பக்கம் எண் :

212
தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்.

நடராஜ பாகவதர். திருக்காட்டுப்பள்ளி. இவர் சங்கீதத்திலும் அரிகதை செய்வதிலும் மிகவும் கெட்டிக்காரர்.

நடேச ஐயர். இவர் உமையாள்புரம் சுந்தர ஐயரின் பந்துவும் மாணாக்கருமானவர். பாட்டிலும் பிடில் வாசிப்பிலும் சிட்சை சொல்லி வைப்பதிலும் அதிக சமர்த்தர்.

நடேச ஐயர். தியாகராஜ ஐயரின் மாணாக்கரான நேமம் சுப்பிரமணிய ஐயரின் குமாரர். சுகமாய்ப் பாடுவார்.

நடேச கிரிக்கி. பூனா. இவர் துரபத், கியால், தில்லானா, தோம்ரீலு, கச்சல், இலாவணி, தாரநால் முதலானவைகளை நன்றாய் வாசிப்பார்.

நடேச தீக்ஷதர். கும்பகோணம், இவர் நன்றாய் அரிகதை செய்வார்.

நடேச பாகவதர். மிலட்டூர். இவர் சங்கீதத்திலும் அரிகதை செய்வதிலும் கெட்டிக்காரர்.

நடேசன். (கொரநாடு மாயூரம்) நாகசுரம் அதி சுகமாய் வாசிப்பார்.

நம்பெருமாளையர். இவர் ராகவையர் குமாரர். பிடில் மிகவும் சுகமாய் வாசிப்பார்.

ஸ்ரீ-லஸ்ரீ நரசிம்ம அபிநயசுவாமி, சிருங்கேரி, சாரதா பீடாதிபதி. இவர் வீணையிலும் பாட்டிலும் சாகித்திய ஞானத்திலும் அபார பிரக்கியாதியுள்ளவர்.

நரசிம்ம ஐயங்கார். நாமக்கல். இவர் ராகம் பல்லவி சம்பிரதாயமாய்ப் பாடுவார்.

நரசிம்ம பாகவதர். நாமக்கல் வாசியான இவர் ஸ்ரீரங்கத்தில் இருந்து அரிகதை செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு சங்கீதத்தில் நல்ல ஞானமுண்டு.

நரசிம்ம பாகவதர். அரிகதையை பக்தி ரசமாய்ச் செய்வார்.

நரசையர். இவருக்கு ஷட்கால நரசையர் என்று பெயர். சேலம் வாசியான இவர் வெகுகாலம் பெங்களூரிலிருந்தார். அநேக வர்ணங்களையும் கீர்த்தனைகளையும் செய்திருப்பதோடு அநேக வித்தியார்த்திகளுக்கு சங்கீதமும் சொல்லி வைத்திருக்கிறார்.

நரசையர். இவருக்கு பதால நரசையர் என்று பெயர். இவர் வெகு சுகமாய்ப் பாடுவார். அநேக பதங்களுக்கு பாடாந்தரம் செய்திருக்கிறார்.

நரசையா. இவரை சங்கராபரணம் நரசையா என்றழைப்பார்கள். சரபோஜி மகாராஜா காலத்தில் தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சங்கீத வித்துவானாயிருந்தார். தமிழில் அநேக சங்கீத கற்பனைகளுள்ள பதங்கள் செய்திருக்கிறார். சங்கராபரண ராகத்தை விசேஷ கற்பனைகளுடன் ஆலாபித்துப் பாடுவார்.

நல்லப்பா. நாகசுரம் மகாதேவன் பரம்பரையைச் சேர்ந்தவர். கணக்குத் தவறாமல் நன்றாய் நாகசுரம் வாசிப்பார். இவர் தம்பி அருணாசலமும் சங்கீதத்தில் நல்ல ஞானஸ்தர்.

நன்னுமியா, மீரலி. இவர்கள் இருவரும் சகோதரர்கள். தோலெக் நன்றாய் வாசிப்பார்கள்.

நன்னேகான். இவர் பாவ நகரில் சிறந்த சங்கீத வித்துவான்.

நா

நாகபூஷணம். இவர் விஜயநகரம் சமஸ்தான வித்துவான். குருராயாச்சாரியாரின் மாணாக்கர். வீணை சுகமாய் வாசிப்பார்.

நாகலிங்கம் அப்பாவு. பிடில் நன்றாய் வாசிப்பார்.

நாகராஜ பாகவதர். இவர் தஞ்சாவூர் கோவிந்தசாமி பாகவதரின் மாணாக்கர். அரிகதை நன்றாய்ச் செய்வார். பிடில் நன்றாய் வாசிப்பார்.