பக்கம் எண் :

206
தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்.

சேஷண்ணா. இவர்க்கு வீணை சேஷண்ணா என்று பெயர். வீணை சுப்பண்ணாவின் மாணாக்கர். மைசூர் சமஸ்தானத்தில் மகாராஜா சாமராஜ உடையார் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் சமஸ்தான வித்வான். ரவைஜாதி மார்க்கங்களையும் வீணையில் வெகு அற்புதமாய் வாசிப்பார். இவருக்கு பிடிலிலும், ஜலதரங்கத்திலும் பழக்கமுண்டு. அநேக சமஸ்தானங்களிலும் போய் கீர்த்தி பெற்றவராக இருக்கிறார்.

சேஷாசல ஐயர். இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்திலிருந்த சங்கீத வித்வான். சம்பிரதாயமாய்ப் பாடுவார்.

சேஷாசல பாகவதர். சாமா சாஸ்திரிகளின் மாணாக்கர். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சங்கீத வித்வான். சங்கீத சாகித்தியங்களிலும் கானத்திலும் சமர்த்தர். தெலுங்கில் அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். இவர் குமாரர் மாதுருபூதையாவும் தம்பி இராமதாசரும் சங்கீத வித்வான்கள்.

சேஷையர். இவரை காஞ்சீபுரம் கூடால சேஷையர் என்றழைப்பார்கள். குருமூர்த்தி சாஸ்திரியாரின் மாணாக்கர். சிறந்த வித்வான். அநேக கீர்த்தனைகளைச் செய்திருக்கிறார். இவர் பிள்ளை சுப்பையரும் மாணாக்கர் நாகோஜி ராவும் நன்றாய்ப் பாடுவார்கள்.

சேஷையர். இவர் சுந்தரப்பையர் சுப்பராமையர்களின் சகோதரர். சங்கீத சாகித்தியங்களில் கெட்டிக்காரர். தமிழில் அநேக கீர்த்தனைகளையும் பதங்களையும் செய்திருக்கிறார்.

சேஷையர். இவர் சேலத்துக்குச் சமீபம் நெய்க்கார்பட்டியிலிருந்தார். அநேக வர்ணங்களையும் கீர்த்தனைகளையும் செய்திருக்கிறார்.

சோ

சோட்டு மியான். இந்துஸ்தானி நன்றாய்ப் பாடுவார்.

சோமநாதர். 1609. இவர் "இராகவிபோதம்" என்ற நூல் எழுதியிருக்கிறார். அதை மைசூர் H. P. கிருஷ்ண ராவ், தாம் பிரசுரித்து வரும் Indian Music Journal என்ற பத்திரிகையில் மொழி பெயர்த்திருக்கிறார்.

சோமாஜி பாகவதர். இவர் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் பெரிய வித்வான்.

சோமு ஐயர். இவரை தஞ்சாவூர் ஜில்லா தலைஞாயர் பல்லவி சோமு ஐயர் என்றழைப்பார்கள். தஞ்சாவூர் சமஸ்தான விகடகவி கிருஷ்ணையரின் குமாரர். இராகம், பல்லவி சம்பிரதாயமாயும், லயபத்தமாயும் பாடுவார். இவர் குமாரர் இராதாகிருஷ்ணையர் பாட்டிலும் பிடில் வாசிப்பிலும் கெட்டிக்காரர். பல்லவி சோமு ஐயரிடம் தேவகோட்டை குட்டையன் செட்டியார் சொல்லிக் கொண்டார்.

சோழமுத்து. இவர் அண்ணு, இராமசுவாமி என்பவர்களின் சகோதரர். பரத நாட்டியம் கற்றுக் கொடுப்பதிலும் பிடில் வாசிப்பதிலும் கெட்டிக்காரர்.

ஜா

ஜாலையா. இவர் சிங்களாச்சாரியாரின் மாணாக்கர். வெகு நன்றாய்ப் பாடுவார். கன்னிகாபரமேஸ்வரி தேவஸ்தானத்தில் 18 வருஷம் உத்தியோகமாயிருந்தார். சங்கீதத்தில் பாலசிட்சை செய்திருக்கிறார்.

ஜானகிராம ஐயர். இவர் திருவத்தூர் வீணை குப்பையரின் மாணாக்கர். சுகமாய்ப் பாடுவார்.