பக்கம் எண் :

211
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

துரைசாமி ஐயர். இவரை மத்தியார்ச்சுனம் துரைசாமி ஐயர் என்று சொல்வார்கள். இவர் சங்கீத சாகித்தியங்களில் பேர் பெற்றவர். மிக இனிமையாய்ப் பாடுவார். இவருக்கு சபாபதி ஐயரென்றும் கோவிந்த சிவனென்றும் இரண்டு குமாரர் இருக்கிறார்கள்.

துரைசாமி ஐயர். திருவனந்தபுரம் சமஸ்தானம் அப்பு பாகவதரின் குமாரர். கொச்சி சமஸ்தானத்தில் வக்கீலாயிருக்கிறார். வெகு விசித்திரமாய்ப் பாடுவார். இவர் தம்பி பிடில் நன்றாய் வாசிப்பார்.

துரைசாமி ஐயர். இவர் மணித்தட்டு வைத்தி ஐயர் குமாரர். அதிக இனிமையாய்ப் பாடுவார்.

துரைசாமி ஐயர். தஞ்சாவூரை அடுத்த வையைச்சேரி. சரபோஜி மகாராஜா காலத்தில் சமஸ்தான சங்கீத வித்துவானாயிருந்தார். ஆனை ஐயா அவர்களின் மாணாக்கர். மேற்படி ஆனை ஐயா அவர்களின் ஒன்றுவிட்ட பாட்டன் பிள்ளை. இவருக்கு சாம்பமூர்த்தி ஐயர், இராம சுவாமி ஐயர், மகா வைத்தியநாதையர், அப்பாசாமி ஐயர் பிள்ளைகள், தியாகராஜ பிள்ளை இவரிடத்தில் சொல்லிக் கொண்டவர். திருவையாற்றில் வீடும் திருப்பூந்துருத்தியில் வேலி சர்வமானியமும் மகாராஜா கொடுத்திருக்கிறார்.

துரைசாமி ஐயர். திருவையாறு. இவர் தியாகராஜ ஐயர் கீர்த்தனைகள், தில்லானாக்கள், ஜாவளிகள் இவைகளை ஜனங்களை ரஞ்சிக்கப் பாடுவார்.

துளஜா மகாராஜா. 1763-1787. இவர் சோழமண்டலத்தில் தஞ்சையை அரசாண்டு கொண்டிருந்த 5-வது மகாராஷ்டிர அரசர். சங்கீதத்தில் விசேஷ அபிமானமும் பிரியமும் உள்ளவர். இவரும் இவருடைய பாய்சாஹேப் அம்மணியும் வீணை வாசிப்பார்கள். இவர் சங்கீத வித்துவான்களுக்கு சன்மானங்களும் மானியங்களும் கொடுத்து வந்தார். கர்நாடக சங்கீதத்தை பாவ இராக தாளத்துடன் ஒழுங்குபடுத்தி விருத்தி பண்ணுவதற்காக திருநெல்வேலியிலிருந்து மகாதேவ நட்டுவனாரை வரவழைத்து சமஸ்தானத்தில் வைத்து ஆதரித்து வந்தார். ஆதிப்பையர், சுண்டி வேங்கட சுப்பையர், வீணை சுப்புக் குட்டி ஐயர், வெங்கிடு சுப்பையர், மகிபாலை வீணைப் பெருமாள் ஐயர், மகாதேவன் முதலானவர்கள் இவர் சபையிலிருந்தவர்களில் விசேஷ சங்கீத வித்துவான்கள். 1770ல் ‘சங்கீத சாராமிர்தம்’ என்ற சங்கீத நூலைச் செய்திருக்கிறார்.

 தே

தேவநாயக ஐயங்கார்.திருவனந்தபுரம். சங்கீத சாகித்தியங்களில் விசேஷ பண்டிதர். அநேக நல்ல கீர்த்தனைகளைச் செய்திருக்கிறார். இவர் குமாரர்களும் நன்றாய்ப் பாடுவார்கள்.

தேவராஜு நாயுடு. தஞ்சாவூர் கோவிந்தசாமியின் குமாரர். மோர்சிங்கும், கடவாத்தியமும் நன்றாய் வாசிப்பார்.

தேவையா. கரூர். பெரிய தேவையா, சின்னதேவையா, சாமையா இவர்கள் சகோதரர்கள். நன்றாய்ப் பாடுவார்கள். பிடில் சம்பிரதாயமாய் வாசிப்பார்கள்.

நக்கையர். (தட்டார நக்கையர்) இவர் சங்கீதத்தில் விசேஷமாய் உழைத்திருக்கிறார். அபாரமாய்ப் பாடுவார். அநேக அழகான கீர்த்தனைகளைச் செய்திருக்கிறார்.

நஞ்சுண்டப்பா. பெங்களூர். பிடில் வெகு சுகமாய் வாசிப்பார்.