பக்கம் எண் :

208
தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்.

க்ஷே

க்ஷேத்திரிஞ்ஞர். இவர் சித்தூர் ஜில்லா சந்திரகிரி தாலூகா மூவபுரியில் கோபாலசாமி ஆலயத்தில் பகவானைப் பக்தி பண்ணிக்கொண்டிருந்தார். பக்தி மேலீட்டால் நாயகன் நாயகி பாவனையில் பகவான் இலட்சணங்களைப் பொருட் செறிவுள்ளதாயும் சந்தர்ப்பங்களுக்குத் தகுந்த சிருங்கார ரசங்கள் வெளிப்படும் கைசிக ரீதியாயும் இனிமையான சொற்களால் தகுந்த இராகங்களோடும், தாதுக்களோடும் அநேக பதங்களைச் செய்திருக்கிறார். இவ்வளவு அர்த்த புஷ்டியும் இனிமையுமான பதங்களை இது வரையும் வேறெவரும் செய்யவில்லை. இவர் மதுரை, தஞ்சாவூர் கோலகொண்டா முதலிய சமஸ்தனாதிபதிகள் சபையில் பதங்கள் சொல்லி விருது பெற்றிருக்கிறார். காஞ்சி வரதராஜர் பேரிலும் செவ்வந்திலிங்கேசர் பேரிலும் ‘முவ்வ கோபால’ என்ற முத்திரையுடன் பதங்கள் செய்திருக்கிறார். இவர் தஞ்சாவூர் விஜயராகவ நாயக்கர் காலத்தில் இருந்ததாகவும் 1000 பதங்கள் வரை செய்திருப்பதாகவும் பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

க்ஷேமகர்ணா. 1570. இவர் "இராகமாலா" என்ற புஸ்தகம் எழுதியிருக்கிறார்.

தம்பியப்பன். இவர் குருமூர்த்தி நட்டுவனாரின் குமாரர். சரபோஜி சிவாஜி மகாராஜாக்கள் காலத்தில் திருவாரூர் தியாகராஜ ஆலயத்தில் நட்டுவாங்கத் தொழில் செய்தவர். திருவாரூர் ஞானம், கமலம் முதலியவர்களுக்கு சங்கீதமும், பரதமும் சொல்லி வைத்தவர். சங்கீதத்திலும் மிருதங்கத்திலும் லட்சிய லட்சணங்களில் சமர்த்தர். இவருக்கு சுத்த மிருதங்கம் தம்பியப்பா என்று பெயர். மகாராஜா காலத்தில் மாதச் சம்பளமும், வீடும் மானியமும் இவருக்கிருந்தன. இராமசாமி தீக்ஷதர், முத்துசுவாமி தீக்ஷதர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தார்.

தர்ம தீக்ஷதர். அகிலாண்டபுரம். இவர் சல்லகாலி கிருஷ்ணையரின் மாணாக்கர். வீணை வாசிப்பதில் சிறந்தவர்.

தக்ஷிணாமூர்த்தி. புதுக்கோட்டை. கிஞ்சிரா மாமுண்டியா பிள்ளையின் மாணாக்கர். இவர் கடம் மிருதங்கம் கிஞ்சிரா நன்றாய் வாசிப்பார்.

தக்ஷிணாமூர்த்தி. தஞ்சாவூர். மிருதங்கம் நன்றாய் வாசிப்பார்.

தக்ஷிணாமூர்த்தி சாஸ்திரி. பந்தர். நன்றாய்ப் பாடுவார்.

தா

தாசரதி ஐயர். இவர் கோல பாக்வதர் குமாரர். குன்னங்குடி கிருஷ்ணையரிடம் சொல்லிக் கொண்டு சங்கீத வித்வானாயிருந்தார்.

தாசரி. சுரபத் மிகவும் நன்றாய் வாசிப்பார்.

தாண்டவராயத் தம்பிரான். இவர் கல்லிடைக்குறிச்சி மடத்தில் கார்பார் தம்பிரானாக இருந்தார். தமிழிலும் சங்கீத சாகித்தியங்களிலும் வீணை வாசிப்பதிலும் அதி சமர்த்தர். அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார்.