தியாகராஜ சாஸ்திரிகள். திருவேலங்காடு. இவர் வீணை வைத்தியநாதையரின் குரு. சங்கீத சாகித்தியத்திலும் பாட்டிலும் வீணை வாசிப்பிலும் மகா வித்துவான். தியாகராஜ தீக்ஷதர். திருவாலங்காடு. சல்லகாலி கிருஷ்ணையரின் மாணாக்கர். சங்கீத சாகித்தியங்களில் கெட்டிக்காரர். வீணையில் சிறந்தவர். தியாகராஜ பிள்ளை. வையைச்சேரி துரைசாமி ஐயரின் மாணாக்கர். இவர் சங்கீதத்திலும் தாளத்திலும் பல்லவி பாடுவதிலும் சிட்சை சொல்லி வைப்பதிலும் கெட்டிக்காரர். தியாகராஜ ஐயர் கீர்த்தனைகளில் அநேகம் இவருக்குப் பாடமுண்டு. இவருடைய பிள்ளை பாட்டு சாமியா பிள்ளையும் ஒரத்தநாட்டுச் சத்திரம் அமீனா மாதவ ராவும் நாகபட்டணம் சிவ சாம்பு ஐயரும் இவரிடம் சொல்லிக் கொண்டவர்கள். திரிகூடராசப்ப கவிராயர். திருக்குற்றாலத்துக்குச் சமீபம் மேல அகாத்திலிருந்தவர். இவர் தமிழிலும் சங்கீத சாகித்தியங்களிலும் சிறந்த வித்துவான். "குற்றாலக்குறவஞ்சி" முதலிய அநேக நூல்கள் செய்திருக்கிறார். குறவஞ்சிமேடென்ற பெயருள்ள நஞ்சை மானியமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. திருக்கடவூர் பாரதி. மாயவரம். தமிழிலும் சங்கீதத்திலும் விசேஷ பாண்டித்தியமுடையவர். திருமலை ஐயங்கார். இவருக்கு கந்தாடை திருமலை ஐயங்கார் என்று பெயர். ஸ்ரீவில்லிபுத்தூர் இராமையங்காரின் மாணாக்கர். நன்றாய்ப் பாடுவார். திருமலை ஐயங்கார். இவருக்கு ஆன்மறைநாடு திருமலை ஐயங்கார் என்று பெயர். ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்தார். சம்பிரதாயமாய்ப் பாடுவார். திருமலை ஐயர். வீணை ஆதிப்பையரின் குமாரர். துளஜா மகாராஜா காலத்தில் தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சங்கீத வித்துவானாக இருந்தவர். சங்கீதத்திலும் வீணையிலும் தேர்ந்தவர். இவருடையமாணாக்கர் திருப்பூந்துருத்தி அப்பாத்துரை ஐயர். திருமலை ராவ்சாகேப் ஜாகீர்தார், ஆரணி. மைசூர் வீணை சதாசிவ ராயரையும் சிஞ்சிரா இராதா கிருஷ்ணையரையும் கூட வைத்துக் கொண்டு சங்கீதத்திலும் வீணை வாசிப்பிலும் கெட்டிக்காரராயிருந்தார். திருவேங்கடப்பையர். இவர் வீணை வாசிப்பில் சமர்த்தர். அநேக தானங்களைச் செய்திருக்கிறார். திருவேங்கடாச்சாரியார். நீடாமங்கலம். இவருக்கு சரஸ்வதி திருவேங்கடாச்சாரியார் என்று பெயர். சமஸ்கிருதத்திலும் பரத சாஸ்திரத்திலும் தேர்ந்த பண்டிதர். து துக்காராம். இவர் பிரபலமான மகாராஷ்டிர சங்கீத வித்துவான். கர்நாடக சங்கீதத்துக்கு தியாகராஜ ஐயர் எப்படியோ அப்படியே மகாராஷ்டிர சங்கீதத்தில் இவர் பிரபலமுடையவர். துக்காராம் ராவ். இவர் மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். துரைசாமி ஐயங்கார். சென்னப்பட்டணம் சிங்களாச்சாரியாரின் மாணாக்கர். இவர் சங்கீதத்திலும் வீணை வாசிப்பதிலும் கெட்டிக்காரர். திருப்பதி மகந்துவுக்கு வீணை சொல்லி வைத்துக் கொண்டிருக்கிறார். துரைசாமி ஐயர். இவர் சரபோஜி மகாராஜா காலத்தில் திருவையாற்றிலிருந்தார். சங்கீத சாகித்தியங்களில் தேர்ந்த வித்துவான். சுப்பிரமணிய முத்திரையுடன் அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார்.
|