பக்கம் எண் :

207
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

ஜான் பால்மர் ரையிட்டர். நாகர்கோவில். இவர் பொருள் செறிவுள்ள அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார்.

ஜீ

ஜீயர். வீணை நன்றாய் வாசிப்பார். இவர் குமாரர் அழக சிங்கரையாவும் வீணை நன்றாய் வாசிப்பார். அநேகருக்கு சிட்சை சொல்லி வைத்திருக்கிறார்.

ஜெ

ஜெகதீஸ்வர ராமகுமர எட்டப்ப ராஜா. எட்டையாபுரம் சமஸ்தானாதிபதி. இவர் தமிழ் தெலுங்கு சமஸ்கிருதம் சங்கீதம் இவைகளில் நல்ல விற்பத்தியுடையவர். வீணை வாசிப்பார். கணபதிமேல் கார்த்திகேய முத்திரையுடன் அநேக சூர்ணிகைகளும் சுலோகங்களும் ரக்திராக தேசிக இராகங்களில் கீர்த்தனங்களும் செய்திருக்கிறார். அநேக சங்கீத வித்வான்களை ஆதரித்து வந்தார். பாலசுவாமி தீக்ஷதர், அப்புக்குட்டி ஐயர், மீனாக்ஷி சுந்தரம் ஐயர், வீணை சுப்பையா அண்ணாவி, வெங்கு பாகவதர், மதுரை இராமையா, தேவூர் சுப்பிரமணிய ஐயர் முதலானவர்கள் இவர் சபையிலிருந்த சங்கீத வித்வான்களில் முக்கியமானவர்கள்.

ஜெகதீஸ்வர ராம வேங்கடேஸ்வர எட்டப்ப ராஜா. இவர் எட்டையாபுரம் சமஸ்தானாதிபதி. சங்கீதத்தில் அதிகப் பிரியமும் வீணை சுரபத் சித்தார் ஜலதரங்கம் மிருதங்கம் கடம் முதலிய வாத்தியங்களில் நல்ல அப்பியாசமும் உள்ளவர். "முருகா உனை நம்பினேனையா" என்ற சுரஜதி செய்திருக்கிறார்.

ஜெயதேவர். 1100. வங்காள தேசத்தில் கிண்டவில்வா அல்லது கிந்து பில்வம் என்ற கிராமத்தில் வசித்த போஜல தேவரின் குமாரர். கோவர்த்தனாச்சாரியாரின் மாணாக்கர். வல்லாள சேன மகாராஜன் புத்திரரான இலட்சுமண சேனமகாராஜன் சபையில் இருந்தார். இவர் காலத்தில் உமாபதிதரர், சரணர், கோவர்த்தனாசாரியார், தோபி கவிராஜர் முதலியவர்களிருந்தார்கள். இவர் "கீதாகோவிந்தம்" என்ற அஷ்டபதி கிரந்தத்தை சங்கீத ரூபமாய்ச் செய்திருப்பதோடு "பிரசன்ன இராகம்" என்ற நாடகமும் செய்திருக்கிறார்.

 ஸ்

ஸ்ட்ராங்குவேஸ். A. H. Fox Strangways. இவர் ஐரோப்பியர். இந்து சங்கீதத்தின் சுவாராம்ஸத்தைத் தெரிந்து கொள்ளும்படியாக இந்தியாவுக்கு வந்து பல இடங்களுக்குப் போய் அநேக சங்கீத வித்வான்களைக் கண்டு சம்பாஷித்து "Hindustan Music" என்னும் ஓர் புஸ்தகம் எழுதியிருக்கிறார்.

 ஷா

ஷாஜி மகாராஜா. இவர் தஞ்சாவூர் மகாராஷ்டிரா ராஜாக்களில் இரண்டாவது அரசனாவார். ஏகோஜி மகாராஜாவின் குமாரர். 1687-1711 வரை சோழ மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்தவர். மகாராஷ்டிரம், தெலுங்கு, இந்துஸ்தானி முதலிய பாஷைகளிலும் சங்கீத சாகித்தியங்களிலும் விசேஷ பாண்டித்தியமுடையவர். அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். திருவாரூர் தியாகராஜ சுவாமியின் பேரில் தெலுங்கில் பல்லக்கி நாடகத்தை சங்கீத ரூபமாய்ச் செய்திருக்கிறார்.