிலும் சுகமாய் வாசிப்பார். சிட்சை சொல்லி வைப்பதில் சமர்த்தர்.