பக்கம் எண் :

209
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

தாதாச்சாரியார். இவர் அக்பர் சக்கிரவர்த்தியால் தென்னிந்தியாவிலிருந்து டில்லிக்குக் கொண்டு போகப்பட்ட ஒரு கர்நாடக சங்கீத வித்வான். இவர் மகமதியராகி மியான்டான்சின் என்ற பெயருடன் சங்கீத வித்வானாயிருந்தார்.

தாமோதர மிஸ்ரா. 1560-1647. இவர் 1625 ல் ‘சங்கீத தற்பணா’ என்ற புஸ்தகம் எழுதியிருக்கிறார்.

தாவத் சாயபு. தஞ்சாவூர். சாரந்தாவில் சிறந்த வித்வான். லயத்துடன் நன்றாய்ப் பாடுவார்.

தி

திம்மா மாத்தியர். 1550-1600. இவரும் இவர் குமாரர் இராமா மாத்தியரும் சேர்ந்து ‘சங்கீத சுரமேளகளாநிதி’ என்ற புஸ்தகம் எழுதியிருக்கிறார்கள்.

தியாகராஜ ஐயர். இவர் தஞ்சாவூரில் ஷாஜிமகாராஜா காலத்தில் சமஸ்தான வித்வானாயிருந்த கிரிராஜ கவியின் பௌத்திரர். இராம பிரம்மத்தின் குமாரர். தமக்குப் பூர்வீகமான திருவாரூரை விட்டுக் காவேரி நதி தீர்த்தத்திலுள்ள திருவையாற்றில் வந்து சமஸ்கிருதம், வேதாத்தியாயனம், காவியம், நாடகம், அலங்கார உற்பத்தி ஆகிய இவைகளைப் படித்துக் கொண்டிருந்தார். அதன் பின் தஞ்சாவூர் சமஸ்தான சங்கீத வித்வான் சுண்டி வேங்கடரமண ஐயாவிடத்தில் சங்கீத இலட்சணங்கள், தாளங்கள், இராகாலாபனைகள், பல்லவிகள் முதலிய சங்கீத நுட்பங்களை ஏக சந்தக்கிராகியாய் அப்பியாசித்து சங்கீத சாகித்தியங்களில் தனக்குச் சமானம் எவருமில்லை என்று சொல்லும்படியான அபார சக்தியை உடையவரானார். இவர் எப்பொழுதும் ஸ்ரீ இராமர் சந்நிதியிலேயிருந்து புதிது புதிதான சாகித்தியங்கள் தினந்தோறும் செய்து வீணை வாசித்து பஜனை செய்து கொண்டுமிருப்பார். இவருக்கு சகல சங்கீத இலட்சணங்களும் அமைந்த சாகித்தியங்கள் நினைத்தவுடனே செய்யும் பழக்கமிருந்தது. இவர் இரண்டாயிரத்துக்கு மேல் வர்ணங்களும் கீர்த்தனைகளுமான சாகித்தியங்கள் செய்திருக்கிறார். தென்னிந்திய சங்கீத வித்வான்களும், சங்கீத ஞானமுடையவர்களும் இவருடைய சாகித்தியங்களைச் செவியாரலாகவாவது கேட்காமலிருப்பது அபூர்வம். இவருடைய மாணாக்கர்கள் ஐயா பாகவதர், சுப்பராம பாகவதர், கணேச ஐயர், வாலாஜாபேட்டை வேங்கடராம பாகவதர், சோல்ஜர் சீத்தாராம ஐயர், திருவத்தூர் வீணை குப்பையர், அமுர்தலிங்கம் பிள்ளை, தில்லைஸ்தானம் இராமையங்கார், மானம்புச்சாவடி வேங்கிடு சுப்பையர், உமையாள்புரம் கிருஷ்ணையர், இவர் தம்பி சுந்திரம் ஐயர். இவர்களில் வீணை குப்பையரும் வேங்கிடு சுப்பையரும் பெரிய வித்வான்களாயிருந்தார்கள்.

தியாகராஜ ஐயர். இவரை திருவத்தூர் தியாகராஜ ஐயர் என்றும் பெத்துநாயக்கன் பேட்டை தியாகராஜ ஐயர் என்றும் சொல்லுவார்கள். இவர் திருவையாறு தியாகராஜ ஐயர் மாணாக்கரான வீணை குப்பையரின் குமாரர். தன் தகப்பனாரிடமே சங்கீதமும் வீணையும் கற்றுக்கொண்டவர். இராகம் பல்லவிகளிலும் வீணை வாசிப்பிலும் சிறந்த வித்வானாக விளங்கினார். அநேக வர்ணங்களும் கீர்த்தனைகளும் செய்து தன் தகப்பனார் செய்திருந்த சாகித்தியங்களையும் சேர்த்து அச்சிட்டிருக்கிறார்.

தியாகராஜ ஐயர். மைசூர். கிஞ்சிரா ராதாகிருஷ்ண ஐயரின் குமாரர். நன்றாய்ப் பாடுவார்.

தியாகராஜ ஐயர். எட்டையாபுரம் சுப்பராம தீட்சதரின் மாணாக்கர். நன்றாய்ப் பாடுவார்.